ஷஜருத்துர்ரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய ஏமாற்றம் அந்த வாட்படையை மிகச் சுலபமாக முஈஜுத்தீனுக்குப் பறிகொடுத்து விட்டதுதானாகும். எவ்வளவோ பெரும் பெருங் காரியங்களையெல்லாம் சாதித்து முடிப்பதில் மகா நிபுண சிகாமணியாய் விளங்கிவந்த ஷஜருத்துர்,

மலிக்குல் அஷ்ரப் பட்டமேற்க வந்த தினத்தில் புர்ஜீகளின் தந்திரத்துக்குப் பலியானதைவிட, இந்த மிகச் சாதாரண அற்ப தந்திர யுக்திக்குப் பலியானதுதான் பெரிய விந்தை! என்ன செயய இயலும்? வாள் கைம்மாறி விட்டது. இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை.

எனினும், அவ் வம்மையார் தாம் ஏமாந்துபோய் விட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், முஈஜுத்தீன் தம்மைத் தாக்கிவிடக் கூடாதே என்பதில் மட்டும் கருத்தாயிருந்தார். முஈஜுத்தீன் வேறொன்றும் செய்யாமல், அந்த வாளைத் தமதிடுப்பிலே பத்திரமாய்க் கட்டித் தொங்கப் போட்டுக்கொண்டார். அப்பால், ஏதும் நடக்காததே போல் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். அவரது வதன கமலத்தில் பெருந் திருப்தியொன்று குடிகொண்டுவிட்டது. ஏதோவொரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டாற் போன்று புன்முறுவல் பூத்தார்.

ஏமாந்துபோன ஷஜருத்துர் எவ்வாறு வயிறெரிந்திருப்பார் என்பதை நாம் இவண் வருணிக்கத் தேவையில்லை. எத்தனை வித்தை கற்றிருப்பினும், எப்படிப்பட்டவரையும் வெகு சுலபமாய் வசீகரிக்கக்கூடிய எத்தனை சாஹஸம் படித்திருப்பினும், ஷஜருத்துர் ஒரு பெண்ணேயல்லவா? இதுபொழுது ஏற்பட்டுவிட்ட இசகுபிசகான நடக்கைக்கு மாறாக முஈஜுத்தீன் எவ்வாறு வெற்றிபெற்று விட்டதாய்ப் பெருமையடித்துக் கொள்ள முடியும்? எனவேதான், நம் நாரியர் திலகம் ஏதும் கவலை கொள்ளவில்லை. முஈஜுத்தீன் வாட்படையைத் தமதிடுப்பில் கட்டுக்கொண்டவுடனே சுட்டெரிக்கும் பார்வையுடனே பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக்கொண்டு ஏதோ முணுமுணுத்தார்.

“ஆம்! நீர் வெற்றிபெற்று விட்டீர்! இல்லை, வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணிக் கொண்டுவிட்டீர்! அன்று என் சக்களத்தி மகன் தூரான்ஷாவும் அப்படித்தான் மனப்பால் குடித்தான்! ஆனால், ரிதா பிரான்ஸையும் மலிக்குல் முஅல்லத்தையும் வென்று தீர்த்த மாவீரன் ருக்னுத்தீன் இன்னம் செத்துப் போகவில்லையென்பதை நீர் மறந்துவிட்டீர்!” என்று தன் கணவரை வெறிக்கப் பார்த்துக் கொண்டே ஷஜருத்துர் எழுத்தெழுத்தாக, வார்த்தை வார்த்தையாக உச்சரித்தார்.

