இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 1

by admin

1. நாச்சியார்கோயில்

யார் இந்த இஸ்லாமியப் பெரியார்?

“இவரை முஸ்லிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி, வழுவற்றத் தூய தமிழில் பேசவும் எழுதவும் செய்த பின்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது”

இவ்வாறு “இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்” கூறுகிறது.

“பத்திரிகை பிரசுரத் துறையில் அவர் ஒரு பல்கலைக்கழகம். தமது பத்திரிகைகள் மூலம் பெரும் இலக்கிய அணியை உருவாக்கியப் பெருமைக்குரியவர்” என்று ஜே.எம். சாலி கூறுகிறார்.

அவர் ஒரு நாவுக்கரசர்! பேனாவுக்காரர்! “தமிழ்நாட்டு ஜின்னா” என்று போற்றப்பட்டவர்!

இவர்தான் இஸ்லாமிய இதழாளர்களின் முன்னோடி, இஸ்லாமிய எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன் பேரறிஞர் பா. தாவூத்ஷா.

இத்தனை சிறப்புக்குரிய பெரியவரை, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடத்துகிறவர்கள் மட்டுமல்ல; தமிழ் இஸ்லாமிய சமுதாயமே மறந்து விட்டது வியக்கத்தக்கது அல்ல; வேதனைக்கு உரியது ஆகும். “மறக்கப்பட்டது” என்று கூறுவது கூட சரியல்ல. மறைக்கப்பட்டு விட்டது என்பதே சரி. ஆனால், ஆயிரம் மேகங்கள் கூடினாலும் ஆதவனை மறைக்க முடியுமா? உதயசூரியனை உள்ளங்கையால் மூட இயலுமா? தாவூத்ஷாவின் புகழும் அப்படிப்பட்டதுதான்.

சூரியன் உதித்து விட்டான். சூழ்ந்திருந்த பனி சொல்லிக்கொள்ளாமல் ஓடி ஒளிகிறது! அந்த இஸ்லாமியச் சூரியன் எங்கே உதித்தான்?

நறையூரில் உதித்தான். இந்த ஊரை நாச்சியார்கோயில் என்பார்கள். தாவூத்ஷாவே “நாச்சியார்கோயில் தாவூத்ஷா” என்றுதான் தமது பெயரை எழுதினார்.

நாச்சியார்கோயில் அவரது பூர்வீகம். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆனால், அவர் பிறந்தது, நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூர். மணியாற்றங்கரையில் இக் குக்கிராமம் இருக்கிறது. இவர்களுக்குப் பூர்வீகத் தொழில், விவசாயம். ஆனால், தாவூத்ஷாவின் தந்தையான பாப்பு இராவுத்தர் அக்கிராமத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 1885 மார்ச்சு 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தாவூத்ஷா பிறந்தார். ஆம், ஒரு ஞாயிறு அன்று இந்த ஞாயிறு உதித்தது! தாயார் குல்சூம் பீவி. இத் தம்பதிகளின் ஒரே குழந்தையாக தாவூத்ஷா தோன்றினார். வேறு உடன் பிறப்புகள் இல்லை.

நாச்சியார்கோயிலில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தாவூத்ஷாவின் படிப்புத் தொடங்கியது. அந்நாளில் இவ்வூருக்கு “நறையூர்” என்று பெயர். தாவூத்ஷா கூடத் தொடக்கக் காலத்தில் “நறையூர் தாவூத்ஷா” என்று தமது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வூரில் ஒரு பெருமாள்கோயில் இருக்கிறது. அது திருப்பதிக்கு ஈடானது என்கிறார்கள். மலை போன்ற உயர்ந்த இடத்தில் பெருமாள் சந்நதி அமைந்துள்ளது. “அருள்மிகு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்” என்று பெயர். பெருமாளின் பெயர், சீனிவாசப் பெருமாள். தாயார், வஞ்சுளவல்லி என்ற நம்பிக்கை நாச்சியார். இங்கு கல்லில் செய்த கருடன் இருக்கிறது. எனவே, “கல் கருடன் திருக்கோயில்” என்கிறார்கள். நம்பிக்கை நாச்சியார் மிகவும் புகழ் பெறவே, நறையூர் என்ற பெயர், “நாச்சியார்கோயில்” என்றாகி விட்டது.

நாச்சியார்கோயிலில் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்ததும், கும்பகோணம் ‘நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் தாவூத்ஷா சேர்க்கப்பட்டார். உலகப் புகழ் பெற்ற கணிதமேதை இராமானுசன் அப்போது இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இராமானுசத்துக்குத் தமிழ் வராது; தாவூத்ஷாவுக்குக் கணக்குப் பாடம் பிணக்குச் செய்தது. எனவே, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டார்கள்.

இங்கு தாவூத்ஷாவுக்கு இராமானுச ஆச்சாரியார் என்பவர் தமிழாசிரியராக இருந்தார். இவர் தாவூத்ஷாவின் தமிழார்வத்தைக் கண்டு, அவருக்குத் தனியே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தார். நன்னூல் (இலக்கணம்) சொல்லிக் கொடுத்தார். பிற்காலத்தில் செந்தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் இது தாவூத்ஷாவுக்கு உதவியாக இருந்தது. தாவூத்ஷாவுக்குத் தமிழாசிரியர் கம்ப இராமாயணமும் கற்றுக் கொடுத்தார். கம்ப இராமாயணத்தின் கவிச்சுவை உண்ட தாவூத்ஷா, கம்ப இராமாயணப் பாடல்களை மனனம் செய்தார். பின்னாளில் யதேச்சையான ஒரு நிகழ்வில் அவர் இராமாயண கதாகாலட்சேபம் செய்ய நேர்ந்து, “கம்ப இராமாயண சாயபு” என்ற பட்டம் அவரை ஒட்டிக்கொண்டது.

தாவூத்ஷா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய தந்தை காலமானார். தாவூத்ஷா நன்றாகப் படிக்கக் கூடியவர். படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. எல்லா வகுப்புகளிலும் முதன்மையாகத் தேறினார். எனவே, தாயார் அவரைத் தொடர்ந்து படிக்க வைத்தார். அந்நாளில் பள்ளி இறுதி வகுப்பு என்பது 11ஆம் வகுப்பு. அதை “எஸ்.எஸ்.எல்.சி.” என்பார்கள். அதற்குப் பொதுத்தேர்வு நடைபெறும். தாவூத்ஷாவும் பொதுத் தேர்வு எழுதினார். முதன்மையாகத் தேர்வு பெற்றார்.

தாவூத்ஷா கல்லூரிகளில் சேர்ந்து, படிப்பைத் தொடர விரும்பினார். அதற்கு சென்னைக்குப் போக வேண்டும். இதற்கு உதவி செய்ய சென்னையிலிருந்த முஸ்லிம் செல்வந்தர் ஒருவர் முன் வந்தார். அவருடைய மகளை மணந்து கொண்டு, வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து, கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று அவர் சொன்னார். “வீட்டோடு மாப்பிள்ளை” என்பது தாவூத்ஷாவுக்குப் பிடிக்காத ஒன்று. அதோடு அவர்கள் உருது பேசும் முஸ்லிம்கள். எனவே, தாவூத்ஷா மிகவும் யோசிக்க வேண்டியிருந்தது.

அவருக்கோ கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று மலை அளவு ஆசை இருந்தது. “சீனாவுக்குப் போயாவது கற்றுக்கொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது தமிழ்ப் பழமொழி. படிப்பில் இருந்த ஆர்வத்தால், பட்டதாரி ஆக வேண்டாம் என்ற ஆசையால் தாவூத்ஷா இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

1909 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. மணமகளின் பெயர் சபூரா என்பது.

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் தாவூத்ஷா சேர்ந்தார். “வீட்டோடு மாப்பிள்ளை”யாக இருந்து கொண்டு, கல்லூரிக்குப் போய் வந்தார். முழுக் கவனமும் படிப்பில் இருந்தது. கல்லூரியில் நடந்தப் பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளில் பரிசுகள் பெற்றார். கல்லூரியில் முதலாண்டு (எப். ஏ.) படித்தபோது, மதுரை தமிழ்ச் சங்கத் தேர்வு எழுதி, வெள்ளிப் பதக்கம் பெற்றார். கல்லூரியிலும் பரிசு பெற்றார்.

கல்லூரியில் இவருக்குத் தமிழாசிரியராகத் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதர் இருந்தார். பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த முனைவர் இராதாகிருஷ்ணன் இவருக்குத் தத்துவ பாடம் நடத்தினார். 1912 இல் தாவூத்ஷா பி.ஏ. பட்டம் பெற்றார். நாச்சியார்கோயிலில் பி.ஏ. பட்டம் பெற்ற முதல் ஆள் தாவூத்ஷா தான்! பி.ஏ. படிக்கும் பொழுது மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வு எழுதி, முதல் மாணவனாகத் தேறி, தங்கப் பதக்கம் பரிசு பெற்றார்.

இன்னும் ஓர் அதிசயம்: தாவூத்ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் இதே மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். நாச்சியார்கோயிலின் 2ஆவது பி.ஏ. பட்டதாரி இவர்! அப்துல் ஜப்பார் கல்லூரியிலும் பரிசு பெற்றார்.

தமிழில் பரிசு பெற்றதற்காக தாவூத்ஷா, அப்துல் ஜப்பார் இருவர் பெயரும் மாநிலக் கல்லூரியில் பலகையில் எழுதப்பட்டு, இப்போதும் இருக்கிறது.

பெரிய சாதனை! அரிய சாதனை!

அறிஞர் பா. தாவூத்ஷா சமுதாயச் சீர்திருத்தத்துக்காகப் போராடிய ஒரு புரட்சிப் பெரியார். இஸ்லாமிய இதழாளர்களுக்கு முன்னோடியான ஒரு புனித இதழாளர். இஸ்லாமியக் கருத்துகளைத் தமிழிலும் எழுத முடியும் என்று எழுதிக் காட்டியச் செந்தமிழ்ச் செல்வர். அரை நூற்றாண்டு காலம் எதிர்நீச்சல் போட்டு சமயத்துக்கும் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிய மாவீரர்.

இப்படிப்பட்ட இஸ்லாமியப் பெரியாரை எல்லாரும் மறந்துவிட்ட நேரத்தில், முனைவர் அ. அய்யூப் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தேடி அலைந்து சேகரித்து, ஓர் அரிய நூலாக எழுதி இருக்கிறார். தாவூத்ஷா தாமே எழுதி வைத்த “தாதையர் விளக்கம்” என்ற அவரது வரலாறு நூலின் சிகரமாகத் திகழ்கிறது!

இந்த அரும்பெரும் சாதனையைச் செய்த முனைவர் அய்யூப்பைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

முனைவர் அ. இரபியுதீன்,
தலைவர்,
உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment