மயக்கம் தெளிந்து தன்னுணர்வு பெற்றதும், ஷஜருத்துர் இமை விழித்துப் பார்த்தாள். ஒரு விசாலமான அறையில் வெல்வெட் நெட்டணைமீது தான் படுத்திருப்பதையும், தன்னைச் சுற்றிலும் பல
பெண்மணிகள் விசிறிகொண்டு வீசிக்கொண்டும், உடலைத் துவட்டிக்கொண்டும் இருப்பதையும் அவள் கண்டாள். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தால், அங்கே உயரத்தில் ஸ்படிகச் சங்கிலியால் தொங்கிக்கொண்டிருந்த அழகிய கண்ணாடிக் கலசங்களில் மெழுகுவர்த்திகள் சுடர் விட்டெரிவதையும், பொன் வளையங்களிலும் வெள்ளி வளையங்களிலும் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த அழகிய மினுக்குத் தட்டுக்கள் தொங்கிக்கொண்டிருப்பதையும் பார்த்தாள். தான் அரண்மனையின் ஓர் அறையிலே படுக்கவைக்கப்பட்டிருப்பதாக நன்குணர்ந்து கொண்டாள். பின்னர் அவள் தன் தலைமாட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தபோழ்து, அங்கே ராணியம்மை மூனிஸ்ஸா பேகம் அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுச் சட்டென எழுந்தாள்.
மூனிஸ்ஸா அவளை இருதோட்பட்டைகளிலும் மெல்லப்பற்றி, “படுத்துக்கொள்; பேசாமல் படுத்துக்கொள்,” என்று உபசாரம் புரிந்தார். உண்மையிலேயே பலஹீனமுற்றிருந்த ஷஜருத்துர் மீண்டும் மல்லாந்து சாய்ந்துவிட்டாள்.
அந்தப் படுக்கையைச் சுற்றி நின்ற தாதிகளைப் பார்த்து அரசமாதேவியார், “ஒருவரும் ஷஜரைத் துன்புறுத்தவேண்டாம். வீண்பேச்சும் கொடுத்துத் தொந்தரை செய்யாதீர்கள். ஆகாரம் ஏதாவது கேட்டால், இந்தப் பழவகைகளையும பாலையும் அருந்தக் கொடுங்கள். புழுக்கம் அதிகமாயிருப்பதால், ஒருவர்மாறி ஒருவராக விசிறிக்கொண்டேயிருங்கள். இரவு முழுதும் நன்றாய்த் தூங்கட்டும்,” என்று கட்டளையிட்டுவிட்டு, ஷஜருடைய கன்னங்களை மிருதுவாய்த் தடவிவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றார். அவளுக்கோ, இவையனைத்தும் கனவுலகில் நடைபெறுகிற தோற்றமாகவே காட்சியளித்தன.
மூனிஸ்ஸா எவ்வளவு கடுமையான கட்டளையிட்டுச் சென்றிருந்தபோதினும், அத் தாதிகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலே விழுந்துவிழுந்து உபசாரம் செய்வதன் மூலமே ஷஜருக்குச் சங்கடம் விளைத்துவிட்டனர். பசித்தால் மட்டுமே உணவு கொடுக்கச் சொல்லிக் கட்டளையிடப்பட்டிருந்தும், அந்தத் தாதிகள் அளவு மீறிய அன்பின் பெருக்கத்தால் அவளுக்கு வலியவலியத் தீம்பண்டங்களை ஊட்டினார்கள். தன்னைத் தனியே விட்டுவிட்டு இவர்கள் அத்தனைபேரும் தொலைந்தால் போதுமென்றுகூட அவள் எண்ணிவிட்டாள். ராஜோபசாரமென்றால், இப்படித்தான் இருக்கும்போலுமென்று அவள் கருதினாள்.
“நீ பசியால் வாடிப்போயிருக்கிறாய்! இன்று பகலெல்லாம் பட்டினியாயிருந்து மூர்ச்சையாகிவிட்ட நீ இப்போதும் ஒன்றும் வேண்டாமென்று தடுப்பது கூடாது!” – இஃது ஒரு தாதியின் உபசாரம்.
“இப்போது நீ வயிறு நிரம்ப இப் பழவர்க்கங்களையேனும் தின்றால்தான் இரவில் நன்றாய்த் தூங்கலாம். இந்தப் பாலையும் பருகிவிடு!” – இது மற்றொரு தாதியின் உமைதி.
வயிறு நிரம்ப அவள் தின்ற பின்னருங்கூட அவர்கள் விடுவதாயில்லை. அவள் பொறுமையிழந்து கடுகடுக்கிற வரையில் உபசாரங்கள் ஒருசிறிதும் ஒய்ந்தபாடில்லை. சற்று நேரஞ்சென்று அவள் மெய்ம்மறந்து உறங்கிவிட்டாள்.
பொழுது புலர்ந்த பின்னர் ஸாலிஹும் மூனிஸ்ஸாவும் அந்த அறையினுள் சேர்ந்தே நுழைந்தனர். ஷஜருத்துர் மரியாதையுடன் எழுந்து நின்று சென்னிதாழ்த்தினாள்.
“நீ நன்றாய் உறங்கினாயா?” என்று சுல்தான் கேட்டார்.
“ஆம், மலிக்! மிக நன்றாய் உறங்கி விழித்தேன்.”
“இப்போது உன் உடம்பு எப்படி இருக்கிறது?”
“யா மலிக்! ஆண்டவனுதவியாலும் தங்களின் அன்பினாலும் என் உடம்பு முற்றும் சுகமாகவே இருக்கிறது. ஏதோ பலஹீனத்தின் காரணத்தால் நேற்று நான் மூர்ச்சித்து விட்டேனென்று தெரிகிறது. இப்போது மிகவும் தெளிவடைந்திருப்பது போன்ற உணர்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.”
“சந்தோஷம்! இன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொள். உனது இருப்பிடத்துக்கு நாளைக்குப் போகலாம்.”
“யா சுல்தானல் முஸ்லிமீன்! அடியாள் தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளும் சிறிய கோரிக்கையொன்றைத் தாங்கள் செவிமடுத்தருள்வீர்களென்று நம்புகிறேன்.”
“என்ன சிறிய கோரிக்கை?”
“என் எஜமானராகிய அமீர் காலஞ்சென்ற பின்னர் அடியேன் தன்னந்தனியளாய் அப் பெரிய மாளிகையில் இருந்து கொண்டு, கொடிய சிறைவாசத்தையே அனுபவித்து வந்தேன். ஏழைப்பங்காளராகிய தங்கள் அரண்மனைக்கு நான் வந்ததிலிருந்து என் பழைய துக்கங்களை மறந்துவிட்டேன். என்னை மீண்டும் தாங்கள் அந்த மாளிகைக்குத் திருப்பி அனுப்புவதாயிருந்தால், எனக்குச் சிறிதும் மனநிம்மதி இருக்குமென்று நான் நினைக்கவில்லை. எனவே, யா மலிக்கல்முல்க்! என்னைத் தங்கள் அடிமைகளுள் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டு இங்கேயே இருத்திக்கொண்டால், தாங்கள் இடும் பணியைச் செவ்வனே செய்து முடிப்பேன். என் வாழ்நாட்களின் மீதிப்பொழுதை வெளியிற்சென்று பாழ்படுத்திக் கொள்வதினும், இங்கேயே தங்கள் திருவோலக்கத்தில் என்னை அர்ப்பணித்துக் கொள்ளப் பெரிதும் அவாவுற்று நிற்கின்றேன்.”
இதைக் கேள்வியுற்ற சுல்தானுக்கு, அது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது. என்னெனின், அவளைக் கண்டது முதலே அவருக்கு ஏதோ ஒருவித அதிசயமான உணர்ச்சி உள்ளத்துள் உந்தி எழுந்துவிட்டது. எப்படியாவது அவளை இங்கேயே தடுத்து நிறுத்திக் கொண்டுவிட வேண்டுமென்றுதான் அவர் எண்ணியிருந்தார். எனினும், கைதியாக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டவளை அப்படி நிறுத்திக்கொள்வது தவறென்றுணர்ந்தமையாலேயே அவளை அந்த அமீரின் இல்லத்துக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டுமென்று நினைத்தார். அதற்கு மாறாக, இப்போது அவளே இப்படிக் கோரிக்கொண்டது எல்லையற்ற மகிழ்ச்சியையே தந்ததென்னலாம்.
“நீ இங்கேயே தங்கிவிடுகிறாயா! எனக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை; ஆனால், கைதியாக்கப்பட்டு இங்குக் கொண்டுவரப்பட்ட உன்னை நான் இங்கேயே இருத்திக்கொண்டால், மக்கள் என்ன சொல்வார்கள்? ஆகவே, நான் உன்னை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். அங்குச் சென்ற பின்னரும் நீ இங்கே வந்துதான் ஆகவேண்டுமென்று கருதினால், வந்துவிடு. அப்போது உனக்காக இங்கு உத்தியோகம் ஒதுக்கித் தருகிறேன்.”
“யா சுல்தானல் மூமினீன்! தாங்கள் இடுகிற கட்டளைக்கு யான் அப்படியே அடிபணியக் கட்டுப்பட்டிருக்கிறேன் என்றாலும், தாங்கள் கூறுகிற திட்டம் இழுக்கற்றதாக இல்லையே! என்னெனின், தாங்கள் கூறுவதுபோல என்னை மீட்டும் என் இருப்பிடத்துக்குத் திருப்பி அனுப்பினீர்களானால், அதனால் நான் பெரிதும் பாதிக்கப்படுவேனென்றே அஞ்சுகிறேன். அஃதாவது, நான் சென்றவுடனே இக் காஹிரா வாசிகள் எல்லாருமே என்னை வந்து கண்டு, யான் ஏன் கைது செய்யப்பட்டேனென்றும், கைதான பின்னர்த் தங்களால் எங்ஙனம் விடுதலை செய்யப்பட்டேனென்றும், யான் இங்கு வந்திருந்த சமயத்தில் என்னென்ன நிகழ்ந்ததென்றும் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு, என்னை நச்சரித்து விடுவார்கள். ஸல்தனத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற எண்ணும் யான், அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில்சொல்ல விரும்பமாட்டேன். உண்மையைச் சொன்னால், வஜீர்மீது மக்களுக்குக் கோபம் பிறக்கும். விஷயத்தை மறைத்தாலோ, என்னைச் சபிப்பார்கள். இத்தகைய தர்மசங்கடத்தை எனக்கு உண்டு பண்ணுவதைத் தடுக்கவாவது தாங்கள் என்னை இங்கேயே இப்போது முதலே இருத்திக்கொண்டு விடுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.”
சுல்தான் தம்முடைய ராணியின் முகத்தை நோக்கினார்.
“பாவம்! இவள் கூறுவது உண்மைதானே? சிறை செய்யாமலே இருந்திருந்தாலும், பழிச்சொல்லொன்றும் ஏற்படாது. ஆனால், இவளைக் காவலுடன் இங்கே இழுத்து வந்துவிட்டு, பிறகு திருப்பியனுப்பினால், இவள் சொல்கிறபடி தர்மசங்கடம் மட்டுமா விளையும்? இடையூறே வந்தாலும், அதிசயமில்லை. எல்லா அமீர்களையும் ஏககாலத்தில் சிறையிட்டு விட்டீர்கள் என்று ஏற்கெனவே சில மக்கள் தங்கள்மீது ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அது போதாததற்கு இவளைவேறு வெளியில் அனுப்பிவிட்டால், கேட்கவே வேண்டாம். பிறகு தங்களிஷ்டம்!” என்று மூனிஸ்ஸா அபிப்ராயம் தெரிவித்தார்.
“சுல்தான் ஸலாஹுத்தீனின் சிறந்த புத்திரியாகிய உனது அறிவு கெழுமிய பேச்சை நான் தட்டவா போகிறேன்? உனக்குச் சம்மதமிருப்பின், எனக்கும் சம்மதமே! என்ன, ஷஜருத்துர்! சுல்தானா கூறுகிறபடி நீ இங்கேயே இருக்கலாம். ஆனால், உன்னை நான் ‘அடிமை’ என்கிற ஸ்தானத்தில் வைத்து நடத்த விரும்பவில்லை. எதேச்சையான பெண்ணாகவே இருக்கலாம். ஆனால், அரண்மனையின் இரகசியங்களைமட்டும் நீ எக்காரணங் கொண்டும் எப்போதுமே வெளியிட்டுவிடக் கூடாதென்பதை என்றைக்கும் மறக்காதே!”
அவருடைய வாயினின்று பிறந்த கடைசி வார்த்தைகளைச் செவியேற்றதும், ஷஜருத்துர் தன்னையறியாமலே தலையை இறக்கிக்கொண்டாள். என்னெனின், அச்சொற்களில் அவ்வளவு வன்மையான கண்டிப்புத் தொனித்தது.
“யா ஆலம்பனா! யான் தங்கள் அடிமை. தங்கள் சித்தமே எனது பாக்கியம். தாங்களிடும் உப்பைத் தின்னும் யான் என் உயிருள்ளளவும் தங்களையேனும் இவ் வரசாங்கத்தையேனும் எவருக்குமே காட்டிக்கொடுக்க மாட்டேனென்பதை அந்த ஆண்டவன்மீது ஆணையாகத தெரிவித்துக் கொள்ளுகிறேன்!” என்று ஷஜர் உறுதி கூறினாள்.
சுல்தான் மறுநிமிஷமே, அரண்மனையிலுள்ள சகலருக்கும் ஷஜருத்துர் தம் பெண் சிப்பந்திகளுள் ஒருத்தியாக நியமிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுவிட்டாள் என்னும் செய்தியைப் பரப்பிவிட்டார். புயலிற் சிக்கிய கலமெனத் தத்தளித்துக்கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்குச் சொல்லொணா மன நிம்மதி ஏற்பட்டுவிட்டது. சிலநாட்கள் கழிவதற்குள்ளே அவள் தன்னுடைய சென்றகால வாழ்க்கையின் இன்னல்களை எல்லாம் அடியோடு மறந்துவிட்டாள். வாழ்க்கையின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் விரக்தியின் எல்லையை எட்டி நின்ற அவள், இவ்வளவு சடுதியில் எல்லாவற்றையும் மறந்து, தான் இன்னம் அதிக நாட்கள் நன்கு வாழ்ந்து சகலவித சுகபோக வாழ்க்கையையும் அனுபவிக்க ஆண்டவன் அருள் சுரக்க மாட்டானா என்று இப்போது ஏங்கித் தவித்தாள். அவள்மீது குற்றமில்லை; இது மானிட இயற்கை. காலசக்கரமும் அப்படித்தான் சுழன்று வருகிறது.
நாட்கள் பல ஓடிமறைந்தன. சிறைச்சாலையிலே நூற்றுக்கணக்கான அமீர்களை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவளித்துக்கொண்டு உபத்திரவமடைவதை குறைத்துக்கொள்ள வஜீர் ஒரு வழி தேடிக்கொண்டிருந்தார். நல்ல சமயம்பார்த்து அவர் சுல்தானை அண்மி, இவ்விதமாக அந்தப் பயங்கரக் குற்றவாளிகளான அமீர்களைக் காலவரையைறை இன்றி வாளா அடைத்து வைத்திருப்பது எந்த நேரத்திலும் பேராபத்தை விளைக்கக்கூடுமென்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பையப் பேசினார்.
“அதற்காக என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறீர்?” என்று சுல்தான் அவசரமாகக் கேட்டார்.
“ராஜதுரோகக் குற்றம் இழைக்கிறவர்கள், யுத்தகாலத்தில் எதிரியிடமிருந்து வந்து நம்மிடை உளவுபார்க்கிறவர்கள், அரசாங்கத்தைச் சதிசெய்து கவிழ்க்க விரும்புகிறவர்கள் எல்லா நாட்டிலுமே என்னவிதமான தண்டனைக்கு உள்ளாக்கப் படுகிறார்களோ, அதேவிதமான தண்டனையைத்தானே ….?” என்று வஜீர் நீட்டிநெளித்துப் பேசினார்.
ஸாலிஹ் ஒருகணம் சிந்தித்தார். அச் சிந்தனையின் முடிவாக அந்தச் சிறையிலிருந்த அத்தனை அமீர்களும் சற்றுமே ஈவிரக்கம், தயை தாட்சண்யமின்றி இவ்வுலகைவிட்டு மறுவுலகுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். இப் பயங்கரச் செய்தியை வஜீரும், சுல்தானும், கொலைகாரனும் தவிர, அடுத்த மனிதர் எவருமே அறிய முடியாதபடி அவ்வளவு ரகசியமாக மறைத்து விட்டார்கள். ராஜதந்திரத்தில் உயிரைப் போக்குவது ஒரு கொலைக் குற்றமாய்க் கருதப்படுவது வழக்கத்தில் இல்லை போலும்!
பனீபாத்திமா கலீபாக்களின் கிலாபத் வீழ்ச்சியுற்றதிலிருந்து அதுவரை அந்த மிஸ்ரின் ஸல்தனத்தின் கண்ணியத்துக்காக உயிர் வாழ்ந்த அமீர்களின்கதி இத்தகைய பரிதாப நிலைக்கு இரையாயிற்று.
நம் ஷஜருத்துர்ருக்கு அஃதொன்றும் தெரியாது; அல்லது தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவள் கவலைப்படவில்லை. அரண்மனைக்கு வந்ததுமுதல் அவள் தன் சக்தி முழுதையும் செலவிட்டு மூனிஸ்ஸாவை அளவுகடந்த திருப்திக்கு ஆளாக்கி வந்தாள். அவள் ஏற்கெனவே அமீர் தாவூதிடம் கற்றுக் கொண்ட பல கேள்வி ஞானங்களும் அவளுடைய அரண்மனை வாழ்க்கையை மிக்க எளிதாக்கி வந்தன. இயற்கையிலேயே சாதுரிய குணம் படைக்கப்பெற்றிருந்த அவளுக்கு எதைச்செய்வதும் சிரமந் தரவில்லை. தனது கூரிய புத்தியின் வன்மையைக் கொண்டு அவள் சிறுகச்சிறுக அவ் வரண்மனையிலிருந்த எல்லாப் பெண்களையும்விட மேலான அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டாள். சுல்தானாவை அவள் தன் திறமையைக்கொண்டு தனக்கு அடிமையாக்கிக்கொண்டு விட்டமையால், அவளால் அந்த அரண்மனையில் செய்துமுடிக்க முடியாத காரியமே இல்லாமற் போய்விட்டது. மாபெரிய சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபியின் வாழ்க்கைச் சரித விவரங்களை அவள் ஏற்கெனவே நன்குணர்ந்திருந்தாலும், மூனிஸ்ஸாவின் வாயிலாக அவள் சில அரிய பெரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டாள்.
மூன்றாவது சிலுவையுத்தத்தில் முதலாவது ரிச்சர்டு மன்னனை ஸலாஹுத்தீன் எவ்வாறு முறியடித்தாரென்கிற பெருமைமிக்க வரலாறுகளையெல்லாம் ஷஜருத்துர் கேட்கக்கேட்க அவளுக்கு வீராவேசம் பொங்கியது. அந்தச் சிலுவையுத்தத்தின் காலத்தில் ஒருமுறை ஆங்கில மன்னன் – (மலிக் அங்க்கில்தார் – முதலாவது ரிச்சர்டு மன்னன்) படுகாயமுற்றுப் படுத்திருந்தபோது, வீர ஸலாஹுத்தீன் மாறுவேடம் பூண்டு அம்மன்னனை அண்மிச் சிகிச்சை புரிந்தார். தனக்குப் போர்க்களத்தில் முன்பின் தெரியாதவர் அன்புடன் வைத்தியம் செய்வதைக் கண்ட அவன் அவரைச் சந்தேகித்து யாரென்று கேட்டான். ஸலாஹுத்தீன் சரியான பதில் சொல்லாததைக் கண்டு, அவன் அஞ்சித் தன் வாளை உருவினான். சுல்தானும் சற்றும் அஞ்சாது தமது கட்கத்தை ஓச்சினார். தன்னெதிரில் நிற்பது சுல்தான் ஸலாஹுத்தீன் என்பதைக்கண்ட ரிச்சர்டு மன்னன் நடுங்கிப் போனான். வாளைக் கீழே எறிந்துவிட்டு, “எதிரியாகிய எனக்கு வைத்தியம் செய்வதற்குத் தாங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று வியப்புடன் வினவினான். அதற்கு அவர், “எதிரியை ஏமாந்த சமயம் பார்த்துக் கொல்லத்துணிவது இஸ்லாமிய யுத்த தர்மமன்று. புண்பட்ட உன்னைக் காப்பாற்றிவிட்டு, அதன் பின்னரே நான் உனக்கு நேருக்குநேராக நின்று போர்புரிவேன். எங்கள் மதமும் அதைத்தான் போதிக்கிறது; எங்கள் திருநபியும் அப்படித்தான் கட்டளை இட்டிருக்கிறார்கள்!” என்று கம்பீரமாகக் கூறினார்.
இவ் விருத்தாந்தத்தை மூனிஸ்ஸா அளவற்ற பெருமையுடன் ஷஜருத்துர்ருக்குக் கூறியபோது, இருவருள்ளத்துள்ளும் வீர உணர்ச்சி பொங்கி வழிந்தது. இவ்வுலக சரித்திரத்தில் வேறெவரும் இவ்வாறு செய்துகாட்டியது கிடையாதன்றே!
இவ் வண்ணமாக ஷஜருத்துர் ஓராண்டுக்குள்ளே அந்த ஸல்தனத்தைப் பற்றிய சகல வரலாறுகளையும் நன்கு தெரிந்து கொண்ட சர்வகலாவல்லியாக உயர்ந்துவிட்டாள். முன்பெல்லாம் அவள் அரைகுறையாகக் கேட்டிருந்த வரலாறுகள் யாவற்றின் முழு விருத்தாந்தங்களையும் அவள் இப்பொழுது நேருக்கு நேராய் நன்கு தெரிந்துகொண்டு விட்டாள். மிஸ்ர் தேசத்திலேயே அவளைப்போன்று சகலவிஷயமும் தெரிந்த வேறுமனிதர் ஒருவருமில்லை. என்னெனின், அவள் என்றைத் தினம் காஹிராவுக்குள் காலடி வைத்தாளோ அன்றுமுதல் அவள் சாதாரண மனிதர்களுடன் பழகினாள். அந்தக் காலத்தில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அவள் அறிந்து கொள்ள முடிந்தது. அப்பால் அவள் அமீரின் இல்லத்துள் புகுந்தாள்; அதிலும் எல்லா அமீர்களுள்ளும் தலைசிறந்த பெரிய அமீரின் பெண்ணடிமையாயினாள். எனவே, ஸல்தனத்தைப் பற்றிய அமீர்களின் அபிப்பிராயத்தை அவள் பயில முடிந்தது. இப்போதோ, அவள் அரண்மனைக்குள்ளேயே, அதிலும் சுல்தானாவிடமே நெருங்கிப்பழக ஆரம்பித்தாள். எனவே, அந்தரங்க பகிரங்க செய்திகள் அனைத்தையும் அவள் செவ்வனம் புரிந்துகொண்டாள். இத்தகைய சந்தர்ப்பம் – அதிலும், எவருக்குமே கிடைக்கமுடியாத அரிய சந்தர்ப்பம் – வேறு எவருக்கே இத்துணை எளிதில் கிட்டும்? எனவே, ஷஜருத்துர் இப்போது மிகச்சிறந்த ஞானம் படைத்த மிகமிகப் பெரிய ராஜ தந்திரியாய் உயர்ந்துவிட்டாள்.
விஷயம் அவ்வளவுடன் நிற்கவில்லை. சுல்தானின் ஒரே மைந்தன் தூரான்ஷாவும்கூடத் தன் அன்னை மூனிஸ்ஸாவை விட ஷஜருத்துர்ரையே அதிகம் நத்தி நேசிக்கலாயினான். எனவே, சுல்தானின் அரண்மனைக்குள்ளேமட்டும் அவள் அதிகாரம் செலுத்தவில்லை; சுல்தானின் குடும்பகாரியத்தில்கூட அவளே ஆக்ஞை செலுத்தினாள். அவளுக்கிருந்த திறமையின் மேன்மையாலும், புத்திசாதுரியத்தின் வன்மையாலும், நுட்ப அறிவின் தீட்சண்யத்தாலும் அவள் சொல்லுகிற எந்த வார்த்தையையும் எவரும் எதிர்க்க முடிவதில்லை. அன்றியும் அவள் சமயத்தில் கூறிய நியாயவாதங்கள் சுல்தானின் மனத்தையே கவர்ந்துவிட்டன. நாட்கள் செல்லச்செல்ல, அவள் சுல்தானையே ஆட்டிப்படைக்கும் பெரிய சாகச சுல்தானாவாகச் செயலளவில் உயர்ந்தோங்கிவிட்டாள். இதனை இறை விதியின் விசித்திரமென்றாவது அழைத்துக் கொள்ளுங்கள்! அல்லது அவ்விதியின் விளையாட்டென்றாவது நினைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா தான் நாடியவர்களை மிகமிக உயர்ந்த பதவிக்கும் உயர்த்திவிடப் போதுமானவனாய் இருக்கிறானன்றோ? எனவே, அனாதையாகவும் பின்னர் அகதியாகவும், அப்பால் அடிமையாகவும் இழிந்து நின்ற ஷஜருத்துர்ரை அவன் இந்த அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டது அதிசயமில்லை. ஆனால், அவளுடைய செல்வாக்கைத் திறமையையும் சாதுரியத்தையும் கொண்டு பாதுகாத்துக்கொண்டதும், தினந் தினம் அதனை வளர்த்துக் கொண்டதும் ஆச்சரியப்படத்தக்கவையே. ஆண்டவனாகக் கொடுக்கிற கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியாமல் குட்டிச் சுவராக்கிக்கொள்கிற மனிதர்கள் நிரம்பிய இக்குவலயத்தில் இவ்வளவு பேராச்சரியகரமான பெருமைமிக்க சாமர்த்தியம் படைத்த ஒரு சாதாரணப் பெண்மணியை நாம் வியந்து பாராட்டாமல் இருக்க இயலுமோ?
நாளடைவில் அரண்மனையிலுள்ளோர் அனைவருமே ஷஜருத்துர்ருக்கு அடிபணிய நேர்ந்துவிட்டது. சுல்தானின் சலிகைக்கும் சுல்தானாவின் தயவுக்கும் இலக்கான ஷஜருத்துர் தன் செல்வாக்கைத் தவறான வழிகளில் எப்போதுமே பிரயோகிக்கவில்லை. அவள் அடைந்த வெற்றிக்கும் அதுவும் முக்கிய காரணமாகும். எதில் தலையிட்டால் வெற்றியும் அடையலாம், பெருமையும் பெறலாம் என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே அவள் தன் வாய்திறப்பாள். அவள் நடக்கும்போதெல்லாம் மற்றப் பெண்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவள் நாடுகிற எண்ணங்களை முகக்குறியைக் கொண்டே உணர்ந்துகொண்டு, அவள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். அவள் நினைக்கிற காரியங்களையெல்லாம் பெண்ணடிமைகள் நொடிப்பொழுதில் செய்து முடிப்பார்கள். எவருடைய அதிருப்திக்கு ஆளானாலும், ஷஜருத்துர்ரின் அதிருப்திக்கு மட்டும் ஆளாகவே கூடாதென்னும் உணர்ச்சி எல்லாரின் உள்ளத்துள்ளும் வெகுசீக்கிரமே வேரூன்றிவிட்டது. சுல்தானுடைய கோபத்துக்கு ஆளானால்கூட அவளுடைய தயவைக் கொண்டு தப்பிக்கொண்டு விடலாமென்றும், ஆனால் அவளுடைய மனஸ்தாபத்தைச் சம்பாதித்துக் கொண்டால், மீளுகிற மார்க்கமே இல்லையென்றும் எல்லாரும் நன்கு தெரிந்து கொண்டு விட்டார்கள்.
அவள் நாளடைவில் சர்வாதிகாரியாகவே மாறிப் போயினாள். ஆனால், அதிகாரத்தை அளவுமீறிப் பிரயோகிக்காமல் சர்வ ஜாக்கிரதையாய் இருந்துவந்தாள். எல்லாரையும் நேசித்தாள். அரசகுமாரன் தூரான்ஷாவை அதிகமும் பாசத்துடன் நடத்தினாள். அரச தம்பதிகளின் முழுத்திருப்திக்கும் ஆளானாள். தான் கற்ற கல்வியைக்கொண்டு அனைவரையும் அகமகிழச்செய்தாள். கான வித்தையின் சாமர்த்தியம் அனைத்தையும் அள்ளிப்பொழிந்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டாள். கவலையுற்றவர்கள் அவளிடம் சிறிது நேரம் அளவளாவித் தம் தொல்லைகளைத் தணித்துக்கொள்வர். வேதனையான சங்கடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் அவள் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடந்து துயர்தீர்வர். இசகுபிசகான தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டவர்கள் அவளுடைய மேலான அபிப்பிராயத்தைக் கேட்டு, விமோசனம் பெறுவர். தந்திரிகளுள் தந்திரியாகவும், மந்திரிகளுள் மந்திரியாகவும் அவள் வளர்ந்த கியாதியைக் கண்டு பொறாமை அடைந்தவர் மிகப்பலராவர்.
திருமணம் செய்துகொள்ளாமல் இன்னமும் கன்னிப் பெண்ணாயிருக்கும் அவளுடைய விசேஷமான குணசிரேஷ்டங்களை கேள்வியுற்று அநேக உயர்தர அதிகாரிகள் அவளை மணக்க விரும்பித் தூதுக்குமேல் தூதாக விடுத்துக்கொண்டிருந்தனர். காஹிராவின் மிகப்பெருந்த தனிகரிலிருந்து, அரசாங்கத்தில் மிக உயர்ந்த உத்தியோகம் பார்க்கிறவர்கள் வரை அவளை மணக்க விரும்பியவர் பலபேர். அவளுடைய கீர்த்தி எட்டிய வெளிநாடுகளிலிருந்துங்கூட அநேகர் அவளை வரிக்கப் போட்டியிட்டனர். ஆனால், அவள்மட்டும் திருமணம் புரிந்துகொள்ள முடியாதென்றோ கண்டிப்பாய்க் கூறிக்கொண்டிருந்தாள். அவளை அடைய விழைந்து ஏமாற்றமுற்றவர்கள், அவள் எவரையாவது விவாகம் செய்துகொண்ட பின்னரே தாங்கள் மணமுடித்துக் கொள்வதென்று வைராக்யம் பூண்டுவிட்டனர். அப்படியாவது அவளை அடையமுடியாதா என்ற மூடநம்பிக்கையே அவர்களுக்கு அந்த முரட்டு வைராக்யத்தை மூட்டி வந்தது.
மூனிஸ்ஸாவுங் கூடப் பலமுறை அவளை எப்படியாவது விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்துவிடுவதென்று பெரும் பெரும் பிரயத்தனம் செய்துபார்த்தார். ஆனால், ஷஜருத்துர் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆடவர் மீதிருந்த வெறுப்புக் காரணமாக அவள் மறுப்பதாகவும் தெரியவில்லை.
ஷஜருத்துர்ரின் எண்ணத்தைத் துருவி அறிவது எளிதான காரியமல்ல என்னும் அபிப்ராயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. வின்னியாசமான குணம்படைத்த அவளைக் கண்டு யாவரும் அதிசயித்தனர். விவாக சம்பந்தமான பேச்சை யாராவது எடுத்தாலே அவள் அதைச் சாமர்த்தியமாகத் தட்டி விடுவாள். இவ்விதமாக நாட்கள் பல கழிந்தன. ஷஜருத்துர்ரும் சற்றுமே கவலையின்றிப் பெருமையான வாழ்க்கையை மிக மகிழ்ச்சியோடு நடத்திவந்தாள்.
ஆனால், அந்தக் குதூகல அரண்மனையிலும் ஒரு பெருந்துக்க சம்பவம் திடீரென்று நிகழ்ந்துவிட்டது!
ஒருநாள் ஹம்மாமில் நறுநீர் ஸ்நாநம் செய்துவிட்டு வந்த சுல்தானா மூனிஸ்ஸா சிறிது தலை வலிக்கிறதென்று படுத்தார். சுல்தானின் மனைவிக்குத் தலைவலி என்றால், கேட்கவா வேண்டும்? உலகத்திலுள்ள சகல வைத்தியங்களும் தக்க ஹக்கீம்களால் உடனே புரியப்பட்டன. தலைவலி நிற்கவே இல்லை. அன்று மாலைக்குள் ஜுரமும் கண்டுவிட்டது.
இப்போது ஹக்கீம்கள் தலைவலிக்கும் ஜுரத்துக்கும் சேர்த்து மருந்து கொடுத்தார்கள். ஆனால், அவை நிற்பதற்கு மாறாக, ஜன்னி பிறந்துவிட்டது.
புலிக கொழுப்பிலிருந்து பாம்பின் எச்சம் வரையிலுள்ள எல்லா வகையான மெழுகுகளும் மூனிஸ்ஸாவின் உடலெல்லாம் பூசப்பட்டன. காலுக்கும் தலைக்கும் உஷ்ணமூட்டும் திரவங்கள் தடவப்பட்டன. ‘முரப்பா’க்கள், ‘முபர்ரா’க்கள், லேகியங்கள், ‘அரகு’கள் முதலிய என்னனெ்னவெல்லாமோ உள்ளுக்குச் செலுத்தப்பட்டன.
போகிற உயிருக்குப் பொன்னைக் கரைத்துக் கொடுத்தாலும், அது நிற்குமோ? நேற்றெல்லாம் நன்றாகப் பேசிச்சிரித்து ஓடியாடிக் கொண்டிருந்த மூனிஸ்ஸா, வியாதி வந்து இருபது மணி நேரத்தில் இன்று ஆண்டவன் திருவடி நீழலை அடைந்துவிட்ட வெறும் பிரேதமாகக் கைகால்கள் நன்கு நீட்டிவிடப்பட்ட வண்ணம் கிப்லாவின் பக்கல் கால்மாட்டை நீட்டிவைத்துக் காட்சியளித்தார்!
சமீபகாலத்தில் காஹிரா கண்டிராத அத்துணைப்பெரிய கடுந்துக்கம் அவ் வரண்மனையையும், அந் நகரையும், மிஸ்ர் தேசத்தையும் பற்றிக்கொண்டு விட்டது. உலகம் பொய்யன்றோ? மரணம் மட்டும் மெய்தானே!
<<அத்தியாயம் 20>> <<அத்தியாயம் 22>>