“ருக்னுத்தீன்” என்னும் நாமத்தை ஷஜருத்துர் உச்சரித்த தொனி, முஈஜுத்தீன் மேனியில் ஓடிக்கொண்டிருந்த உதிரத்தை – அது முழுதையுமே – உத்தர துருவக் கடலைப்போல் இறுக உறையச் செய்துவிட்டது. பேயால் அறையுண்ட பித்தனைப்போல் முஈஜுத்தீன் சட்டெனத் தந்தலையையுயர்த்தி, ஷஜருத்துர்ரை வெறிக்கப் பார்த்தார். என்னெனின், புர்ஜீ மம்லலூக்குகளின் மாயவலையில் வீழ்ந்து, அவர்களையே தம் ஆருயிர்த் தோழர்களாகவும் ஆபத்சகாயர்களாகவும் நம்பி, பஹ்ரீகளையும் ருக்னுத்தீனையும் அறவே மறந்து, அரசபோகம் அனுபவித்து வந்த முஈஜுத்தீனுக்கு ஷஜருத்துர்ரின் வார்த்தைகள் பழைய சம்பவங்களனைத்தையும் திரைப்படம் போலக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டன. செங்கோட்டைக் கோட்டக் கோபுரத்துள்ளே லூயீ அடைபட்டுக் கிடந்ததும், அந்த லூயீ கைக்கொட்டி சிரித்த பாபத்துக்காக, மலிக்குல் முஅல்லத்தின் ஹிருதயத்தைக் கழற்றியெடுத்துவந்து அந்த பிரெஞ்சு மன்னர் முன்னே ஜாஹிர் ருக்னுத்தீன் வேர்வை வழிகிற மேனியுடன் கோரப் பிசாசுபோலே வீசியயறிந்து மஹா பயங்கர ரூபமாய் நின்ற அச்சமூட்டுகிற காட்சியும் முஈஜுத்தீனின் மனக்கண் முன்னே அப்படியே உருப்பெற்று வந்து நின்றன. அவ்வாறு நின்றதுடனே, தாம் அத்தகைய கதிகளுக்கு ஆளாகிவிட்டாற் போன்ற சித்தப்பிரமையும் உதயமாகிவிட்டது.

“ஷஜ….ருத்….துர்….! … என்ன…சொல்….கிறாய்? ருக்னுத்…தீனா! ஆ…!” என்று மேனி பதறிவிட்டார் முஈஜ்.

“ஆம்! வீராதி வீரரே! அந்த ருக்னுத்தீனே தான்! லூயீ மன்னனது அசுவத்தைத் துண்டித்த அவருடைய வாள் தனக்குத் துரோகமிழைத்த சுல்தானின் கழுத்தின்மீது இப்பொழுது குறியாயிருக்கிறது; தூரான்ஷாவின் நெஞ்சைப் பிளந்த ஆத்திரம் இப்பொழுது எல்லா புர்ஜீகளின் குடலையுமே சரித்து விடுவதற்குத் தயாராயிருக்கிறது. என் வார்த்தைகளை முன்னம் உதாசினஞ் செய்த என் சக்களத்தியொருத்தியின் மகன் கதி போய் முடிந்தமாதிரி, என் மற்றொரு சக்களத்தியின் கணவன் கதியும் போய்முடியக் கூடாதே என்றுதான் நான் தவியாய்த் தவிக்கிறேன். ஆண்டவன் புர்ஜீகளை மட்டுமே சபித்திருக்கிறான் என்று நான் இதுவரை எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதுதான் புர்ஜீகளை நேசிக்கிறவர்களும் நெருங்குகிறவர்களுங்கூட அந்தத் தேவ கோபாவேசத்துக்கு இரையாகிவிடுகிறார்கள் என்பதைக் கண்டு வருகிறேன். சும்மாவா அல்மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் அத்தனை புர்ஜீ அமீர்களையும் ஒரே நாளில் ஒழித்துக்கட்டினார்! – ஏ இறைவா! நீ இன்னம் எவ்வெப்படியெல்லாம் மிஸ்ர் ஸல்தனத்தின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களைச் சோதிக்கப் போகிறாயோ? விளைநிலத்தில் களைமுளைத்தாற் போன்று, பஹ்ரீ இனத்துக்குள்ளிருந்தே இவரை நீ மாற்றிவிட்டிருக்கின்றாயே! இதுவும் நின் திருவிளையாடல் போலும்!”

