ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்துச் சலித்துச் சற்றே கண்ணயர்வதற்காக ஸாலிஹ் பள்ளியறையுள் புகுந்த செய்தியைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ­ஷஜருத்துர் தம் அலுவல்களிலே கருத்தாயிருந்தார். ஒரு பெண்மணியின் தயாள குணத்தின் மிக உயர்ந்த அளவு

அவ்வம்மையாரிடம் காணப்பட்டமையால், அவரிட்ட கட்டளைகளை மனமகிழ்ச்சியுடன் அனைவரும் செய்து முடித்தனர். சக்தியத்தை நிலை நாட்டவென்றே தாங்கள் போர் புரியப்போவதாக உணர்ந்ததால் எழுந்த வீர உணர்ச்சி! அதனுடன் அவ் வுணர்ச்சிமிக்க கடமைகளைச் செய்வதற்கு ­ஷஜருத்துர் அளித்த மனங்குளிரும் இதமொழிகளும் கருணையும்; சுல்தானின் மனைவியாயிருந்தும், அவரும் “சாதாரணப் பேர்வழியே” போல் ஏனையோருடன் ஒன்றாய்க் கலந்து நின்று ஒத்துழைத்த தியாகச் செயல் ஆதியவெல்லாம் ஒன்றாய் மிசிரப்பட்டு, வருணிக்கவொண்ணா முன்னேற்பாடுகளை வெகு சீக்கிரத்தில் செய்து முடித்தன. மனவொருமையுடனும், தீர உணர்ச்சியுடனும், வீரச் செயல்களுடனும் புரியப்படுகிற மிகப்பெருந் தியாகமுள்ள சேவைக்கு எதை உவமிக்க முடியும்? அதற்கு அதுவே ஒப்பாகும்.

கணவரைப் போன்று மனைவியரும் ஓடியாடி உழைத்துவிட்டுச் சலிப்படைந்துபோய் அன்றிரவு அந்தப்புரத்துள் நுழைந்தார். எவ்வளவுதான் ஊக்கமிருந்தாலும், எந்த மனிதன்தான் எட்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாய் நின்று பணியாற்ற முடியும்? இயற்கையை எதிர்த்து எத்தனை நாள்தான் போரிட முடியும்? எனவே, ­ஷஜருத்துர்ரும் அலுப்புற்றுச் சற்றுக் கண்ணயரப் போனது இயற்கையின் செயலேயன்றி, வேறன்று.

தட்டித்தடுமாறிக் கொண்டே ­ஷஜருத்துர் தம் படுக்கையறையுள் மெல்ல நுழைந்தார். கண்விழிப்பால் ஏற்பட்ட அயர்ச்சி ஒரு புறம்; வேளைக்கேற்பப் புசிக்காமையால் விளைந்த தளர்ச்சி ஒரு புறம்; ஓடியாடி உழைத்தமையால் ஏற்பட்ட களைப்பு ஒருபுறம். என்னதான் துருக்கி நாட்டு வீரவனிதை என்றாலும், “பெண்பிள்ளை”யல்லவா? மெதுவாய்ச் சென்று தம் பஞ்சணைமீது தொப்பென்று வீழ்ந்து படுத்துக்கொண்டார். பக்கத்துக் கட்டிலில் சுல்தான் படுத்திருப்பதைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை.

­ஷஜருத்துர் மெய்சோர்ந்து உறங்கிவிட்டார். கண்ணுறங்கினாலும், கருத்துச் சோரவில்லை. நினைப்பெல்லாம் அந்தச் சிலுவை யுத்தக்காரர்கள்மீதே; எந்த நேரத்தில் அவர்கள் காஹிராவின் எல்லையுள் வந்து சேர்வார்களோ என்ற கவலையும் அவரதுள்ளத்தை வாட்டிக்கொண்டே இருந்தது. இந்தப் புறக்காரணத்துடன், அவர் அகத்துள்ளேயுங்கூட ஒருவித வருணிக்க இயலாத தடுமாற்றம் அலைமோதிக்கொண்டிருந்தது; அஃதோர் அச்சமூட்டும் உணர்ச்சியாகவே இருந்தது. வலது கண்ணும் வலது தோட்பட்டையும் துடித்துக்கொண்டிருந்தன; வயிற்றிலே ஒருவித எரிச்சல் எழும்பிக்கொண்டிருந்தது. நெடிய தூக்கத்துள் ஆழ்ந்திருந்தும், உள்ளமானது ஒருவித சஞ்சலத்தில் மூழ்கி உழன்றுகொண்டிருந்தது. மனித சக்தியால் காரணங் கற்பிக்க முடியாத இவ்வகையான விசித்திர உணர்ச்சியைப் பெற்று ­ஷஜருத்துர் அரண்டு விழித்தார்.

அது நள்ளிரவு. பேரிரைச்சலொன்றும் கேட்காமையாலும், தம்மை எவரும் வந்து தட்டி எழுப்பாமையாலும், எங்கும் அமைதியே நிலவியதனாலும், எதிர்பார்த்த ஆபத்தொன்றும் வந்துவிட வில்லையென்று மனந்தேறினார். ஆயினும். பலஹீனமுற்றிருந்த அவரது நெஞ்சத்துள் திகீர் என்றெழுந்த அதிர்ச்சி மட்டும் சிறிதும் ஓயாமையால், ஹிருதயம் சற்று வேகமாகவே அடித்துக் கொண்டது. ­ஷஜருத்துர்ரின் சிரசிலும் முதுகிலும் நெஞ்சின்மீதும் சுமக்கமுடியாத ஒரு பெரும் பாறாங்கல்லைச் சுமத்தி வைத்தது போன்ற உணர்ச்சி மட்டும் ஒன்று இருந்தது. உழைப்பால் ஏற்பட்ட உடல் அதிர்ச்சியின் விளைவாய் இருக்கலாம் என்று அவர் எண்ணிக்கொண்டார். ஆனால், அவ்வெண்ணத்தையே தகர்ப்பதுபோல அவரதுள்ளம் மேலும் மேலும் அதிகமாகத் துடிதுடித்தது. புரண்டு படுத்துப் பார்த்தார்; உடலதிர்ச்சி இன்னம் அதிகமாயிற்று. மனச்சாந்தியுடன் சற்று அமைதியாக உறங்கவந்த தமக்கு இப்படிப்பட்ட திடுக்கமூட்டும் உணர்ச்சிகள் ஏற்படுவதைச் சபித்துக்கொண்டே எழுந்தமர்ந்தார்.

மங்கலாய் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி விளக்கொன்று இலேசாய் வீசும் மந்தமாருதத்தில் பதறிய ஒளி ரேகைகளைச் சிமிட்டிக்கொண்டிருந்தது. வலியால் சுரப்பேறியிருந்த பிடரியை மெல்லத் தடவிவிட்டுக் கொண்டே, நெடிய கொட்டாவியொன்றை விட்டுக் கைகளைக் கோத்துத் தலைக்கு மேல் உயர்த்தி ­ஷஜருத்துர் சோம்பல் முறித்துச் சோகம் தெளிவித்துக்கொண்டார். அவருடைய உணர்ச்சிமிகுதி தணிகிறாற் போலிருந்தது. ஆயின், அயர்ச்சியின் அசதியால் தம்மையறியாமலே மீண்டும் படுத்தார்.

இல்லை, படுக்கவில்லை. படுப்பதற்காகத் தலையைப் பாதி சாய்த்துவிட்டார். அப்போது திடீரென்று அவ்வரையில் பெரிய முணக்கச் சப்தம் கேட்டது. தலையைச் சாய்த்துக் கொண்டேயிருந்த ­ஷஜருத்துர் சட்டென்று மீட்டும் நிமிர்ந்தமர்ந்தார். சப்தம் வந்த திக்கை நோக்கினார். அங்கே சுல்தான் தமது படுக்கைமீது இழுத்துப் போர்த்துக் கொண்டு, முற்கி முணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே கட்டிலைவிட்டுத் துள்ளிக் கீழே குதித்து அவரண்டை ஓடினார்.

“நாதா! ஏன் போர்த்துக்கொண்டு படுத்திருக்கிறீர்கள்? இங்கே எப்போது வந்தீர்கள்?” என்று அன்பொழுகக் கேட்டார்.

“ஆ!… என் உடம்பெல்லாம் வலிக்கிறது… பொறுக்க முடியவில்லையே!” என்று முணங்கி மேனி குலுக்கினார் சுல்தான்.

­ஷஜருத்துர் ஸாலிஹின் நெற்றியில் கைவைத்தார். நெருப்பைத் தொட்டவர் துடித்துக் கையிழுப்பதுபோல் வெடுக்கென்று அவர் கையை உதறிக்கொண்டார். கொழுந்துவிட்டெரியும் நெருப்புப்போலக் கடுமையான ஜுரம் வீசிக்கொண்டிருந்தது. ­ஷஜரின் வதனம் பயங்கரமான காட்சியையளித்தது.

“உடம்பு காய்கிறதே! அனல் வீசுகிறதே!” என்று பதஷ்டத்துடன் ­ஷஜர் துடிதுடித்தார்.

சுல்தானால் பதில்கூடப் பேச முடியவில்லை. மெளனமாய்ப் படுத்திருந்தார். ­ஷஜருத்துர் மெழுகுவர்த்தியைக் கொளுத்திக் கொண்டு வந்து, அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தார். அது மினுமினுவென்றிருந்தது. ஜுரத்தின் வேகத்தால் சுல்தானின் கண்கள் கலங்கிப்போயிருந்தன; உதடுகள் வறந்தும், நாசித் துவாரங்கள் விரிந்தும் காணப்பட்டன. பார்ப்போருள்ளத்தைத் திடுக்கிடச் செய்யும் பயங்கரத்தை அம்முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அப்பால் ­ஷஜருத்துர் அரைக்கணமும் அங்கே நிற்கவில்லை. வேகமாய் வெளியே ஓடினார். மயக்கத்தாலும், கிறுகிறுப்பாலும், பலஹீனத்தாலும் தளர்ந்து போயிருந்த அவருடைய மெல்லிய மேனியில் இப்போது ஒருவிதப் புதிய பலமும் சக்தியும் வந்து புகுந்து கொண்டன. ஏவலாளர்களை எழுப்பிவிட்டுக் கண்மூடிக் கண்திறப்பதற்குள் சுல்தானுக்கென்று தனியாயுள்ள சிறந்த அரண்மனை ஹக்கீமைக் கையோடழைத்து வரச் செய்தார்.

அந்த ஹக்கீம் வந்து அரசரின் நாடியைப் பிடித்து நன்கு பரிசோதித்தார். ­ஷஜருத்துர் ஹக்கீமின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சுமார் கால் மணிநேரம் சோதனை செய்துவிட்டு வைத்தியர் மன்னருக்கு மருந்து பிரயோகித்தார். பொறுமையிழந்த ­ஷஜருத்துர் ஹக்கீமை நோக்கி, “என்ன ஜுரம்? சீக்கிரம் நின்றுவிடுமா?” என்று அதிக அவலுடனே வினவினார்.

“யா மலிக்கா! அதிர்ச்சியாலும் பலஹீனத்தாலும் வந்த சாதாரண ஜுரம் இது. ஒன்றுக்கும் தாங்கள் கவலைப்பட வேணடாம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் இருக்கிறான். இரண்டு நாட்களுக்கு ஸுல்தான் பூரண ஓய்வெடுத்துக்கொண்டால், எல்லாம் சரியாகிவிடும். அடிக்கடி பேச்சுக் கொடுக்காதீர்கள்; திடுக்கமூட்டும் செய்தி ஒன்றையும் அவரிடம் தெரிவிக்க வேண்டாம். அவருக்குப் பூரண ஓய்வையும் மன நிம்மதியையும் கொடுக்க வேண்டும். அவ்வளவேதான்.”

“சீக்கிரம் ஜுரம் நின்றுவிடுமல்லவா?”

“மலிக்கா! இந்த மிஸ்ர் முழுதும் தேடியலைந்தாலும் கிடைக்காத உயர்தரமான கஸ்தூரியை இப்போது ஸுல்தானுக்குப் பிரயோகித்திருக்கிறேன். எப்படிப்பட்ட கொடிய காய்ச்சலும் பொழுது விடிவதற்குள் நின்றாகவேண்டும். இது சாதாரண ஜுரம்தானே! ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்.”

“இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலா இறைவன் இப்படிச் சோதனைக்குமேல் சோதனையை விடவேண்டும்? யா ஹக்கீம்! ஸல்தனத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஸுல்தானைச் சார்ந்திருக்கிறது; ஆனால், அவரைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு உம்மிடமே இருக்கிறது. இந்த இக்கட்டான சங்கடத்துக்கு என்ன செய்வது?”

“யா ஸுல்தானா! தங்கள் உள்ளம் துடிப்பதைவிட என் மனம் அதிகம் துவளுகிறது. என்றாலும், ஸல்தனத்தையும், சுல்தானையும், நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டுவது அவன் பொறுப்பன்றோ? நம்மால் என்ன செய்துகொள்ள முடியும்? அவன் விடும் சோதனைகளுக்கு அடியவர் சிரஞ் சாய்த்துத்தானே ஆகவேண்டும்?”

“ஹக்கீம்! நீர் சுல்தானைவிட்டு அரைக்கணமம் அப்புறம் இப்புறம் அசைவது கூடாது. என்ன சொல்கிறீர்? உதவிக்கு எத்தனை அடிமைகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும். நான் பக்கத்து அறையில் போய்ப் படுத்துக்கொள்கிறேன். விடிவதற்குள் சுல்தான் பூரண சுகம் அடையட்டுமென்று ஆண்டவனிடம் துஆகேளும்!… யாரங்கே? ஹக்கீமுக்கு உதவியாக இந்த அறையில் இரணடு பேர் இருங்கள்!” என்று இரு அலிகளுக்கும் ஹக்கீமுக்கும் உபதேசித்து விட்டு, கணவரின் உடம்பை மீட்டும் தொட்டுப்பார்த்து விட்டு, அடுத்த அறைக்குச் சென்றார் அந்தக் கோப்பெருந் தேவியார்.

­ஷஜருத்துர்ரின் கண்முன்னே இப் பூமியே விர்ரென்று கறங்கு சுற்றியதுபோல் சுழன்று தோன்றிற்று. எத்தனை பேரதிர்ச்சிகளை ஒரு வனிதாமணி ஏககாலத்தில் ஏற்றுச் சகிக்க முடியும்? அவருடைய ஸ்தானத்தில் நீங்கள் இருந்துகொண்டு சிறிது சிந்தித்துப் பாருங்கள்! எதைச் சமாளிப்பது? எதிரிகளால் விளைந்த தொல்லைகள் போதாவென்று, சுல்தானும் கடுஞ்சுரத்துள் வீழ்ந்துவிட்டாரென்றால், ஒரு பெண் பேதை தன்னந்தனியாய் என்ன செய்ய இயலும்? மனவேதனை சகிக்க முடியாமல், ­ஷஜர் படுக்கையிலே புரண்டு புரண்டுகொண்டு கிடந்தார். உடம்பிலுள்ள உதிரமெல்லாம் அவர் மூளைக்குள்ளே குபீரென்று தாவிப் பாய்ந்து கொண்டிருந்தது. உடல் வலியால் உறுப்புக்கள் அசையாமல் கிடந்தனவென்றாலும், அவருடைய புண்பட்ட உள்ளம் சொல்லொணா வேதனையால் துள்ளித்துடித்தது. மிகவும் ஏழ்மையான, சர்வ சுதந்தரமுள்ள, துயரென்றால் இன்னதென்றறியாத எளிய வாழ்க்கை நடத்தும் சாதாரணப் பெண்ணாகத் தம்மை ஆக்காமல், இந்த மாதிரியான வருணிக்க இயலாப் பொல்லாத பொறுப்புள்ள பேரிடைஞ்சலில் இறைவன் சிக்க வைத்துவிட்டு, தூண்டிலிலே சிக்கிய மீன்போலத் திணறச் செய்கிறானே என்று ­ஷஜருத்துர் பெரிதும் ஏங்கிக்கொண்டிருந்தார். கிரீடமணிந்த சிரசு கவலை மிகுந்ததாயே இருந்து வருகிறதென்று ஒரு கவி சிரேஷ்டரும் வருணித்துள்ளார்.

விடிகிறவரையில் ­ஷஜர் கண்ணுறக்கம் கொள்ளவில்லை; அல்லது கண்திறந்து விழித்திருக்கவுமில்லை. ஆனால், பஞ்சணை மீது படுத்துத்தான் கிடந்தார். கிழக்கு வானம் நன்கு வெளுத்தவுடனே, புதை குழியிலிருந்து எழும் பிரேதம்போலே அவர் தடுமாறிய வண்ணம் சுல்தானின் சயனக் கிருஹத்துள்ளே புகுந்தார். அங்கே நிலவிய காட்சிகள் அவர் மனத்தைத் தாக்கின. ஹக்கீமின் முகம் மிகவும் பயங்கரமாயிருந்தது. ஜுரத்தால் படுத்துக்கிடந்த சுல்தானுக்கோ, ஜன்னி பிறந்திருந்தது. அவர் நெற்றியின்மிது மெல்லிய துணியொன்று போடப்பட்டு அதிலே தாய்ப்பால் சொட்டவிடப் பட்டிருந்தது. கண்களில் கலிக்கம் தீட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் நின்ற இரண்டு அலிகளும் உடலில் உயிரில்லாததே போல், வேரூன்றி நின்றிருந்தனர். இதைப் பார்த்ததும், ­ஷஜர் வீறிட்டலறினார்.

“ஹக்கீம்! ஜுரம் நின்றுவிடுமென்றீரே! சுல்தான் ஏன் உணர்வின்றிப் படுத்திருக்கிறார்?”

“மலிக்கா! ஆண்டவன் தன் பக்தர்களைச் சோதிக்கிறான். சுல்தானுக்கு மூளை-ஜுரம் வந்திருக்கிறது.”

“மூளை-ஜுரமா!” என்று வாய்பிளந்த ­ஷஜர் அப்படியே நெடுமரம்போல் நின்றுவிட்டார்.

“சாஹிபா! இனிச் சிந்திப்பதில் பயனில்லை. என்னால் இயன்ற அளவுக்கு மேலாக வெல்லாமும் முயன்றுவிட்டேன்; இன்னமும் முயன்று கொண்டிருக்கிறேன். எனினும், எனக்குப் பயமாக இருக்கிறது. உடனே தாங்கள் இளவரசருக்கு ஆளனுப்புங்கள். இறைவன் விட்டவழியே எல்லாம் நடக்குமென்றாலும், இந்தப் பொல்லாத வேளையிலே நாம் சர்வ ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்!”

“என்ன! உயிருக்கு அபாயமென்றா…”

“மலிக்கா! உயிரைப் பிடித்து நிறுத்துவது நம்முடைய கையில் இல்லை. நம்மால் என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வவற்றை எல்லாம் இறுதிவரை செய்வோம். எனினும், எதிர்பாராத எல்லாவித அபாயங்களுக்கும் நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டுமல்லவா?”

ஷஜருத்துர்ரின் கண்களில் நீர் மல்கிற்று. காண்பவர் உள்ளத்தைக் கனிந்துருகச் செய்யும் சோகமிக்க செறுமல் அவர் தொண்டையில் விக்கிக்கொண்டு வெளிப்பட்டது. “ஹக்கீம்! யான் என்ன செய்வேன்…?” என்று அழுது விம்மினார் அவ்வரச மாதேவி.

“சகலமும் அறிந்த தங்களுக்கு யானென்ன சொல்வது? வீணே கலங்காதீர்கள். ஆண்டவன் இந்த ஸல்தனத்தின் எதிர்கால வாழ்க்கை முழுதையும் தங்கள் தலைமீதே சுமத்தியிருக்கிறான். சுல்தானைக் காப்பாற்ற என்னால் முடிந்த அளவுக்கு மேலாகவும் முயல்கின்றேன். இறுதியிலே எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே போலத்தான் நடைபெற்று முடியும். இதற்கிடையில் தாங்கள் எல்லாவிதத் தந்திர யுக்திகளையும் கடைப்பிடியுங்கள். சுல்தானுக்கு இம்மாதிரியான பெரிய ஜுரம் வந்திருக்கிறது என்று காற்றுவாக்கில் எவர் காதில் விழுந்தாலும், எல்லார்க்கும் ஊக்கங் குன்றிவிடும். எதிரிகளோ, இச் செய்தி கேட்டதும், தேன்குடித்த நரிபோல் துள்ளுவார்கள். ஒரு சுல்தானுக்காகத் தாங்கள் இந்த நாட்டைப் பேராபத்துள் சிக்க வைக்கப் போகிறீர்களா? சுல்தானை நான் பார்த்துக் கொள்கிறேன்; ஸல்தனத்தைத் தாங்கள் காப்பாற்றுங்கள். இதில் சிந்திக்க வேண்டுவது ஒன்றுமில்லை. மனங் கலங்காதீர்கள். ஒரு மனிதனுக்காக ஒரு ராஜ்யத்தையே இழப்பதினும், ஒரு ராஜ்யத்துக்காக ஒருவனை இழப்பது சிறந்த விவேகமன்றோ? தாங்கள் இங்கே நின்று வீண்காலம் கடத்தாதீர்கள். மேற்கொண்டு நடக்கவேண்டிய யுத்த ஏற்பாடுகளைச் செவ்வன் கவனியுங்கள்!”

­ஷஜருத்துர் நிலை தடுமாறினார். இப்போது அவருடைய மூளை மட்டும் குழம்பவில்லை; மேனி முழுதுமே கலகலத்து நிலை குலைந்துபோய்விட்டது. பைத்தியம் பிடிக்கவேண்டிய எல்லையையும் ஏறக்குறைய எட்டிவிட்டாரென்றே செப்பலாம். அவர் மயங்கித் தொப்பென்று சுருண்டுவிழுந்தார்.

ஹக்கீம் விரைந்துதாவி, ­ஷஜரைத் தாங்கிப் பிடித்து, தம் இடுப்பிலிந்த சிறு சீசாவிலிருந்து ஏதோ ஒரு மருந்தை அவருடைய உதடுகளுக்கிடையே உகுத்துவிட்டார். மந்திரவாதியின் மையைப்போல அம்மருந்து சட்டென வேலை செய்தது. ­ஷஜர் எழுந்தமர்ந்தார்; மெல்லத் தடுமாறி நடந்துகொண்டே தம் கணவரை நெருங்கி, அவரது வதனத்தை உற்றுப்பார்த்தார். சுல்தான மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாரென்றாலும், அவர் முகம் உயிரற்ற பிணம்போலவே தோன்றிற்று.

­ஷஜருத்துர் வாயை மூடிக்கொண்டு செறுமியழுதார்; அவர் அழுவதைப் பார்த்த ஹக்கீமும் அலிகளும் சேர்ந்து அழுதார்கள்.

“இதுதான் நீ நிர்ணயித்துள்ள விதியா…? ஏ இறைவா…!” என்று பொருமினார் மிஸ்ரின் ஸுல்தானா. அவருள்ளத்துள் உருகிய உருக்கமனைத்தும் அருவியேபோல் அவர் கண்களிலிருந்து பெருக்கெடுத்து ஓடிக் கன்றிப்போயிருந்த கன்னங்கள் வழியே சிந்திக்கொண்டிருந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 34>> <<அத்தியாயம் 36>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment