இருள் சூழ்ந்த நள்ளிரவு வந்து அடுத்தது. அந்தப்புரத்தில் அரசியார் இல்லையென்னும் கவலையற்ற எண்ணத்துடனே எல்லாரும் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். முஈஜுத்தீனைக் கண்காணிப்பதற்காக
நியமிக்கப்பட்டிருந்த பஹ்ரீ மம்லூக்குகள்கூடத் தத்தம் ஸ்தானத்திலே நின்றபடியும் சாய்ந்தபடியும் குந்தியபடியும் படுத்தபடியும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். எங்கும் பயங்கரம் சூழ்ந்து நின்ற நிலவில்லாத இருளிரவாதலால், முற்றும் காரிருள் கம்மிக் காணப்பட்டது. அந்தப்புரத்தின் அகன்ற பாதைகளில் அங்கங்கே அரைகுறையாய் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திக் கூண்டுகள் அணைந்ததும் அணையாததுமாகப் பெயரளவிலே தொங்கிக்கொண்டிருந்தன. தொலைவிலிருந்த வீதியில் கிடந்த ஓரிரு நாய்கள் மட்டுமே அவ் விருளைச் சகியாமல் குரைத்துக்கொண்டு கிடந்தன. அடுத்திருந்த தோட்டத்தின் முதிர்ந்த மரங்களிலிருந்த பொந்துக்குள்ளிருந்து ஆந்தைகளும் கோட்டான்களும் இடையிடையே அலறிக்கொண்டிருந்தன. இவற்றைத் தவிர எங்கும் பயங்கர நிச்சப்தம் நிலவிக் குடிகொண்டிருந்தது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்துக்காகவே விழித்துக்கொண்டு தம் சப்ர மஞ்சத்தின்மீது தூங்குவதுபோலப் பாசாங்கு செய்து படுத்திருந்த முஈஜுத்தீன் பூனைபோல் எழுந்திருந்து, பாதத்தின் முன்பாகத்தால் பைய அடிமேலடி வைத்து நடந்து வந்து, தம்முடைய காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஹல்கா உளவர்களை மெல்ல எட்டிப் பார்த்தார். அவர்கள் வெகு ஜோராய் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அன்னாரின் முகத்தெதிரில் மொய்த்துக்கொண்டிருந்த கொசுகுக்கூட்டம் நன்கு நிரூபித்தன. திருப்திகரமாய்த் தலையசைத்துக்கொண்டே, முஈஜுத்தீன் வந்த மாதிரியே திரும்பவும் மெல்ல நடந்து உந்திச் சென்றார். தம் படுக்கை தலையணையின் கீழிருந்த அந்தத் தந்தச் சிமிழை மெதுவாயெடுத்துத் தம் கரத்திடைப் பத்திரமாய்ப் பற்றிக்கொண்டார். நிரந்தரமான நித்திய ஜீவனளிக்கும் சஞ்சீவிக் கிண்ணத்தைப் பற்றிக்கொண்ட பேராசை பிடித்த உலுத்தனைப்போலே பல்லிளித்தார்.
“தொலைந்தாள் சண்டாளி! தொலைந்தாள் அச் சூனியக்காரி! – ஏ, ஆண்டவனே! இன்னம் சற்று நேரத்துக்கு மட்டும் எனக்கு ஒரு குறைவும் வராமல் நீ காப்பாற்றக் கடவாய்! என் கையாலேயே யான் பழிதீர்த்துக் கொள்வதற்கு எனக்குச் சற்றே உதவி நல்குவாய்!” என்று அவருடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன.
நடுக் காட்டின் நீர்த் தடாகத்தில் தாகந் தணித்துக் கொள்ளுகிற மான்குட்டியைப் பார்த்த வரிப்புலி தன்வாலை நிமிர்த்திக்கொண்டு குறி தப்பாமல் பாய்ந்து பற்றுவதற்கு ஆயத்தமாவதேபோல், முஈஜுத்தீன் எவர் கண்ணிலும் படாமல் தமதறையை விட்டு வெளியேறுவதற்குக் குறிப்பாத்தார். கால்களை உந்திக்கொண்டு, அரையாடை சலசலக்காமல் அடக்கியொடுக்கிக்கொண்டு, பாலைவனத்தில் நடக்கிற தீப்பறவையேபோல் தலையை உயர்த்தியுயர்த்தி நீட்டிக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் சுவரையொட்டியே பதுங்கிப் பதுங்கி நடக்கலாயினார்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த மாஜீ சுல்தான் ஏதொரு தடங்கலோ ஆபத்தோ இல்லாமல், வெகு பத்திரமாக ஷஜருத்துர்ரின் ஜோடனையறைக்கு முன்னே வந்து நின்றார். அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால், முழுதும் விரிந்தும் திறந்து நிற்கவில்லை; உள்ளே ஆள் நுழைய முடியாதபடி அதிகம் நெருங்கியும் நிற்கவில்லை. ஒருவாறு ஒருகணித்திருந்தது. சாதாரணமாக எப்பொழுதுமே அவ் வறைக்கதவு அப்படித்தான் பாதி திறந்தபடியும் பாதி மூடியபடியும் கிடப்பது வழக்கமாதலால், முஈஜுத்தீன் ஒன்றும் சந்தேகிக்கவில்லை. இதுவரை அடிமேலடி வைத்துப் பக்காத் திருடனேபோல் பையப் பதுங்கி நடந்துவந்த அவர் அவ்வறையின் நிலைக்குள்ளே அம்பு வேகத்தில் புகுந்தார். அவ் வறை கும்பிருட்டாக இருந்தது.
தடவிப் பார்க்கிற வேகத்தில் அங்குள்ள கண்ணாடியையோ ஏனைப் பாத்திரங்களையோ தட்டிக் கவிழ்த்துவிடக் கூடாதே என்னும் பேரச்சத்துடனே, இடக்கரத்தில் நஞ்சுச் சிமிழைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு, வலக்கரத்தை சுவர்மீது மெல்லப் பொருத்தி நத்தை ஊர்கிற வேகத்தில் நிதானமாகத் தடவிக்கொண்டே அலமாரி மாடம் இருக்கிற இடத்தை அண்மினார். அந் நேரத்தில் ஒரு மின்மினிப் பூச்சி அகஸ்மாத்தாக அவ் வறைக்குள்ளே பறந்து வந்தது. அந்த முனுக்கு வெளிச்சத்தில் முஈஜுத்தீன் தாம் நாடி வந்த பொருளைத் தடவிக் கண்டுபிடித்து விட்டார்!
அரை வினாடியில் அங்கிருந்த மைச் சிமிழையெடுத்துக் கொண்டு, தாம் கொண்டுபோயிருந்த நச்சுச் சிமிழை அவ்விடத்தில் வைத்துவிட்டு, ஏதோ பெரிய புதையலை அடைந்துவிட்ட பெரிய அதிருஷ்டசாலியே போல், ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு பெருந் திருப்தியடைந்தார். அடுத்த கணமே அங்கிருந்து வெளியேறி,பதுங்கிப் பதுங்கிப் பைய நடந்தார். சோதனைக்காக வெனவேபோலும் அந் நேரத்தில் எங்கேயோ ஒரு சத்தம் திடீரென்று கேட்டது!
அச் சந்தர்ப்பத்தில் அவர் இரவில் மலஜலங் கழிக்கும் அவசர கக்கூஸ் அறையின் பக்கம் நடந்துகொண்டிருந்தபடியால், சட்டென்று சமயோசித யுக்தி தோன்றிற்று. உடனே அவ் வறைக்குள்ளே புகுந்து, சிறுநீர் பெய்துவிட்டு, நல்ல பிள்ளையே போல் தம் படுக்கையறைக்குள் புகுந்து, மெத்தையில் ஏறிப் பொத்தென்று படுத்துக்கொண்டு, சொல்லொணா மனத் திருப்தியுடனே துயில்கொண்டு விட்டார். விசித்திரம் விசித்திரமான கனவுகளையும் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தார்.
அந்தப் பிரத்தியேக ஜோடனையறையைக் கதவிடுக்கிலே ஷஜருத்துர் மூச்சு விடாமல் பதுங்கிக்கிடந்து எல்லாவற்றையும் பார்த்ததையும், மின்மினிப்பூச்சி வெளிச்சத்தில் சிமிழ் மாறாட்டம் நடைபெற்றதையுங்கூட அவர் கூர்ந்து கவனித்ததையும் நம்முடைய ‘ஆடுதன் ராஜா’ எப்படியறிவார்?
அவ் வறையைவிட்டு முஈஜுத்தீன் வெளியேறிச் சற்று நேரம் கழிந்து, ஷஜருத்துர் மெல்ல நழுவிய வண்ணம் அந்த அலமாரியண்டை வந்தார். அந்தத் தந்தச் சிமிழை அதி ஜாக்கிரதையாய் எடுத்துக் கொண்டார். அன்று மாலையில் பஹ்ரீ ஒற்றன் தம்மிடம் வந்து கூறியன முற்றும் உண்மைதான் என்பதை இந் நிகழ்ச்சி சற்றும் சந்தேகத்துக்கிடமின்றி நன்கு நிரூபித்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால், அச் சிமிழுக்குள்ளே இருப்பதாகக் கருதப்பட்ட விஷம் நிஜமாகவே ஒரு மனிதனின் சருமத்தின்மீது கொஞ்சம் பட்டாலும் உயிர் போய்விடுமென்பது மெய்தானா என்பதை எப்படி அறிவது? ஷஜருத்துர்ரின் மூளை வழக்கத்துக் கொப்பப் பிரமாதமாக வேலைசெய்தது.
இரண்டொரு நிமிஷங் கழித்து, ஷஜருத்துர் அவ் வறையினின்றும் வெளிவந்தார். சிந்தனைச் சுமையால் கனமேறியிருந்த அவர் தலை சற்றே வளைந்திருந்தது. ஆனால், நடைமட்டும் நிதானமாகவும் தீர்க்கமாகவும் இருந்தது. மறுநிமிஷத்தில் அவர் அந்தபுரத்தின் தோழிகள் படுத்திருக்கும் அறைக்குள்ளே மெல்ல நுழைந்து, அங்குக் காவல்புரிந்து உறங்கிக்கொண்டிருந்த ஓர் அலியை மந்தணக் குரலில் எழுப்பினார். அயர்ந்த நித்திரையில் ஆழ மூழ்கியிருந்த அவனுடைய கண்கள் சட்டென்று திறவாமையால், கண்ணைக் கசக்கிக்கொண்டே, “யாரது?” என்று அரற்றினான். அரைகுறையான வெளிச்சமுள்ள அவ் வறையிலே தன்னை அந்நேரத்தில் வந்து தட்டியெழுப்புவது சாஷாத் சுல்தானாவே என்பதை அந்த அலி கண்விழித்துப் பார்த்ததும், நடுநடுங்கிப் போய்விட்டான்.
“நீ எழுந்து என்பின்னே வா!” என்று மந்தணமான தொனியில் கட்டளையிட்டார் சுல்தானா.
வாரிச்சுருட்டி எழுந்த அவ் அடிமை அலங்கோலமான தன் துணிமணிகளை இழுத்துக்கூட விட்டுக்கொள்ளாமல், சுல்தானாவைப் பின்தொடர்ந்தான். மந்திரத்தால் வசியம் செய்யப்பட்டவன் மாந்திரீகன் பின்னால் நடந்து செல்வது போலே இருந்தது, அந்த அலி நடந்து சென்ற காட்சி. அவ் வரண்மனையின் பலப்பல வளைந்து நெளிந்துள்ள பாதைகளினூடே நடந்து நடந்து, இறுதியாக ஒரு திறந்த வெளிக்கு வந்து ஷஜருத்துர் நின்றார்.
“அடே! அந்தக் கிழவன் ஃபக்ருத்தீனின் வீடு உனக்குத் தெரியுமல்லவா? – அவன்தான் அந்த புர்ஜீ அயோக்கியன்?” என்று சுல்தானா வினவினார்.
“யா மலிக்கா! நன்றாய் தெரியும்!” என்று பலமாய்த் தலையசைத்துக் கொண்டே பதிலிருத்தான், அந்த அலி.
“அவன் உறங்கிக்கொண்டிருக்கிற இடம் உனக்குத் தெரியுமா?”
“யா மலிக்கா! நன்றாய்த் தெரியும்!”
“சரி! இந்தத் தோலாலான கையுறையை உன் கைகளில் முதலில் மாட்டிக்கொள்!” என்று சொல்லிக்கொண்டே தம் மேலங்கிக்குள் மறைத்து வைத்திருந்த தோல் கையுறையை நீட்டினார் நம் சுல்தானா.
அந்த அலி அதை வாங்கிச் சீக்கிரமாக மாட்டிக்கொண்டான்.
“இந்தத் தந்தச் சிமிழை எடுத்துக்கொண்டு போய் அந்த ஃபக்ருத்தீன் படுத்திருக்கிற இடத்தில் மெதுவாய் ஒதுங்கி நின்று, வேறு யாரும் பார்க்காமல், அக் கிழவனின் முதுகு பக்கம் நடந்துசெல். இந்தச் சிமிழை மெதுவாகத் திறந்து, அவனுடைய மூக்கெதிரில் பிடி. பிறகு சற்று நேரஞ் சென்று, இச் சிமிழை அக் கழுகு மூக்கின் நுனியிலே திறந்தபடியே பொருத்திவிட்டு வந்துவிடு.”
அந்த அலி சற்றுத் தயங்கினான்.
“ஒன்றுக்கும் நீ பயப்படாதே! இதில் இருப்பது கொடிய விஷம். அக் கிழவனின் மூச்சோடு சேர்ந்தி இதன் நாற்றம் ஏறினாலே அவன் செத்துப் போவான்; அப்படியும் சாவாவிட்டாலும், இச் சிமிழின் ஸ்பரிசம் அவன் மூக்கின் நுனியில் பட்டாலே போதும்!- ஊம்!”
அவன் அக்கணமே குனிந்து ஸலாம் போட்டான். அடுத்த நிமிடத்தில் அங்கிருந்து மறைத்தான்.
ஷஜருத்துர்ரின் உதடுகளில் விஷமப் புன்முறுவல் படர்ந்திருந்தது; முகத்தில் வெற்றிக்குறி தவழ்ந்தது.
பிறகு அந்த சுல்தானா விரைவாக நடந்து சென்று, தம்முடைய அந்தப்புரப் பிரத்தியேக அறைக்குள்ளே புகுந்து,உட்புறம் தாளிட்டுக்கொண்டு, நெடுநேரமட்டும் என்னென்ன அலுவல்களையோ கவனித்துவிட்டு, விளக்கு வெளிச்சத்திலே ஏதேதோ எழுதிக்கொண்டிருந்துவிட்டு, கோழி கூவப்போகிற நேரத்திலே படுத்துக் கண்ணயர்ந்தார். மிகவும் சாந்தமான ஆழிய நித்திரையிலே தாழ்ந்து போனதற்குக் காரணம், சுமை நீங்கிய உள்ளமும், பெருந் திருப்தி குடிபுகுந்த சித்தமும் மட்டுமேதான்.
பொழுது புலர்ந்து சூரியன் உதித்துவிட்டான். காஹிராவைக் கம்மி நின்ற காரிருள் மறைந்து, எங்கும் பிரகாசமாயிருந்தது. அன்றிரவு அந்தப்புரத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஷஜருத்துர்ரையன்றி வேறெவருமே ஒரு சிறிதும் அறியமாட்டாராதலால், ஒன்றும் விசேஷமான பரபரப்புக் காணப்படவில்லை. துயிலுணர்ந்தெழுந்ததும் அவரவர் வேலையைக் கவனித்துக்கொண்டு தத்தம் பணியைத் தொடங்கினர் அந் நகரமாந்தரெல்லாம். வழக்கத்துக்கு விரோதமாக முஈஜுத்தீன் இன்று விடியுமுன்னே எழுந்து தம்முடைய காலைக் கடன்களையெல்லாம் சரிவர முடித்துக்கொண்டு, மீண்டும் வந்து தம் பஞ்சணைமீது சாய்ந்தவண்ணம் கண் திறந்தபடியே பகற் கனவு கண்டார். அரபுநாட்டுக் கதையில் காலடியில் கண்ணாடிப் பாத்திரக் கூடையை வைத்துக்கொண்டு அல் அஷர் என்பவன் கனவு கண்டானே, அந்த மாதிரியான கனவு – பகற்கனவு – விழிப்புக் கனவு கண்டு – மகிழந்துகொண்டிருந்தார் முஈஜுத்தீன்.
இன்னம் சற்று நேரத்தில் சுல்தானா ஷஜருத்துர் துயிலெழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொள்வது போலவும் பிறகு ஹம்மாமுக்குள் நுழைந்து குளித்து முடிப்பது போலவும் அப்பால் ஈரக்க கூந்தலைத் துவட்டிய வண்ணம் ஈரடிமைப் பெண்கள் பின்தொடர ஷஜருத்துர் ராஜ கம்பீரத்துடன் பிடிநடை நடப்பது போலவும் அதன் பின்னர் அவர் வெகு சொகுசாய்த் தம் ஜோடனையறைக்குள்ளே நுழைவது போலவும் முஈஜுத்தீனின் மனக்கண் முன்னே ஊருங்காட்சிகள் மிக விரைவாய் ஓடிக்கொண் டிருந்தன. இதற்கிடையில் அவர் வாயிலூறிய எச்சில் இளகலாய்க் காய்ச்சிய கோந்து (பிசின்) போல் வாய் நிரம்பிக் கடைவாயின் வழியே வெளியில் வெளியில் இழிந்துகொண்டிருந்ததையம் கவனியாமல், சுவாரசியமான தம் மானஸலோகத்தில் தொடர்ந்து சஞ்சரிக்கலாயினார்:
அந்த ஜோடனையறைக்குள் புகுந்து ஷஜருத்துர் தலைதுவட்டி, மெய்துவட்டி, வருணிக்க முடியாத மேலாடைகளை உடுத்துக் கொள்வதும் அவ் வாடைகளுக்கு மேலே நவரத்னம் வைத்து இழைக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துகொள்வதும் பிறகு கண்ணாடிக்கெதிரில் நின்று அவ் வாடையாபரணங்களைச் சுருக்கமில்லாமல், சரிவில்லாமல் நேராக இழுத்து இழுத்துவிட்டுக் கொள்வதும் அப்பால் அப் பெரிய நிலைக் கண்ணாடி முன்னேயுள்ள மினுக்குப்பட்டுத் திண்டுவைத்துத் தைக்கப்பட்ட நாற்கலியில் வெகு லாவகமாய் அமர்ந்து மிக சொகுசாகக் கோணிக் குணங்கிக்கொண்டு முகத்துக்குப் பூச்சுவேலை செய்துகொள்வதும் முஈஜுத்தீனின் கற்பனைத் திரையில் தெளியாவ்த் தெரிந்தன. எல்லா ஜோடிப்புக்களையும் ஒருவாறு முடித்துக்கொண்டு, வகிடுகீறித் தலையைச் சிலுப்பிச்சீவிக் கோணற் கொண்டை சொருகிக் கொண்டு,இறுதியாக அந்தத் தந்தச் சிமிழை…
இதற்கிடையில் காலையாகாரத்தைக் கொணர்ந்த அடிமைச் சிறுவன், விழித்தவிழி விழித்தபடியே இருக்க, வழிந்த எச்சில் மோவாய்க்கட்டைத் தாடி முகட்டில் சொட்டிக்கொண்டிருக்க, சுயவுணர்வின்றித் தன் எஜமானர் ஏதோ பலமாய்ச் சிந்தித்துக்கொண்டிருப்பதாக யூகித்துக் கொண்டு, கொணர்ந்த ஆகாராதிகளை அவர் கால்மாட்டில் இருந்த முக்காலி மேஜைமீது வைத்துவிட்டு மெல்ல நழுவிவிட்டான்.
முஈஜுத்தீனின் மெய்யான பொய்க்காட்சி, ஒன்றையும் சட்டை செய்யாமல் மேலும் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது: அந்தத் தந்தச் சிமிழை ஷஜருத்துர் அனாயாசமாகத் திறந்துகொண்டே, கண்ணாடியில் தம் முகத்தைப் பார்த்துப் பிரமிக்கிற பிரமிப்பால் கைப்பண்டத்தில் கண்ணோட்டத்தைச் செலுத்தாது, சுண்ணாம்புக் கரண்டகத்தில் வெற்றிலைப் பிரியர்கள் விரல் நுழைத்ததைப்போல், தமதாட்காட்டி விரலை அச் சிமிழக்குள்ளே நுழைத்த ருசிகரமான காட்சி மாஜீ ராஜாவின் கண்முன்னே நிதரிசனக் காட்சியளித்தது. ஷஜருத்துர் சட்டென்று அந்த மையை நுனி விரலாலெடுத்துக் கண்ணின் கீழிமையுள் இழிசும்போதே சூறையிற்பட்ட பெருமரமேபோல் தொப்பென்று மகாமயக்குற்று வீழ்ந்துவிடுகிறார்! பக்கத்திலிருந்த தோழிகளெல்லாம் ஓடிவந்து சட்டென்று தாவித் தூக்குகிறார்கள்; ஒரே குழப்பமாய்ப் போய்விடுகிறது; அரண்மனை ஹக்கீம் ஓடோடி வருகிறார்; நாடியைப் பிடித்துப் பார்க்கிறார். அப்ஸோஸ்! “ஷஜருத்துர் உயிர்நீத்து விட்டார்!” என்று உதட்டைப் பிதுக்குகிறார் அந்த ஹக்கீம். முஈஜுத்தீனுக்குச் செய்தி கொண்டு வருகிறான் ஒரு பேடி. அவர் பொய்யாகவாவது அங்கலாய்த்து அரற்றிக்கொண்டு பறந்து பாய்கிறார். ஷஜருத்துர் செத்து மடிந்து, உயிர்நீத்து நீட்டிக்கிடப்பதைப் பார்க்கிறார்; கண்குளிரக் காண்கின்றார். அப்பொழுது அந்த ஒற்றைக் கண்ணன் ருக்னுத்தீன் வருகிறான். இவருக்கோ, ஆத்திரம் அதிகம் பொங்கி வழிகிறது. ஆதலால், பலங்கொண்ட மட்டும் எட்டி, அவனை நோக்கி விட்டார் ஓர் உதை!…
முஈஜுத்தீன் நிஜமாகவே விட்ட மிகவேகமான உதையால், அவர் காலடியில் முற்சொன்ன அடிமைச் சிறுவன் வைத்து சென்ற கண்ணாடித் தட்டமும் அதன்மீது அழகாய்த் தனித்தனியே வைக்கப்பட்டிருந்த உயர் ரகமான பீங்கான் கோப்பைகளும் விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடி குண்டுக்கு இலக்கான குயவன் வீட்டுக் கூட்டத்தை நிகர்த்து விட்டன! உதையென்றால், இலேசான உதையா? சென்ற பல மாதங்களாக வீங்கி வடிந்த நெஞ்சிற் பிறந்த கொடிய ஆத்திரத்தாலான, கோவேறு கழுதையின் பலங்கொண்ட, பேருதையை நிகர்த்ததல்லவா?
கனவிலிருந்து கருத்துக் தெளிந்து, விழி பிதுங்கினார் முஈஜுத்தீன். குனிந்து பார்த்தார். எல்லாம் சுக்குச்சுக்காய் அறை முழுதும் சிதறுண்டு கிடந்தன. நிமிர்ந்து நோக்கினார். அவ் வறையின் வாயிலிலே ஷஜருத்துர் வெண்டுகிலிடுத்த கடல் மோஹினியேபோல் சாந்தமாய் நின்று, இவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். பேயால் அறையுண்ட பெரும் பித்துக் கொள்ளியேபோல் முறைத்தார் முஈஜுத்தீன்.
தூரத்திலே உள்ள புர்ஜீ மம்லூக்குகளின் தலைமைக் காரியாலயமாகிய பெரிய கோட்டையிலே ஓவென்ற அல்லோலகல்லோல அழுகையோசை பிளந்து கிளம்பிக்கொண்டிருந்தது.
ஒன்றும் புரியாமல் ஆட்டுக்கிடா விழிப்பதேபோல் திருதிருவென்று விழித்தார் முஈஜுத்தீன்.
அழுகையோசை வருகிற திக்கைப் பார்ப்பதும் எதிரில் நிற்கிற வெண்மோஹினியாகிய – இன்னம் சாவாமல் உயிருடனே கண்சிமிட்டிக்கொண்டிருக்கிற ஷஜருத்துர்ரைப் பார்ப்பதுமாக மாறிமாறிக் கண்ணோட்டிக்கொண்டு, நாடகத்தில் தோன்றுகிற விதூஷகனேபோல் காட்சியளித்தார் முஈஜுத்தீன். வாஸ்தவத்திலேயே அவருக்கு ஒன்றுமே புரியவிலல்லை. பித்துப்பிடிக்க இன்னம் கொஞ்சந்தான் பாக்கி!
அச் சந்தர்ப்பத்திலே ஹல்காச் சேவகனொருவன் மூச்சு, இரைக்க இரைக்க ஓடிவந்து, அவ் வறையின் வாசலிலே கற்சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்த ஷஜருத்துர்ரின் முதுகுப் புறத்தில் நின்றான். ராணி திலகம் தன்பக்கம் திரும்பிப் பார்க்கிறவரை மெளனமாயிருந்தான்.
தம்மை ஷஜருத்துர் வெறித்துப் பார்க்கிற பார்வையில் தாம் நீறாய் நீற்றுப்போகக்கூடுமோ என்னும் பெருந்திகிலால் முழுங்கால் நடுங்கிய முஈஜுத்தீன், இந்நிலையிலிருந்து எப்படித் தப்புவதென்று ஒன்றுந் தோன்றாது திகைத்திருக்கிற வேளையிலே, அந்த பஹ்ரீ மம்லூக் ஷஜருத்துர்ருக்குப் பின்னால் வந்து நிற்பதைக் கூர்ந்து நோக்கினார்.
முஈஜுத்தீன் தம்மைப் பார்க்காமல் தமக்குப் பின்னாலிருக்கும் ஏதோவொன்றை முறைத்துப் பார்க்கிறாரே என்றறிந்த ஷஜருத்துர், சாவி கொடுக்கபட்ட விசித்திரப்பாவை கம்பீரமாய்த் தலையை மட்டும் திருப்புவதேபோல் மிக நிதானமாகப் பின்புறம் திரும்பி நோக்கினார்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! ஃபக்ருத்தீன் திடீரென்று மாண்டுவிட்டாராம்! எல்லா புர்ஜீகளும் கூடிக்கொண்டு அழுகிறார்கள்!” என்று அந்தச் சேவகன் படபடப்புடன் கூவினான்.
முஈஜுத்தீன் இது கேட்டதும், வாய் பிளந்தார். உயிர் இப்போதே போய்விடும்போலிருந்தது அவர் தோற்றம்.
ஷஜருத்துர்ரோ, ஒன்றும் பிரமாதமான செய்தியைக் கேளாதவரேபோல், முகத்தோற்றத்தில் ஒருவித மாறுதலுமின்றி, அப்படியே நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவருடைய உள்ளம் மட்டும், “தன்வினைத் தன்னைச் சுடும்!” என்று தனக்குள்ளே உச்சரித்துக்கொண்டிருந்தது.
ஷஜருத்துர் மீண்டும் முஈஜுத்தீனைத் திரும்பிப் பார்த்தார். அந்த மாஜீ சுல்தான் கண்களைச் சுழற்றிக்கொண்டே, தம்மிரு கரங்களாலும் தலையை இறுகப் பற்றிக்கொண்டு, நின்றதுநிற்கச் சூறையிற்பட்ட பெருமரமேபோல் தொப்பென்று சாய்ந்துவிட்டார்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
Image courtesy: fineartamerica.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License