ஷஜருத்துர் இப்படியெல்லாம் பேசப்பேச முஈஜுத்தீன் திருதிருவென்று விழித்தார். ருக்னுத்தீனைக் குறித்து முஈஜுத்தீன் பிரமாதமாக ஒன்றும் கருதிவிட முடியாதவாறு புர்ஜீகள் இவருடைய உள்ளத்தை இத்தனை நாட்களாக வேறுபக்கம் திருப்பி வந்திருக்கிறார்கள். எனவே, ஷஜருத்துர் மேலும் மேலும் பேசப்பேச, மிஸ்ரின் சுல்தானுக்கு மயக்கம் வரத் துவக்கிக் கொண்டுவிட்டது. முன்பு இதே புர்ஜீகளை நம்பி அநியாயமாய் மோசம்போன மலிக்குல் முஅல்லத்தின் அதோகதி அவருடைய நெஞ்சத்தைத் தயிர் கடையும் மத்தைப் போலச் சுழலக் கலக்கிவிட்டது.

“ஏ, ஷஜருத்துர்! என்னை நீ என்ன செய்யச் சொல்லுகிறாய்?”என்று மூச்சு முட்டிக்கொண்டவாறு ஒரு பெரிய வினாவைப் போட்டார்.

“நான் இவ்வளவு நேரம் சொன்ன வார்த்தைகள் காதில் விழவில்லை போலும்! விவேகம் மிக்க மதியூகியாகிய நீர் என் பேச்சைக் கேட்டு உமதுயிரைக் காப்பாற்றிக் கொள்ளுதற்கு முடிதுறப்பதொன்றைத் தவிர்த்து வேறென்ன நல்ல மார்க்கம் இருக்கிறது? நும்மை நான் வேறொன்றும் செய்யச் சொல்லவில்லையே!” என்று ஷஜருத்துர் கர்வம் மிக்க ஆணவத்துடனே அரற்றினார்.

“முடி துறப்பதா!”

“இல்லையேல், உயிர் துறக்கிறீர்கள். அப்பொழுது முடியும் தானே தங்களைத் துறந்து விடுகிறது!”

“ஏ, ஷஜருத்துர்! நீ என்னை உன்னுடைய கைப்பாவையாக ஆக்கிக் கொண்டதும் போதாமல், என் வார்த்தைகளை ஏளனமும் செய்கின்றாயே! என்னை இவ்வாறெல்லாம் ஆட்டிப் படைத்து மகிழ்ச்சியுற வேண்டுமென்பதற்காகவா நீ என்னை மணந்துகொண்டாய்? நான் என் உயிரை இழந்துவிட்டால், நீ என்ன செய்வாய்? சாலிஹின் பத்தினியாய் இருந்த காலத்தில் உன் சற்குண சீலங்களைப்பற்றி ஈராக், ஈரான் பகுதிகளில் கூட எல்லாரும் மெச்சிப் புகழ்ந்து பாராட்டினார்கள் என்று நான் கேள்வியுற்றிருக்கிறேனே! அப்படிப்பட்ட நீ என்னை ஏன் இப்பொழுது இப்படிப்பட்ட பாடெல்லாம் படுத்துகின்றாய்?”

“நல்ல கேள்வி கேட்கின்றீர்! என்னைப் பலரும் புகழும் பத்தினிப் பெண்ணாய்ப் பெருமையடையச் செயத பெருமையனைத்தும் சுல்தான் சாலிஹினுடையது. ஆனால், இப்பயங்கரம் மிக்க பொல்லாத நீலியாக நீர் நினைக்கும்படி செய்துவிட்ட பெருமை நும்முடையது. நான் அன்றும் சுல்தானா ஷஜருத்துர்ராகத்தான் இருந்தேன்; இன்றும் சுல்தானா ஷஜருத்துர்ராகவே இருந்துவருகிறேன். ஆனால், ஒரு வித்தியாசம்: இந்த சுல்தானா மிகவும் சோபையுடன் திகழும்படியான செயல்களை அந்த சுல்தான் செய்துவிட்டு நற்புகழை அடைந்துவிட்டார். ஆனால்,…” என்று சட்டென நிறுத்தினார் ஷஜர்.

முஈஜுத்தீன் பசபசவென்று விழித்தார். தம்மை மிகவும் உதவாக்கறையான உலுத்தனென்று நிரூபித்தற்காகவே சுல்தான் ஸாலிஹுடன் தம்மை ஷஜருத்துர் ஒப்பிட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டார். மேலும் பேசிக் கொண்டே சென்ற ராணியார் திடீரென்று தம் பேச்சை நிறுத்திக்கொண்டது ஏனென்று விளங்காமல் திகைத்தார்.

“ஏ, ஷஜருத்துர்! நான் சாலிஹைவிட எந்த வகையில் மட்டமானவன்? அவர் உன்னுடைய புகழைப் பரத்துதற்காக எவ்வளவெல்லாம் பாடுபட்டாரோ, அவ்வளவையும்விட நான் அதிகமாகப் பாடுபடவில்லையா? அவர் சுல்தானாய் இருந்து ஆட்சி நடாத்தியபோது உனக்கு எவ்வளவு சுயேச்சையையும் சுதந்திரத்தையும் அளித்திருந்தாரோ, அவற்றை விடச் சற்று அதிகமாகவே நான் கொடுக்கவில்லையா? எல்லாவற்றிக்கும் மேலாக, அவராவது தன் மனைவியை இழந்த பின்னால் உன்னை மணந்து கொண்டார்; ஆனால், நான் என் மனைவி உயிருடனிருக்கும்பொழுதே உன்னை மணக்கவில்லையா?” என்று மிகப் பரிதாபகரமாய்க் கேட்டார்.

முஈஜுத்தீனின் இறுதி வார்த்தைகள் ஷஜருத்துர்ரின் நெஞ்சைத் துளைத்தன. கணவருடன் கருத்தொருமித்து வாழ்க்கை நடாத்தி வந்த ஒரு மனைவிக்குத் தாம் இழைத்து விட்ட துரோகச் செயல் ஷஜரின் கண்முன்னே வந்து நின்றது.

“எனவே, ஏ, ஷஜருத்துர்! என்னை முடிதுறக்க வேண்டுமென்று திரும்பத்திரும்ப நீ ஏன் வற்புறுத்துகின்றாய்? சுல்தானாகிய நான் வெறும் அமீராக இழிந்தால், நீ மட்டும் எப்படி சுல்தானாவாக இருக்க முடியும்? உன்னை நீயே என்ன என்ன பட்டங்கள் சூட்டி அழைத்துக்கொள்ள முடியுமோ அந்த அந்தப் பட்டங்களையிட்டு அழைத்துக் கொள்ளுகிறாய்! நான் என் பட்டத்தை இழந்த பின்னால் உனக்கு மட்டும் எப்படி மலிக்கா என்ற பெயரோ, சுல்தானா என்னும் கெளரவமோ கிட்ட முடியும்?”

“ஆம்! நான் சுல்தானின் மனைவியாய் இருப்பதனால் சுல்தானாவாக இருக்கிறேன். அனால், நீர்மட்டும் இம்மிஸ்ரின் ஸல்தனத்துக்குரிய சுல்தானாகவே பிறந்துவிட்டீர் போலும்! நான் ஏகபோக சுல்தானா ஷஜருத்துர்ராகத் திகழந்திருந்த காலத்தில் நும்மை வேண்டுமென்றே மணந்தேன் என்பதையும் சுல்தானாவின் கணவராய் இருக்கின்ற காரணத்தால்தான் நீர் சுல்தான் என்று அழைககப்படுகிறீர் என்பதையும் இத்துணைச் சடிதியில் மறந்துவிட்டீர் போலும்! சுல்தானாவாகிய என்னால் நீர் சுல்தானானீரா, அல்லது சுல்தானாகிய நும்மால் நான் சுல்தானாவானேனா? என்பது ஒரு பக்கல் கிடக்கட்டும். ஆனால், நீர் என்னிடம் வாதுபுரிவதேபோல், பஹ்ரீகளின் உள்ளத்தை வீணே புண்ணாக்குவதால் ருக்னுத்தீன் உமக்கெதிராகக் கிளம்பிக் கலகம் விளைவித்துக் கூடுமென்பதை நீர் ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்? சுல்தான் என்று கூறிக்கொள்ளுகின்ற நுமக்கு ஏன் பஹ்ரீகள்மீது சிறிதும் பாசம் இல்லை? உலகமெலாம் புகழ்கிறது என்று நீரே நற்சாட்சிப் பத்திரம் வழங்குகிற இந்த ஷஜருத்துர்ரின் மீது நுமக்கேன் நம்பிக்கையில்லை? ஒரு சில நாட்களே அதிருஷ்ட வசத்தால் தாற்காலிக ஆட்சி புரிந்த நுமக்கு, என்றென்றுமே ஊழியூழிக் காலம் இந்த மிஸ்ரின் ஏகசக்ராதிபதியாக விளங்கவேண்டுமென்னும் அநியாயமான ஆசை பற்றிக்கொண்டு விட்டது. ஆசை அதிகரிக்க அதிகரிக்க, நேர்மையை விட்டு நீர் வழிவிலகிச் சென்று கொண்டேயிருக்கின்றீர். வழிவிலகிச் செல்வோரை ஆண்டவன் தண்டிக்கிறான் என்பதைக் கண்டும் கேட்டும் வருகிற நீர் நும்முடைய அறிவையும் செம்மையாய்ப் பயன்படுத்துவதில்லை; என் அறிவுரையையும் செவிமடுப்பதில்லை.

இப்பொழுதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. நும்மை எல்லாரும் வெறுக்கிறார்கள். ஆகையால், நாளையே நீர் முடிதுறந்துவிடும். நும்மால் நிர்வகித்து நடத்த முடியாத இந்த ஸல்தனத்தை நான் நடாத்திக் காட்டுகிறேன், பாரும்! அமீர் தாவூத் பின் மூஸாவிடம் கற்ற வித்தைகளும் முன்பெல்லாம் நான் அரசாண்டபோது தெரிந்துகொண்ட அனுபவ ஞானமும் என்னைவிட்டு ஓடிப்போகவில்லை. வேண்டுமானால் இங்கே பேசாமல் குந்திக்கொண்டு, எல்லாம் ஒழுங்காக நடக்கின்றனவா, இல்லையா? என்பதை நீரே நேரில் கண்டுக்கொள்ளும்.

சென்ற சில ஆண்டுகளாக என் ஆட்சியின் தண்ணிழல் இல்லாமல் வாடிவதங்குகிற யாவர்க்கும் நற்பயன் அளிப்பதற்கு எனக்கு நீர் உதவிபுரியும்.

இந்த மிஸ்ரின் ஸல்தனத் என் ஆளுகையால்தான் தூய்மையடையப் போகிறது. இதற்கு முன்னே எப்படிப்பட்ட பெண்பிள்ளையும் நடாத்திக் காட்டியிராத மிகவும் விசித்திரமான நேர்த்தி வாய்ந்த ஆட்சித் திறனை இவ்வுலகம் என்னிடத்தேதான் கண்டுகொள்ளப் போகிறது. இஸ்லாம் உற்பத்தியான நாளாக இதுவரை அல்லது இனி எதிர்காலத்தில் கூடப் பல்லாயிரம் ஆண்டுகள்வரை காணவோ, கேட்கவோ முடியாத பீடுகெழு பெருமையெல்லாம் என் மூலமாகவே முளைத்தெழ வேண்டுமென்று இறைவன் என் தலையில் எழுதிவிட்டிருக்கிறான் என்பதை நீர் என்னிடம் காணப் போகின்றீர். எனவே, சாத்விகமாகவே நான் கூறுகிறேன்: எனக்காக நீர் வழிவிலகிடும்; முடிதுறந்துவிடும். சென்ற சில ஆண்டுகளாக என் ஆட்சியின் தண்ணிழல் இல்லாமல் வாடிவதங்குகிற யாவர்க்கும் நற்பயன் அளிப்பதற்கு எனக்கு நீர் உதவிபுரியும். என் சாத்விகமான கோரிக்கைக்குத் தூரான்ஷா இணங்க மறுத்து என்னை சுல்தானாவாக உயர்த்தியதேபோல், நீங்கள் மறைமுகமாக எனக்கு உதவிபுரிய வேண்டுவதின்று. பகிரங்கமாகவே எனக்குரியதை என்னிடமே கொடுத்துவிடுங்கள். உங்களை யாரும் குறைகூற மாட்டார்.”

நெடுகவே, நீர் நீர் என்று பேசிவந்த ஷஜருத்துர் இறுதி வாக்கியத்தை மிக்க மரியாதையுடன் உச்சரித்து, சிருங்காரம் ததும்புகின்ற கடைக்கண் ஓட்டியதைக் கண்டு, முஈஜுத்தீன் உள்ளம் குளிர்ந்தார். எனினும், ஆட்சிப் பீடத்தைத் துறப்பதென்பது, சர்வ சொத்தையுமே ஏககாலத்தில் பறிகொடுப்பதே போல் இருந்தது அவருக்கு.

“ஏ, ஷஜருத்துர்! புர்ஜீகளுக்குச் சிறிது சலிகை காட்டப்படுகிறது என்னும் ஒரே காரணத்திற்காகத் தானே என்னை நீ முடிதுறக்கச் சொல்லுகின்றாய்? அப்படியானால், நான் நாளை முதல் – ஏன், இப்பொழுது முதலே அந்தப் பிரத்தியேகச் சலிகைகளை விட்டுவிடுகிறேன். சாலிஹ் ஐயூபி செய்துவந்ததேபோல், இன்று முதல் நான் உன்னைக் கலந்து கொண்டும் என் இதோபதேசங்களுக்கு ஒப்பவுமே ஆட்சியை நடத்துகின்றேன். அது போதுமா?”

இதுகேட்டு, ஷஜருத்துர் சற்றே யோசித்தார். அவர் மூளையில் ஏதோ தோன்றிற்று. உடனே முஈஜுத்தீனுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தார்.

“முடி துறப்பதென்றால், இவ் அரண்மனையைவிட்டே வெளியேறி விடுவதென்றா அர்த்தம்? இல்லையே! தாங்கள் தங்கள் இஷ்டத்துக்கே ஏகபோகக் கொடிய ஆட்சியை நடத்தக்கூடாதென்றுதான் நான் கூறுகிறேன். எல்லாம் தங்களுடைய நன்மைக்காகத்தான் சொன்னேன். அப்படிச் சொல்வதைச் சற்றுக் கடுமையாகவே சொல்ல நேர்ந்தது. ஏனென்றால், புர்ஜீகளின் விஷம் பொல்லாதது. தூரான்ஷாவை அவர்களுடைய துர்ப்போதனை எந்த முகடுவரை கொண்டுசென்றதோ அந்த உச்ச எல்லைக்குத் தாங்களும் இழிந்துவிட்டால் என் செய்வது என்பதற்காகவே தங்கள் மனம் புண்படச் சில கடுஞ்சொற்களை நான் பேசிவிட்டேன். அப்படி நான் பேசியதும், தங்கள் நன்மையையும் இந்த மிஸ்ரின் நன்மையையும் முற்றமுற்றக் கருதியேயன்றி, என் சொந்த நன்மைக்காகவன்று. எவர் வேண்டுமானாலும் சுல்தானாக இருந்துவிடலாம். ஆனால், சுல்தானுக்குள்ள சகலவகைப் பண்புகளும் உடனிருக்க வேண்டாமா? கற்பனைக் கதைகளில்கூட எத்தனையோ போலி சுல்தான்கள் வருகிறார்கள்.அவர்களின் கதையைப் படித்துவிட்டு நாம் சிரிக்கிறோம். அஃதேபோல், என் சரித்திரத்தைப் படிக்கிறவர்கள், என்னைப் பார்த்தோ, தங்களைப் பார்த்தோ நகைக்க் கூடாதல்லவா? எனவே, தாங்கள் முடிதுறக்கத் தேவையில்லை. பஹ்ரீகளை ஒழுங்காய் நடத்துங்கள்; புர்ஜீகளுக்கு அனாவசியமாய்ப் பதவி வழங்காதீர்கள்; என் உபதேசங்களை எப்பொழுதும் கடைப்பிடியுங்கள். ஐயூபிகளின் ஆட்சியால் மிஸ்ர் பெற்றுக்கொண்ட நற்கியாதியைவிட, நம்மிருவரின் ஆட்சியில் அதிகமான கீர்த்தியைப் பெற்றுக்கொள்ளட்டும். இந்த மிஸ்ரைக் காப்பாற்றவே நான் இன்றுவரை எத்தனையோ துறைகளில் தியாகம் புரிந்திருக்கிறேன். தாங்களும் ஒருசிறிது விட்டுக் கொடுப்பதால் ஒன்றும் கெட்டுவிடாது.”

ஷஜருத்துர் – முஈஜுத்தீன் சந்திப்பு அன்றிரவு அவ்வளவு தடபுடலாக ஆரம்பித்த வேகத்தில் இவ்வளவு சுமுகமாய்ப் போய் முடியுமென்பதை நீங்கள் எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். ஆனால், உண்மை நிகழ்ச்சிகள் கட்டுக்கதைகளில் வருணிக்கப்படுகிற பொய் வருணைனைகளை விட மெய்யானவையாய் இருப்பதால், அன்றிரவு அப்படியேதான் நடந்தது. முஈஜுத்தீனிடமிருந்து அரசாட்சியைப் பறித்துக்கொள்ள வேண்டுமென்னும் ஒரே குறியின் மீதே கண்ணாயிருந்த ஷஜருத்துர் அந்தத் துறையில் பாதி வெற்றி பெற்றுவிட்டார். ஆகவே, அவருக்குப் பரம திருப்தி ஏற்பட்டுவிட்டது. முன்னம் சாலிஹ் ஷாமுக்குச் செல்லுமுன்னம் இருந்த பழைய நிலைமை நாளடைவில் மீண்டும் வந்துவிட்டது. ஆனால், ஒரு வித்தியாசம்: சாலிஹ் ஷஜருத்துர்ரின் புத்திக் கூர்மையை மெச்சி வலியவே அவரிடம் அரசாட்சியைப் பகிர்ந்துகொண்டார். ஆனால் ஐபக்கோ, ஆபத்திலிருந்து தப்ப வேறு வழியின்மையால் அரைகுறையான மனத்துடன் நிர்ப்பந்தத்தின்மீது இவ்வேற்பாட்டுக்கு இணங்கினார்.

கணவரும் மனைவியும் சமரசத்துக்கு வந்துவிட்டபடியால், அடுத்த நாள் முதல் அரசாங்க அலுவல்களே மாறிப்போய் விட்டன. ருக்னுத்தீன் மட்டும் இம்மாதிரியான பெரிய மாறுதலை முற்றும் எதிர்பார்த்திருந்தபடியால், அவர் சுல்தானின் போக்கில் மாற்றத்தைக் கண்டு வியப்படையவில்லை. ஆனால், புர்ஜீகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மிஸ்ரின் ஆட்சியை ஷஜருத்துர்ரே நிர்வகித்துவருகிறார் என்பதையும், மலிக்குல் முஈஜுத்தீன் ஐபக் வெறும் பேரளவிலேதான் சுல்தானாகக் காணப்படுகிறார் என்பதையும் பொதுமக்களும் பஹ்ரீகளும் புர்ஜீகளும் வெகு சீக்கிரத்தில் தெரிந்துகொண்டு விட்டார்கள். சகல அதிகாரங்களும் ஷஜருத்துர்ரின் கைக்குச் சிறுகச்சிறுக வந்துவிட்டன என்றால், ஆட்சித் திறனைப் பற்றியோ, யாவரும் அடைந்த பெரும் திருப்தியைப் பற்றியோ நாம் கூறுவானேன்? மேலும், முன்னமெல்லாம் ஷஜருத்துர் நிர்வாகத்தைச் செலுத்தியதற்கும் இப்பொழுது ஐபக் மூலமாக நிர்வகிப்பதற்கும் நிரம்ப வேற்றுமை காணப்பட்டது. என்னெனின், கால சக்கரமென்பது கனவேகமாகச் சுழன்று பலப்பல விதப்பட்ட வின்னியாச மாற்றங்களை எல்லாத் துறைகளிலும் உண்டுபண்ணி விட்டிருந்தமையால், ஷஜருத்துர்ரின் திறமைகளும் முன்பிருந்ததை விடப் பன்மடங்கு கூர்மையடைந்து விட்டன. மேலும், ஐபக்கிடமிருந்து இழந்த ஸல்தனத்தை மீட்டும் பெறுதற்கு என்னவிதமான உன்னத மிக்க ராஜதந்திர யுக்திகளையெல்லாம் பிரயோகிக்க முடியுமோ, அந்த விதமானவற்றையெல்லாம் தங்குதடையின்றிப் பிரயோகிப்பதில் சுல்தானா ஷஜர் முனைந்து விட்டார். அன்றியும், நாளேற வேற, புர்ஜீகளின் பலம் ஒடுக்கப்பட்டே வந்தது. அரண்மனையின் அரியாசனத்தின்மீது ஐபக்கே அமர்ந்திருந்த போதினும், அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கிற சாமார்த்திய முற்றும் அந்தப்புரத்துள்ளே அடங்கிக் கிடந்த நாரிமணியின் சூத்திரக் கயிற்றிலேதான் தொங்கிக்கொண்டிருந்தது. மேலும், ஐபக் சுகமான அரச போகத்தைத் தங்குத்தடையின்றி அனுபவித்தற்கும் பஹ்ரீ தலைவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாகாமல் என்றுமே சுகமாய் இருத்தற்கும் ஷஜருத்துர்ரின் நிர்வாகம் உறுதுணையாயிருந்தமையால், எல்லாம் நல்லதாயிற்றென்று வாளா இருந்துவிட்டார்.

ஷஜருத்துர்ருக்கோ, அரியாசனம் ஏறுவதில் ஒரே ஒரு சங்கட மிருந்தது. அஃதென்ன வென்றால், முன்னம் கலீஃபாவால் நியமனம் செய்தனுப்பப்பட்ட மலிக்குல் அஷ்ரப் காஹிராவுக்குள் வந்து சேர்ந்ததும் புர்ஜீகள் விளைத்த பெருங் குழப்பத்தை ஷஜருத்துர் மறக்கவில்லை. ஆகவே, அந்த அஷ்ரபும் அழித்தொழிக்கப்பட்டு, அந்த ஸ்தானத்திலிருக்கிற ஐபக்கின் அதிகாரமும் இப்பொழுதே பிடுங்கப்பட்டு விட்டால், மீண்டும் புர்ஜீகள் பெரியதோர் உள்நாட்டுக் கலகத்தைக் கிளப்பி விட்டுவிட்டால் என்செய்வது? என்று சுல்தானா சிந்தித்தார். ஆதலினால் புர்ஜீளின் சக்தி அடியோடு குன்றுகிறவரையும் பஹ்ரீகளின் நிலைமை சாலிஹின் இறுதிக் காலத்தில் இருந்த உச்சத்துக்கு உயருகிற வரையும் இதுபோதுள்ள நிலமைதான் நீடிக்க வேண்டுமென்று தெளிவாயுணர்ந்த ராணியார், ஐபக்கை சுல்தானாக வைத்துக்கொண்டே தமது இஷ்டத்துக்கு இயையநாடாண்டு வந்தார்.

மிஸ்ர் தேசம் உற்பத்தியானது முதல்இன்றுவரை அத்துணை மாட்சிமிக்க உயர்ந்து சிறந்த ஆட்சியை அந்நாடு பெற்றுக்கொண்டதேயில்லை என்பது சரித்திரம் கூறும் சான்றாயிருக்கிறது. எனவே, இழந்த ராஜ்ஜியத்தை ஷஜருத்துர் மீட்டும் கைவரப் பெற்றுக்கொண்டதுடனே, எப்படிப்பட்டவரும் குறைகூற முடியாத மிக மேன்மையான நல்லாட்சியையும் புரியத் தலைப்பட்டார். மலிக்குல் அஷ்ரப் அரண்மனைக்குள் காலடி எடுத்து வைத்த அன்று முதல் கருமேகத்துள் புதையுண்டு கிடந்த வெண்ணிலவுபோல மறைந்திருந்த நம் பழைய சுல்தானா, இதுபொழுது இளவேனிற் பருவத்து மாசுமறுவற்ற திறந்த வானில் பெருமையுடன் ஊர்ந்து தவழும் பொற்கிரணம் படைத்த பூரண சந்திரனாக ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். பெண்ணென்றால், எல்லாரும் ஷஜரைப் போன்ற பெண்ணாவரோ?

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment