Sahara Desert

கண்ணுக்கெட்டிய தொடுவானம் வரை ஒரே மணற்காடு. முதுவேனிற் காலத்துக் கொடிய சூரிய வெப்பம் அந்த மணற் பருக்கைகளை வறுத்துக் கொண்டிருந்தது.

சூரியோதய முதல் மாலை நான்கு மணிவரை வெப்பத்தின் கொதிப்பினால் நெருப்பாகிவிட்ட அம்மணல், காய்ந்து தீய்ந்து கிடக்கும் சிறு முட்புதர்களையும் சருகுகளையும் தீப்பற்றியெரியச் செய்தது. கருத்துக்கெட்டிய தொலைவு மட்டில் எந்த ஒரு செடிகொடியோ மரமோ எதுவுமே தென்படவில்லை. நாற்றிசையிலும் பன்னூறு மைல்கள் சுற்று வட்டாரத்துக்குள் சொட்டுத் தண்ணீரும் கிட்டாதென்றாலும், பெருவெள்ளக் காட்டாற்றுத் தோற்றத்தைக் கற்பனையாக உருமாற்றிக் காட்டும் கானல் நீர்க் காட்சி பார்ப்போருள்ளத்தில் பரவசமூட்டுவதாயிருந்தது.

வெம்மை மிக்க கடும் வெயிலின் உக்கிரம் ஒருபுறமிருக்க, எப்போதாவது ஒருமுறை பலமாக வீசுகிற காற்றானது, அக்கொடுஞ்சுரப் பாலையின் மூலை முடுக்குக்களிலிருந்த ஜுவாலையையெல்லாம் ஒருங்கு திரட்டிக் கொணர்ந்து, காளவாயின் உஷ்ணத்தைப் போன்று பதின்மடங்கு அதிகமாகக் கக்கி வந்தது. சுருங்கச் சொல்லின், அம் மணல்மீது பச்சை இறைச்சித் துண்டைப் போட்டால், அது சில நிமிடங்களில் நைய வெந்துவிடும்போல் காணப்பட்டது. மணல்மேடுகளிலிருந்து மேல்நோக்கிக் கிளம்பும் ஆவியானது, பார்ப்பவர் நேத்திரங்களைக் கூசிடச் செய்தது. நரகத்துக்கே நிகரான அப் பாலைவனக் காட்டிலே ஒரு பிராணியேனும் ஊர்ந்து செல்வதாகத் தோன்றவில்லை. எங்கும் ஒரே சூனியம்! எல்லாம் ஒரே கானல் நீர்!

அச்சமும் திடுக்கமும் ஊட்டிடும் அந்தப் பயங்கர வெளியிலே சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியதும், ஜன சஞ்சாரமே இல்லாதிருந்த அந்தச் சூனியத்தை விலக்கியவாறு, ஒரு நடுத்தர உயரமுள்ள கழுதையின்மீது ஆரோகணித்தவண்ணம் ஒரு மனிதன் பிரயாணம் செய்துவருவது தோற்றமாயிற்று. அவ்வனாந்தரத்தில் வீசும் நெருப்புக் காற்று மூக்குத் துளைகளைப் பொசுக்கிவிடாமல் தடுக்கும் பொருட்டு அவன் மோவாய்க்கட்டை, வாய், நாசி ஆகிய உறுப்புக்களை ஒரு வெண் துகிலால் சுற்றிக்கொண்டிருந்தான் அந்தத் துகிலை நீக்கிக்கொண்டு எட்டிப்பார்த்துத் தவழ்ந்த கறுத்த தாடிரோமமும், அவன் வீற்றிருந்த மாதிரியும், கழுதையை ஓட்டிய குரலும் அவனை ஒரு நடுத்தரவயதுள்ள பெரிய மனிதனென்றே காட்டின.

அவனுக்குப் பின்னால் கழுதையின் முதுகில் ஒருபுறம் தண்ணீர்த்துருத்தியும் மற்றொருபுறம் சிறு மூட்டையும் தொங்கிக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்புறத்தில், கழுதையின் பிடரிக்கருகில் ஒரு சிறு குழந்தை சோர்ந்து வாடிப்போய் மெய்ம்மறந்து வீற்றிருந்தது. அக்குழந்தையின் தெளிவான முகமும், களைசொட்டும் கண்களும், கூரிய மூக்கும், கொவ்வை வாயும், ரோஜாக் கன்னங்களும், கவின்மிக்க செவிகளும், பரந்த நெற்றியும், வில்லினும் வளைந்த புருவங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசப்படுத்தி மயக்கிவிடத்தக்க பேரெழிலுடன் பொலிந்து திகழ்ந்தன.

வெயிலின் சுடுவெப்பத்தாலும், சுடுகாற்றின் குரூரத்தாலும் அக்குழந்தை வாடி வதங்கிப்போயிருந்தும் அதன் பார்வை ஒளி வீசிக்கொண்டும் குறுகுறுப்பாகவும் மின்னிற்று. கனியிதழ்கள் காய்ந்து வறண்டிருந்தும், அதில் மிருதுவான குறுநகை தவழ்ந்துகொண்டுதானிருந்தது. தலைரோமம் வறண்டு போயும், சுருண்டு சிக்கியும் பொலிவிழந்து தோன்றிடினும், அது வழிந்து நெற்றியில் தாண்டவம் புரிந்தது பரவசத்தையே ஊட்டிற்று. நாசித் துளைகள் வேனலின் வெக்கையைச் சுவாசிக்க முடியாமல் துடிதுடித்துக்கொண்டிருந்த காட்சி பரிதாபகரமாயிருந்தும், அதுவே அழகுக்கு அழகு செய்தது. அந்தக் குழந்தைக்குச் சுமார் ஏழு வயதிருக்கலாம். அதன் எடுப்பும் வனப்பும் ஒய்யாரமும், அது துருக்கி நாட்டில் பிறந்த சிறுமியேதான் என்பதைக் கண்ணுக்கு மெய்யாய் நிரூபித்தன.

கதிரவனும் தனது அன்றைய வேலையின் களைப்பைப் போக்கிக்கொள்வதற்காக மிகவிரைவில் மேற்குவானத்தின் அடிமட்டத்தை நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தான். அவ்வனாந்தரத்திலிருந்த ஒரே பிராணியாகிய அந் நீள்செவியனும் தனது சுமையுடன் வேமாகவே நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது அக்கழுதை மீதிருந்தவன் குழந்தையின் நெற்றியைத் தடவிக்கொடுத்து, அதன் கன்னத்தின் மீது மெல்ல முத்தமீந்து, தாழ்வாய்க்கட்டையை இலேசாய் நிமிர்த்துப் பிடித்து, “மகளே! இன்னம் இரண்டேநாள் பயணந்தான் இருக்கிறது; சோர்வடையாதே! இந்தா, தண்ணீர் கொஞ்சம் பருகிக்கொள்!” என்று கூறி, குவளையொன்றில் கொஞ்சம் நீரை வார்த்துக் கொடுத்தான்.

அதை அச் சிறுமி ஆவலுடன் குடித்துவிட்டு, ”என்ன, இன்னம் இரண்டுநாள் தூரமா? அடேயப்பா!… அபூ, ஊஹும்! என்னால் சகிக்க முடியாது. நீங்கள் தினம் தினமும் இப்படியே சொல்லி ஏமாற்றுகிறீர்கள்,” என்று சண்டித்தனத்துடன் சொல்லியவாறே, இதழ்களைக் குவித்து, முகத்தைச் சுளித்து, பார்வையைத் தாழ்த்திவிட்டாள்.

“என் கண்ணே! நிஜமாகவே சொல்லுகிறேன். நாளை மாலை இந்த நேரத்துக்கெல்லாம நாம் நாடிப்போகிற நாட்டின் எல்லை தெரிந்துவிடும். என்ன செய்யலாம்! வந்தது வந்துவிட்டோம்; இன்னும் இரண்டு நாளைக்குப் பொறுத்துக்கொள். நம் கழுதையும் மிகவும் களைத்துப்போயிருக்கிறது. இதை இனியும் அடித்து விரட்டுவோமானால், பாவம், செத்துப் போகும்! பிறகு நாம் இந்தக் கொதிக்கிற மணலில் எப்படி நிற்கவோ, நடக்கவோ முடியும்?”

“அபூ! இந்த ஜீவனை அடிப்பதா? சே, சே!பாவம்! இது நம்மை இந்த ஒரு மாதமாக அன்புடன் ஏற்றிக்கொண்டு வந்திருக்க, இதை இம்ஸிப்பதா? நான் அதைச் சொல்லவில்லை, அபூ! நிஜமாகச் சொல்லுங்கள், நாம் எங்கே போகிறோம்?”

“அதைத்தான் பல தடவை சொல்லியிருக்கிறேனே! நாம் நிஜமாக அந்தக் காஹிரா என்னும் பட்டணத்தை நோக்கித்தான் போகிறோம்.”

“அந்தப் பட்டணம் எங்கே இருக்கிறது?”

“அது மிஸ்ர் தேசத்தில் இருக்கிறது. அதைத்தான் எகிப்துதேசம் என்றும் சொல்வார்கள்.”

”அந்த மிஸ்ர்தேசம் எங்கே இருக்கிறது?”

“நாம் போகிறோமே, இதே மேற்குத் திசையில்தான் இருக்கிறது.”

“போங்கள், அபூ! கழுதை எந்தத் திசையில் போகிறதோ, அதே திசையில்தான் நாம் போகிற ஊரும் இருக்கிறதென்பதுகூடவா எனக்குத் தெரியாது? நான் அதைக் கேட்கவில்லையே?”

“பின்னே நீ எதைக் கேட்கிறாய்?”

“நாம் இப்போது இருக்கிற இந்தப் பாழாய்ப்போன இடுகாட்டுப் பாலைவனத்துக்கு என்ன பெயர்? இந்த இடமும் மிஸ்ர் தேசத்து எல்லையும் சந்திக்கின்றனவா? அல்லது இந்த வனாந்தரத்தைத் தாண்டி………….”

“கண்மணி! நீ கவலைப்படுவது போல் இந்த வனாந்தரத்தைத் தாண்டி அப்புறம் பல ஊர்களில் நுழைந்து பயணம் செல்லவேண்டியதில்லை. ஆனால், இது எங்கே போய் முடிகிறதோ, அங்கேயே நாம் நாடிப்போகும் பட்டணமும் வந்து முட்டிக்கொள்ளும்.”

“அப்படியானால், இந்தப் பாலைவனத்துக்கு என்ன பெயர், அபூ?”

“ஸினாய் என்று அழைப்பார்கள். பண்டைக்கால எகிப்து தேச நாகரிகத்துக்கு வேண்டிய பற்பல பண்டஙகளும் இந்த வனாந்தரத்தைத் தாண்டித்தான் போய்ச் சேர்ந்தன.”

“அது பாழாய்ப்போன பட்டணமா, என்ன? பாலைவனத்தை ஒட்டியிருக்கிற ஊர் எப்படிச் செழிப்பாயிருக்க முடியும்?”

“இல்லை, இல்லை, அந்தப் பட்டணம் பெரிய கடல் போன்ற நதிக்கரையில் இருக்கிறது. உலகத்திலேயே அந்த நதிதான் மிகப் பெரியது!”

“கடல் போன்ற நதியா? அதற்குப் பெயர்?”

“அதுதான் நீலநதி.”

அவள் மௌனமாயிருந்தாள். கண்களை மூடிக்கொண்டு, மானஸமாக அந்த நதி எப்படியிருக்குமென்று சிந்தித்தாள்.

அஸ்தமனத்துக்குப்பின் காரிருள் வந்து எங்கும் கம்மிக் கொண்டது. களங்கமில்லாத அவ்வனாந்தர சுத்த ஆகாயத்தில் அத்தனை நட்சத்திரங்களும் முத்து விரித்தாற்போலே காட்சிளித்துக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. காய்ந்து போன சில பேரீச்சங் காய்களையும், வறந்துலர்ந்துபோன ரொட்டித் துண்டுகளையும் தந்தையும் மகளும் மென்று தின்றுகொண்டே போனார்கள். கழுதையும் சளைக்காமல் மெல்ல நடந்துகொண்டேயிருந்தது.

ஊ(ஞ்)சலாடுவதுபோல் இருந்தபடியால், அக்குழந்தையும் தன்னையறியாமலே கண்ணயர்ந்து, தந்தையின் மடிமீது சாய்ந்து தூங்கிவிட்டாள். அவனும் பெருமூச்சு விட்டுக் கொண்டே, “ஏ ஆண்டவனே! உன் சோதனையெல்லாம் போதாதா?” என்று முணுமுணுத்துக்கொண்டான். கடைசியாக அந்த ஊர்தியும் அயர்ச்சியுற்று ஓரிடத்தில் நின்றது. அங்கே சில சிறிய பேரீச்சமரங்களும் காணப்பட்டன. சந்திரனும் அதுபோதுதான் கீழ்வானத்திலிருந்து வெளிக் கிளம்பிக்கொண்டிருந்தது. அடித்தரையின் உஷ்ணமும் தணிந்துகொண்டே வந்தது.

அவன் தன் மகளை மெல்லத் தூக்கித் தோள்மீது சார்த்திக்கொண்டு மெதுவாக இறங்கினான். தன் மேலே போட்டுக்கொண்டிருந்த துணியைக் கீழே விரித்து, வாகனத்தின் ஒரு பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த மூட்டையை இறக்கிப் போட்டு, அவளை நிதானமாகப் படுக்க வைத்தான். பின்பு கழுதைக்குத் தண்ணீர் காட்டிவிட்டு, தோல் துருத்தியில் நீரை நிரப்பியபின், கைகால்களைக் கழுவி கொண்டான். நீர் பருகிய பின்னர் அந்தப் பிராணி பேரீச்சமரத்தடியில் கிடந்த காய்ந்த ஓலைகளையும் ஒரு சிறிது புதிய புல்களையும் மேயச் சென்றது. அவனும் தன் மகள் பக்கத்தில் முடக்கிக்கொண்டு படுத்துவிட்டான்; சற்று நேரத்தில் மெய்மறந்து உறங்கிவிட்டான்.

சந்திரனின் தேய்ந்த கலைகளின் வெளிறிய ஒளி அப்பாலைவனச் சோலையை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. பூமி குளிர்ந்துபோய்ச் சீதளக்காற்று வீசியது. தந்தையும் மகளும் அந்தத் திறந்த வெளியில் வெகு சொகுசாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். பொழுது விடிவதற்குச் சற்று நேரமே இருந்தது. அதுபோது தூரத்தில் இரு குதிரை வீரர்கள் வேகமாக ஓடிவந்தார்கள். அவர்களைப் பார்த்தால், கொடிய கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த திருடர்களைப்போல் காணப்பட்டனர்.

அந்த நீர்த்தடாகத்தருகே குதிரைகள் வந்ததும், தாமே நின்றன. அத்திருடர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

“அண்ணே! அதோ பார். இன்று நாம் அதிருஷ்டசாலிகளே!” என்றான் ஒருவன்.

“ரொம்ப ஜோராகவல்லவோ அவன் தூங்குகிறான்?” – இது மற்றொரு திருடனின் பேச்சுக்குரல்.

“பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல், நல்லதாயிற்று! ஏன் யோசிக்கிறாய்?”

அவர்கள் இவ்வளவுதான் பேசினார்கள். மறுகணமே குதிரையைவிட்டு இறங்கினார்கள். தூங்கிக்கொண்டிருந்த மனிதன் தலை ஒரு வினாடியில் துண்டிக்கப்பட்டு விட்டது. பிறகு அந்த இரண்டு திருடரும் சாவகாசமாக அந்த முண்டத்தின் இடுப்பை அவிழ்த்துப் பார்த்தார்கள்.

“ஆ! தங்க நாணயங்கள்!” அவ்விருவரும் சேர்ந்து ஏககாலத்தில் கிளப்பிய ஆச்சரியக்குறி இவ்வார்த்தைகள்.

“எண்ணிப்பார், அண்ணே!” என்றான் முதல்வன்.

“அடே, ஒரு குழந்தையும் இதோ தூங்குகிறதடா!”

“தலையைச் சீவிவிட்டால் போகிறது!” என்று கூறிக்கொண்டே, தன் வாளையுருவினான்.

“டேய், நிறுத்து! சிறு குழந்தையடா! இதைப் பார்த்தால், அழகாக இருக்கிறது. வேண்டாம்!” என்று கூறி, அந்த முன்னவன் ஓங்கிய வாளைப் பின்னவன் தடுத்துவிட்டான்.

பிறகு அந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் அவசரம் அவசரமாக அந்தக் கொள்ளைப் பொருளாகிய தங்க நாணயங்களை எண்ணிப் பார்த்தார்கள். இருபத்தேழு தீனார்களே இருந்தன. அந்த நாணயங்களைப் பத்திரமாகச் சுருட்டிக்கொண்டு, வெட்டுண்ட முண்டத்தை அங்கே உருட்டிவிட்டு, அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, தத்தம் குதிரை மீதேறிக்கொண்டு வந்தவழியே திரும்பிவிட்டார்கள். கிழக்கும் வெளுத்துவிட்டது. ஆனால், குழந்தைக்கு இன்னம் தூக்கம் கலையவில்லை.

”அடே! இவள் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபின்பு அழகியாக இருப்பாளடா!” என்றான் அந்தக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டவன்.

“அழகியா? பக்கா பேரழகியாக, உலக அழகியாக ஜொலிப்பாள் என்று சொல் அண்ணே!” என்று திருத்தினான் மற்றவன்.

குதிரைகள் இரண்டு மைல்தூரம் சென்றதும், பொழுது புலர்ந்தது. அந்தக் குழந்தையும் கண்விழித்தாள். “அபூ!” என்ற வண்ணம் நிமிர்ந்து பார்த்தாள். தந்தைக்குப் பதிலாக இராட்சஸ உருவங்கள்! குனிந்து பார்த்தாள்; கழுதைக்குப் பதிலாக இரு குதிரைகள். சட்டென்று தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு, ஓ வென்று அலறித் துடித்தாள்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-31 ஆகஸ்ட் 2011

<<முன்னுரை>>     <<அத்தியாயம் 2>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment