தமிழ் முஸ்லிம் பத்திரிகைகள்

by admin

ன்று முஸ்லிம்களுக்கென்று அநேக தமிழ்ப் பத்திரிகைகளிருக்கின்றன. இன்னும் புற்றீசல்போல் மூலைக்கு மூலையிலிருந்து புதுப்புதுப் பத்திரிகைகள் புதுப் புது நாமங்களுடன் புறப்பட்டுக்கொண்டே யிருக்கின்றன. இவைகளினால் முஸ்லிம் சமூகம் முன்னேற்றமடைந்து விட்டது என்று யாரும் கூறிவிட முடியாது.

முஸ்லிம் சமூகத்துக்கு உழைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் இரண்டொன்றே யிருக்கலாம். அதிகமான பத்திரிகைகள் ஆசிரியராவதற்கென்றே தோன்றித் தோன்றி மறைகின்றன.

முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டுமென்ற உண்மை உணர்ச்சியோடு எழுதி வெளியிடும் பத்திரிகைகள் தோன்றி மின்னல் வேகத்தில் மறைந்து விடுமென்று யாரும் கூற முன்வரமாட்டார். பத்திரிகாலயத்தில் “பியூன்” வேலை பார்த்த ஒருவர் கூட ஒரு பத்திரிகையை வெளியிட்டு வருவது எனக்குத் தெரியும். பத்திரிகை வியாபாரமும் செய்யும் சிலருங்கூடப் பத்திரிகை வெளியிட்டு வருவதையும் நானறிவேன்.

[பத்திரி காலயத்தில் சந்தா ஜாப்தா பதிந்து கொண்டிருந்தவர், ஒரு காலணாக் கார்டு கூடப் பிழையின்றி எழுதத் தெரியாதவ ரெல்லாம் “செந்தமிழ்ப்” பத்திரிகையை, “தமிழ் இலக்கிய” வெளியீடுகளைப் பதிப்பிக்க முந்வந்து விட்டார்கள். —பதிப்பாசிரியர்]

போதிய அறிவாற்றலோ, அருகதையோ இல்லாதவரெல்லாம் பத்திரிகை நடத்துவதென்றால், அவைகள் எப்படிப் பொதுமக்களிடம் செல்வாக்கடைய முடியும்? இப்படி நாம் கூறுவதைக் கொண்டு யாரையும் இழிவுபடுத்துவதாக நினைக்கவேண்டாம். பத்திரிகைகளின் ‘ரகம்’ குறைந்துபோகின்றதே என்பதற்காகவே இதைக் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தம்மை ஒரு ஆசிரியராக்கிக்கொள்ள ஒருவர் ஒரு பத்திரிகையைத் தோற்றுவித்து, அது பிறந்த சில தினங்களிலேயே மரிப்பதை விடப் பத்திரிகை நடத்த யோக்கியதை யுள்ள ஓர் அறிஞரைக் கொண்டு ஆர்வமுள்ளோர் பத்திரிகை நடத்துவதன் மூலம் அதிக சிறப்பை எய்தலாம். சேவை நோக்குடையவர், தாம் ஆசிரியராவதை மாத்திரம் பெரிதாகக் கருதமாட்டார்.

வேறு சிலர் பத்திரிகை நடத்தக்கூடிய ஆற்றல் தமக்கில்லா திருந்தும், கொஞ்சம் பொருளைப் பொதுஜனங்களிட மிருந்து ஈட்டிக்கொள்ள யாருடைய உதவியையேனும் கொண்டு இரண்டொரு வெளியீட்டைத் தோற்றி மறைத்துப் பணத்தை அபகரித்துக்கொள்கின்றனர். இத்தகைய காரணங்களினால் இன்று முஸ்லிம்களிடத்து முஸ்லிம் பத்திரிகைகளுக்குச் செல்வாக்கில்லை.

முஸ்லிம் பத்திரிகைகளுக்குச் செல்வாக்கு ஏற்படவேண்டுமானால், ஸ்தாபன ரீதியாக நடத்த வேண்டும். கண்ட கண்ட நபர் கையில் காசில்லாது கடன் வாங்கி இரண்டொரு இதழ்களை வெளியிட்டு விடுவதனால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்த விதமான நன்மையும் விளைந்துவிடாது.

இன்று வெளிவந்து கொண்டிருக்கும் பல பத்திரிகைகளினால் முஸ்லிம்களுக்கு நன்மையுண்டாகுமா வென்று கூற நான் தயாராயில்லை. பத்திரிகை அதன் பெயருக்கேற்பப் பத்திரிகையா யிருக்கவேண்டும் என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்.

கடந்த காலத்தில் “தாருல் இஸ்லாம்” ஒன்றினால் மாத்திரமே முஸ்லிம் சமூகம் நன்கு முன்னேறி யிருக்கிறதென்று என்னால் துணிந்து கூறமுடியும். அது தனது ஒவ்வொரு வாசகரையும் ஒவ்வோர் அறிஞராக்கியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், அஃது என்னை யோர் ஆசிரியனாக்கி யிருக்கிறது என்று கூறுவேன். இம்மாதிரியான பத்திரிகைகள்தாம் இக்காலத்து முஸ்லிம்களுக்குத் தேவை.

“இஸ்லாமிய தாரகை” நல்ல வனப்போடும், வசீகரத் தோற்றத்தோடும், சுத்த அச்சுப்பதிப்போடும், காலந் தவறாது குறித்த சமயத்திலும் வெளியிடும் முறையை யான் கற்றுக்கொண்டது “தாருல் இஸ்லாம்” மூலமே என்று கூறுவதில் எனக்கு லஜ்ஜையில்லை. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்பதற்கேற்ப எல்லாப் பத்திரிகைகளும் எம் பத்திரிகைபோல் சிறப்பாக வெளிவரவேண்டுமென்ற நல்லெண்ணமுடையவன் நான். அதற்காகவே அவைகளின் குற்றங் குறைகளைச் சகோதர முறையில் எடுத் தியம்புகிறேன். என் சகோதர முஸ்லிம் பத்திரிகைகளுக்கு நான் கொடுத்துவரும் ஆதரவு “தாரகை” வாசகர்கள் நன்கறிந்ததே. எனவே, யாரும் யான் இதுகாறும் கூறிய குறைகளைத் துவேஷ மனப்பான்மையுடன் கூறியதாகக் கருதமாட்டார்க ளென்று நான் திண்ணமாக எண்ண முடியும். நான் நம் முஸ்லிம் தமிழ்ப் பத்திரிகைகளின் மீது கூறிய குறைகளை அவைகள் எதிர்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டு மென்பதற்காகவே இத்தனையும் கூறினேன். வஸ்ஸலாம்.

இன்று வெளிவரும் தமிழ் முஸ்லிம் பத்திரிகைகள்

– கே. எம். முஹம்மத் ஸாலிஹ் “இஸ்லாமிய தாரகை” ஆசிரியர்


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 6, 7

Related Articles

Leave a Comment