மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் அங்ஙனம் விர்ரென்று வெளியேறிச் சென்றதும், முஈஜுத்தீன் எண்ணி நடுங்கியபடியோ, அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போலவோ ஒன்றும் பெரியகாரியம் செய்ய அப்படித் திடீரென்று வெளிச்செல்லவில்லை. ஆனால்,

மன நிம்மதியாகவும் முழு ஓய்வுடனும் அயர்ந்த நித்திரை செய்தற்காகவே மற்றொரு அறைக்குள் புகுந்து கதவை சாத்தி தாளிட்டுக்கொண்டு உன்னதமான உறக்கத்துள் ஆழ்ந்துவிட்டார்! ஒன்றும் பிரமாதமாக நடக்காததுபோலே அயர்ந்த, தெளிந்த, அருமையான தூக்கத்தில் சுல்தானா முழு ஒய்வுடனே உறங்கிவிட்டார்.

“மனஸ்தாபத்தை மிக வன்மையாகக் கிளப்பி விட்டுவிட்டேன். இன்றைக்கு இரண்டிலொன்று முடிந்தேதான் தீரும்!”என்று பொறுமையின்மையுடன் காத்திருந்த முஈஜுத்தீன் விடிகிறவரை மஞ்சத்தில் குந்தியபடியே தம்முடைய முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஷஜருத்துர் வெளியேறிச் சென்ற வாயிலைப் பிளந்த வாயுடன் நோக்கிக்கொண்டேயிருந்தார். போன ஷஜருத்துர் போனவரேயன்றித் திரும்பவேயில்லை. இந்த ஏமாற்றம் முஈஜுத்தீனுக்கு எப்படியிருக்குமென்று நாம் வருணிக்கத் தேவையில்லை.

முற்கூறிய சம்பவம் நிகழ்ந்து, ஒருவாரமாயிற்று. ஷஜருத்துர்ரோ, அச் சம்பவத்தைப் பற்றிச் சிறிதுமே கருதாமல், தம்முடைய அரசியலலுவல்களில் கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்தார். முஈஜுத்தீனுக்கோ, அந்த சுல்தாவைத் தனித்துச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொரு நாளும் கிட்டாமலே இருந்து வந்தது. இல்லை, அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிட்டமுடியாதபடி வெகு சாமார்த்தியமாக ஷஜருத்துர் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டார். சில இரவுகளைத் தம்முடைய பளிக்கறையில் கழிப்பார்; சில இரவுகளை அந்தப்புரத்தின் வெவ்வெறு அறைகளில் கழிப்பார்; தப்பித்தவறியும் முஈஜுத்தீன் பார்வையில் விழாதபடி எப்பொழுது பார்த்தாலும் ஏதாவதொரு வேலையில் மிகவும் கவனமாய் மூழ்கியிருப்பதேபோல் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார். ஹம்மாமில் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது வெளியில் முஈஜுத்தீன் காத்திருப்பார். ஆனால், ஷஜருத்துர் அந்த ஸ்னான அறைக்குள்ளே எவ்வளவு நேரத்தை வீணே கழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கழித்துவிட்டு, வேகமாக வெளியேறி, பெரிய அவசர காரியத்தைக் கவனிக்கச் செல்கிற “அவசரக்காரி”யேபோல் பறந்துவிடுவார். உள்ளமொவ்வாத பெண்டாட்டியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கின்றவன்கதி அதோகதிதான்!

எனினும், இறுதியாக ஒருநாள் ஷஜருத்துர்ரை இசகுபிசகாக நேருக்குநேர் சந்திக்கிற அபூர்வமான சந்தர்ப்பம் முஈஜுத்தீனுக்குக் கிடைத்தது. அடிக்கடி அந்த சுல்தானா பளிக்கறையில் வந்து தங்குகிறார் என்பதைக் கண்டறிந்த அவர் ஒருநாள் முன்னிரவில் அப்பளிக்கறையின் தூண் மறைவிலே முடங்கிக் குந்திக் கொண்டார். அவர் எதிர்பார்த்தபடி மலிக்கா அவ்விடத்துக்கு அன்று வந்துசேர்ந்தார். அங்கு விரிக்கப்பட்டிருந்த இரத்தினக் கம்பளத்திலே ஷஜருத்துர் ஒய்யாரமாக வந்து அமர்ந்துகொண்டு, பக்கத்தில் கிடந்த திண்டொன்றில் முழங்கையை யூன்றி ஏதேதோ சிந்தித்தவண்ணம் இருந்தார். அதுதான் தக்கதருணமென்று கண்ட முஈஜுத்தீன் மெதுவாகத் தாம் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்டு, சுல்தானாவின் எதிரிலே வந்து நின்றார்.இப்படிக் கொஞ்சமும் எதிர்பாராத வேளையில் சிறிதும் எதிர்பார்க்க முடியாத இடத்தில் முஈஜுத்தீன் திடுமென வந்து எதிரில் நின்றது முதலில் ஆச்சரியத்தைக் கொடுத்ததென்றாலும், ஷஜருத்துர் அதைச் சுலபமாக அடக்கிக்கொண்டு விட்டார்.

“ஏ, ஷஜருத்துர்! நீ அன்றொரு நாள் என்னிடம் பேசிய முக்கியமான விஷயமொன்றை உனக்கு ஞாபக மூட்டுவதற்காகவே இப்பொழுது இங்கு வந்தேன்,” என்னும் பூர்வ பீடிகையுடனே முஈஜ் மெல்ல வாய் திறந்தார்.

சுல்தானாவோ, தம் நீட்டிய காலைக் கொஞ்சமும் மடக்காமலும் ஊன்றிய கரத்தைத் தளர்த்தாமலும் வெற்றிடத்தை வெறிக்கப் பார்ப்பதுபோல் முஈஜுத்தீன் நின்ற திக்கை நோக்கினார்.

“ஏ, சூனிய வித்தை கற்றவர்களுள்ளெல்லாம் தலைசிறந்த சூனியக்காரியே! அன்றொரு நாள் நீ கற்ற மாய சூனிய வித்தையையெல்லாம் என்மீது சொரிந்து, ஒரு பாவமுமறியாத என்னரும் மனைவி மைமூனாமீது பொய்ப்பழி சுமத்தி, அவளையே சூனியக்காரி என்று பட்டஞ்சூட்டி, உன் பலிபீடத்தில் பலியிட்டுக் கொண்டாயே! அதை ஞாபகமூட்டவே நான் இங்கு வந்து இப்பொழுது நிற்கிறேன். உனக்குக் கருக்கூட வொட்டாமல் அவள் தடுத்து வருகிறாளென்று என் கருவறுத்தையே நீ, அதையே ஞாபகப்படுத்த வந்து நிற்கிறேன். நீ இம்மாதிரியான பெண்மலட்டு வாழ்க்கை நடத்துவதற்காக எனக்கிருந்த ஆண்மையை அழிக்க என்னிடமிருந்து மைமூனாவைப் பிரிக்க நீ செய்த சூது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டுவிட்டதென்பதை உனக்குத் தெரிவிக்கவே நான் இங்கு வந்து நிற்கிறேன். என் கரத்திடையிருந்த ஆட்சியைத்தான் நீ பிடுங்கிக்கொண்டு என்னைக் கேவலமான அடிமையாய்ச் செய்துவிட்டாய் என்றாலும், ஆண்பிள்ளையாய்ப் பிறந்த என்னை அலியாய் இழியச் செய்தும்விட்டாய் என்பதை உனக்கு அறிவிக்கவே வந்திருக்கிறேன்.

“நீயோ, என்னை இப்படியெல்லாம் குழையச் செய்தது போதாதென்று, என்னைப் பலவகையாலும் வஞ்சிக்கவும் திரஸ்கரிக்கவும் முற்பட்டுவிட்டாய். காட்டில் உலவித் திரிகிற மிருகங்களுக்கும் ஆகாயத்தில் பறந்து திரிகிற பறவைகளுக்கும் இருக்கிற உரிமைகூட எனக்கில்லை என்பதை உன் மறைமுகமான செயல்கள் மூலம் நிரூபித்து வருகின்றாய். ஆனால், நீயோ எனக்கு ஒருவிதமான குறைவுமில்லை என்றும் என் சுதந்திர வாழ்க்கைக்கு எவ்விதமான பங்கமுமில்லை என்றும் வாய்ச் சாதுரியமாகக் கூறிவிடுகின்றாய். எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாக நீ கூறும் சுதந்திரம் எவ்வளவு தூரம் எனக்கு நலன் விளைக்கிறதோ, அஃது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்! – ஷஜருத்துர்! போனதெல்லாம் போகட்டும். எனக்கு உன்னுடைய சிம்மாசனமும் வேண்டாம்; உன் சலிகையும் வேண்டாம்; உன் கருணையோ காதலோ வேண்டாம். ஒரே ஓர் உரிமையை மட்டுமாவது எனக்கு அளித்துவிடே. என்னிஷ்டத்துக்கு, எனக்குப் பிடித்தமான ஓர் அடிமைப் பெண்ணையாவது நான் மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்துகிறேன். அதற்குமட்டும் அனுமதி கொடுத்துவிடே!”

இவ்வளவு நேரம் மெளனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த ராணி திலகத்துக்குக் கோபம் திடீரென்று பொங்கிவிட்டது. எழுந்தமர்ந்து கொண்டார்.

“என்ன சொன்னீர்? எனக்கொரு சக்களத்தியை உண்டு பண்ணப் போகிறீரா? அதுவும் ஓர் அடிமைப் பெண்ணையா? இது முடியவே முடியாது! உமக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது? நீர் என்னை என்னவென்று நினைத்துக்கொண்டு இவ்வளவெல்லாம் நயிச்சயம் பேசுகின்றீர்?”

“ஷஜருத்துர்! உன் கோபத்தை அடக்கிக்கொள். எனக்கொரு மனைவி உயிருடனிருந்த அந்தக் காலத்திலே அவளுக்கொரு சக்களத்தியாக நான் உன்னைச் செய்துகொள்வதற்கு நீயே துணிந்து, என்னிடம் ஆடிய சரசசல்லாப உல்லாசக் கேளி விளையாட்டுக்களை நான் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. எனவே, தகாத வார்த்தை எதையும் நான் உன்னிடம் பேசிவிடவுமில்லை; அல்லது உனக்கு ஏற்கனவே பழக்கமில்லாத எந்தப் புதிய நிபந்தனையையும் நான் உன்னிடம் சொல்லிவிடவுமில்லை. மைமூனா இருக்கும் போதே என்னை மணந்த நீ, இப்பொழுது நீ யிருக்க மற்றொருத்தியை நான் மணக்க விரும்புவதைத் தகாத காரியம் என்று கருதத் தேவையேயில்லை. உருப்படாத ஒரு பெண்டாட்டியைக் கட்டிக்கொண்டு இல்லறத்தில் துன்பக் கடலில் மூழ்கித் தவிக்காமல் இருப்பதற்காகவே, ஒரு கணவன் நான்கு மனைவிகள் வரை மணந்துகொள்ளலாமென்று இறைவன் அனுமதியளித்திருக்கிறான். உன்னால் எனக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை என்பதை நீயே அறிவாய். உனக்கும் எனக்கும் இனி எந்தச் சந்ததியும் தோன்றப் போவதில்லை. மரணமென்பது எல்லாருக்கும் பொதுவானது. நீயும் நானும் மாண்டுவிட்டால், பிறகு இந்த ஸல்தனத்துக்கு – நீ பேராசையுடன் வன்மையாய்ப் பற்றியிருக்கிற இம் மிஸ்ர் ராஜ்யத்துக்கு – ஐயூபிகள் ஆண்டுவந்த இப் புனித நாட்டுக்கு ஒரு வாரிசுமில்லாமற் போய்விடுமென்பதை நீ மறந்துவிட்டாய்.

“உன்னையும் என்னையும் சந்திக்கவொட்டாமல் நயவஞ்சகமாய்த் தடுத்துவருகிற உன்னுடைய ருக்னுத்தீன் உன் மரணத்துக்குப் பின்னால் இந் நாட்டைத்தானே அபகரிக்கச் சூழ்ச்சி செய்கிறான் என்பதை நீ உணரவில்லை. ஐயூபி ஸல்தனத் நிலவிவந்த இந் நாட்டிலே அவன் மம்லூக் ஸல்தனத்தை நிறுவிவிடத் திட்டமிட்டுவருகிறான் என்பதை நான் நன்கறிவேன். – நீ ஏன் இப்படி மிரள மிரள விழிக்கிறாய்? நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். உனக்கும் எனக்கும் இனிமேல் இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையென்பது ஏற்படப் போவதில்லை. என்னால் உனக்குப் பிரயோஜனமிருக்கிறதோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனால், உன்னால் எனக்குப் பிரயோஜனம் அறவே கிடையாது. நீர்மேற் குமிழிபோன்ற இந்த என் முறுக்கான வாலிபத்தை நான் பாழாக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் மயிர் நரைத்து, மேனி திரைந்து பச்சை நரம்பு வெளியெடுத்து, முகஞ் சுருங்கிய பின்னால் என்னை எவள் விரும்பப்போகிறாள்? எனவே, உன் புரு­னாகிய நான் நிஜமான இன்பத்துடன் வாழவேண்டுமென்று நீ விரும்புவது மெய்யயன்றால், உன்னால் எனக்களிக்க முடியாத இன்பத்தை நான் வேறெங்காவது பெற்று மகிழ்வதில் உனக்கொன்றும் பொறாமையில்லையென்பது வாஸ்தவமென்றால், இவ் வரண்மனையில் வசிக்கிற ஃபாத்திமா என்னும் அடிமைப் பெண்ணை மணந்துகொள்ள….”

“முடியாது!” என்று வெண்கலப் பாத்திரத்தில் கல்லைப் போட்டது போன்ற கணீரென்று குரலில் ஷஜருத்துர் திடீரென்று இடைமறித்தார். அக் குரலிலிருந்த தீர்க்கம் முஈஜுத்தீனை அப்படியே தூக்கிவாரிப் போட்டது! ஒரு சில வினாடி வரை முஈஜ் மெளனமாய் நின்றார். எனினும், தைரியத்தை இழந்துவிடவில்லை.

“ஆனால், நான் அந்த ஃபாத்திமா என்னும் அழகிய நாரிமணியை மணந்துகொள்வதென்று…”

“முடியாதென்றால், முடியாது”

“உன் அனுமதி இல்லாவிட்டாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. நான் நாளையே அவளை மார்க்கச் சட்டப்படி மணம் செய்துகொள்ள…”

“முடியாது!” – இதில் வெறுப்பும் ஆத்திரமும் தொனித்தன.

“ஏ, ஷஜருத்துர்! இனியும் நீ என்னைக் கட்டுப்படுத்த முடியாது. என் உடலிலே உஷ்ண உதிரம் ஓடுகிறது. என் ஆண்மைக்கு அடக்கொணாச் சக்தியிருக்கிறது. அவளை மணந்துகொண்டால்…”

“முடியாது!” – இஃது அகங்காரத்துடன் காணப்பட்டது.

“எனவே, நான் அவளை மணந்துக்கொண்டால், நிச்சயமாக என் இல்லின்ப வாழ்க்கையை நடத்த…”

“முடியாது!” – இது கம்பீரமான குரலில் பிறந்தது.

“ஏ, ஷஜர்! தொழுவத்தில் படுத்துக்கொண்ட நாயைப்போல் நீ நடந்துகொள்ளாதே! இப்படி நீ ‘முடியாது, முடியாது, முடியாது’ என்று ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பல்லவி பாடுவதில் ஒன்றும் பயன் விளையப் போவதில்லை. உன்னாலே எனக்கு ஒருவித புண்ணியமுமில்லை; புருஷார்த்தமுமில்லை. நான் வேறொரு பெண்ணை மணந்து இன்பவழ்க்கை நடத்துகிறதற்கு நீ உபகாரம் செய்ய…”

“முடியாது!”

“உபகாரம் செய்யவேண்டியதிருக்க, இப்படி முடியாது, முடியாது என்று முட்டுக்கட்டை போடுவதால் உனக்குத்தான் என்ன பிரயோஜனம்? அல்லது எனக்குத்தான் என்ன பிரயோஜனம்? ஷஜருத்துர்! நீ சற்றே….”

“முடியாது!”

“ஃபாத்திமாவை….”

“முடியாது!”

“எனக்கு விமோசனமளிக்க…”

“முடியாது!”

தாம் ஷஜருத்துர்ரிடம் வார்த்தையாடுகிறோம் என்பதை மறந்து, முஈஜுத்தீன் மேலும்மேலும் பேசிக்கொண்டே இருந்ததால் பெற்றுக்கொண்ட பலன் இது.

“நான் பேசுவதை நீ முற்றும் கேட்டுவிட்டாவது….”

“முடியாதென்றால், முடியாதுதான்!” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அப் பளிக்கறையிலிருந்து அம்பு வேகத்தில் பாய்ந்து வெளியேறினார் சுல்தான்.

நட்டுவைத்த சிலைபோலே அங்கேயே நின்றுகொண்டிருந்தார் மாஜீ சுல்தான் முஈஜுத்தீன்.

“சரி! இவளுக்குக் கேடுகாலம் வந்துவிட்டது!” என்று முணுமுணுத்துக்கொண்டார் முஈஜுத்தீன். அவர் முகத்தில் ஈயாடவில்லை!

பளிக்கறையிலிருந்து வெளியேறிச் சென்ற சுல்தானா ஷஜருத்துர் நேரே அந்தப்புரத்துள்ளே நுழைந்தார். அடுத்த க்ஷ­ணமே அந்த பாத்திமா என்னும் அடிமைப் பெண்ணைத் தம் முன்னே கொண்டுவந்து நிறுத்தச் செய்தார். கடுஞ் சினத்துடன் ஷஜருத்துர் அந்த ஃபாத்திமாவை முறைத்துப் பார்த்த பார்வையில் அவ் வடிமைப் பெண்ணுக்கு முழங்காலுக்குக் கீழேயிருந்த அவயவம் நீராய் உருகி விட்டதைப்போன்ற உணர்ச்சி பிறந்துவிட்டது. அவள் அப்படியே தொப்பென்று குப்புற்று வீழ்ந்துவிட்டாள். சுல்தானாவின் கோபம் லேசுபட்டதா?

ஷஜருத்துர் கால்மேல் கால்போட்டுக்கொண்டு, கைகளைக் கோத்து முழங்கால்மீது அழுத்திக்கொண்டு, “ஏ, ஃபாத்திமா! என்ன நடந்ததென்பதை ஒளிக்காமல் சொல்லிவிடு!” என்று ராஜதோரணையில் கடிய கட்டளை பிறப்பித்தார்.

குப்புறப் படுத்தவள் தலையை நிமிர்த்தாமல், உடலெல்லாம் துடிக்கப் பேசமுடியாமல் திணறினாள்.

“நாம் உன்னை மன்னித்து விடுவோம். ஆனால், உண்மையை மட்டும் ஒளிக்காமல் சொல்லிவிட வேண்டும்!”என்று மலிக்கா கர்ஜித்தார்.

உண்மையைச் சொல்லிவிட்டால் உயிர் போய்விடாது என்னும் நம்பிக்கை பிறந்தவுடனே அவ் வேழை அடிமைப்பெண் சற்றுத் தைரியமாக எழுந்து நின்றாள். எனினும், கிலி மட்டும் அகலவில்லை.

“யா…. ஸாஹிபத்தல்… ஜலாலத்தில் மலிக்கா! தாங்கள் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்?” என்று மெதுவாகப் பேசினாள்.

ஷஜருத்துர் அவ் வறை முழுதும் அதிரும்படியாக இடியிடியென்று நகைத்தார். ஃபாத்திமாவுக்கு மேனி ஜில்லிட்டு விட்டது.

“ஏன், நான் சொல்லித்தான் தெரியவேண்டுமோ? மாயாஜாலக் கள்ளி! – நீ நம்முடைய அத்தாபேக்குல் அஃஸக்கிர் ஐபக்கிடம் என்ன சொன்னாய்?” என்று வெகு கடுகடுப்புடன் கடாவினார் சுல்தானா.

“ஆண்டவன் மீது ஆணையாக, யா மலிக்கா! அடியேன் ஐபக் பாதுஷாவிடம் ஒன்றுமே சொல்லவில்லையே! நான் அவருடன் பேசியதேயில்லையே!” என்று பசபசவென்று விழித்துக்கொண்டே ஃபாத்திமா பதஷ்டமுற்றாள்.

“திருட்டுச் சிறுக்கி! உண்மையை ஒளிப்பை யானால், உன் தலை உருண்டுவிடும், ஜாக்கிரதை!”

“யா ஸாஹிபத்தல் ஜாலலத்தில் மலிக்கா! அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். யான் அவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையே!”

“அப்படியானால், அவர் உன்னிடம் என்ன சொன்னார்? ஒளிக்காமல் சொல்லிவிடு!”

ஃபாத்திமா கைகளைப் பிசைந்து கொண்டாள். நாக்கை அடிக்கடி நீட்டி, உதடுகளை நைப்பேற்றிக் கொண்டாள். அடைக்கிற தொண்டையை எச்சில் விழுங்கிச் சரிப்படுத்திக் கொண்டாள்.”

“சீக்கிரம் சொல்! என்ன நடந்தது? எனக்கு எல்லாம் தெரியும்! – ஊம்! சொல், சீக்கிரம்!”

“ஆண்டவன்மீது ஆணையாக, யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! அவரேதான்…”

“ஏன் விழுங்குகிறாய்? என்ன நடந்தது?”

“நேற்று, -இல்லை, இன்று காலை அவரேதான் – சத்தியமாக!….”

“அவரே உன்னை என்ன செய்தார்?”

“என்னை அவர் மனமாரக் காதலிப்பதாகவும் என் சம்மதத்தை தெரிவித்தால் என்னை மணப்பதாகவும்….”

“என்ன, மென்று மென்று விழுங்குகிறாய்? எல்லாவற்றையும் சொல்லப் போகிறையா? அல்லது….”

“யா மலிக்கா! வேறொன்றுமே நடக்கவில்லை. சுல்தானாவாகிய தங்களுக்குத் தெரியாமலா எதுவும் செய்வது என்று நான் கூறினேன். ‘ஏன்? உங்கள் சுல்தானா மட்டும் ரொம்ப ஒழுங்கோ? சுல்தான் ஸாலிஹை பூங்காவனத் தோட்டத்திலே காதலித்த கதை எனக்குத் தெரியாதோ?’ என்று அவர் நையாண்டித் தனமாகக் கையை ஆட்டிக்கொண்டே கேட்டார்…”

“ஊம். அப்புறம்?”

“அதற்கு நான் சொன்னேன். ‘நான் சுல்தானாவின் அடிமை. அந்த மலிக்கா எனக்கு உத்தரவு கொடுத்தால்தான் நான் நிக்காஹ் செய்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் நானொன்றும் செய்துகொள்ள முடியாது!’ என்று. சத்தியமாக! இதைத் தவிர்த்து வேறொன்றும் நடைபெறவில்லை, யா ஸாஹிபா!”

“இவ்வளவெல்லாம் நீ பேசியிருக்க, அவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையென்று அடியுடன் சாதித்தாயே?”

ஃபாத்திமா பதில் சொல்லவில்லை.

“ஜாக்கிரதை! நீ வெடிமருந்துடனே விளையாடுகிறாய் என்பதை மறந்துவிடாதே! அந்த ஐபக்கின் முன்னிலையில் இனி நீ தப்பித்தவறி நிற்பதை நான் கண்டேனானால் உன் உடல் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்படும், ஜாக்கிரதை! கன்னியாந்தப்புரத்தில் காதல் விளையாட்டு நடக்கிறதோ? உனக்கு இடப்பட்டிருக்கிற வேலைகளைத் தவிர்த்து, நீ வேறு எந்த வேலையிலாவது இறங்கினாயேயானால்….” என்று பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டு ஷஜருத்துர் பேசும்போதே, ஃபாத்திமா தொப்பென்று குப்புற்று விழ்ந்து சுல்தானாவின் இறு பாதங்களையும் இறுகப் பற்றிக்கொண்டாள்.

“இல்லை, இல்லை! யா ஸாஹிபா! யான் அப்படியொன்றையும் தங்கள் அனுமதியில்லாமல் செய்துவிட மாட்டேன். இனிமேல் அவரை நான் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டேன்!” என்று அலறினாள். ஃபாத்திமாவின் கண்களில் நீர் மல்கியது.

“ஏ, ஃபாத்திமா! எழுந்திரு. அவரை மனக்க வேண்டுமென்னும் ஆசை உனக்குத் தப்பித்தவறி இருக்குமேல், இக்கணமே விட்டொழி அவ் வீண் எண்ணத்தை! நீ அவரை மணக்கக் கூடாது; மணக்க முடியாது!”என்று கோபாவேசத்துடன் கூவினார்.

அந்த ‘முடியாது’ என்னும் இறுதி வார்த்தையில் எவ்வளவு கண்டிப்பும் தண்டிப்பும் தொனித்தனவென்றால், அவ்வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்ட ஃபாத்திமாவின் தலை கிடுகிடுவென்று, “இல்லை, இல்லை!” என்று பலமாய் ஆடிற்று, மரக்கட்டையால் செய்த சூத்திரப்பாவையே போல்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment