ஸஹீஹ் முஸ்லிம்! (யுனிகோடுத் தமிழில்)

by admin

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்லாஹ்வின் நல்லருளும் நற்சாந்தியும் அவனின் தூதரும் உலக முஸ்லிம்களின் தலைவருமான

பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார், நபித்தோழர்கள், இறுதிநாள் வரைக்கும் அன்னாரைப் பின்பற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் பொழியட்டுமாக!

உலக முஸ்லிம்களின் வாழ்வியல் நெறியான இஸ்லாத்தின் இரு அடிப்படைகளாக அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனும் அவனின் தூதர் (ஸல்) அவர்களது வழிகாட்டுதலான சுன்னா என்ற நபியியலும் திகழ்கின்றன. நபியியல் என்பது நபி (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அவை அனைத்தும் பொதுவான ஹதீஸ்களாகப் பதியப்பட்டு, பாதுகாப்பாக உள்ளன. அவற்றுள் ஸஹீஹ், ஸுனன், முஸ்னது ஆகிய மூவகைத் திரட்டுகள் முக்கியமானவை. இம்மூவகைகளுள் தலையாயதாக, உறுதிமிக்க சான்றுகளோடு பதிவு செய்யப்பட்டுத் திகழ்வன இரண்டாகும். அவை இமாம் புகாரீ (ரஹ்) அவர்களது ‘ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ’யும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களது ‘ஜாமிஉ ஸஹீஹ் முஸ்லிம்’ என்ற இரு தொகுப்புகளாகும்.

நமது சத்தியமார்க்கம்.காம் தளத்தின் சேவைகளின் சிகரமாக, யுனிகோடுத் தமிழில் அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனை இன்ஷா அல்லாஹ் விரைவில் தளத்தில் வெளியிட இருக்கிறோம். அதற்கு முன்னதாக, சான்றுகளால் நிறுவப்பட்ட, பெருமானார் (ஸல்) அவர்களது சத்திய வாழ்வியலின் இரு தொகுப்பு(ஸஹீஹைன்)களுள் இரண்டாவதாகத் திகழும் ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் யுனிகோடுத் தமிழில் வாசகர்களுக்குத் தருவதில் சத்தியமார்க்கம்.காம் தளம் பேருவகை கொள்கிறது!

மூன்று இலட்சத்திற்கு மேல் ஹதீஸ்களைத் திரட்டிய இமாம் முஸ்லிம் அவர்கள், தங்கள் ஸஹீஹ் தொகுப்பில் 5,354 ஹதீஸ்களை மட்டுமே இடம்பெறச் செய்திருக்கிறார்கள். மனித உருவில் வானவர்கோன் ஜிப்ரீல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைநம்பிக்கை, இஸ்லாம், அழகிய அணுகுமுறை’ ஆகியன குறித்து விசாரிக்கும் முதலாவது ஹதீஸிலிருந்து ‘அல்-ஹஜ்’ என்ற இறைமறையின் 22ஆவது அத்தியாயத்தின் 19ஆவது வசனத்தின் விளக்கவுரையாக அமைந்த 5,354ஆவது ஹதீஸ்வரை ஸஹீஹ் முஸ்லிமில் 55 அத்தியாயங்களில் பதிவாகியுள்ளன. மிகச் சில சொல் வேறுபாடுகளுடன் கூடிய, ஒரே மாதிரியான ஹதீஸ்களைக் கழித்துத் பார்த்தால் 3,032 ஹதீஸ்கள் மட்டுமே கணக்கில் வரும். மற்றவை அனைத்தும் முற்றும் பொய்யானவை என்றோ முழுதும் பிழையானவை என்றோ இதற்குப் பொருளல்ல.

ஒரு ஹதீஸை ‘ஸஹீஹ்’ என்ற தரத்திற்குக் கொண்டு வருவதற்கு இமாம் முஸ்லிம் (ரஹ்) தமக்குத் தாமே விதித்துக் கொண்ட கடுமையான கட்டுப்பாடுகளினால் தொகுப்பை விட்டு அவை தானாக விலகி விட்டன. எப்படியெனில், இருவேறு நபித்தோழர்களிடம் நேரடியாகப் பயின்ற/செவியுற்ற மாணவர்கள் இருவர் அறிவிக்கின்ற, தொடர் அறுபடாமல் தமக்கு வந்து கிடைத்த இரு ஹதீஸ்கள் ஒன்றேபோல் இருக்கக் கண்டால் மட்டுமே அதை ஒன்றாகக் கணக்கிட்டு இமாம் முஸ்லிம் (ரஹ்) தமது தொகுப்பில் இடம்பெறச் செய்தார்கள். இதனால் முஸ்லிம் ஹதீஸின் நம்பகத்தன்மை கூடுதலாகி, எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது. ஸஹீஹுல் புகாரீயின் முதலாவது ஹதீஸான, “எல்லாச் செயல்களுக்கும் முனைப்பான எண்ணங்கள்தாம் அடிப்படை” என்ற ஒரேயொரு நபிமொழியை வேறுபட்ட அறிவிப்பாளர் வரிசைகளில் பதிவு செய்தால், அந்த ஒரே ஹதீஸை எழுநூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்து விடலாம்.

‘இஸ்னாத்’ எனப்படும் அறிவிப்பாளர் வரிசை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரை சென்றடைவதும் அறிவிப்பாளர்கள் அனைவரும் கல்வியாளர்களாகவும் நல்ல நினைவாற்றல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் எல்லா நபிமொழிக்கலை அறிஞர்களது திட்டவட்டக் கருத்தாகும்.

(அபூ இஸ்ஹாக்) இப்ராஹீம் பின் ஈஸா அத்தாலகானீ என்பவருக்கும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மாணவரான (அபூ அப்திர் ரஹ்மான்) இமாம் அப்துல்லாஹ் இபுனுல் முபாரக் (ரஹ்) அவர்களுக்கும் நடந்த கீழ்க்காணும் உரையாடலை இமாம் முஸ்லிம் தங்கள் முன்னுரையில் பதிவு செய்துள்ளார்கள்:

அத்தாலகானீ :

அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! “உனக்காகத் தொழுவதுடன் உன் பெற்றோருக்காவும் தொழுதல், உனக்காக நோன்பு நோற்பதுடன் உன் பெற்றோருக்காவும் நோன்பு நோற்றல் ஆகியன நன்மைக்கு மேல் நன்மை சேர்க்கும் செயல்களாகும்” என ஒரு நபிமொழி வந்துள்ளது

இபுனுல் முபாரக் :

உங்களுக்கு இதை அறிவித்தவர் யார்?

அத்தாலகானீ :

ஷிஹாப் பின் கிராஷ்

இபுனுல் முபாரக் :

அவர் நம்பத் தகுந்தவர்தாம்; அவருக்கு அறிவித்தவர் யார்?

அத்தாலகானீ :

ஹஜ்ஜாஜ் பின் தீனார்

இபுனுல் முபாரக் :

அவரும் நம்பத் தகுந்தவர்தாம்; அவருக்கு அறிவித்தவர் யார்?

அத்தாலகானீ :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்).

இபுனுல் முபாரக் :

அபூ இஸ்ஹாக்கே! பெற்றோருக்காகப் பிள்ளைகள் தருமம் செய்வதில் (மட்டும்) கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஹஜ்ஜாஜ் பின் தீனாருக்கும் இடையேயுள்ள கால இடைவெளியைக் கணக்கிட்டு, சுமைதூக்கிச் செல்லும் ஒட்டகத்தின் கழுத்தில் வைத்தால் அதன் கழுத்து முறிந்து விடுமே!

நபித்தோழர்களில் எவரும் உயிர் வாழ்ந்திராத காலகட்டத்தில் பிறந்த ஹஜ்ஜாஜ் பின் தீனார், நபி (ஸல்) அவர்களிடத்தில் ஹதீஸ்களை நேரடியாகக் கேட்டதாக(ப் புனைந்து)க் கூறுவதை இமாம் இபுனுல் முபாரக் (ரஹ்) அவர்கள் வன்மையாகக் கண்டிப்பதும் ஹஜ்ஜாஜ் பின் தீனாரைப் பற்றி அவர்களுக்கிருந்த நல்லெண்ணம் தகர்ந்து போனதும் ஈண்டு நோக்கத் தக்கதாகும்.

அதேபோல், “உஹதுப் போரில் வீரமரணம் எய்திய உயிர்த் தியாகிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்தார்கள்” என்பதும் ஹதீஸ்தான்; ஆனால் இது இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட இலட்சக் கணக்கான ஹதீஸ்களில் சேர்ந்த இன்னொரு (புனையப்பட்ட) ஹதீஸாகும். இது எப்படி தள்ளுபடியானது என்பதைப் பற்றி இமாம் முஸ்லிம் விளக்குகின்றார்கள்:

மேற்காணும் ஹதீஸை, நபித்தோழர் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்கள் மிக்ஸம் என்பாருக்கு அறிவித்ததாகவும் மிக்ஸம், ஹகம் என்பாருக்கு அறிவித்ததாகவும் ஹகம் தனக்கு அறிவித்ததாகவும் ஹஸன் பின் உமாரா (புனைந்து) கூறினார்.

ஆனால், ஷுஃபா (ரஹ்) அவர்கள் ஹகம் (ரஹ்) அவர்களை நேரடியாகச் சந்தித்து, “உஹதுப் போரில் கொல்லப்பட்ட உயிர்த் தியாகிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்களா?” என்று வினவியபோது, “இல்லை” என்று மறுத்துரைத்தார். இவ்வாறு புனைந்துரைக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை ‘ஒதுக்கி’ விட்டதாக இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகிறார்கள்.

“இஸ்னாத் (அறிவிப்பாளர் தொடர்) இல்லையெனில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் (ஹதீஸ் எனச்) சொல்லி விடலாம்” என்ற எச்சரிக்கையை இமாம் இபுனுல் முபாரக் (ரஹ்) பொதுவில் வைத்திருந்தார். அன்னாருக்குப் பிறகு தோன்றிய இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அக்கருத்தை முழுக்கவும் ஏற்றுக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் ஹதீஸ்களைப் பதிவு செய்தார்கள்.

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் பதினைந்து ஆண்டுகால அயராத உழைப்பாலும் பெருமுயற்சியாலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் பயன் பெறத்தக்க ‘ஸஹீஹ் முஸ்லிம்’ என்ற அரிய தொகுப்பு அரபு மொழியில் தொகுக்கப்பட்டது. ஸஹீஹுல் புகாரீயில் சிரியாவைச் சேர்ந்த அறிவிப்பாளர் சிலரைச் சிலவேளை ‘குன்யத்’ என்ற (அபூ … எனத் தொடங்கும்) பிள்ளைப் பெயராலும் வேறு சிலவேளைகளில் அவரது சொந்தப் பெயரிலும் குறிப்பது இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் வழக்கமாகும். சாதாரண வாசகர்களுக்கும் அதை எளிதில் புரிய வைத்து, ‘இருவகையாகக் குறிக்கப் படுபவர் ஒருவரே’ என விளக்கி இருப்பது இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் தனிச் சிறப்பாகும்.

“அபுல் ஹுஸைன்” என்ற குன்யத் பெயரால் அழைக்கப்பட்ட இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அரபியரின் புகழ்பெற்ற ரபீஆ வம்சவழியிலிருந்து பிரிந்த குஷைர் குலத்தைச் சார்ந்தவர்களாவார். பாரசீகத்தின் (ஈரான்) நைஷாப்பூரில் ஹிஜ்ரீ 202(அ)206ஆம் ஆண்டில், இஸ்லாமியப் பேணுதலுடைய ஹஜ்ஜாஜ் அல்-குஷைரீ என்பவருக்கு மகனாகப் பிறந்தார்கள். மார்க்கக் கல்வி பயில்வதற்காக அரபகம், எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹ், இமாம் அஹ்மது பின் ஹன்பல், இமாம் உபைதுல்லாஹ் அல் கவாரீரீ, இமாம் குதைபா பின் ஸயீத், இமாம் அப்துல்லாஹ் பின் மஸ்லமா, இமாம் ஹர்மலா பின் யஹ்யா ஆகியோர் இமாம் முஸ்லிம் அவர்களின் ஆசிரியர்களாவர். இவர்கள் தவிர்த்து, முஹம்மது பின் யஹ்யா அத்துஹ்லீ என்பவரது மார்க்க அறிவும் தொடக்கக் காலத்தில் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களைப் பெரிதாகக் கவர்ந்திருந்தது. ஆனால், ஒரு காலகட்டத்தில் “குர் ஆன் படைக்கப்பட்டது” என்ற துஹ்லீயின் தடுமாற்றக் கருத்துக்கு எதிராக இமாம் புகாரீ (ரஹ்) நின்றபோது இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் துஹ்லீயின் கருத்தை மறுதலித்து, தமது ஆசிரியரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களது கருத்தையே ஆதரித்தார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்களது இறப்பு வரைக்கும் அவர்களின் சிறப்பு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

இமாம்கள் இபுனு அபீஹாத்தம் அர்ராஸீ, மூஸா பின் ஹாரூன், அஹ்மது பின் ஸலமா, திர்மிதீ, இபுனு குஸைமா, அபூ அவானா, ஹாபிள் தஹபீ ஆகிய ஹதீஸ் கலை மேதைகள் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் மாணவர்களாவர்.

ஏறத்தாழ 55 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரீ 261இல் இறப்பெய்து நைஷாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்; இறவாப் புகழ் பெற்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமுக்கு, ‘மின்னத்துல் முன்இம்’ (ஸைஃபுர்ரஹ்மான் அல் முபாரக்பூரீ), ‘ஃபத்ஹுல் முல்ஹிம்’ (ஷப்பீர் அஹ்மது உஸ்மானீ & முஹம்மது ஸாஹித் அல்-கவ்ஸரீ) ஆகிய விரிவுரைகள் உள்ளனவென்றாலும் இமாம் நவவீ (ரஹ்) அவர்களது ‘அல்-மின்ஹாஜ் பி ஷரஹி ஸஹீஹ் முஸ்லிம்’ என்ற விரிவுரையே ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்புக்குப் புகழ் பெற்ற விரிவுரையாகத் திகழ்கிறது. இமாம் நவவீ (ரஹ்) அவர்களது கடும் உழைப்பு, ஸஹீஹ் முஸ்லிமுக்கான விரிவுரையான ‘அல்-மின்ஹாஜ்’இல் பளிச்செனெத் தெரிகிறது. புகழ்பெற்ற ரியாளுஸ் ஸாலிஹீன் தொகுப்பில் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களைப் பெரும்பாலும் இடம்பெறச் செய்திருக்கிறார்.

ஸஹீஹ் முஸ்லிம் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு, அச்சு வடிவில் கிடைக்கிறது. அரபு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் வெகு காலத்துக்கு முன்னரே ஸஹீஹ் முஸ்லிம் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இணையத்தில், யுனிகோடுத் தமிழில் ஸஹீஹ் முஸ்லிமை வாசகர்களுக்கு வழங்கும் முயற்சியை சத்தியமார்க்கம்.காம் முன்னெடுத்து இருக்கிறது.

ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பின் மூல அரபுமொழியை இணையத்தில் பெற்று மொழியாக்கம் செய்து, இதுவரை ஸஹீஹ் முஸ்லிமுக்குத் தமிழில் வெளிவந்திருக்கும் மவ்லவீ இக்பால் மதனீ அவர்களது ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’, மவ்லவீ நிஜாமுத்தீன் பாக்கவீ அவர்களது ‘ஸஹீஹ் முஸ்லிம்’ மற்றும் ரஹ்மத் ட்ரஸ்ட் வெளியீடான ‘ஸஹீஹ் முஸ்லிம்’ ஆகிய மொழிபெயர்ப்புகள் ஒப்பு நோக்கப்பட்டு, சத்தியமார்க்கம்.காம் அறிஞர் குழுவினரின் ஆய்வுக்கும் திருத்தங்களுக்கும் பிறகு இங்குப் பதிக்கப் படுகிறது. இங்குத் தமிழில் வெளியிடப்படும் அத்தியாயங்களும் ஹதீஸ் எண்களும் முற்றிலும் www.al-islam.com இணையத்திலிருந்து பெறப்பட்ட அரபு மூலத்தை ஒத்திருக்கும். எனவே, மேற்காணும் மூன்று தமிழ்த் தொகுப்புகளிலிருந்து எண்ணிக்கையில் சற்றே மாறுபடும். காட்டாக, ஹதீஸ் எண் 35 என்பது நமது பதிவில் அத்தியாயம்: 1, பாடம்: 1.09, எண் 35 என்பதாக இடம் பெற்றிருக்கும். இதே ஹதீஸ் புகழ்பெற்ற ரஹ்மத் ட்ரஸ்ட் அச்சுப் பிரதியில் பாடம்:9 ஹதீஸ் எண் 39 ஆகப் பதிவாகி இருக்கும்.

தொடக்கமாக இதுவரைக்கும் 391 ஹதீஸ்கள் இங்குப் பதிவேறி இருக்கின்றன. முழுவதையும் விரைந்து பதிப்பதற்கு வல்ல அல்லாஹ் உதவி செய்ய வேண்டும்; சத்தியமார்க்கம்.காமின் இந்தச் சேவையை முழுதுமாக நிறைவேற்றித் தருவதற்கு அவனிடம் துஆச் செய்யுமாறு வாசகர்களை வேண்டுகிறோம். அத்துடன், எழுத்துப்பிழை, சொற்பிழை, மொழியாக்கத் தவறுகளைக் கண்ணுறும் சகோதர சகோதரிகள் SaheehMuslim@satyamargam.com என்ற முகவரியில் கட்டாயம் எங்களுக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பிற இணைய தளங்கள், வலைப்பதிவுகளில் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களை மேற்கோள் காண்பிப்போர் கவனத்திற்கு:

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் மொழிபெயர்க்கப்படும் ஹதீஸ்களின் எண்கள், மூல நூலான சஹீஹ் முஸ்லிமில் குறியிடப்பட்டுள்ள எண்களை ஒத்தது என்பது ஒரு சிறப்புக் குறிப்பாகும். எனவே, ஒரு குறிப்பிட்ட ஹதீஸிற்கான சுட்டியைக் கொடுக்க விரும்புவோர் கீழ்க்காணும் முறையில் தரலாம்:

சுட்டி (url)இன் இறுதியில் உங்களுக்குத் தேவையான எண்ணைக் கொடுக்கவும்.

[உதாரணத்திற்கு ஆறாம் எண்ணுடைய ஹதீஸிற்கான சுட்டி: http://satyamargam.com/muslim/numbersearch.php?bnumber=6]

பிழைகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லாஹ் ஒருவனே! அவனிடமே எங்கள் பிழைகளைப் பொறுக்க வேண்டுகிறோம்; அவனையே சார்ந்திருக்கிறோம்; அவனிடமே உதவிகளை வேண்டி நிற்கிறோம்!

தகவல்: சத்தியமார்க்கம்.காம்

Related Articles

Leave a Comment