விவாதம், விதண்டாவாதம்

by admin

‘விவாதம் செய்யாமல் ஏன் ஒதுங்கிவிடுகிறீர்கள்?’ எனச் சிலர் என்னிடம் கேட்கின்றனர்.

என்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான்

வந்துள்ளேன். என் முகநூல் நண்பர்களாக பல ஆலிம் பெருமக்களும் அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் இருக்கின்றனர். என் எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் கண்ணியமாகச் சுட்டிக்காட்டுகிரார்கள். அவர்களுக்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

மதரஸா என்றழைக்கப்படும் அரபுக் கல்லுரிகளில் நான்காவது ஐந்தாவது வகுப்புகளில் ‘மன்திக்’ எனப்படும் தர்க்கவியல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதில் விவாதம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்:

مناظرة
مجادلة
مكابرة

முனாளரா என்பது ஆரோக்கியமான விவாதம். இதில் விவாதம் செய்பவர்கள் எடுத்துக்கொண்ட விடயத்தில் ஆழ்ந்த விஷய ஞானம் உள்ளவர்களாக, திறந்த மனத்துடன் இருப்பார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் விவாதம் செய்வார்கள்.

உதாரணமாக ஒருவர் குர்ஆனில் எங்கெல்லாம் இப்படி செய்யுங்கள் என அம்ரு ஏவலாக வருகிறதோ அதைச் செய்வது கட்டாயம் வாஜிப் என்கிறார்; மற்றவர் அதை மறுத்து குர்ஆனில் வரும் அனைத்து ஏவல்களையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியாது, சில இடங்களில் அதனை செய்வது நல்லது என ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என வாதிட்டு அதற்கு ஆதாரமாக “ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” (2:282) எனும் வசனத்தில் فَاكْتُبُوهُ எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தை அம்ரு ஏவலாக வந்துள்ளது; இதற்கு விரிவுரை எழுதிய அனைத்து அறிஞர்களும் இது கடமையல்ல செய்யாவிட்டால் பாவமுமல்ல மாறாக உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் என தன் வாதத்தை முன் வைக்கிறார். மற்றவர் இதனை மறுக்கும் ஆதாரம் அவரிடம் இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்கிறார்.

இது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை. நபித்தோழர்களுக்கிடையே இவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கலிபா அபூபக்கர் மற்றும் உமர் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்களிடையே குர்ஆனின் வசனங்களை ஒன்று சேர்க்கும் விடயத்திலும் ஜக்காத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்கும் விடயத்திலும் விவாதங்கள் நடைபெற்று பின் இருவரும் ஒரே முடிவை எடுத்தனர்.

அடுத்து முஜாதலா எனப்படும் விதண்டாவாதம். இதில் ஈடுபடுவோர் ஏற்கனவே ஒரு விடயத்தில் இதுதான் சரியென முடிவு செய்திருப்பர். பின் தன் கருத்திற்கு எதிராக உள்ளவருடன் தன் கருத்துதான் சரியானது, எதிரியின் கருத்து தவறு என நிருபிக்க முயற்சி செய்வர். எதிர் கருத்துள்ளவர் என்னதான் தங்களின் கருத்துக்கு ஆதாரங்களைக் காட்டினாலும் அதைப் பரிசிலிக்க மாட்டர்கள். தங்கள் கருத்தே சரி என விதண்டாவாதம் செய்வார்கள். இது மன வருத்தத்தையும் பிளவையும் ஏற்படுத்தும்.

மூன்றாவது முகாபரா இது, ‘தாம் பெரிய அறிஞர் தம்மை யாராலும் வெல்ல முடியாது’ என்பதற்காகவே விவாதம் செய்வது. இதுவும் தவறான விவாதம்.

நான் லால்பேட்டை மதரசாவில் 1966-ஆம் ஆண்டு கல்வி கற்கும்போது என்னுடைய ஆசிரியர் கைருல்மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் “இமாம்களைப் பின்பற்றாதவர்களிடம் எப்படி விவாதிப்பது?” எனக் கேட்டேன். அதற்கு உஸ்தாத், “ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர்களிடம் விவாதம் செய்யாதே. அவர்கள் ஒருபோதும் உன் கருத்தைப் பரிசீலிக்க மாட்டார்கள். மாறாக விவாதத்தைத் திசை திருப்பி உன்னைக் குழப்புவார்கள். யார் உன்னிடம் அறிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே உன் கருத்தை முன் வை” என்றார்கள்.

எனவேதான் நான் வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அல்லாஹ் அனைத்து விடயங்களிலும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

-கணியூர் இஸ்மாயீல் நாஜி

Related Articles

Leave a Comment