இலக்கியப் பங்களிப்புக்காக இந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர் மூத்த தமிழ் எழுத்தாளர்
ஜமாலுதின் முகமது சாலி.
சிங்கப்பூரிலும் தமிழகம் உட்பட பல நாடுகளிலும் ஏராள விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும் அனுபவமிக்க ஊடகத் துறையாளருமான திரு ஜே.எம்.சாலி தமது இலக்கியப் பணிகள், பார்வைகள், திட்டங்கள் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்து கொள்கிறார்.
“எழுத்து மூலம் சமூக மாற்றங்களைச் செய்யலாம்” என நம்பும் நீங்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் என்ன?
நாட்டு நடப்பையும் சமூக யதார்த்தங்களையும் பதிவு செய்யும் எனது எழுத்துகளின் மூலம் சிங்கப்பூரர்களின் மனோபாவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன் என்று உறுதியாகச் சொல்வேன். பல நிகழ்வுககளை எடுத்துக் காட்டலாம்.
சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை ‘அலைகள் பேசுகின்றன’ என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். இனம் மாறி திருமணம் செய்து கொள்வது குறித்த மனோபாவம் காலப்போக்கில் மாற்றியுள்ளதாக நம்புகிறேன்.
”நல்ல வாசகர்கள் எழுத்தாளராகலாம். இது எனது அனுபவம். எனது பள்ளிப் பருவத்திலேயே நிறைய வாசிக்கத் தொடங்கினேன். நிறைய எழுதத் தொடங்கினேன். எனக்கு ஆதரவும் கிடைத்தது. சமூகமும் ஊடகங்களும் என்னை உற்சாகமூட்டின. நிறைய வாசிக்கத் தூண்டுவதே எழுத்தாளர்களை உருவாக்குவதன் முதற் கட்டம். வாசிக்க, வாசிக்க அவர்களுக்கே எழுதும் ஆர்வம் ஏற்படும். எழுத்தாளர், இலக்கியவாதி எவரும் பிறப்பிலேயே உருவாகுவதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.” – ஜே.எம். சாலி |
கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளராக உங்களது அடுத்த இலக்கியப் பங்களிப்பு என்ன? அரசாங்கம் வழங்கும் $80,000 மானியத் தொகையில் எத்தகைய பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?
எனது வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் வேலை செய்த அனுபவங்கள் பற்றி விரிவான ஆய்வு கட்டுரையை எழுதவுள்ளேன். அத்துடன் சிங்கப்பூரின் நலனுக்காகப் பாடுபட்ட முன்னோடிகளாகிய அமரர் கோவிந்தசாமி பிள்ளை, பக்கிரிசாமி பிள்ளை, யூசோஃப் இஷாக் போன்றவர்களைப் பற்றியும் ஆய்வு கட்டுரைகளை எழுதவுள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு நமது நாட்டின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியது எழுத்தாளர்களின் கடமைகளில் ஒன்று.
கலாசாரப் பதக்கம் எத்தகைய ஊக்கத்தைத் தந்துள்ளது?
இந்த உயரிய விருது எனது எழுத்துக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. பல அமைச்சர்களையும் நேரில் சந்தித்து, எனது எழுத்தைக் குறித்து அவர்களது கருத்துகளையும் கேட்டறிய இது ஒரு வாய்ப்பளித்துள்ளது. சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பட்ட ‘அந்த நாள்’, ‘அலைகள் பேசின’ போன்ற சிறுகதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்குமாறு அமைச்சர்களில் சிலர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்னிடம் கூறினர்.
சிங்கப்பூரில் பிறந்த, வளர்ந்த இளைஞர்களுக்கு எழுத்துத் துறையில் நாட்டமில்லாதிருப்பது ஏன்?
இன்று இளம் எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு போதுமான தளங்கள் இல்லை. அன்றைய சூழலில், மாணவர்கள் எழுத்துகளை வெளியிட பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் பெரிதும் உதவின. மாணவர்கள் அதிகமாக வாசித்தால்தான் அவர்களால் அதிகமாக எழுத முடியும். மாணவர்கள் தமிழில் வாசிப்பதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிகம் ஊக்குவிக்கவேண்டும். மேலும் மலேசியா, தமிழ்நாடு போன்ற நாடுகளுக்கும் தங்களது படைப்புகளை மாணவர்கள் அனுப்பி வைக்கலாம்.
கல்வித் துறையும் எழுத்தாளர் கழகம் போன்ற அமைப்புகளும் எவ்வாறு இதில் துணைபுரியலாம்?
பயிலரங்குகளின் வழி ஆர்வமுள்ள இளையர்களை எழுத்தாளர்களாக உருவாக்க முடியும். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்திவரும் ‘கண்ணதாசன் விருது’ இளம் எழுத்தாளர்களை முன்னிலைக்குக் கொண்டுவர உதவுகிறது.
மாணவர்கள், முன்மாதரியாகத் திகழும் எழுத்தாளர்களுடன் இணைந்து முதல் கட்ட நடவடிக்கையாக ஒரு சில புத்தகங்களை எழுதத் தொடங்கலாம். நாளடைவில் தன்னம்பிக்கையுடனும் தன்னிச்சையாகவும் அவர்கள எழுதுவார்கள்.
எழுத்தாளர் ஜே.எம். சாலி 30 நாவல்கள், 400 சிறுகதைகள், 80 நாடகங்கள், 200 கட்டுரைகள் எழுதியுள்ளார். இதுவரை 55 நூல்களை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் ‘A Battle for Malaysian Malaysia’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது கதைகள் ஆங்கிலம், உருது, இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வெள்ளைக் கோடுகள்’ என்ற நாவல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. 1939 – தமிழகம் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார். 1955 – 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது எழுதத் தொடங்கினார். 1958 – ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு. 1959 – ‘இரு கண்கள்’ என்ற நாவலுக்கு கண்ணன் சிறார் இதழின் சிறந்த நாவல் பரிசு. 1960 – கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ்த் துளையில் முதல் வகுப்பில் தேர்ச்சி. அடுத்து சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி. 1964 – 25வது வயதில் சிங்கப்பூர் வருகை. 1964 முதல் 1971 வரை தமிழ் முரசு நாளிதழில் உதவி ஆசிரியர் பணி. 1963, 64 – ‘வெளிச்சம்’, ‘தரையில் விழுந்த மீன்’, ‘மகரந்தம்’, ‘அனுல்லாவின் படகு’ ஆகிய சிறுகதைகளுக்கு ஆனந்த விகடனின் சிறந்த சிறுகதைகளுக்கான விருது பெற்றன. 1966 – ‘நோன்பு’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் புத்தகப் பரிசு பெற்றது. 1971 – ஆனந்த விகடன் வார இதழில் பணி. 1978 – ‘கனாக் கண்டேன் தோழி’ நாவலுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு. 1980, 81 – இளையர்களுக்கான மயன் சஞ்சிகையில் நிர்வாக ஆசிரியர் பணி. 1983 முதல் 2000 வரை – சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் மூத்த ஒளிபரப்பு நிருபர் பணி. 2001 – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் இலக்கிய விருது. |
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் மூத்த எழுத்தாளராக உங்களது பங்களிப்பு என்ன?
தமிழ் மொழி வளரச்சிக்காக பங்காற்றும் அமைப்புகளின் உதவியுடன் மாணவர்களுக்குப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்யும் மாணவர்களுக்கான பயிலரங்குகளில் எனது எழுத்துத் துறை அனுபங்களை பகிர்ந்து வருகிறேன்.
வாசகர்களின் ரசனை, எழுத்து, ஊடகங்கள் போன்றவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள்?
இன்று உலகமே கணினி மயமாகிவிட்டது. வாசகர்களின் ரசனையும் மாறிக்கொண்டே வருகிறது. முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்களின் விருப்பு வெறுப்புகளை சுலபமாக அறிந்துகொள்ளலாம். இன்று ஊடகங்களின் முன்னேற்றத்தால் எழுத்துகளைப் புது கோணத்தில் இருந்து அணுக முடியும்.
அன்றைய சமூகம் சார்ந்த எழுத்துகளைப் பற்றி?
அன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டு அதையே சிறுகதையாக வெளியிடச் சொல்வார்கள். அப்படி அவர்கள் கூறிய நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் நான் படைப்புகளாக்கி உள்ளேன். சிலர் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளை நான் எழுதும்போது பலர் அதை எதிர்ப்பதுண்டு. அதையெல்லாம் சவாலாக எடுத்துக்கொண்டு நான் மேலும் உற்சாகமாக என் பணியை மேற்கொள்வென். அவ்வப்போது ஏற்படும் சமுதாய, அரசியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதைகளை எழுதுவது திருப்தி அளிக்கிறது.
தமிழ் முரசு நாளிதழிலும், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளிலும் சிங்கப்பூரின் தொலைக்காட்சி – வானொலி செய்திப் பிரிவுகளிலும் பணியாற்றியுள்ள மூத்த ஊடகவியலாளராக, உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கமுள்ளதா?
சிங்கப்பூரில் 1887ல் வெளிவந்த ‘சிங்கை நேசன்’ என்ற பத்திரிகையைப் பற்றியும் அதை வெற்றிகரமாக நடத்திவந்த திரு மகுதூம் சாய்புவைப் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். மேலும் ‘சிங்கப்பூரில் இதழியல் வளர்ச்சி’, ‘இதழியல் வளர்ச்சிக்குச் சிங்கப்பூரில் இலக்கியத்தின் பங்கு’ ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை இந்த ஆண்டுக்குள் வெளியிட உள்ளேன்.
தமிழவேள் கோ. சாரங்கபாணியுடன் பணியாற்றிய அனுபவம் எத்தகையது?
“நான் சிங்கப்பூருக்கு வருவதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் அமரர் சாரங்கபாணி. என்னை ஒரு மகனைப் போலவே நடத்தினார். நான் தமிழ் முரசிலிருந்து ஆனந்த விகடனுக்குச் சென்றபோது அவர் என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார். எனக்கு நல்வழிகாட்டியாக இருந்த அவரிடமிருந்து எவ்வாறு வேலை செய்வது என்பதைக் கற்றுக்கொண்டேன். ஒருவரது கடின உழைப்பை பாராட்டுவதுடன் தக்க ஆலோசனைகளையும் வழங்குவார். உள்ளூர், வெளியூர் அமைச்சர்களைச் சந்திக்க அனுப்பும்போது என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் கற்றுக் கொடுப்பார்.
தமிழ் முரசில் வேலை செய்த அனுபவம்?
கணினி இல்லாத அந்தக் காலத்தில் தமிழ் எழுத்து அச்சுகளைக் கோர்த்து செய்திகளை உருவாக்குவது கடினமான ஒரு வேலை. மலேசியாவிற்கு காலை இதழும் சிங்கப்பூருக்கு மாலை இதழும் அச்சாகும். இரண்டுக்கும் செய்தி எழுத வேண்டும். ஞாயிறுகளில் சென்னை கடிதம் என்ற ஒரு பக்கத்தில் தமிழகத்தின் அரசியல் செய்திகளைத் தொகுத்துக் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம். இது உள்ளூர், வெளியூர் வாசகர்களை அதிகமாகக் கவர்ந்தது.
நன்றி: தமிழ் முரசு, சிங்கப்பூர் 21-10-2012
தொடர்புடைய சுட்டிகள்:
ஜே.எம். சாலிக்கு கலாசாரப் பதக்கம்
J.M. Sali – Cultural Medallion Award 2012 Winner