இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 04

by நூருத்தீன்

இமாம் ஸுஹ்ரி நபிமொழிக் கலையில் வல்லமை பெற்ற முதல் அறிஞர் என்று தயக்கமின்றிச் சொல்லிவிடலாம். ஸயீத் இப்னுல் முஸய்யிப்பிடமும் தாபியீன் தலைமுறையைச் சார்ந்த புகழ்பெற்ற அறிஞர்களிடமும் பாடம்

பயின்று, மூழ்கி, தேறி, அக்கால கட்டத்தில் இமாம் ஸுஹ்ரிதாம் ஹதீஸ் கலை அறிஞர்களில் முதன்மையானவர். அதனால் பனூ உமைய்யா கலீஃபாக்களின் மத்தியில் அவருக்குப் பெரும் மரியாதை இருந்தது. குறிப்பாக உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவரிடம் கொண்டிருந்தது ஆக உயர்ந்த மதிப்பு.

பல பகுதிகளிலும் விரவியிருந்த அறிஞர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினார் உமர் இப்னு அப்துல் அஸீஸ். ‘ஸுஹ்ரியிடம் பயில்வதற்கு முனைப்பும் ஆர்வமும் கொள்ளுங்கள். அவரைவிட ஸுன்னாஹ்வை – நபியவர்களின் வழிமுறையை – நன்கு அறிந்தவரை நீங்கள் காண இயலாது’.

இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களின் முதல் தொகுப்பை உருவாக்குவதற்கு இமாம் அஸ்-ஸுஹ்ரியை அறிவுறுத்தியதே உமர் இப்னு அப்துல் அஸீஸ்தாம். அத்தகு நற்பேறுக்குரிய அவர் மதீனாவிற்கு வந்தால்?

‘ஆஹ்ஹா! நம் நகருக்கு ஹதீஸ்களின் மேதை வந்திருக்கிறார். அவரைச் சந்திப்பது பாக்கியம். அவரிடமுள்ள கல்விப் பொக்கிஷத்தில் சிலவற்றையாவது கறந்துவிட வேண்டும்’ என்ற ஆர்வ மேலீட்டில் இமாம் மாலிக்கும் அவருடைய ஆசான் ரபிஆவும் மற்றும் சிலரும் ஒரு குழுவாகக் கிளம்பிவிட்டார்கள். சந்தித்து, அளவளாவி, ‘ஞானம் அளியுங்கள்’ என்றதும் ‘இந்தாருங்கள்’ என்று நாற்பது ஹதீஸ்களை அவர்களுக்கு ஒப்பித்தார் இமாம் ஸுஹ்ரி.

எல்லாம் இணைய மயம் என்றாகிவிட்ட இக்காலத்தில், அவர் கடகடவென்று நாற்பது ஹதீஸ்களை ஒப்பித்தார் என்பதன் மெய்ப்பொருள் உணர நாம் கணினி திரை, இணைய சொகுசு போன்றவற்றை விலக்கித் தள்ளிவிட்டுப் பார்த்தால் சற்று புரியும்.

‘இன்றைக்கு இந்த நாற்பது போதும், சென்று வாருங்கள்’ என்று இமாம் ஸுஹ்ரி அத்துடன் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

உண்டு, உறங்கி, எழுந்து மறுநாள் மீண்டும் சென்றது அக்குழு. ஒரு நூலைக் குறிப்பிட்டு, “இங்குதான் இருக்கிறது. சற்று தேடித் தாருங்கள். நான் அதிலிருந்து ஹதீஸ்களைத் தருவேன்,” என்று கூறிய இமாம் ஸுஹ்ரி, “அது இருக்கட்டும். நான் நேற்று உங்களுக்கு அறிவித்தேனே ஹதீஸ்கள், அவற்றுள் ஏதேனும் நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.

ஆசான் ரபிஆ, “எங்களுள் ஒருவர் இருக்கிறார். நீங்கள் நேற்று அறிவித்த ஹதீஸ்கள் அத்தனையையும் அப்படியே ஒப்புவிப்பார்” என்று பதிலளித்ததும் “யார் அது?” என்றார் இமாம்.

இமாம் மாலிக்கின் தந்தை அனஸ், அபு ஆமீர் என்று அழைக்கப்படுவார். அவருடைய மகன் என்று குறிப்பிட, “இப்னு அபீ ஆமீர்” என்றார் ரபிஆ.

“சொல்” என்றார் இமாம் ஸுஹ்ரி.

நாற்பது ஹதீஸ்களை முந்தைய நாள் செவிமடுத்தாரே, அவை ஒவ்வொன்றையும் ஓர் எழுத்து, ஒரு வார்த்தை, பிழையின்றி அப்படியே, தாம் கேட்டது கேட்டபடியே ஒப்பித்தார் மாணவர் மாலிக். அது இமாம் ஸுஹ்ரி எதிர்பாராதது. வியப்படைந்தார் அவர். “என்னைப்போல் மனனம் செய்யும் திறன் இன்னொருவருக்கு இவ்விதம் இருக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என்று ஆச்சரியத்தை ஒளிக்காமல் வெளிவந்தது பாராட்டு.

எழுதி வைத்துச் சேமிப்பது அதிகம் பரிச்சயமாகாத அக் காலகட்டத்தில், ஞானத்தைப் பஞ்சைப் போல் உறிஞ்சி, துளி சிந்தாமல் புத்தியில் சேமித்து, பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் அன்று அதுதான் வழக்கம் என்றாலும் அந்தச் சிறப்புத் தகுதி இமாம் மாலிக்கிடம் சற்றுக் கூடுதலாக இருந்திருக்கிறது. ம்ஹும், அபரிமிதமாகவே இருந்திருக்கிறது.

இப்னு ஹுர்முஸ், நாஃபி ஆகியோரிடமிருந்து ஞானத்தை எப்படித் தேடிப் பருகினாரோ, அதைப்போலவே இமாம் அஸ்-ஸுஹ்ரியிடமிருந்தும் அவர் அறிந்துள்ள ஹதீஸ்களையெல்லாம் பெற்றுவிட வேண்டும், கற்க வேண்டும் என்று இமாம் மாலிக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டு அடங்காமல்போனது. நாஃபியின் இல்லத்திற்குச் சென்று அவர் வரும்வரை நண்பகல் வெயிலில் காத்திருந்ததைப்போல், இமாம் ஸுஹ்ரியின் வீட்டிற்கு வந்து வெளியே காத்துக்கிடப்பதும் அவருக்கு வழக்கமானது. இமாம் மற்றவர்களுக்குப் பாடம் எடுத்து முடிக்கும்வரை காத்திருந்து, அனைவரும் சென்றபின், மற்ற மாணவர்களின் குறுக்கீடுகளுக்கு வாய்ப்பற்ற அமைதியான சூழ்நிலையில் அவரை அணுகி, தமக்கானப் பாடங்களை, சந்தேகங்களை, விளக்கங்களை ஒருமுகப்பட்ட கவனத்துடன் கேட்டுப் பெற்று, பாடங்கள் அவர் மனத்தில் படங்களாகப் பதிந்தன.

பெருநாள் ஒன்று வந்தது. சிறப்புத் தொழுகை முடிந்ததும், “இப்னு ஷிஹாப் (இமாம் ஸுஹ்ரி) இன்று ஓய்வில் இருப்பார், அவரைத் தனியாக அணுக இதுவே நல்ல தருணம்” என்று மாணவர் மாலிக்கின் மனத்தில் ஒரு பொறி. கல்வி, கல்வி என்று அலைபவர் இத்தகைய வாய்ப்பை நழுவவிடுவாரோ? தொழுகை மைதானத்திலிருந்து நேராக இமாம் ஸுஹ்ரியின் இல்லத்திற்குத்தான் சென்றார். வெளிவாசலில் அமைதியாக அமர்ந்துகொண்டார்.

அரவம் கேட்டு, “வெளியே யார்?” என்று தம் பணிப் பெண்ணிடம் விசாரித்தார் இமாம் ஸுஹ்ரி. வந்து பார்த்துவிட்டு, “உங்களுடைய சிவத்த நண்பர்” என்று பதிலளித்தார் அப் பெண். உடனே, “உள்ளே வரச் சொல்” என்று அனுமதி கிடைத்தது.

“தொழுது முடித்துவிட்டு இன்னும் நீ உன் வீட்டிற்குச் செல்லவில்லை போலிருக்கிறதே” என்று விசாரித்தார் ஸுஹ்ரி. பெருநாள். விசேஷ நாள். அவரவரும் தொழுகை, சிறப்பு உணவு, குடும்பத்துடன் குதூகலம் என்று ஓய்வும் கொண்டாட்டமுமாக இருக்க, இவர் “ஆம். இன்னும் போகவில்லை” என்றார்.

“ஏதும் உணவருந்தினாயா?”

”இன்னும் இல்லை“ என்று பதில் வந்ததும், உணவை நீட்டி, “உண்ணவும்” என்று மாணவர் மாலிக்கை உபசரித்தார் இமாம் ஸுஹ்ரி.

“எனக்கு உணவு வேண்டாம்.”

“பிறகு வேறென்ன வேண்டும்?”

“ஹதீஸ் வேண்டும்”

‘வயிற்றுக்கு ஈவது இருக்கட்டும். முதலில் செவிக்கு உணவு. ஹதீஸ் தரவும்’ என்று ஞானப் பசியுடன் அறிஞரின் வீட்டிற்கே போய் அமர்ந்திருந்த அந்த மாணவரை என்னவென்று விவரிப்பது?

“சரி வா”

எழுதும் பலகைகளை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தார் மாலிக். நாற்பது ஹதீஸ்களை அறிவித்தார் ஸுஹ்ரி.

அவற்றை எழுதிக்கொண்டே “இன்னும், இன்னும்” என்று மாணவர் மாலிக் கேட்க, “இது போதும் உனக்கு. இவற்றை நீ கற்று ஒப்பித்தாலே போதும். ஹாஃபிழ்களுள் நீயும் ஒருவன்.

“நான்தான் இதை மனனம் செய்துவிட்டேனே” என்றார் மாலிக்.

‘என்ன விளையாடுகிறாரா மாணவர்?’ சட்டென்று பலகைகளை அவரிடமிருந்து பிடுங்கி, “சொல்” என்றார் ஸுஹ்ரி.

சற்றுமுன் செவியுற்றபடியே எழுதிய அத்தனையையும் அத்தனை ஹதீஸ்களையும் அப்படியே ஒப்பித்தார் மாலிக். ஆவணத்திற்காகத்தான் கைகள் பலகைகளில் அவற்றை எழுதிக் கொண்டிருந்தனவே தவிர, செவியுறும் தருணத்திலேயே நபியவர்களின் அறிவிப்புகள் மாணவர் மாலிக்கின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்து, அருவியாய் வழிந்தது.

“போதும். எழு. நீயொரு ஞானப் பாத்திரம்” என்றார் இமாம் ஸுஹ்ரி.

இப்படியான சிறப்புத் தகுதிகளுடன் அவர் உருவாகி வளர்ந்ததால்தான், ‘ஹதீஸ் என்று வந்துவிட்டால் இமாம் மாலிக் அத் துறையில் பிரகாசமான நட்சத்திரம்’ என்று தயக்கமின்றிப் புகழ்ந்திருக்கிறார் இமாம் ஷாஃபி (ரஹ்). ஆனாலும், வெகு முக்கியமான குணமொன்று இமாம் மாலிக்கிடம் இருந்தது. தாம் ஹதீஸ் ஒன்றை மக்களுள் ஒருவருக்குத் தெரிவிப்பதாக இருந்தால் பெறுபவருக்கு அது தொடர்புடையது, அதனால் அவருக்குப் பயன் இருக்கிறது என்றால் மட்டுமே தெரிவித்திருக்கிறார், உபதேசித்திருக்கிறார். நிறைகுடம். பாத்திரம் அறிந்து பகிர்ந்திருக்கிறது.

இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரியிடம் ஹதீஸ்களைப் பயின்ற காலத்தில் கயிறொன்றில் ஒவ்வொரு ஹதீஸுக்கும் தாம் ஒரு முடிச்சைப் போட்டுக் கொள்வது வழக்கம் என்று பிற்காலத்தில் தெரிவித்திருக்கிறார் இமாம் மாலிக். எத்தனை ஹதீஸ்களைப் பயின்றோம் என்று எண்ணிக்கையைக் குறித்து வைத்துக்கொள்ள அந்த வழி.

ஹதீஸ்களின்மீது பேரார்வம் கொண்டு பயில ஆரம்பித்து, அவற்றின்மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் இமாம் மாலிக்கிற்கு ஏற்பட்டுப் போய், அவையெல்லாம் வெறுமே எழுத்தாகவும் வார்த்தைகளாகவும் சுருங்கிவிடாமல் அவருக்குள் உருவானதெல்லாம் பிரம்மாண்டம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாயிலிருந்து உதிர்த்த சொற்களை நேரடியாகத் தம் மடியில் ஏந்திப் பிடித்திருப்பதாகவும் அவையெல்லாம் முத்துகள், பொக்கிஷம் என்றுதாம் அவர் கருதினார். அதனால், அவற்றைப் பிறருக்கு அறிவிப்பதாக இருந்தாலும் சரி, பயிற்றுவிப்பதாக இருந்தாலும் சரி, பதட்டமற்ற, அவசரமற்ற, பரபரப்பற்ற அமைதியான மன நிலையில் இருந்தால் மட்டுமே அவற்றைத் தெரிவித்திருக்கிறார். அறிவித்திருக்கிறார். அது மட்டுமன்று.

அம்ரு இப்னு தினார் தாபியீன்களுள் முக்கியமானவர். மதீனா நகரில் ஹதீஸ்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். மக்கள் அவரிடம் வருவதும் செவியுறுவதும் எழுதிக்கொள்வதும் என்று அவரது இருப்பிடம் பரபரப்பாக இருக்கும். அனைவருக்கும் இடம் போதாமல் இருந்ததா, அல்லது கூட்டம் அதிகமாக இருக்குமா என்பது தெரியவில்லை. அங்கு மாணவர்கள் நின்ற நிலையில் ஹதீஸ்களை எழுதிக்கொள்வார்கள். ஒருமுறை இமாம் மாலிக்கிடம் ஒருவர் விசாரித்தார்? “அம்ரு இப்னு தினாரிடம் நீங்கள் ஹதீஸ்களைச் செவியுற்றிருக்கிறீர்களா?”

“அவர் ஹதீஸை அறிவிக்க, மக்கள் நின்ற நிலையில் அதை எழுதி வைத்துக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களை நிற்கும் நிலையில் எழுதுவதை நான் விரும்பவில்லை” என்று பதில் அளித்தார் மாலிக்.

அதைப் போலவே, ஒருமுறை அபுஸ் ஸினாத் என்பவரின் ஹதீஸ் வகுப்பைக் கடக்க நேர்ந்த இமாம் மாலிக், வகுப்புக்குள் நுழையாமல், கலந்துகொள்ளாமல் சென்றுவிட்டார். அதை அபுஸ் ஸினாத் கவனித்து விட்டார். பிறகு அவரைச் சந்தித்தபோது, ‘ஏன் அப்படி?’ என்று விசாரிக்க, ‘வகுப்பு நிறைந்துபோய், நிற்பதற்கு மட்டுமே இடமிருந்தது. நின்ற நிலையில் அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களைப் பயில்வதற்கு நான் விரும்புவதில்லை’ என்று அதே போன்ற பதிலை அளித்திருக்கிறார்.

நபியவர்களின் வழிமுறைகளான ஹதீஸ்களின்மீது அவர் கொண்டிருந்த இப்படியான உச்சபட்ச மரியாதையை என்னவென்பது? வாத விவாதங்களுக்கும் குறுக்குக் கேள்விகளுக்கும் பயன்படுத்துவதற்காக மட்டுமே ஹதீஸ்களை படு அலட்சியமாகவும் அக்கறை என்பதே இல்லாமலும் இணையத்திலும் புத்தகங்களிலும் தேடிப் புரட்டி நுனிப்புல் நுகரும் நமக்கு அவரின் இந்த பக்தி என்ன புரியும்?

இப்படி எல்லாமாகச் சேர்ந்து, இஸ்லாமிய சட்டத்துறையின் நிபுணர் – ஃபகிஹ் – என்ற உயர்நிலையை அடைந்த இமாம் மாலிக்கின் கல்வி ஞானம் நான்கு கிளைகளாகப் பரந்து விரிந்திருந்தது என்கின்றன சில குறிப்புகள்.

அவை –

(தொடரும்) 

-நூருத்தீன்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment