22. நிலவொளியில் பூத்த அன்பு

மூனிஸ்ஸாவின் அகால மரணத்தை அடுத்து மிஸ்ர் தேசம் முழுதும் பெருந்துக்கம் சூழ்ந்தது. அரசவை கூடவில்லை. காஹிராவின் எந்தத் திக்கை நோக்கினாலும், ஒரே

துக்கமயமாகவே காட்சியளித்தது. பட்டவர்த்தன சுல்தானின் பட்டத்து ராணி காலமாயினார் என்னும் வருத்தத்தைவிட ஸலாஹுத்தீனின் புத்திரியார் தேகவியோகமாயினார் என்னும் துக்கமே பெருவாரியான மக்களைப் பெருந்துயரத்துள் ஆழ்த்தியது. எனவே, காஹிராவாசி ஒவ்வொருவர் வீட்டிலும் துக்கம் நிகழ்ந்தது போன்ற அவலக்காட்சியே இரவு பகலாய்க் கம்மிநின்றது.

எவ்வளவுதான் மூனிஸ்ஸாவை எல்லோரும் நேசித்தபோதினும், காலசக்கரம் சுழல சுழல, அவ் வம்மையாரை எல்லாரும் மறக்க ஆரம்பித்தனர். ‘ஆராற்றாவிட்டாலும் நாளாற்றும்’ என்பது ஒரு பழமொழியே யன்றோ? அதேபோல், அரண்மனைக்குள் இருந்தவர்களும் நாளாக நாளாகத் தங்கள் துக்கத்தைச் சிறுகச்சிறுக மறந்துவந்தனர். அன்றியும், அரண்மனையின் நித்திய ஜோதியான ஷஜருத்துர் இப்போது முன்னினும் பன்மடங்காகத் தன் ஒளிச்சுடரை வீசிவந்தபடியால், மூனிஸ்ஸாவின் பிரிவால் இருளடைந்த அந்தப்புரம் இந்த ஒளியால் நன்கு பிரகாசிக்க ஆரம்பித்தது. இளவரசன் தூரான்ஷாவும் தன் அன்னையின் பிரிவால் ஏற்பட்ட பெருஞ்சோகத்தை மறந்து ஷஜருத்துர்ரின் ஆறுதல் மொழிகளைக் கேட்டு, உளந்தேறினான். ஆனால், ஸாலிஹ் மன்னர் என்ன செய்வார்? அந்தப்புரத்துள் நுழையும்போதெல்லாம் அவர் நெஞ்சு திகீரென்று மின்சார அதிர்ச்சியைப் பெற்றுக்கொள்ளும். தம் அன்புக்கு ஏற்ற பாத்திரமாய் விளங்கிய மூனிஸ்ஸாவைப் போன்ற வேறு மனைவியை எங்கே பெறப்போகிறோம் என்னும் ஏக்கமே அவரை அதிகமும் வாட்டிற்று. அவரவர் அன்பின் மகிமை அவ்வத் தம்பதிகளுக்கே தெரியும் என்ப.

ஒருநாள் ஸாலிஹ் மிகவும் மனவேதனையுற்று விட்டபடியால், எவருக்கும் தெரியாமல் அரண்மனை நந்தவனத்தின் பூங்கொடிகளின் காவண மத்தியிலே சென்று அமர்ந்து கொண்டு, தமது விவாகநாள் முதல் இறுதிவரை கருத்தொருமித்து மூனிஸ்ஸாவுடன் நடாத்திவந்த இல்லற வாழ்க்கையை நினைத்து துன்பத்தில் ஆழ்ந்திருந்தார். மலை கலங்கினாலும் மனங் கலங்காத திடசித்தம் பூண்டிருந்த அவர் இப்படி துன்பமடைந்தது அதிசயிக்கத்தக்க விஷயமே. ஆனால், அவர் தமது காலஞ்சென்ற மனைவியின்பால் சொரிந்துவந்த உண்மை அன்பின் உத்வேகமே அவரை அப்படி மனம்நையச் செய்ததென்பதை எவரே அறிவர்?

அகஸ்மாத்தாய் நடக்கும் ஓர் அற்பச் சம்பவம் நாளடைவில் மிகமுக்கியம் வாய்ந்த பெருநிகழ்ச்சியாய் உயர்ந்துவிடுவது வழக்கம். அரண்மனைக்கு வந்து அத்தனை மாதங்களாக ஒருமுறைக்குமேல் ஷஜருத்துர் அந்த நந்தவனத்துள் நுழைந்தது கிடையாது. ஆனால், இன்று அவளுடைய விதி அவளை அந்த உய்யான வனத்துள்ளேயே ஈர்த்துச் சென்றது. அப் பூங்காவுள் நுழையு முன்னர், உள்ளே சுல்தான் இருக்கிறாரென்பதுமட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால், அங்கே அரை நிமிஷமும் நிற்காமல் ஓட்டோட்டமாகத் திரும்பி அந்தப்புரத்துக்குள் புகுந்திருப்பாள். ஆனால், வழக்கத்துக்கு மாற்றமாக ஒரு சேவகனோ, அல்லது ஓர் அடிமையோ, அல்லது ஒரு மெய்காப்பாளனோ உடன் தொடராமல் தன்னந்தனியராய் அல் மலிக்குஸ் ஸாலிஹ் அந்தப் பூங்காவுள் தனித்துக் குந்தியிருப்பாரென்பதை அந்தப் பெண் எங்கே எதிர்பார்த்தாள்? எனவே, அவள் தன்னையே மறந்து, இறுக்கம் தளர்ந்த ஆடையுடன் அந் நந்தனவனத்தின் அழகிய பூக்களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அடைந்துகொண்டே ஏகாந்த நடை நடந்தாள். அவளுக்கு நல்ல கட்டழகு வயது நிறைந்திருந்தும், இன்னும் வாழ்க்கையை ருசி பார்க்காதவளாகையாலும், பிறப்பிலே துருக்கி நாட்டவளாகையாலும் அவள் பருவமடையாச் சிறுமி போலத் துள்ளிக் குதித்துத் தாவிப் பாய்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பூங்காவுக்கே தன்னை அவள் ஓர் அரசியென்று நினைத்துக் கொண்டு உடல் குலுக்கி, தலையசைத்து, இடை நொடித்து எல்லாவிதமான சேஷ்டைகளையும் புரிந்த வண்ணம் ஒய்யாரமாய் ஒல்கிய நடையுடன் நடமாடினாள்.

அப்பொழுது யாரும் எதிர்பாராத சம்பவமொன்று ஷஜருத்துர்ருக்கு அன்று நிகழ்ந்துவிட்டது. அவள் மிகவும் அலட்சியமாக அங்கே வளைந்து கிடந்த ரோஜாச் செடிகளின் மிலாறுகளை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே ஒய்யார நடை நடந்து, உடல் குலுக்கிக்கொண்டு போனபோது, அச் சம்பவம் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது. பதுங்கியிருக்கும் புலியொன்று ஆட்டின்மீது குபீரென்று பாய்வதைப்போல் ஒரு பெரிய நீல நிற கதண்டு (வண்டு) விர்ரென்று ரீங்காரம் செய்து கொண்டு ஒரு பூவினின்று புஸ்ஸென்று பறந்துவந்து, அவள் முகத்தைச் சுற்ற ஆரம்பித்தது. கொஞ்சமும் எதிர்பாராத சமயத்தில் அம்மாதிரி அந்தக் கதண்டு கோபமாக அவள்மீது சீறிக்கொண்டு பறந்து வந்ததைக் கண்டு அவள் திக்பிரமை கொண்டு திகைத்து விட்டதுடன், தன்னையே மறந்து ஓவென்று அலறியவண்ணம் இரண்டே பாய்ச்சலில் பின்னிடைந்து ஓடிப்போய், மேலாடை சிதறிப்போக, நிலைகுலைந்த வண்ணமாகத் தொப்பென்று வீழ்ந்தாள்.

அவள் அப்படியொன்றும் கட்டாந்தரையில் விழுந்து காயமுற்று விடவில்லை. காக்கை உட்காருவதற்கும் பனம்பழம் வீழ்ந்ததற்கும் சரியாயிருந்தது. என்னெனின், அவள் பின்னிடைந்து மெய்பதறி ஓடியதற்கும், அவள் ஓடுகிற பாதையில் சுல்தான் ஸாலிஹ் மெய்ம்மறந்து அமர்ந்திருந்ததற்கும் சரியாயிருந்தபடியால், ஷஜருத்துர் அவர் மடியிலேதான் தடுக்கி மல்லாந்து விழுந்துவிட்டாள்.

கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு, கற்பனை வெள்ளத்தில் நீந்திக்கொண்டு, தாம் பறிகொடுத்த பத்தினியைப்பற்றி ஏங்கிக் குமுறிக்கொண்டிருந்த சுல்தான், ஒரு பெண் தட்டுத் தடுமாறித் பொத்தென்று தம் மடிமீது திடீரென்று வந்து வீழ்ந்ததைக் கண்டு திகைத்துப் போய் விட்டார். எல்லாம் அரை வினாடியில் நடந்து முடிந்தன. மின்சார அதிர்ச்சியால் தாக்குண்டாற்போன்ற சுறுக்கைப் பெற்ற ஷஜருத்துர் தான் ஆடவரொருவரின் மடிமீது தாவி வீழ்ந்ததைக்கண்டு அஞ்சி, அலறிப்புடைத்துத் துள்ளிக்குதித்து ஒரே பாய்ச்சலில் எழுந்து நின்றாள். நாணத்தாலும் மடஅச்சத்தாலும் அவள் உடல் பதறியது. அங்கிருந்து ஓடிவிடலாமென்றாலோ, கை கால்கள் விலவிலத்தன. கதண்டு துரத்தியதைக் கண்டு அஞ்சியபோது அவள் மனம் துடித்ததைவிட, தான் சுல்தான் மடியில் இடறி வீழ்ந்ததை உணர்ந்ததும் சிந்தை குலைந்தாள். செய்வதின்னதென்று சற்றுமே புலனாகாமையால், அவள் நட்டுவைக்கப்பட்ட கட்டையேபோல் வேரூன்றி நின்றுவிட்டாள். நின்றாளே நின்றாள், நெடுமரம்போல் நின்றாளே! ஒன்றும் புரியவில்லை. தான் ஏதோ செய்யத்தகாத மிகப் பெரிய குற்றத்தை அழைத்துவிட்டதாக அவள் மனம் உறுத்தியதால், குழறுகிற மொழிகளுடன், “யா..ம..லி..க்! மன்..னியு..ங்க..ள்!” என்றாள்.

அங்குப் பறந்துபோன வண்டைப் பார்த்ததும், ஒரு நொடியில் எல்லாவற்றையும் யூகித்து அறிந்துகொண்ட ஸாலிஹ், அவளைப் பச்சாத்தாபத்துடன் நோக்கினார்.

“மனிதசக்தியை மீறித் தெரியாத்தனமாய் நடந்துவிடுகிற எப்படிப்பட்ட காரியமும் குற்றமல்லவே! எனவே குற்றமிழைக்காத உன்னை நான் ஏன் மன்னிக்கவேண்டும்?” அரசரின் இந்த இனிய மொழிகளில் கரிசனம் ததும்பியிருந்தது. எனவே, அவள் அடைந்திருந்த பதட்டம் சட்டென்று நின்றது. அவள் தன் மேலாடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு தலைமுக்காட்டையும் சரிசெய்துவிட்டு, நாசூக்காகப் பேசினாள்.

“யா ஸாஹிபல் ஜலாலில் மலிக்! தெரியாத்தனமாகவும் என் சக்தியை மீறியும் நடந்துவிட்டதென்றாலும், யான் இங்கு வந்ததே என் குற்றமல்லவா? அக் குற்றத்துக்காக என்னை மன்னியுங்கள்.”

“நான் இங்கே இருப்பது தெரியாமலல்லவா நீ வந்துவிட்டாய்? அது உன் குற்றமா?” என்று சொல்லி, அவர் புன்முறுவல் பூத்தார்.

“தாங்கள் இங்கிருப்பது தெரியாமல் யான் வந்துவிட்டாலும், என் சேட்டைகளை அந்த வண்டினிடம் காட்டியது என் குற்றமல்லவா? அக் குற்றத்துக்காக மன்னியுங்கள்!”

“நீ அந்த வண்டுக்குக் குற்றமிழைத்தால், அதையல்லவோ பிழை பொறுக்கச் சொல்லவேண்டும்? நீ எனக்கிழைக்காத குற்றத்துக்காக உன்னை நான் ஏன் மன்னிக்கவேண்டும்?”

“யா சுல்தானல்முல்க்! யான் எது செய்தது குற்றமில்லாவிடினும், அலங்கோலமாகத் தங்கள்மீது தொப்பென்று தடுமாறி விழுந்தது பெருங் குற்றமல்லவா? அதற்காகவாவது என்னை மன்னித்துவிடுங்கள்!”

”ஏ ஷஜர்! உன் அறிவுக் கூர்மையையும் சமயோசித புத்தியையும் நான் மெச்சுகிறேன். நீ ஒரு குற்றமும் இழைத்து விடவில்லையென்று சுல்தானாகிய நானே சகல விஷயங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து, இவ்வழக்குக்குத் தீர்ப்புச் சொல்லும்போது, நீ ஏன் திருப்பித் திருப்பிக் குற்றமென்று கூறுகின்றாய்? என்னைவிட உனக்கு அதிகம் தெரியுமோ?”

”சுல்தானாகிய தாங்களே ஒருதலைப் பட்சமான தீர்ப்புக் கூறுகிறீர்களே! முதலாவதாக, வாதியும் பிரதிவாதியுமாகிய நம்மிருவரின் வழக்கையும் மூன்றாவது நிஷ்பக்ஷபாத நீதிபதிதானே விசாரித்துத் தீர்ப்புக் கூறவேண்டும்?”

“வாதியாகிய என் தீர்ப்பை நீ நிராகரித்தால், பிரதிவாதியாகிய உன் தீர்ப்பைமட்டும் நான் ஏற்கவேண்டுமோ? நீ குற்றமென்று சொல்கிறாய்; நானோ குற்றமல்ல என்று சொல்கிறேன். இவ்வளவுதானே?”

”ஹுஜூர்! தாங்கள் சாதுரியமாகப் பேசுகிறீர்கள். ஏழைப் பெண்ணாகிய எனக்கு அத்தகைய சாமர்த்தியம் ஏது? எஜமானராகிய தங்களுக்கு அடிமையாகிய யான் அபராதம் இழைத்துவிட்டேனென்று என் மனச்சாட்சியே கூறுகிறபடியால், மன்னிப்புக் கேட்டேன். அப்படிக் கேட்டது என் குற்றமா?”

“நான் தான் சொல்லுகிறேனே! நீ செய்த எதுவும் குற்றமில்லை; அல்லது செய்கிற எதுவுங்கூடக் குற்றமில்லையென்று திருப்பித் திருப்பிக் கூறுகிறேனே!”

ஷஜர் நிலம் நோக்கிப் புன்னகை பூத்தாள். அவள் உதடுகளில் குறும்பு ரேகை படர்ந்திருந்தது. வேல்விழிகளில் நயன பாஷையொன்று தொனித்தது.

“வாஸ்தவந்தான்! இந்த மிகப்பெரிய ஸல்தனத்தின் பாரத்தைத் தன்னந் தனியராயிருந்து தாங்கிச் சுமக்கிற தங்களுக்கு, நான் விழுந்ததையா சுமக்க முடியாது? யானொன்றும் அவ்வளவு கனமான உடலைப் பெற்றிருக்கவில்லையல்லவா?”

“ஷஜர்! நீ கெட்டிக்காரி. தக்க உபமான உபமேயங்களுடன் பேசுகிறாயே!”

”யான் எதையும் உவமித்துக் கூறவில்லையே? உண்மையைத்தானே சொல்லுகிறேன்? அதிருக்கட்டும்; அடியேனுக்கு ஒரு சந்தேகம்.”

”என்ன சந்தேகமோ?”

”வேறோன்றுமில்லை. அமீர்களைக் கைது செய்த அன்றிலிருந்து தாங்கள் ஒரு நிமிடமாவது தக்க மெய்காப்பாளரில்லாமல் தனித்துச் செல்வதில்லையே. அப்படியிருக்க, இன்று தாங்கள் ஏன் இப்படித் தனித்துவந்து எவருக்கும் தெரியாமல் இங்கே மறைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்?”

”ஏன், தனித்து வருவதில் தவறென்ன இருக்கிறது?”

“தவறொன்றுமிருப்பதாக யான் கூறவரவில்லை. தங்களைப் போன்ற நிலையிலுள்ள சுல்தான் இம்மாதிரி தனியே அகப்படமாட்டாரா என்றுதானே எதிரியாயிருப்பவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள்? அரச முடியைச் சுமக்கிற தலைக்கு என்றுமே பேராபத்துச் சூழ்ந்து நிற்குமென்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

”ஓஹோ! ஆபத்து வருமென்கிறாயோ?”

“ஆபத்து வந்தால், தங்களால் சமாளிக்க இயலாதென்று யான் குறிப்பிடவில்லை. ஆனால், சென்ற சில நாட்களாகத் தாங்கள் அங்கக் காவலராலாய பந்தோபஸ்தைப்பற்றிக் கவலைப்படாமலிருக்கிறீர்களே என்பதற்காகத்தான் சொல்கிறேன்.”

“ஷஜருத்துர்! நீ என் நிலையிலிருந்து பார்த்தால், உனக்குத் தெரியும். என் இனிய மனைவியை நான் பிரிந்துவிட்ட காரணத்தால் படுகிற துன்பத்தின் அளவை நீ அறியமாட்டாய். என் இதயத்தின் பொக்கிஷத்தை, என் உள்ளத்தின் மாணிக்கத்தை, குணத்தின் குன்றை, இன்பத்தின் இனிய ரசத்தை நான் பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கிறேன். இனிமேல் நான் அவளைப்போன்ற புண்ணியவதியை எங்கே பெறப்போகிறேன்? எப்போது பெறப்போகிறேன்? எப்படிப் பெறப்போகிறேன்?” – சுல்தான் நெடுமூச்செறிந்தார்.

இவ்வளவு நேரம் அவர் மறந்திருந்த துக்கத்தை ஷஜருத்துர் நினைப்பூட்டிவிட்டாள். அவர் மெய்சோர்ந்து கண்ணீருகுத்தார்.

“யா சுல்தானல் முகர்ரம்! உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் ஆறுதல்கூறி ஆதரிக்க வேண்டிய தாங்களே இப்படி கலங்கலாமா? கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் விருப்பமல்லவா? தான் நாடியவருக்கு அவன் விஸ்தரிக்கிறான்; தான் நாடியவருக்கு அவன் சுருக்கிவிடுகிறான். இந்த ஸல்தானத்தைத் தாங்கள் அடைய முடியுமென்று சில ஆண்டுகளுக்கு முன்னே எதிர்பார்த்தீர்களா? அவன் நாடினான்; தங்களையும் சுல்தானாக உயர்த்தினான். இப்போது அவன் வேறுவிதமாய் நாட்டத்தைத் திருப்பினான்; மூனிஸ்ஸா பேகத்தைத் தன்னிடம் அழைத்துக் கொண்டான். எல்லாம் அவனது திருவுளச்சித்தம். அவன் இடுகிற சோதனைகளுக்கெல்லாம் மௌனமாய்த் தலை குனிந்துதானே நாம் அடிபணிய வேண்டும்?” என்று ஷஜருத்துர் அந்த சுல்தானுக்கு வேதாந்தம் கூறினாள்.

“என் விதியைத்தானே நொந்துகொள்கிறேன்?”

“ஹுஜூர்! தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்வு அடைய வேண்டிய தாங்கள் இதை நினைந்து நினைந்து பொல்லாத விதியென்று அழைத்து மெய் துவளலாமா? தாங்களே கூறுங்கள் : எந்த விதி பொல்லாதது? தெரியாத பருவத்தே தங்கள் தாயை இழந்து, தாங்களும் சிறு பாலகராயிருந்து, தங்கள் தந்தையுடன் அனாதையாய்க் கடுங்கோடையின் பொன் போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கானலிலே, கொதிக்கின்ற பாலை மணலில் ஒரு கழுதையின் மீதேறி அந்த ஸீனாய் வனாந்தரத்தின் குறுக்காய் வந்ததுண்டா? அப்படி வரும்போது, தங்கள் தந்தையின் தலையைக் கள்வனொருவன் இரவிலே தயவின்றித் தறித் தெறிந்ததுண்டா? அப்பால் தந்தையையும் இழந்த தனிமனிதராகி அக் கள்வனின் நண்பன் இல்லத்திலேயே வளர்ந்ததுண்டா? வளர்ந்த பின்னர் ஒரு கிழ அமீருக்கு அடிமையாய் விற்கப்பட்டதுண்டா? எல்லாம் போகட்டுமென்றாலும், அந்த அமீராவது இன்னம் சில காலம் ஆயுளுடனில்லாமற் போகக்கூடிய துர்ப்பாக்கியத்தைத் தாங்கள் அடைந்ததுண்டா? அதுவும் செல்லட்டுமென்றாலும், தாங்கள் ஓர் அரசனது சேவகனால் கைது செய்யப்பட்டுத் தெரு வழியே கொண்டு போகப்பட்டதுண்டா? எல்லாவற்றுக்கும் மேலாகத் தாங்கள் இந்தப் பொல்லா விதியையெல்லாம் அனுபவிக்கப் பெண்ணாய்ப் பிறந்ததுண்டா?-”

வீராவேசத்துடன் ஷஜருத்துர் தன் துரதிருஷ்ட வாழ்க்கையை இம்மாதிரி மறைமுகமாகக் கூறி, ஸாலிஹின் மனத்தைக் கவர்ந்துகொண்டே செல்லுகையில், அவர் மெய்ம்மறந்து அவளையே உற்று நோக்கினார். செங்கோல் பிடிக்கிற கரமல்லவா? அவள் பேசப்பேச, அவர் ஷஜருத்துர்ரின் நெஞ்சினின்று பிறக்கிற ஒவ்வொரு சொல்லென்னும் குண்டூசியின் கூர்மையையும் நன்கு உணர்ந்தார். எனவே, பேசிக்கொண்டே சென்ற அவளைச் சட்டென இடைமறித்தார்.

“ஷஜர்! ஏனைப் பிறருடைய தலைவிதியைவிட என் தலைவிதி மிகப்பொல்லாதது என்று நான் சொல்லவில்லை. நிச்சயமாக நீ என்னைவிடத் துரதிருஷ்டசாலிதான். ஆனால், நீயொரு சுல்தானென்று பட்டஞ்சூட்டி உன் இனிய மனையாட்டியைத் திடீரென இழந்ததில்லையல்லவா? விவாகமே செய்துகொள்ளாத நீ, சதிபதி வாழ்க்கையில் சட்டென்ற பிரிவு ஏற்பட்டால், அப் பிரிவாற்றாமை எத்துணைக் கொடிதாயிருக்கும் என்பதை எங்ஙனம் உணர்தல் முடியும்?”

சுல்தானின் இந்த வார்த்தைகள் அவளை வெட்கித் தலை குனியச் செய்தன.

“யா மலிக்கல் முல்க்! யானோ அடிமை. அதிலும் வேற்று நாட்டு அனாதை. என்னைத் தாங்கள் பரிகசிக்கிறீர்களென்பதை யான் உணராமலில்லை. ஆனால், அடியேன் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புகிறேன். அதாவது, விவாகம் செய்து கொள்வதால்தானே வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டு இப்படிச் சதிபதிகளைப் பிரிக்கின்றன? எனவே, காலமெல்லாம் விவாகம் செய்துகொள்ளாமலே வாளா இருந்து விட்டோமானால், இத்தகைய உபத்திரவங்கள் உதிக்க மார்க்கமில்லையல்லவா?” என்று தைரியமாகப் பேசினாள்.

சுல்தான் சிரித்தார். அவளும் சேர்ந்து நகைத்தாள்.

“ஏ ஷஜருத்துர்! ஏதாவது காரணத்தை முன்னிட்டு வாழக்கையில் ஒருவருக்கு விவாகமாவது காலங்கடந்தால், அவர் சுலபமாகத் தம்முடைய சொச்ச வாழ்நாளெல்லாம் பிரமசாரியாகவே நாட்கடத்தப் போவதாகக் கூறுவது சகஜமாயிருக்கிறது. எனவே, நீயும் அம்மாதிரி சிற்றின்பம் வேம்பெனச் செப்புகின்றாய். நீ ஒருநாளைக்கு ஒருவருக்கு மனைவியாகும் பாக்கியம் பெற்றுவிட்டால், அப்போது இப்போது பேசிய வார்த்தைகளை நினைத்து நீயே சிரிப்பாய்!”

சூரியன் அஸ்தமித்து, நேரம் கடந்துவிட்டது. அடிவானத்தில் ரம்மியமான வெள்ளொளியை அள்ளித் தெளித்துக் கொண்டு வட்டவடிவமான முழுமதி மெல்லமெல்ல ஊர்ந்து மேலெழுந்துகொண்டிருந்தது. தென்றற் காற்றும் சிலுசிலுவென்று மந்தமாருதமாக வீசியது. இயற்கையழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஷஜருத்துர்ரின்மீது மற்றோர் இயற்கை வனப்பாகிய குளிர்ந்த சந்திரகாந்தி தன் தேஜஸைக் கக்கியது. அவளோ அவரெதிரில் நின்ற வண்ணமே தன் சிந்தனைகளையெல்லாம் எங்கெங்கோ செலுத்திக்கொண்டிருந்தாள்.

“ஷஜருத்துர்! என்மேல் கோபமா? உலகத்தில் யாதொரு பெண்ணோ, அல்லது ஆணோ எக்காரணம் கொண்டும் விவாகம் செய்துகொள்ளாதிருக்கவே கூடாதென்று நபிகள் நாயகம் ரசூல் (சல்அம்) அவர்களே அறிவித்துள்ளார்கள் என்பதை நீ அறியாயா? அதற்காகவே, நான் அப்படிச் சொன்னேன். நீ இன்னம் எத்தனை நாட்களுக்கு இப்படிக் கன்னிப்பெண்ணாகவே காலங்கடத்தப் போகிறாய்?”

“யா மலிக்கஜ் ஜமான்! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த யான் இவ் வரண்மனைக்குள் காலடி எடுத்து வைத்த பின்னராவது சிறிது சுகவாழ்க்கையை அனுபவித்துவருகிறேன். இதையும் கெடுத்துக்கொண்டு யான் எங்ஙனம் வெளியேறுவேன்? எனக்கு வரப்போகிற கணவர் இந்த வாழ்க்கையின் இனிமைக்கோர் எதிரியாக இருந்தாலோ? இவ்வுலகத்தில் இப்போது எனக்கு யாதொரு துணையுமில்லாமல் தன்னந்தனியளாய் நின்று தவித்துச் சோர்ந்து மடியவேண்டிய யான் தங்கள் கருணை என்னும் நிழலில் தங்கி இளைப்பாறி அகமகிழ்ந்து கொண்டிருக்கையில், என் கையாலேயே என் கண்ணைக் குத்திக் கொண்ட கதைபோல், யான் ஏன் ஒரு முன்பின்னறியாத வேற்று மனிதனை மணந்து மீணடும் சங்கடச் சூறாவளியில் சிக்கிச் சுழன்றிடல் வேண்டும்? யான் ஆண்டவன் அளித்ததைக்கொண்டு திருப்தியுறுகிறேன். என்னை இதே நிலையில் வைத்து அவன் காத்து ரட்சித்தாலே போதும். எனக்கேன் விவாகம்? யானேதும் அதில் பயனிருப்பதாகக் கருதினால்தானே மணம் புரிந்துகொள்ள வேண்டும்?”

“இந்த அற்பக் காரணத்துக்காகவா இப்படி நீ வெறுத்துப் பேசுகிறாய்? நீயும் இந்த அரண்மனையை விட்டுப் பிரியாமல், உனக்கேற்ற நல்ல கணவனும் இங்கேயே அகப்பட்டால், அப்போதுகூட மணம்புரிந்து கொள்ளமாட்டாய் போலும்!”

“யா மலிக்கல் முல்க்! அத்தகைய மனிதர் எவரும் இவ்வரண்மனையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே! எனவே, தாங்கள் கூறுகிற இலக்கணம் பொருந்தியவர் கிடைக்கிற வரையில் இங்கேயே எப்போதும்போல் இருந்துவிடுகிறேன்.”

ஸாலிஹ் பெருமூச்செறிந்தார். “இத்தனை நாட்களாக நீ தனித்திருந்தது போதாதென்றா இனியும் இப்படியே இருக்கப் போவதாகக் கூறுகின்றாய்? இஃதென்ன சபதமோ? பைத்தியக்காரத்தனமாய்ச் சபதம் செய்வது விவேகமாகுமா?”

“நான் அப்படிச் சபதமொன்றும் செய்யவில்லையே, மலிக்! என் மன நிம்மதியற்ற வாழ்க்கையின் மிக மகிழ்ச்சிக்குரிய கட்டத்தைத் தெய்வாதீனமாய் எட்டிப்பிடித்த யான் அந்தப் பெரிய பரிசை இறுதிவரை இருத்திக்கொள்ளவே விழைகிறேன். என்மீது ஏதும் பெரிய அதிருப்தி கொண்டு, அல்லது என்மீது ஏதும் குற்றம் கண்டுபிடித்து, என்னைத் தாங்கள் இங்கிருந்து வெளியேற்றினாலன்றி, யான் வேறெக் காரணத்தை முன்னிட்டும் இவ் வரண்மனையை விட்டுப் பிரிவதில்லையென்றே சபதம் செய்துகொண்டிருக்கிறேன். அச் சபதத்தின் காரணமாகவே யான் தனித்திருந்து மகிழ்ச்சியடைய நாடுகிறேன். அவ்வளவேதான்!”

“நான் மட்டும் உன்னை இங்கிருந்து விரட்டியடித்துவிட நாடியுள்ளேனென்றா நீ நினைக்கின்றாய்? நீயும் இங்கேயே இருந்து, உனக்கேற்ற தகுதியான நல்ல கணவனையும் இங்கேயே அடைவதாயிருப்பின், அப்போதும் நீ தனித்திருக்கத்தான் விரும்புவையோ?”

மன்னர் பிரானின் இவ் வார்த்தைகளை இரண்டா முறையாய்க் கேட்ட ஷஜருத்துர், தன் கண்களை அகல விழித்தாள். ஸாலிஹின் அந்தரங்க எண்ணம் அவள்மாட்டுக் கொண்டுள்ள அன்பயே பிரதிபலிக்கிறதென்று ஷஜருத்துர் நொடிப் பொழுதிலே உணர்ந்தாள். எனினும், பெண்களுக்குரிய சிறப்பான நான்கு குணங்களுள் ஒன்றான மடமையை அடையப் பெற்றிருந்த அவள் நாணத்தால் அதொன்றையும் காட்டிக் கொள்ளவில்லை.

”ஷஜருத்துர்! என் மனப்பூர்வமாக நான் சொல்லுகிறேன் : நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விழைகிறேன்!” என்று அழுத்தந்திருத்தமான குரலில் சுல்தான் ஸாலிஹ் கம்பீரமாய்க் கூறினார். ஷஜருத்துர் தன் காதுகளை நம்பமுடியாமற் கல்லாய்ச் சமைந்துவிட்டாள், கவிழ்ந்த தலையுடனே.

”ஏன் பேசாமல் நிற்கிறாரய், ஷஜர்! நான் திரும்பவும் கூறுகிறேன்; நீ நிமிர்ந்துபார். உன் கட்டழகுமிக்க வெளித்தோற்றம் என் மனத்தை உன்பால் ஈர்த்ததைவிட, நின் புத்திக்கூர்மையும், ஞானவிகாசமும், அறிவுப்பெருக்கமும் உன்மீது என்னை அன்பு கொள்ளச் செய்துவிட்டன. நீ மட்டும் என்னை அங்கீகரிப்பையாயின், அது நானடையும் பெரும் பாக்கியம். மூனிஸ்ஸாவை இழந்து பரிதபித்து நிற்கும் என் நோயுற்ற இதயத்துக்கு நீயொரு மிகவுஞ்சிறந்த சஞ்சீவியாகப் பரிணமித்து நிற்பதால், நான் உன்னைப் பெரிதும் விழைகிறேன். உனக்குச் சம்மதமில்லையா?”

அரசர் ஸாலிஹ் பேசப்பேச, அவளது அகக்கண் முன்னே பழைய விருத்தாந்தங்களெல்லாம் சூறாவளியின் வேகத்திலே சுழன்றோடிக் கொண்டேயிருந்தன. மிகக் கேவலமான அடிமையான தன்னை ஒரு முடிசுமக்கும் மன்னாதி மன்னராகிய ஐயூபி வம்ச சுல்தான் விவாகம் புரிய விரும்புகிறார். அவளுடைய இழிநிலைமை எங்கே? அந்த சுல்தானின் உன்னத மகிமை எங்கே? மூனிஸ்ஸாவின் தகுதி எங்கே? அந்த மூனிஸ்ஸாவின் ஸ்தானத்துக்கு உயர்த்த விரும்புகிற ஷஜரின் தகுதி எங்கே? – சிந்திக்கச் சிந்திக்க, அவளுக்கு மூளை கிறுகிறுத்தது.

அல்லது, அன்று மாலை அவள் அப் பூங்காவுள் நுழையு முன்னர் இம்மாதிரியெல்லாம் நிகழுமென்பதை்தான் எதிர்பார்த்தாளா? அதுவுமில்லை என்றாலும், மூனிஸ்ஸா காலஞ் சென்றது முதல் இதுவரை எப்போதாவது ஒரு முறையேனும் தப்பித் தவறியாவது ஸாலிஹை மணமுடிக்க வேண்டுமென்றாவது அவள் நினைத்ததுண்டா? இப்படியிருக்க, இப்போது அவர் திடீரென்று அவளிடம் இப்படிப் பேசினால், அவளதுள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்? எதிர்பாராத காரணத்தாலும், மட்டற்ற ஆனந்த பரவசம் அவள் மனத்துள் துள்ளியெழுந்ததாலும், தொண்டை சிக்கிக்கொண்டு, வார்த்தைகள் வெளிவரவில்லை. பெருமூச்செறிந்துகொண்டே, தரையைக் காற் பெருவிரலால் கிளறிய வண்ணம் நின்றாள். எனினும், சிறிது தடுமாறிய உள்ளத்துடன் தன்னையறியாமலே, “ஏழையேன் அவ்வளவு பெரிய பாக்கியத்தை யடையப் பெற்றேனோ?” என்று குனிந்தபடியே குழறினாள்.

“ஷஜர்! வாஸ்தவந்தான். நீ என்னை முற்றும் நம்பலாம். நீ அடையப்பெறும் பாக்கியத்தைவிட நானன்றோ பாக்கியசாலி யாவேன்! உலகிற் சிறந்த அறிவுபடைத்த கட்டழகியொருத்தியைப் பெறும் அவ்வளவு பெரிய பாக்கியத்தை நான் அடையப் பெறுவேனா, ஷஜர்?”

இச் சந்தர்ப்பத்தில் அவள் கண்முன்னே பழைய நிகழ்ச்சியொன்று வந்து நின்றது : முன்னர் யூசுபின் இல்லத்திலிருந்து அவளை விற்பனைக்காகக் கொண்டு சென்ற சமயத்தில் அவளுக்கும் அவருக்குமிடையே நடந்த சம்பாஷணைகள் அவள் ஞாபகத்துக்கு வந்தன. “அரண்மனைக்குள் நுழைந்தால் சுல்தானின் மைந்தரை நான் மணக்காமலா போவேன்?” என்று அவரிடம் கூறிய சூளுறவு அவள் மனக்கண் முன்னே வந்து நின்றது. அநாதையாகி, அடிமையாகி, அரண்மனைத் தாதியாகி, இப்போது அரசரின் பிரத்தியேக பிரீதிக்கு இலக்காகி நிற்கும் தன் நிலையையுன்னி, அவளால் ஆனந்தங்கொள்ளாதிருக்க எப்படித்தான் இயலும்?

“யா ஸாஹிபல் ஜலாலில் மலிக்! யானோ தங்கள் அடிமை. அரசரிடும் கட்டளைக்கு முற்றமுற்ற அடிபணியக் கட்டுப்பட்டு நிற்கும் அடியேனைத் தாங்கள் ஏன் சோதிக்கிறீர்கள்? மிஸ்ரின் கீர்த்திமிக்க மன்னாதி மன்னராய் உயர்ந்து மிளிரும் தங்களுக்கு எத்தனையோ மிகமிகப் பெரிய அரச குமாரிகளும், ஐசுவரியமிக்க அழகிகளும் மனைவியாக வருவதற்குப் போட்டியிட்டு நிற்கிற சமயத்தில் என்னை, – அதிலும் அகதியான, அடிமையான என்னை, – தங்களிடம் கையேந்தி அடிபணிந்து உயிர்வாழும் அற்ப ஏழையாகிய என்னை, தங்களுக்கு அரியநாயகியாய் வரக்கூடிய ராணியம்மையாருக்குக் கால்பிடித்துவிடவும் தகுதியற்ற என்னைத் தாங்கள் விரும்புவது பொருத்தமாய்க் காணப்படுகிறதா?” என்று தைரியமாய்ப் பேசினாள்.

“சகலமும் கற்ற நீயா, ஷஜர், இப்படிப் பேசுகின்றாய்! சுல்தானாயிருப்பவன் அடிமையை மணக்கக்கூடாதா? நம் இஸ்லாம் மார்க்கம் மனிதருக்கும் மனிதருக்குமிடையே, அல்லது தகுதிக்கும் பதவிக்குமிடையே, அல்லது செல்வத்துக்கும் வறுமைக்குமிடையே வித்தியாசத்தையா உண்டு பண்ணி வைத்திருக்கிறது? மனமொத்தால் மனைத்தும் இடமொத்து விடுகிறது. நானென்ன, சுல்தானாகவே பிறந்தேனா? அல்லது சுல்தானாக உயர்த்தப்பட்ட காரணத்தால் உன்மீது, அதிலும் சகலகலா வல்லியாகிய உன்மீது அன்புசொரியும் உரிமையை இழந்துவிட்டேனா? சுல்தானாக இருந்தாலும் நானும் ஒரு மானிடன்தானே! எனவே, இம் மானிடன் இனியொரு சுல்தானின் புத்திரியைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்று ஏதாவது கட்டாயமுண்டா? நீ உன்னை எவ்வளவு இழிவானவளாகவும், தகுதியற்றவளாகவும் கருதிக்கொண்டாலும், நான் உன்னை என் அருமை நாயகியாக முன்னமே என் மனத்துள்ளே சிறைப்படுத்தி விட்டேன். என் இந்தத் தீர்மானமான முடிவை இத் தரணியிலுள்ள எவராலும் இனி மாற்றஇயலாது; நான் உன்னை என் மனமாரக் கேட்கிறேன். இஸ்லாத்தின் சட்டப்படி, பரிசுத்தமாகவே வரிக்கிறேன். உனக்குச் சம்மதமா?”

வெண் சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட உயிரற்ற பதுமையேபோல் நின்றுகொண்டிருந்தாள் ஷஜர். சற்றுமுன்னர் மூனிஸ்ஸாவின் பிரிவாற்றாமையால் அவ் வம்மையாரையே நினைந்து நினைந்து கண்ணீருகுத்த அதே மன்னர்தாமா இப்போது இப்படியெல்லாம் அடுக்குகிறார்? என்று அவள் சிந்தித்தாள்; சிந்தை குலைந்தாள்.

”யா மாலிக்!…” என்று அவள் ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.

“நான் உன்னை மனைவியாய் அடைய விரும்புகிறேன். நீ மட்டும் என்னை ‘மாலிக், மாலிக்!’ என்று ஏன் அழைக்கிறாய்?” என்று குறுக்கிட்டு வினவினார். அவள் வதனம் நாணத்தால் சிவந்தது.

“வீராதி வீரர், சூராதி சூரர் சுல்தான் ஸலாஹுத்தீனின் அருமைக் குமாரியை மணக்கும் பாக்கியம்பெற்ற தாங்கள் என்னை அந்த அந்தஸ்துக்கு உயர்த்த விரும்புவதை நினைத்தே நான் சிந்திக்கிறேன்.”

“ஷஜர்! என் காலஞ்சென்ற மனைவியின் ஸ்தானத்துக்கு உன்னையே தகுதியானவனென்று ஆண்டவன் என்னிடம் அனுப்பித் தந்திருக்கும்போது?”

“யானென்ன அவ்வளவு பெரிய பாக்கியசாலியா?”

“சந்தேகமா! நிச்சயமாக நீ பாக்கியசாலிதான். உன்னை இம் மிஸ்ரின் சுல்தானாவாக உயர்த்துவதற்காகவே ஆண்டவன் உனக்கு இத்தனை காலமாகச் சோதனைகளை இட்டு வந்திருக்கிறான். இப்போது நீ மட்டும் என் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாயிருப்பின், நீயே உன்னைப் பாக்கியசாலியாக்கிக் கொண்டதாகத்தான் முடியும்.”

ஷஜருத்துர் மௌனமாயிருந்தாள். இனி அவள் என்ன சொல்ல வேண்டும்? மௌனமாக இருப்பதே ஒத்துக்கொண்டதன் அறிகுறிதானே?

ஸாலிஹ் அவளையே அந் நிலவொளியில் கூர்ந்து நோக்கினார். அவளோ, தரையை நோக்கி மெல்லப் புன்முறுவல் பூத்தாள். “யானோக்குங்காலை நிலனோக்கும் நோக்காக்கால், தானோக்கி மெல்ல நகும்,” என்றாங்கு, அவளுடைய நாணங்கலந்த கவிழ்ந்த பார்வையும், சாந்தமிக்க சந்தி வதனமும், மந்தகாசமும் அவருக்குத் திருப்தியூட்டின. “சரி! நீ தனியாய்ச் சென்று யோசனைசெய்து பார். நான் உன்னை வற்புறுத்தவில்லை,” என்று கூறிச் சமாதானப்படுத்தினார்.

பின்னர், உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே அரசர் தொழில் என்று கூறுமா போன்று இருவரும் பிரிந்தனர். இரவெல்லாம் ஷஜருத்துர் இன்பக்கனவு கண்டுகொண்டும், ஏதேதோ யோசித்துக்கொண்டும் இருந்தாள். அரசரே வலியத் தன் அன்பை அள்ளிக் கொடுக்கும்போது, அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டுப் பின்னர் அவள் எப்படித்தான் ஆத்மசுகம் அடைய முடியும்? அன்றியும், ஸாலிஹ் கூறியதேபோல், ஆண்டவனே வலிய இவ்வுயர்வை அவளுக்கு அளிக்கும்போது, அதைத் தட்டுவது எப்படி? மேலும், காலத்தைமீறி நடப்பது எவரால்தான் இயலும்?

o-O-o

எண்ணி எட்டு நாட்கள் சென்றன. காஹிரா வெங்கும் குதூகலம் சமாளிக்க முடியவில்லை. அரண்மனையோ, என்றுமில்லாத் தேஜஸுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. மக்களின் வதனமெல்லாம் மகிழ்ச்சிமிக்குக் காணப்பட்டன. அன்றைத் தினந்தான் சுல்தான் ஸாலிஹுக்கும், துருக்கி நாட்டு அழகி ஷஜருத்துர்ருக்கும் நிக்காஹ் என்னும் திருமணம் முடியும் சுபதினமாய்க் காணப்பட்டது.

இதுவரை கன்னிப் பெண்ணாய்க் காலங்கடத்திச் சகிக்கொணாத் தனிவாழ்க்கையைக் கடத்திவந்த நம் கதாநாயகி அன்றுமுதல் சுல்தானின் மாட்சிமை தங்கிய பட்டத்து ராணியாய், ‘கோப்பெருந் தேவி’யாய்ப் பரிணமித்துவிட்டாள்!

<<அத்தியாயம் 21>> <<அத்தியாயம் 23>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment