33. காஹிராவின் தற்காப்பு

ருக்னுத்தீன் போர்க்களத்திலிருந்து தூதன் வாயிலாயனுப்பிய செய்தி கேட்ட பின்னர், ஸாலிஹ் அரசவை கூட்டினார். எல்லா மந்திரி பிரதானிகளும், இரு மம்லூக் தொகுதியின் முக்கியத் தலைவர்களும், உள்ளூர்ச் சேனாதிபதியும் அவரவர்

ஸ்தானத்தில் அமர்ந்திருந்தனர். யுத்தகாலத்தில் அரசவை கூட்டப்பட்டபடியால், அரண்மனையைச் சுற்றிக் காவல்கள் அதிவிசேஷமாயிருந்தன. அத்தாணி மண்டபத்துள்ளே எதிரியின் உளவர்கள் எவரும் வந்துவிடாதபடி எல்லாவித முன்னேற்பாடுகளும் பந்தோபஸ்துகளும் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் முடிகிற வரையில், சுல்தான் சபையைக் கலைத்துவிட்டு அந்தப்புரம் செல்கிறவரையில், எக்காரணத்தை முன்னிட்டும் எவரும் சபா மண்டபத்தை விட்டு வெளியேறக் கூடாதென்று கடுமையான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. என்றுமில்லாத வழக்கமாக இன்று அரியாசனத்துக்குப் பக்கத்தில் மற்றோர் ஆசனமும் போடப்பட்டிருந்தது. அவ்வப்போது ஷஜருத்துர்ரையும் கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே சுல்தான் தமது ஆசனத்துக்குப் பக்கத்தில் மற்றோர் ஆசனத்தைச் சித்தம் செய்யச் சொல்லியிருந்தார். ஷஜருத்துர் முன்பெல்லாம் பலமுறை அரியாசனத்தில் அமர்ந்தே ஆட்சி செலுத்தியிருக்கிறார் என்றாலும், கணவருடன் சேர்ந்து ஏக காலத்தில் அரசவையில் அமர்ந்தது அன்றுதான் முதற்றடவையாகும்.

சபையில் கூடியிருந்தோர் அனைவரின் உள்ளமும் துடித்துக்கொண்டிருந்தன. யுத்த காரியமான முக்கியச் செய்தியைக் கூறவே சுல்தான் இத்தனை தடபுடல்களையும் செய்தாரென்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். இஸ்லாத்தின் பரம வைரிகளாகிய நசாராக்கள் அடியோடு நிர்மூலமாக்கப் படுவதற்கான அதி முக்கிய நடவடிக்கையை யெடுப்பதற்கே இவ்வேற்பாடுகள் என்பது சொல்லாமலே விளங்கிற்று. அச்சபையில் கூடியிருந்தோருள் பலர் மலிக்குல் காமிலின் காலத்தில் நடந்த ஆறாவது சிலுவை யுத்தத்தில் கலந்துகொண்டவர்களாய் இருந்தபடியால், அவர்களுக்கு அச்சம் சற்று அதிகமாகவே இருந்தது. முன்பு ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகித் தண்ணீரில் மூழ்கி மாண்டுபோனவர்களுக்காகப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே அக் கிறிஸ்தவர்கள் இப்போது மறுமுறையும் தமீதாவில் வந்து புகுந்திருக்கிறார்களென்பதை உணர்ந்த அவர்களுக்கு, இனிக் காஹிராமீது அக்கிறிஸ்தவர்கள் பாய்ந்தால் எத்தகைய கயமையான அக்கிரம்த்தையும் புரியத் தயங்க மாட்டார்களே என்னும் அச்சமும் வாட்டிக்கொண்டிருந்தது.

சர்வமும் மெளனமாய்க் காட்சியளித்த அச் சபையிலே அரசரும் அவர்தம் பத்தினியும் நிதானமாக வந்து நுழைந்தார்கள். ஆசனத்தில் அமர்ந்திருந்தோரனைவரும் எழுந்து நின்றனர். சுல்தானும் ஷஜருத்துர்ரும் முறையே தத்தம் ஆசனங்களில் ஏறியமர்ந்த பின்னர்ச் சபையினர் உட்காந்தார்கள். சுல்தான் பேச ஆரம்பித்தார்:-

“பெரியோர்களே! மந்திரிகளே! பிரதானிகளே! நம்தலைக் கடையில் வந்திருக்கிற ஆபத்து எந்த நேரத்தில் என்ன உருவத்தைப் பெற்றுக்கொள்ளுமென்று சொல்வதற்கில்லை. தமீதாவில் நம் படையினர் கம்பீரமாகவே போர் புரிகிறார்களென்று சற்று முன்னர்ச் செய்தி வந்தது. ஆயினும், நீலநதிக்கரை எதிரிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்கள் எந்த நேரத்திலும் ஆற்றுள்ளே புகுந்து நேரே காஹிராவுக்கு வந்து விடக்கூடும். சென்ற முறையைப்போல் இந்த முறையும் அல்லாஹுத் தஆலா அற்புதத்தை விளைப்பானென்று எதிர் பார்ப்பதற்கில்லை. எதிரிகளின் தோல்வியும் வெற்றியும் அவன் நாட்டப்படியே தான் நடந்தேறு மென்றாலும், நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டாமா?

“என் தந்தை என்னைச் சென்ற முறை அந்தக் கிறிஸ்தவர்களிடம் ஈடாக விட்டு வைத்திருந்தபோது, நான் அவர்களுடைய எல்லாப் பழக்க வழக்கங்களையும் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறேன். சென்ற முறை அவர்கள் எப்படி நீல நதி வழியே தமீதாவிலிருந்து காஹிரா நோக்கி விரைந்து சென்றார்களென்பதை நானே கண்டிருக்கிறேனாதலால், இப்போதும் அதே முறையைப் பின்பற்றியே இங்குப் பாய்ந்து வருவார்கள் என்பதை நன்கறிவேன். அம்மிருக குணம் படைத்தவர்களை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, தமீதா யுத்தத்தில் நம் படைகள் வெற்றியை நிலைநாட்டினாலும், தோல்வியடையும் நசாராக்கள் கடைசிவரையில் ஒரு கை பார்க்கலாமென்று இப்பக்கம்தான் ஓடிவருவார்களே யொழிய, ஐரோப்பாவுக்குத் திரும்பிவிட மாட்டார்கள். எனவே, நாம் இங்கே முதலில் செய்யவேண்டிய ஏற்பாடெல்லாம், நதி மார்க்கமாக வருகிற எதிரிகளைக் கரையில் இறங்காமல் எப்படி எதிர்த்துத் தடுப்பது என்பதேயாகும். இதில் உங்களுடைய ஆலோசனை என்னவோ?”

எல்லாரும் யோசித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்குப்பட்ட சிறந்த வழியைச் சொன்னார். சில ஆலோசனைகள் செயல் நடத்த முடியாதனவாயிருந்தன. பிரதம மந்திரி வேறு மாற்று யோசனையொன்று கூறினார்: அஃதாவது, எல்லாக் காஹிராவாசிகளும் போர் வீரர்களும் நீலநதி தீரத்திலே அணியணியாய் நிற்பதென்றும், இறுதி வெற்றி தோல்வியை அங்கேயே நிர்ணயிப்பது நன்றென்றும் அவர் எடுத்துக் காட்டினார்.

சுல்தான் உட்பட எல்லார்க்கும் இந்த யோசனை பிடித்தமாயிருந்தது. ஆனால், ஷஜருத்துர்ரின் முகத்தை அவர் திரும்பிப் பார்த்தார். அதில் அதிருப்தியே குடிகொண்டிருந்தது.

“ஷஜர்! நீ என்ன யோசிக்கிறாய்?” என்று அவர் கேட்டார்.

“சென்ற முறை கிறிஸ்தவர்கள் இந் நகர் மீது வந்துபோது அமீர் தாவூத் என்னென்ன ஏற்பாடுகளையெடுத்தார் என்பதை என்னிடம் விளக்கிச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் என்ன குறிப்பிட்டாரென்றால், எதிரிகள் நீலநதியின் ஆதிக்கத்தைத் தங் கைவயம் வைத்துக்கொண்டிருக்கும்போது, இங்கே உள்ளூருக்குள் யுத்த தளவாடங்களும், உணவுப் பண்டங்களும் எப்படி வரும், போகும்? என்பதேயாம். நீல நதியின் கீழ் கரையிலுள்ள காஹிராவில் வதியும் நமக்கு மேற்கே ஆறு தாண்டி ஸஹராதான் இருக்கிறது. வடக்கேயோ, எதிரிகள் நீலநதி முகத்துவாரத்தில் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தெற்கேயிருந்து கொண்டுவருவதற்கு ஒன்றுமில்லை. எனவே, கிழக்குத் திசையையே நாம் நம்பிக்கொண்டும், மத்திய ஆசிய, அரபு நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கான நல் வழியை ஏற்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டும். இந்தக் கிழக்குத் திக்கிலும் எதிரிகளைத் தடுத்துப் போர் முனையை ஏற்படுத்திக் கொள்வோமானால், அஃதெப்படி விவேகமாகும்? நாம் எதிர் பார்க்கிறபடி எதிரிகள் சீக்கிரம் முறியடிக்கப்படாவிட்டால், நம் கதி என்னாவது? அவர்கள் நம்மிடமும் போராடிக்கொண்டு, தரைமார்க்கமாக ஷாம் நோக்கியும் முன்னேறினால்? பிரதம மந்திரியார் கூறுகிற உபதேசத்தை நாம் ஏற்றால், அது நம்மையே தற்கொலை செய்துகொள்வதாகவும், அரபு நாடுகளின் கதவை எதிரிகளுக்கு அகலமாய்த் திறந்து வைத்ததாகவு மல்லவோ போய் முடியும்?”

“அப்படியானால் வேறு சிறந்த மார்க்கம் என்ன இருக்கிறது?”

“ஷாமுடனே தொடர்பு வைத்துக் கொள்கிற தரை மார்க்கத்தையும் நாம் தக்க பாதுகாப்புடனே தற்காத்துக் கொண்டு, காஹிராவின் பாதிப் படையினரை நீல நதியின் அக்கரையிலே கெஜேயின் வழிநெடுக நெடுந்தூரம் நிறுத்த வேண்டும். அது மட்டும் போதாதாகையால், ஷாம் சிற்றரசரை உடனே பெரும் படையை நமக்குத் துணையாக அனுப்பச் சொல்ல வேண்டும். இதனால் நமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களும் ஏனைச் சரக்குகளும் தங்கு தடையின்றிக் காஹிராவுக்கு வந்துபோக மார்க்கம் ஏற்பட்டு விடும். எதிரிகள் நீல நதி வழியே இந் நகர் மீது பாயும்போது, அக்கரையில் (மேற்கிலே) நிற்கிற துணைப் படைகளும் நம்முடைய பாதிச் சைனியமும் அவர்களைப் பின்புறமாகப் பாய்ந்து தாக்க வேண்டும். அப்படியின்றி, வருகிற எதிரிகள் அக்கரையிலிருப்பவர்களைத் தாக்க ஆரம்பித்தால், இங்கிருக்கும் கிழக்குப் படைகள் ஈண்டிருந்து பாய்ந்து விழவேண்டும். அப்போதுதான், பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்குத் துண்டு போல எதிரிகள் சின்னா பின்னமாகச் சிதறடிக்கப்பட்டுப் போவார்கள். இதனால் நமக்கும் சங்கடமிராது; தற்காப்பும் ஒரே இடத்தில் இல்லாமல் நதியின் இரு மருங்கிலும் சமமாகப் பிரிந்திருந்து நல்ல வசதியூட்டும்.”

ஒரு பெண்பிள்ளை, அதிலும் போர்க்களத்தைக் கண்ணால் கூடக் காணாத பேதை இவ்வளவு சிறந்த யோசனையை வழங்கியது கேட்டு, அரசவையிலிருந்த சுல்தான் உட்பட யாவரும் வாய் புதைந்து போயினர். பிறகு ஒரு சிறிது தர்க்கம் நடந்தது. இறுதியில் ஷஜருத்துர் கூறிய அழகான யோசனை யாதொரு மாற்றமுமின்றி அப்படியே அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.

ஷஜருத்துர் யுத்த தந்திர ஆலோசனை கூறுவதில் முதலாவதாகப் பெற்ற வெற்றி இது.

அப்பால் இரண்டாவது விஷயம் விவாதிக்கப்பட்டது; இருகரையிலும் முஸ்லிம் படைகள் எதிரிகளைத் தாக்கும்போது, நதியின் மத்தியிலுள்ள தீவில் வசிக்கும் பஹ்ரீ மம்லூக்குகள் என்னென்ன தந்திரங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்னும் விவரம் விஸ்தாரமாக ஆராயப்பட்டது. இந்த விஷயத்திலும் ஷஜருத்துர்ரின் மணியான யோசனைகள் அங்கீகரிக்கப்பட்டன.

மூன்றாவதாக, புர்ஜீ மம்லூக்குகளின் கடமைகள் இன்ன இன்னவையென்று வரையறுக்கப்பட்டன. எல்லா முக்கிய மம்லூக்குகளுக்குமே அமீருக்குரிய யுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மம்லூக்குத் தொகுதிக்கும் ஒவ்வொரு தலைவர் நியமிக்கப்பட்டார். வரப்போகிற யுத்தத்தில் எந்த எந்தத் தலைவர் தமது சாமர்த்தியத்தை அதிகமாகக் காட்டுகின்றாரோ, அந்த அந்தத் தலைவரும் நிரந்தர அமீரின் ஸ்தானத்தைப் பெறும் சலிகை வழங்கப் பெறுவரென்னும் வாக்குறுதியும் அளிக்கப் பெற்றனர். அழிக்கப்பட்ட அமீர்களின் அந்தஸ்து தங்களுக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை ஊட்டப்பட்டவுடனே மம்லூக்குகள் பெற்ற மகிழ்ச்சியைக் கேட்கவா வேண்டும்? அமீர்கள் இல்லாமல் யுத்த அரங்கின் ஏற்பாடுகள் சரிவரக் கட்டுக்கடங்கா வென்பதை விளக்கி, சுல்தான் பாரபக்ஷமாக முன்னம் அமீர்களுக்கு வழங்கிய அநீதியைச் செப்பனிடும் இந்தச் சந்தர்ப்பத்தை ஷஜருத்துர் இப்போது நன்கு பயன்படுத்திக் கொண்டார். எப்படியாவது யுத்த நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே என்னும் ஆவலால் சுல்தான் அந்த ஆலோசனைக்கு அங்கீகாரமளித்துவிட்டார். ஷஜருத்துர்ரும் தம்மை வளர்த்த அமீர் இனத்துக்குச் சாதித்த நன்றியறிதல் இதுவாகும்.

நான்காவதாக, யுத்த காலத்தில் மிஸ்ர் பூராவுக்கும் உணவு முதலிய அத்தியாவசியப் பண்டங்களை எல்லா இடங்களுக்கும் சமமாக அனுப்பி வைக்கும் முறைகள் தீர்மானிக்கப்பட்டன. ஸல்தனத்திலுள்ள சகல சமய மக்களுக்கும் சற்றும் பாரப­க்ஷமின்றி அத்தியாவசியப் பொருள்கள் எப்போதும் கிடைக்கும்வண்ணம் அரசாங்கம் கவனிக்க வேண்டிய முறைகளனைத்தையும் பிரதம வஜீர் எடுத்துரைத்தார். ஷஜருத்துர்ரும் அவற்றை ஆமோதிக்கவே, அச் சட்ட திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

அடுத்தபடியாக, மிகப் பொல்லாத மூர்க்க குணமுள்ளவர்களையும், ஸல்தனத்தின் ஷேமத்துக்குக் குந்தகம் விளைக்கக் கூடிய வகையில் புரட்சி செய்தவர்களையும் நீக்கி, சிறைச்சாலையிலிருந்த ஏனை எல்லாக் கைதிகளையுமே உடனே விடுதலை செய்ய வேண்டுமென்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அக் கைதிகளையும் யுத்தத் தற்காப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; காலியான சிறைக்கூடமும் புதிதாகப் பிடிபடுகிற போர்க்கைதிகளை அடைத்துப்போட உதவும்.

ஆறாவதாக, யுத்த தளவாடங்கள் வி­ஷயம் ஆலோசிக்கப் பட்டது. சுல்தான் ஷாமிலிருந்து திருப்பிக் கொண்டுவந்த ஆயுதங்கள் மழுங்கி மாசடைந்திருந்தன. குதிரைகளோ, களைத்துப்போயிருந்தன. எனவே, இந்த நிமிஷ முதலே புது ஆயுதங்களைச் சித்தஞ் செய்யவும், புரவிகளைத் தேற்றிவிடவும் எல்லாவித ஏற்பாடுகளும் எடுத்தாக வேண்டுமென்னும் அவசர ஆணை அக்கணமே பிறப்பிக்கப்பட்டது.

இறுதியாக, எதிர்த்து வருகிற விரோதிகளை நேர்மையான முறையில் போர்க்களத்தில் இஸ்லாமிய தர்மயுத்த நியதிப்படி வீழ்த்த வேண்டுமேயன்றி, அந்தக் கிறிஸ்தவர்களைப் போல் வரம்பு கடந்து அநியாய அக்கிரமங்கள் புரியக்கூடாதென்றும், சரணடைந்தவர்களையும் கைதியாகச் சிக்கியவர்களையும் இஸ்லாமிய முறைப்படி நடத்த வேண்டுமென்றும், போர்புரியச் செல்லும் அத்தனை முஸ்லிம் வீரர்களுக்கும் அபூபக்ர் சித்தீக்கின் (ரலி) அறிவு புகட்டப்படல் அவசியமென்றும் ­ஜருத்துர் கூறிய யோசனை முழுமனத்துடன் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

இம்மாதிரியான போர்த் தற்காப்பு முறைகள் பற்றிய முக்கிய விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு, அன்றைய அரசவை அவ்வாறு முடிவுற்றது. பிறகு சுல்தான் எழுந்து நின்றார். “ஏ, என்னருமை நண்பர்காள்! ஆண்டவன் இப்போது மூமினீன்களின் வீரத்தையும் இவர்களின் தற்காப்புத் திறனையும் உலகுக்கு அறிவிக்கவே இச் சோதனையை இறக்கியிருக்கிறான். நாமாக வீணே வலுச்சண்டைக்குக் கிளம்பவில்லை. ஆனால், சக்தியத்தை எதிர்த்து அக்கிரமம் புரியவருகிற அயோக்கியர்களினின்று நம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஜிஹாதுக்கான இத் திட்டமெல்லாம் இன்று வகுத்தோம். இஸ்லாம் தோன்றிய நாட்களாக நம்மையெல்லாம் எதிரிகளின் அக்கிரமத்தினின்று காத்து ர­க்ஷித்த அல்லாஹுத் தஆலா இப்போதும் நிச்சயமாகக் காத்து அருள் புரியப் போதுமானவனாய் இருக்கிறான்.

“நம் முஸ்லிம்களை உன்னத ஜயசீலர்களாக்குவதற்காகவே இஸ்லாம் மதத்தை இத் தரணியில் இறக்கியிருப்பதாக அவன் தன் திருமறையில் துலக்கமாக விளக்கியிருக்கின்றான். அத்தகைய பெரிய வெற்றியைப் பெற்றுக் கொள்ள அருகதையுள்ளவர்களாக நாம் இருக்கவேண்டுமேயானால், அவன் கட்டளையிடுகிற வண்ணமெல்லாம் செய்யச் சொல்லியிருக்கிறான். அவனிட்ட கட்டளையை நாம் நிறைவேற்றாமல், நாம் எடுக்கவேண்டிய முயற்சியை எடுக்காமல், அவன் கொடுத்த வாக்கை மட்டும் நிறைவேற்ற வேண்டுமென்று நீங்கள் வாதுபுரிவீர்களேல், அது ஷைத்தானின் செயலாகவும், யூதர்களின் வாதமாகவுமே போய் முடியும்.

“இன்று வரை நாம் ஆண்டவன் ஏவியபடியே நடந்து வந்திருக்கிறோம். எனவே, இதுவரை அவனும் தன் வாக்குறுதியைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றி வந்திருக்கிறான். இனியும், எதிர் காலத்தில் தோன்றுகிற நம் சந்ததியார்கள் இதேபோன்று நடந்து, ஆண்டவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்களாக!

“ஏ முஸ்லிம்காள்! துயருறாதீர்கள்;அதைரிய மடையாதீர்கள். எலிகள் பல கூடிவரினும், புலிகள் சில அஞ்சுமோ? உங்கள் கையில் ஆயுதமிருக்கிறது; உடலில் உண்மை முஸ்லிமின் உதிரம் ஓடுகிறது; உறுப்பெலாம் வீரமென்னும் சக்தி மிதமிஞ்சிப் பாய்கிறது. இனியும் தளர்வுறுவானேன்? அசத்தியம் சக்தியத்தை வெல்லுமோ? பிர் அவ்னின் செருக்கழிந்த இம் மிஸ்ரிலே போப்புக்களின் ஆதிக்கம் நிலைக்குமோ? இஸ்லாமிய இருப்புத் தூணில் கிறிஸ்தவக் கறையான் ஏறுமோ? ஈமானென்னும் நெருப்பிலே குபுரென்னும் ஈ மொய்க்குமோ? சாந்திமயமான நம் துல்லிய மார்க்கத்தை இந்தக் காட்டு மிருகாண்டிகளால் ஓழிக்கத்தான் முடியுமோ?

“விட்டொழியுங்கள் வீண் கவலையை! மார் தட்டி நில்லுங்கள்! அன்று குறைஷிகளின் கண்ணிலே மண்ணைத் தெள்ளிய ரஹ்மான், ரோமர்களின் கொட்டத்திலே சம்மட்டியடி கொடுத்த ரஹீம், இத்தனை சிலுவை யுத்தங்களிலே மூர்க்கர்களின் மூக்கறுபடச் செய்த நீதிமான், சமீபத்தில் என் தந்தையின் காலத்திலே கடு வெள்ளத்தைத் தந்து நம்மைக் காத்து ரக்ஷித்த தயாபரன் இன்றும் என்றும் இருக்க, நமக்கேன் வீண்திகில்? நிமிர்ந்து நில்லுங்கள்! விரைந்து செல்லுங்கள்! உலைக்களத்தினுள்ளே வலியத் தலைகளைத் திணிக்க வரும் வீணர்களை வா வா வென்று அறைகூவி அழையுங்கள்!

“இத்தனை நாட்காளக உறைந்து கிடக்கும் உங்கள் வீராவேசத்தை இளகச் செய்யுங்கள்! ஆண்டவனை நம்புங்கள்! அவன்மேல் பாரத்தைப் போடுங்கள்! எதிரிகளின் பேடி வீறாப்பிலே பாறாங்கல்லைத் தூக்கியடியுங்கள்! உங்களுடைய உடலிலே இறுதித் துளி ரத்தம் ஓடுகிற வரையில் பின்னிடையாதீர்கள்! வெற்றி நமதே! வெற்றி நமதே! அல்லாஹு அக்பர்!” என்று அவர் சபா மண்டபம் எதிரொலி கக்கக் கக்க வீராவேசத்துடன் பேசி முடித்தார்.

சபையினரும் தம்மையறியாமலே “அல்லாஹு அக்பர்!” என்னும் வீர கர்ஜனையை ஒலித்து “ஜிஹாத்” என்னும் நியாயப் போராட்டத்துக்கு விரையலாயினார்கள்.

ஆனால், அப் பேரொலியின் எதிரொலி இன்னம் ரீங்காரம் செய்துகொண்டிருக்கையில், தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்த சுல்தானும் சுல்தானாவும், எதிரே ஓடோடி வந்து மூச்சு முட்டிக் கொண்டு நின்ற தூதனொருவனைக் கண்டு அதிசயித்துப் போயினார்கள்.

“தமீதாவிலே நமக்கு வெற்றி ஏற்பட்டுவிட்டது! எனினும், நசாராக்கள் வெகு விரைவாகக் காஹிரா நோக்கியே வேகமாய் வருகிறார்கள். மிஸ்ரைக் காப்பாற்றுங்கள்! மிஸ்ரைக் காப்பாற்றுங்கள்! மிஸ்ரைக் காப்பாற்றுங்கள்!” என்று அத் தூதன் கத்தினான்.

இது கேட்டு, அரசவையிலிருந்த அத்தனை பேரும் இடியோசை கேட்ட நாகம் போலே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 32>> <<அத்தியாயம் 34>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment