இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 08

by நூருத்தீன்

மொராக்கோவிலிருந்து வந்து தம் ஊர் மக்களின் வினாவுக்கு விடையை எதிர்பார்த்து நின்றவரிடம், “எனக்கு இவ்விஷயத்தில் ஞானமில்லை என்று உம்மை அனுப்பி வைத்தவரிடம் சொல்லவும்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார் இமாம் மாலிக் (ரஹ்).

ஏகப்பட்ட சிரமப்பட்டு, அரையாண்டு பயணப்பட்டு, சிறப்புக்குரிய மார்க்க அறிஞர் வீட்டு வாசலுக்கு வந்து, விளக்கத்தைக் கேட்டு காத்திருந்தால் இப்படியொரு பதில். வந்தவருக்கு எப்படியிருக்கும்? ஏமாற்றத்துடன், “வேறு யாரிடம் இதற்கான விளக்கம் கிடைக்கும்?” என்று கேட்டார். “யாருக்கு இவ்விஷயத்தைப் பற்றிய ஞானத்தை அல்லாஹ் அருளியிருக்கிறானோ அவரிடம் கிடைக்கும்” என்று வந்தது பதில்.

நீங்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். போற்றலாம், புகழலாம். ஆடித் தீர்க்கலாம். ஆனால் நான் இவ்வளவுதான் என்று தம் நிலையை ஒத்துக்கொள்ள தன்னடக்கம் வேண்டும். என் தலையில் இருப்பது தலைப்பாகை, அதனுள் கொம்பெல்லாம் இல்லை என்று தெரிவிக்க அளவற்ற இறையச்சம் வேண்டும். குறையேதும் இன்றி அவை அவரிடம் நிரம்பி இருந்தன. இமாம் என்ற பெரும் தகுதியை, பட்டத்தை அவரது பெயருக்கு முன் கொண்டு வந்து இணைத்தன.

இவ்விதம் மற்றொருவரும் மொராக்கோவிலிருந்து இமாம் மாலிக்கிடம் வந்தார். பிரச்னையை விளக்கினார்; வினவினார். “எனக்குத் தெரியாது. இந் நகரில் நாங்கள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொண்டதில்லை. இவ்விதமான பிரச்னைகளைப் பற்றி எங்களுடைய ஆசான்கள் விவாதித்ததையும் நாங்கள் செவியுற்றது இல்லை. நாளை என்னைச் சந்திக்கவும். உங்களுக்கு விளக்கமளிக்க ஏதாவது இருக்கும்” என்று அனுப்பிவைத்தார்.

மறுநாள் மீண்டும் வந்து சந்தித்த அவரிடம், “இவ்விஷயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். எந்த முடிவுக்கும் என்னால் வர முடியவில்லை. எனக்கு விடை தெரியாது” என்று வந்தது விடை.

“ஐயா! என்ன இது? என் ஊரைச் சேர்ந்த மக்கள் உங்களை விடச் சிறந்த அறிஞர் இவ்வுலகில் இல்லை என்று கூறுகிறார்களே” என்று வியந்தார் வந்தவர்.

“இதற்கு விடை கூறும் ஆற்றல் எனக்கு இல்லையே” என்றார் இமாம் மாலிக்.

மாணவர் ஒருவர், ‘இமாம் மாலிக் விடை அளிப்பதில் உச்சபட்ச எச்சரிக்கையைப் பின்பற்றினார். தம்முடைய கருத்தில் உறுதி ஏற்பட்டால் மட்டுமே விடை அளிக்க முயல்வார். ஏதேனும் நெருடல், உறுத்தல், இருக்குமேயானால் விடை வராது’ என்று தெரிவித்திருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், வராது. ஆனால் வரும். என்னவென்று? “எனக்கு விடை தெரியாது” என்று.

மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தும் பொழுது அலாதி அமைதியும் சாந்தமும் அவரிடம் கலந்திருக்கும். சிறுமை, அற்பத்தனம், கேலிப் பேச்சு போன்றவை அறவே இருக்காது. தம் உறவினர் ஒருவருக்கு அறிவுரை வழங்கும்போது, “ஞானம் தேடுபவரிடம் அமைதியும் சாந்தமும் அச்சமும் இருக்க வேண்டும். அது மிக அவசியம். தமக்கு முன் சென்றோரின் வழித்தடத்தை அவர் பின்பற்ற வேண்டும். அறிவார்ந்த மக்கள் – குறிப்பாக அறிவில் புகழ்பெற்றவர்கள் – கேலித்தனத்தைக் கைவிட வேண்டும்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

“எங்களுடன் கலந்திருக்கும்போது எங்களுள் ஒருவரைப் போன்றே இயல்பாக இருப்பார். மகிழ்ச்சியும் கலகலப்புமாய் உரையாடுவார். எங்களுக்கோ அவரிடம் மட்டற்ற பணிவு இருக்கும். ஆனால் நபிமொழி பாடங்களை அவர் துவங்கியதும் பார்க்க வேண்டுமே! அவருடைய வார்த்தைகள் எங்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும். அச்சமயம் நாங்கள் அவருக்கு முன்பின் அடையாளம் தெரியாதவர்களைப் போல்தான் அவரது சொற்பொழிவு அமைந்திருக்கும்” என்று மாலிக்கின் மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஹதீஸ்களைப் பயிற்றுவிக்கும்போது, ஏனோ தானோவென்று இல்லாமல், உளூ புரிந்து, சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு அமர்வதே அவரது வழக்கம். மற்றொரு மாணவர், “மக்கள் அவரைச் சந்திக்கக் காத்திருந்தால், பணிப்பெண் அவர்களிடம் சென்று, ‘நபிமொழியா, பொதுவான கேள்விகளா?’ என்று விசாரிப்பார். அவர்கள் ‘வினாக்கள்’ என்றால், இயல்பான கோலத்தில் வந்து அவர்களுக்கு விளக்கமளிப்பார் இமாம் மாலிக். ‘ஹதீத்’ என்றால் அமருங்கள் என்று சொல்லிவிட்டு, உளூ புரிந்துவிட்டு, சிறப்பான ஆடையை அணிந்துகொண்டு, நறுமணம் பூசி, தலைப்பாகை அணிந்து, அமரும்போது அவரை அப்படியொரு பணிவடக்கம் சூழ்ந்திருக்கும். அறையில் நறுமணப் புகை சூழும். பிறகு நபி (ஸல்) அவர்களின் மொழிகளை அறிவிப்பார்” என்று தெரிவித்திருக்கிறார். அச்சமயங்களில் அவரது தோற்றம், சூழல், தூய்மை என்று அனைத்தும் ஓர் உன்னத நிலைக்குச் சென்றுவிடும்.

இதென்ன சட்டம்? இதற்கென்ன ஆதாரம்? இப்படியெல்லாம்தான் அறிவிக்க வேண்டுமா என்பதல்ல இங்கு விஷயம். பக்தி! நபியவர்களின் சொல்லின்மீது. நபிமொழியின் மீது மட்டற்றுப் பரவியிருந்த பக்தி. நபியவர்களுடன் நேரில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவர்களது நாவிலிருந்து வாசங்களைச் செவியுறுவது போலவும் அவர்கள் எதிரே பணிவன்புடன் உச்சபட்ச மரியாதையுடன் தாம் அமர்ந்திருப்பதைப் போலவும் மனம் உருகும் பக்தி.

அதேபோல் மார்க்கத் தீர்ப்பு – ஃபத்வா – வழங்கும்போது அவருக்குள் ஏற்படுவதெல்லாம் அச்சம். தாம் தவறிழைத்து விடுவோமோ என்ற அச்சம். எனவே குறைவாகவே விடைகளை அளித்துள்ளார். தம்முடைய ஞானம் மார்க்கம் தொடர்புடையது, மார்க்கம் தொடர்புடையதைக் கூறும்போதும் அறிவிக்கும்போதும் ஆணித்தரமான சான்றுகள் இன்றி உரைப்பது கூடாது என்பது அவர் நிலைப்பாடு. அதனால் ஆரம்பிக்கும்போதே, “அல்லாஹ் என்ன நாடுகிறானோ அதுவே நடக்கும். அல்லாஹ் வழங்குவதையன்றி வேறு சக்தியில்லை” என்றுதாம் தொடங்குவார். அடிக்கடி அவர் உரைப்பதெல்லாம், “எனக்குத் தெரியாது”. இவையெல்லாம் தாண்டி, ஃபத்வா அளித்தால், “இது எமது கருத்து மட்டுமே. எமக்கு உறுதியாகத் தெரியாது” என்ற வாசகம்தாம் கண்டிப்பான அதன் பின்னிணைப்பு.

அதனாலேயே, தாம் தெள்ளத் தெளிவாய் அறிவிக்கும் தீர்ப்புகளைத் தவிர, தாம் அறிவிக்கும் அனைத்தையும் தம் மாணவர்கள் எழுதி வைத்துக்கொள்வதை அவர் விரும்பவில்லை. ஏனெனில் தாம் இன்று ஒரு கருத்தைத் தெரிவிக்கக்கூடும். பிறகு நாளையொரு நாள் கிடைக்கப்பெறும் வேறு சான்றுகளின் அடிப்படையில் அதை மாற்றி அறிவிக்கக்கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. சொன்னதே வாக்கு, இட்டதே சட்டம் என்ற மேதாவித்தனமெல்லாம் அவருக்கு அந்நியம்.

தமக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்வதில் எந்தளவு நேர்மையும் உண்மையும் இருந்ததோ அதே அளவிற்குத் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் அவருக்கு ஞானத் தேடல் இருந்துகொண்டே இருந்தது. அதுதான் தம் பாதை என்று அமைத்துக்கொண்ட இமாம் மாலிக் நீண்ட காலம் வறுமையில் உழன்றிருக்கிறார். குறைந்தளவு முதலீட்டில் பெயரளவுக்குத் தொழில் ஒன்று இருந்தாலும் அது அவரது அவசியத் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அளவிற்குக்கூட வசதியை அளித்ததாகத் தெரியவில்லை. “இஸ்லாமிய ஞானத்தை அடைய விரும்புபவர் வறுமையால் கடுமையாகத் தீண்டப்பட்டு அதைப் பொறுமையாகச் சகித்துக்கொள்ளும் வரை ஞானத்தை அடைவதில்லை” என்று இமாம் மாலிக் தம் அனுபவத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அப்படியான அனுபவங்களால் உருவான மனவுறுதியும் சகிப்புத்தன்மையும் என்ன செய்தனவென்றால், ஆள்பவர்களின் கருத்துகளை எதிர்க்க வேண்டிய சூழல் அவருக்கு உருவானபோது அதைத் துணிந்து எதிர்கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு அளித்து விட்டன. பிற்காலத்தில் அவருக்கு ஆட்சியாளர்கள் உதவி புரிய ஆரம்பித்து அவரது நிலைமை ஓரளவு சீரடைந்திருக்கிறது. ஆனால், அப்படியான ஆட்சியாளர்களிடம் அவர் வைத்திருந்த உறவு வியப்பானது.

அது-

(தொடரும்)

-நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் ஏப்ரல் 1-15, 2018 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment