கலீஃபா உமர் (ரலி) அவர்களின் உரை

by நூருத்தீன்

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) மரணமடைந்தபின் உமர் (ரலி) கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கலீஃபாவாக அவர் மக்களுக்கு ஆற்றிய முதல் உரை ஒன்றுக்கும் மேற்பட்டவர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தொகுப்பைக் காண்போம்.

மிம்பர் மீது ஏறினார் உமர் (ரலி). அபூபக்ர் (ரலி) எந்தப் படியில் அமர்வாரோ அதே படியில் அமரச் சென்றவர், அவ்விதம் செய்யாமல், “அபூபக்ர் இருந்த படிநிலையில் என்னை நான் வைத்துக்கொள்வதைப் போல் அல்லாஹ் காண்பதை நான் விரும்பவில்லை” என்று கூறி ஒரு படி கீழே இறங்கினார். ஓர் ஆட்சியாளராக அவரது தன்னடக்கம் அங்கிருந்தே துவங்கி விட்டது. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து, தம் உரையைத் துவக்கினார் உமர் (ரலி).

“குர்ஆனை ஓதுங்கள், அதைக்கொண்டு நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள்; அதன்படி செயல்படுங்கள், நீங்கள் அந்த மக்களுள் இணைவீர்கள்; உங்களிடம் கணக்கு விசாரணை நடைபெறும்முன் உங்களது கணக்கைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் எதிரே நீதி விசாரணைக்கு நீங்கள் அழைத்துவரப்படும் அந்த நாளின் மாபெரும் அணிவகுப்புக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், அச்சமயம் உங்களின் எந்த இரகசியமும் மறைவில் இருக்காது. அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுக்கும் வகையிலான எந்த விஷயத்திலும் அதிகாரத்தில் உள்ளவர் எவருக்கும் அடிபணியக் கூடாது. அல்லாஹ்வுக்குரிய செல்வங்களைப் பொறுத்தவரை, அனாதைகளின் பாதுகாவலனைப் போலவே என்னை நான் கருதுகிறேன். என் தேவைகளைச் சுயமாக கவனித்துக் கொள்ள வாய்ப்பு அமைந்தால், அதிலிருந்து எதுவும் எடுக்க மாட்டேன். இல்லையெனில் என் தேவைக்குரியதை மட்டும் எடுத்துக்கொள்வேன்.”

உரையின் பிறிதொரு பகுதியை மற்றொருவர் அறிவித்துள்ளார்.

“என் இரண்டு தோழர்களுக்குப் பின், அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களைச் சோதிக்கிறான்; உங்களைக் கொண்டு என்னைச் சோதிக்கிறான். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் நேரடியாகக் கையாளக்கூடிய உங்களுடைய விவகாரங்கள் எதையும் வேறெவரிடமும் ஒப்படைக்கமாட்டேன். நான் நேரடியாகக் கையாள முடியாத விவகாரம் ஏதாவது இருப்பின், அதைத் திறம்பட கையாளக்கூடிய, நம்பிக்கைக்குரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பேன். அல்லாஹ்வின்மீது ஆணையாக! அவர்கள் (ஆளுநர்கள்) திறம்பட செயல்புரிந்தால், அவர்களுக்கு வெகுமதி வழங்குவேன். தவறு புரிந்தால் தண்டிப்பேன்.”

இவற்றைத் தவிர மற்றோர் அறிவிப்பும் உள்ளது. உமர் (ரலி) கலீஃபாவாகப் பொறுப்பேற்ற இரண்டு நாளில், அவரது கடுமையான இயல்பையும் தண்டனைகளையும் பற்றி மக்கள் கவலையைத் தங்களுக்குள் பகிர்வது நடந்திருக்கிறது. இவ்விஷயத்தைத் தாமே தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று விரும்பிய உமர் (ரலி) மிம்பரின் மீதேறி மக்களிடம் உரையாற்றினார். முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் எவ்விதம் ஆட்சி புரிந்தார்கள், மக்களை எவ்விதம் நடத்தினார்கள், அவர்களிருவரும் மரணமடையும்முன் தம்மிடம் எப்படி திருப்தியுற்றிருந்தார்கள் என்பதை விளக்கினார் உமர் (ரலி). பிறகு தொடர்ந்தார்.

“மக்களே! நான் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் பெற்றுள்ளேன். ஆகவே எனது கடுமை குறைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். குற்றம் புரிபவர்கள், ஒடுக்குபவர்கள் ஆகியோரிடம் மட்டுமே எனது கடுமை பிரயோகிக்கப்படும். யாரும் யாரையும் ஒடுக்கவோ பிறருடைய உரிமையில் எல்லை மீறவோ நான் அனுமதிக்கவே மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்படும்வரை அவர்களது ஒரு கன்னத்தைத் தரையில் பதித்து மறு கன்னத்தில் எனது காலைப் பதிப்பேன். யார் பணிவுடனும் எளிமையுடனும் இருக்கிறார்களோ அவர்களிடம், என்னுடைய முந்தைய கடுமைக்கு நேர்மாறாக, எனது கன்னத்தைத் தரையில் பதிப்பேன்…

மக்களே! நான் உங்களுக்குச் சில வாக்குறுதிகள் அளிக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றிப்பிடிக்க ஏதுவாய் அதைக் குறிப்பிடுகிறேன். உங்களது வரியிலிருந்தோ, அல்லாஹ் உங்களுக்கு அளிக்கும் போர் செல்வத்திலிருந்தோ அரசுக்கு உரியதையன்றி வேறெதையும் எடுக்க மாட்டேன்.

உங்களிடமிருந்து பெறப்படுவதை உரிய முறையிலன்றி நான் செலவு செய்யவே மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

அல்லாஹ் நாடினால் – நான் உங்களுடைய உதவித் தொகையை அதிகரிப்பேன், உங்களுடைய எல்லைகளைப் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

எல்லைகளைக் காப்பதற்காக, உங்களை ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்ப மாட்டேன், உங்களுடைய குடும்பங்களைவிட்டு நீண்ட காலம் நீங்கள் பிரிந்திருக்கச் செய்யமாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

நீங்கள் போருக்குச் சென்றால் நீங்கள் திரும்பி வரும்வரை உங்களுடைய பிள்ளைகளுக்கு நான் பொறுப்பு.

அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களுடைய தீமைகளை விட்டு நான் விலகியிருக்கவும் நான் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கவும் எனக்கு உதவுங்கள். உங்களுடைய விவகாரங்களைச் சீரிய முறையில் நிர்வகிக்க எனக்கு நேர்மையான ஆலோசனை அளியுங்கள். அல்லாஹ் என்னையும் உங்களையும் மன்னிப்பானாக.”

பகுதிகளாகப் பிரிந்திருந்தாலும் உமர் (ரலி) மக்களுக்கு ஆற்றிய உரையில் அடிநாதமாக இறையச்சம் இழையோடுவதை நாம் காண முடியும். தன்னுடைய கடுமையான இயல்பு நீதியான, நேர்மையான ஆட்சிக்குப் பாதகம் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற உச்சபட்ச அச்சம் அவரிடம் இருந்திருக்கிறது. முந்தைய கலீஃபாவைவிடத் தம்மை உசத்தியாக நினைத்துக் கொள்ளாதது மட்டுமின்றி அவரளவிற்கு இணையாகக்கூட அவர் தம்மைக் கருதவில்லை என்பது எத்தகு ஆச்சரியம்!

வாக்குகளுக்கான போலி வாக்குறுதிகள் போலன்றி மெய்யான வாக்குறுதிகளை அளித்த உமர் (ரலி) அதை அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்துக் காட்டினார், சாதித்தார் என்கிறது வரலாறு.

அதனால்தான் அவரது ஆட்சி இஸ்லாமிய கிலாஃபத்தின் ஒரு பொற்காலம்!

-நூருத்தீன்

வெளியீடு: அல்ஹஸனாத் அக்டோபர் 2017

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஒரு பிடி உபதேசம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment