வாளாயுதத்தைக் கொண்டே இஸ்லாம் இப்பாருலகினில் பரத்தப்பட்டதென்றும், முஸ்லிம்களே வலிய வாளேந்திக் கொண்டு அக்கம் பக்கத்திலிருந்த நிரபராதிகளான காபிர்கள் மீது அநியாயமாய்ப் பாய்ந்து தாக்கினரென்றும் வெட்கமில்லாது பொய்ப் பிரசாரம்

புரிகிற காமாலைக் கண்படைத்த எதிர்மதவாதிகள் சற்றே கண் திறந்து பார்த்து, காஹிராவுக்கும் மிஸ்ருக்கும் “சிலுவை யுத்தக்காரர்கள்” எனப்பட்டோர் இழைத்த அக்கிரமத்தையும், அதை எதிர்த்துத் தடுத்து நிறுத்த அம் முஸ்லிம்கள் எடுத்துக்கொண்ட தற்காப்புப் போர் முறையையும் மனவொருமையுடன் ஆராய்ந்து சிந்தித்து, யார் “அரக்கர்?” என்று நிதானம் பண்ணிக் கொள்வார்களாக ! அக்கிரமக்காரர் லூயீ அரசரா, அல்லது மிஸ்ரின் சுல்தானாவா? அநியாய யுத்தம் தொடுத்தவர் கிறிஸ்தவரா, அல்லது முஸ்லிமா? என்பதையும் அவர்களே தெரிந்துகொள்ளட்டும்.

குளிர் காலத்து வாடைக் காற்றுச் சீறிக்கொண்டிருந்த அந்த நவம்பர் மாத இறுதி வாரத்தின் இரவிலே மூடுபனி கொட்டிக்கொண்டிருந்தது; சந்திரன் இன்னம் உதயமாகவில்லை. அந்நேரத்தில் ‘சிலுவை யுத்தம்’ புரிய வந்த அவ் வநாகரிகக் கொள்ளைக் கூட்டத்தினர், அந்தப் பண்டை நாகரிகம் படைக்கப்பெற்ற புனித நகர் காஹிராவை நெருங்கி, அதன் எல்லையைத் தொட்டுவிட்டார்கள். சூரிய அஸ்தமயத்துக்கு முன்னரே கண்ணுக்கெட்டாத தூரத்திலே வடக்கே தெரிந்த அந்தப் போர் வீரர்களைக் கண்டதனாலேதான், அரண்மனையின் உயரமான மாடத்தில் அல்லுபகல் அனவரதமும் கண்கொட்டாது விழித்துப் பார்த்து நின்ற ஹபஷீ சேவகர்கள் பெரு நகாராவை – போர் முரசை – முழக்கினார்கள். ஏற்கெனவே அபூபக்ர் ஆதிலுக்கு மகுடம் சூட்டப்பட்ட அன்றைத் தினத்திலே முழங்கிய நகாராவின் சப்தத்தைக் கேட்ட ஷஜருத்துர் இன்றுதான் இரண்டாம் முறையாகக் கேட்டார். அவர் அக்கணமே தொழுந் தலத்தைவிட்டுத் துள்ளித் துடித்து, வாரிச் சுருட்டி எழுந்து, ஓட்டோட்டமாகக் கிழக்கு வாயிலை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றார். இனி ருக்னுத்தீனை உடனே போர்க் களத்துக்கு அனுப்பியாக வேண்டும் அன்றோ?

நகாரா முழக்கம் கேட்டவுடனே காஹிராவாசிகள் குதித்தெழுந்தனர். தத்தம் கையிலிருந்த அலுவலை அப்படி அப்படியே விட்டுவிட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, “அல்லாஹு அக்பர்!” என்றும் “வலா காலிப இல்லல்லாஹ்” என்றும் பெரு முழக்கமாக முழக்கி விரைவாக வெளியே பாய்ந்து, நீல நதி தீரத்தை நோக்கித் தாவினர். அவர்கள் விழுந்தடித்து ஓடியதால் விளைந்த பேரிலைச்சல் ஒருபுறம்; அவர்கள் கைகளில் தாங்கியிருந்த ஆயுதங்களை ஏந்திப் பிடித்ததால் விளைந்த வீராவேசம் ஒருபுறம்; நாற்காற் பாய்ச்சலிற் காற்றெனப் பறக்கும் வாம்பரிகளின் வையாளி வேகம் ஒருபுறம்; கட்கங்களும் ஈட்டிகளும் இருட்டிலே ஒன்றுடனொன்று மோதியதால் விளைந்த கலகலத்த பேரொலி ஒருபுறம்; ஆண்டவன் பாதையிலே தற்காப்புப் போர் புரியச் செல்வதால் எழுந்த உத்வேக உணர்ச்சியால் அப் படைவீரர்களின் உள்ளத்துள் குமுறிப் பாய்ந்தெழுந்த வீராவேசம் ஒருபுறம்….. நகராவின் ஓங்கிய ஓசை ஓயு முன்னமே காஹிரா நகர் பட்டபாட்டை வருணிக்க வார்த்தைகளில்லை!

வெண்ணிலா இல்லா வானத்தின் காரணமாகக் காஹிரா இருளடைந்திருந்ததுடன், பனியின் கடுமையால் எங்கும் புகைப்படலமே மூடிக்கொண்டு இருந்தது. குளிர் காலத்தில், அதிலும் இரா வேளையில் எதிரிகள் யுத்தத்துக்காக வந்திறங்கினால், அந்தக் காட்சி எப்படியிருக்கும் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. போர் நிலையை முன்னிட்டு இரா வேளையில் தீவட்டிகளைக் கொளுத்தக் கூடாதென்னும் சட்டம் முன்னரே பிறப்பிக்கப்பட்டிருந்தபடியால், மிகப் பயங்கரமான காரிருளே எங்கும் கம்மிக்கொண்டிருந்தது. நீலநதி வழியாகவும், கரையோரமாகவும் முன்னேறி வந்த சிலுவை யுத்தக்காரர்களுக்குத் தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும், எவ்விடத்தில் பாடிவீடு அமைத்துக்கொள்வது என்பதையும், அக்கும்பிருட்டில் நிதானிக்கவே இயலவில்லை.

அந்த நேரத்தில் புர்ஜீ மம்லூக்குகள் மிகவும் உஷாராகவும் வெகு ஜாக்கிரதையாகவும் இருந்தபடியால், எதிரிகள் காஹிராவின் எல்லையை மிதித்ததும் மிதிக்காததாகவும் இருக்கிற தறுவாயிலேயே முஸ்லிம்களின் கையிலிருந்த தற்காப்பு வாட்களுக்கு நூற்றுக்கணக்கிலே நொடிப் பொழுதில் இரையாகி விட்டார்கள். தட்டித் தடுமாறிக்கொண்டு இருட்டிலே தடவிய வண்ணம் நடந்த அக் கிறிஸ்தவர்களின் முதல் வரிசைப் படைகள் இப்படித் திடீரென்று கொலைபுரியப் பட்டபடியால், அடுத்த வரிசையில் நின்றவர்கள் சட்டென்று பின்னேறினர். இதற்கிடையில், நதியோரத்தில் சாவகாசமாகக் கரை இறங்கிக்கொண்டிருந்தவர்களைத் தீவிலிருந்த பஹ்ரீ மம்லூக்குள் குபீரென்று பாய்ந்து, நிர்மூலமாக்கினர். முன்னே நின்றவர்கள் பட்ட பாட்டைப் பார்த்துப் பின்னே நின்றவர்கள் பின்னுக்குத் தள்ளவும், நதியோரத்தில் நின்றவர்கள் பஹ்ரீகளின் தாக்குதலைத் தாங்க முடியாமல் முன்னுக்குத் தள்ளவும், “பின்னேறுங்கள்! பின்னேறுங்கள்!” என்னும் கூக்குரலும், “முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!” என்னும் மாபெருங் கூச்சலும் மிகப் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணி விட்டன.

லூயீ மன்னரோ, அல்லது கிறிஸ்தவப் படைகளோ, இம் மாதிரியான எதிர்பாராத் தாக்குதலைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை. அந்த இருளிரவில் அவர்கள் காஹிராவுக்குள் காலடி எடுத்து வைத்ததும், பஞ்ச தந்திரக் கதையில் குரங்கு ஆப்பைப் பிடுங்கியதும் ஒரே மாதிரியாயிருந்தன. பல்லாயிரம் பேர்களைப் பலி கொடுத்த அப் பொல்லாத நேரத்திலே அவ்வெதிரிகள் தங்கள் “மரண வாயில்” என்னும் காஹிராவிலே இறங்கினார்கள்.

மம்லூக்குகளும் ஏனை முஸ்லிம் வீரர்களும் அக் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த இன்னல்களும் இடையூறுகளும் ஒருபுறமிருக்க, அவ்வெதிரிகள் இருட்டில் ஒன்றும் புலனாகாமல் தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்டார்கள். நதியோரத்திலும், நகர்வாயிலிலும் லூயீயின் படைகள் பெற்றுக்கொண்ட தாக்குதல்களால் விளைந்த முன்னேற்றப் பின்னேற்ற நெரிசல்களின் பயனாகப் பல கிறிஸ்தவர்கள் நசுங்கியும், மிதித்துத் தொகைக்கப் பட்டும் போயினர். முன்னே இருந்தவர்கள் பின்னோக்கியும், பின்னே இருந்தவர்கள் முன்னோக்கியும் பாய்ந்து கொண்டிருக்கையில், நடுவில் அகப்பட்டவர்கள் நரகலோகத்துக்கு ஏகினார்கள்.

பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கும், முறுக்கு உரலுள் புகுந்த குழைத்த மாவும் படாத பாட்டையெல்லாம் லூயீயும் அவருடைய பரிவாரங்களும் படவேண்டியவர்களாயினார்கள். இயந்திரக் கல்லைக் கழுத்தில் கட்டிக்கொண்டு நீருள் மூழ்குபவன் தன் தலையை வெளியே உயர்த்த எவ்வளவு பாடுபடுவானோ, அவ்வளவு பாடுபட்டுத் திரும்பியேனும் ஓடிப்போய் விடலாமென்று லூயீ முடிவு கட்டினார். ஆனால், அதற்கிடையில் மம்லூக்குப் படைப் பல முழுதும் கிறிஸ்தவப் படைக்குப் பின்னே வந்து நின்று அணிவகுத்து விட்டார்கள். அம்மம்ம! என்ன கிடுக்கி இது!

எனவே, முன்னும் பின்னும் பெரிய அரணாகச் சூழ்ந்து வளைந்து கொண்ட முஸ்லிம் பாக்கு வெட்டிப் பரிவாரங்களுக்கிடையே லூயீயின் படையினர் செயலற்று ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். குளிரின் கடுமையால் அக் கிறிஸ்தவர்களின் வீரமும் வீறாப்பும் பனிக்கட்டியேபோல் உறைந்து போய்விட்டதுடன், முஸ்லிம்களின் மும்முரமான தற்காப்பு நடவடிக்கைகளைக் கண்டு அக் கும்பிருட்டிலே தடுமாறியும் நெஞ்சங் குமுறினார்கள். இன்னதுதான் நடந்தது; இன்னதுதான் நடக்கப் போகிறது; இன்ன இன்ன மாதிரிதான் செய்யவேண்டும் என்கிற எத்ததைய உணர்வுமின்றி, பித்துப் பிடித்த பிசாசுகளேபோல் பரிதாபகரமாய் நின்று தவித்துப் பதறிவிட்டார்கள்.

சிலுவை யுத்தக்காரர்களின் நிறங் குன்றிய தோற்றத்தையும், மெய்பதறிய காட்சியையும் சற்றே கண்டு ரசிப்பதற்காகக் கீழ்வானத்தில் நிலா மூடுபனியைச் சிறிதே துளைத்துக்கொண்டு, தன் மங்கலான சாம்பல் நிற ஒளியைச் சிந்தித்துக்கொண்டு மெல்லக் கிளம்பியது. இதற்கிடையில் இருதரப்பினரும் தாம் தாம் நின்றுகொண்டிருந்த இடங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். இடுக்கோடு இடுக்காய் எதிரிகள் அவசரம் அவசரமாகப் பாடிவீடுகளை ஒருவாறு நிறுவிக்கொண்டார்கள். பிரெஞ்சுதேச, அல்லது ஜெர்மானிய பகுதியின் மிகக்கடுமையான குளிரிலெல்லாம் விறைத்து விறைத்துப் பதப்பட்டிருந்த அவ்வெதிரிகளுக்குக் காஹிராவின் இலேசான குளிர் மிகவும் இதமாகவும் கதகதப்பாகவுமே இருந்தது போலும்!

அந்த நேரத்திலே நம் சேனாதிபதி ருக்னுத்தீன் அங்கு வந்துவிட்டார். அவரிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எல்லா முஸ்லிம்களும் தத்தம் நடவடிக்கைகளைச் சட்டென்று நிறுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். அதற்கிடையில் நிலா வெளிச்சம் சற்று அதிகரித்து விட்டபடியால், அந்த இடம் எல்லார் கண்ணுக்கும் பளிச்சென்று காட்சியளித்தது. தலையிழந்த முண்டங்கள் அங்கங்கே குவியலாகக் கிடந்தன; உடலை விட்டுப் பிரிந்த தலைகள் கண்டகண்ட இடங்களில் பனங்காயேபோல் உருண்டு கிடந்தன; உதிர வெள்ளம் ஆறாய்ப்பெருகி உறைந்து காணப்பட்டது; சில அங்கங்களைப் பறிகொடுத்த குற்றுயிர்ப் பிணங்கள் தம்முயிர்க்கு மன்றாடிக் கொண்டு கிடந்தன; நீல நதியிலிருந்து படவுகளில் இறங்கிய எதிரிகள் கரைமீதேறு முன்னரே வெட்டி வீழ்த்தப்பட்டதால் பாய்ந்த குருதி வெள்ளம் அந் நீல நதியின் நிறத்தைச் செங்கடல்போல் செய்து விட்டது.

போர் துவங்கு முன்னரே இவ்வளவு பெரிய நஷ்டமும் கஷ்டமும் எதிரிகளுக்கு விளைந்து விட்டமையால், காஹிராவாசிகள் பூரிப்படைந்து, புன்முறுவல் பூத்த வதனத்துடனே மேலும் திடசித்தத்துடன் காரியத்தைச் செய்தார்கள். ஆனால், வந்திறங்கியதும் இறங்காகதுமாயிருந்த எதிரிகள், இம்மாதிரியான “நல்வரவேற்பைப்” பெற்றுக்கொண்டதைக் கண்டு, பெருந் திகில் கொண்டுவிட்டார்கள். கலவரம் மிகுந்த கலங்கிய தோற்றமே ஒவ்வொரு கிறிஸ்தவன் மூஞ்சியிலும் பிரதி பலித்துக்கொண்டிருந்தது.

தற்காப்பற்ற தமீதாமீது பேடித்தனமாய்ப் பாய்ந்ததைப் போல் காஹிராவையும் கவளீகரம் செய்துவிடலாமென்றால், அது முடிந்த காரியமா? பொழுதுவிடியச் சற்று நேரம் இருக்கையிலே இருதரப்பினரின் அணிவகுப்புக்களும் சித்தமாகி முடிந்தன. முஸ்லிம்கள் இந்த ஜிஹாதில் மிகப் பெரும் வெற்றியடைய வேண்டுமென்று ஒவ்வொருவரும் இருகையேந்திக் காலைத் தொழுகையில் பிரார்த்தனை புரிந்தனர்; இந்தத் தற்காப்புப் போரில் தோல்வியடைந்தால், இஸ்லாத்துக்கே பேராபத்து வந்து விடுமே என்று மன்றாடினர். அதே சமயத்தில், இன்னம் முப்பது நாட்களில் வரப்போகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்படி யெப்படிக் கொண்டாடலாம் என்னும் பைத்தியக்காரத்தனமான வீண் கனவுகளைக் கண்டுகொண்டு லூயீயின் படையினர்கள் படுக்கையில் புரண்டுருண்டார்கள். விழித்துக்கொண்டிருந்தவர்களோ, மறுநாள் விடிந்ததும் நடக்கப்போகும் போரில் தங்கள் கைவரிசைகளைக் காட்டுவதற்குத் துணை புரியும் பொருட்டு, சீசாக்களில் அடைக்கப்பட்டிருந்த புளித்துப்போன திராக்ஷை ரசத்தை வயிற்றுக்குள்ளேயூற்றி நிரப்பி வைத்தார்கள். பூமி தன்னைத் தானே 24 மணிக்கொருமுறை சுற்றிக்கொள்கிறது என்னும் உண்மையை நாம் கண்ணாற்காண முடியாமல் தத்தளிக்கும்போது, அந்தச் சிலுவை யுத்தம் புரிய வந்த சீதேவிகள் அவ்வுண்மையைச் சாராயம் நிரம்பிய உதரத்துடனே நிதரிசனமாகக் கண்டுகளித்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்!

கிறிஸ்தவர்கள் தூக்கக் கிறுகிறுப்பாலும், குடி மயக்கத்தாலும் போதையேறித் தடுமாறிக்கொண்டிருக்கிற நிலையிலேயே பொழுதும் புலர்ந்தது. அன்று கி. பி. 1249 நவம்பர் மாதம் 25-ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களோ, ஆண்டவன்மீது கொண்டிருந்த அழியாத மெய்ந் நம்பிக்கையாலும், அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்து அதிக நியாயமான தற்காப்புப் போர்புரிய வேண்டுமென்று வைத்திருந்த வைராக்கிய சித்தத்தாலும் புதிய ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டு, அந்த ஜிஹாதெ கபீருக்காகச் சிங்கம்போல வீரத்துடன் பாய்ந்தெழுந்தார்கள். சூரியன் கிளம்புவதற்கும் காட்டு மிறாண்டிகளை எதிர்த்து முஸ்லிம்கள் புறப்படுவதற்கும் நேரம் சரியாயிருந்தது.

காஹிரா நகரின் எல்லையில் போர் ஆரம்பித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், ஷஜருத்துர் அரண்மனைக் கோட்டைக்குள்ளே என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை நோக்குவோம்.

நகாரா முழக்கங் கேட்டுக் கிழக்கு வாயிலண்டை ஷஜருத்துர் வந்ததும், அங்கிருந்த படையினர்க்குக் கடுமையான கட்டளை பிறப்பித்து, அவர்கள், என்ன நேர்ந்தாலும், அப்பக்கம் இப்பக்கம் அசையவே கூடாதென்று தடையுத்தரவைப் போட்டு விட்டார். பின்பு கூடாரத்துக்குள் நுழைந்து, ஒரே ஒரு மெல்லிய மெழுகு வர்த்தியை மட்டும் கொளுத்திவிட்டு, அதன் ஒளி ரேகைகள் சுல்தானின் ‘மூமிய்யா’ மீது நேரே விழாதபடி பொருத்தி வைத்தார். ருக்னுத்தீனை ஷஜருத்துர் நிமிர்ந்து பார்த்தபோது, அலை மோதிய உள்ளத்தால் கசிந்து போயிருந்த கண்களில் அவல நீர்த் திவலைகள் முத்துப்போல் உதிர ஆரம்பித்து விட்டன. சுல்தானாவானாலென்ன? பெண்ணான்றால், பேதைமைத் தன்றோ? பரம்பரையாகவே மிஸ்ரின் ஸல்தனத் ஷஜருக்குச் சொந்தமாயிருந்திருந்தாலும், அல்லது அன்று ஸாலிஹ் உயிருடனே இருந்திருந்தாலும், அப் பிராட்டியார் இவ்வளவு கடுங்கவலைப் பட்டிருக்கக் காரணம் இருந்திருக்க மார்க்க மிராது.

யுத்தத்தில் வெற்றி அல்லது தோல்வி நிச்சயமாதலால், ஸல்தனத் தமக்குச் சொந்தமாயிருந்து, முஸ்லிம்கள் தோல்வி அடைவதாயிருப்பின், அதனால் பாதகமில்லை. அல்லது சுல்தான் நேரிலிருந்து யுத்தத்தில் அபஜயத்தைப் பெற்றுக்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால், முன்பின் தெரியாத வேற்றிடத்திருந்து வந்து, அதிருஷ்ட வசத்தால் அரசியாகி விட்டால், இந்த ராஜ்யம் ஷஜருத்துர்ருக்கு எங்ஙனம் சொந்தமாகிவிட முடியும்? அப்படிச் சொந்தமில்லாத ஒரு ராஜ்யம் தோல்வியடைந்தால், அந்தக் பழிக்கு மட்டும் எப்படி இவர் ஆளாகாது தப்பவியலும்?

குறைந்த பக்ஷம் தூரான்ஷாவேனும் இங்கிருந்து கவனித்து விதிப்படி நடக்கட்டும் என்றிருந்தாலும், பாதகமில்லை. எல்லாவற்றையும் விடுத்து, சுல்தான் மாளவும், மாண்ட செய்தியை வெளியே விட முடியாமற் போகவும், பட்டத்திளவரசன் பக்கத்தில் இல்லாமலிருக்கவும், பகைவர்கள் காஹிராவுள் காலடி எடுத்துவைக்கவும், பிரேதத்தை வெகு சூசகமாக இறுதிவரை மூடிவைக்க வேண்டிய மகா இசகு பிசகான மாபெருங் கொடிய பொல்லாத சோதனை வந்து விடிந்திருக்கவும் நேர்ந்தபோது, அபலையான, அதுபோதே விதவையான, ஒரு சிறு பெண், அதிலும் அயல் நாட்டு அடிமைப்பெண் எப்படித் தான் கண்கலங்கிப் பரிதபிக்காதிருக்க இயலும்? இயற்கையை ஓரளவு வெல்லலாம்; ஆனால், மனங்கலங்கும் அவலக் கொடுமையை எங்ஙனம் அநேக நாள்வரை அமுக்கிப் பிடிக்க முடியும்? அதுவும் ஒரு பெண் பிள்ளையினால்?

ருக்னுத்தீனுக்கு ஷஜருத்துர்ரைப் பார்க்கும் போதே மிகவும் பரிதாபகரமாயிருந்தது; அவருக்கும் அழுகை வந்துவிட்டது. எனினும், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைக் கீழே குனிந்து, கண்ணீரைச் சன்னையாகத் துடைத்துக் கொண்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல் நடுங்குகிற தம் கைகளை ஜாக்கிரதையாய்த் திடப்படுத்திக் கொண்டு, மந்தணமான தொனியில் மிகுந்த விசுவாசத்துடனே பிரமாணம் பண்ணினார் :-

“இதுபோது ஆண்டவன் நமக்கு இறக்கியிருக்கிற இந்தப் பெருஞ் சோதனையில், எனது உடலில் ஆவியிருக்கிறவரை யான் எல்லா அம்சங்களிலும் ஒரு பக்கா முஸ்லிமாகவும் மூமினாகவும் நடந்து கொள்வேனாக! சுல்தான் நம்மிடையே இல்லாமற் பறிக்கப்பட்ட இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலே சுல்தானாவாகிய தங்களுக்கே யான் முற்ற முற்ற அடிபணிந்து நடப்பேனாக! வேற்று நாட்டு வனிதையாகிய தாங்களே இந்த நாட்டின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் எப்பாடு பட்டேனும் காப்பாற்றித் தீரவேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டிருப்பதைக் காணும் யான், இந்த நாட்டின் செல்வத்தாலேயே வளர்க்கப்பட்டு, இங்குள்ள சுல்தானாலேயே உப்பிடப்பட்டு, இந்த மேலான உயரிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் யான், மிஸ்ரியாகவும் இந்த ஸல்தனத்தின் பாதுகாவலனாகவும் இறுதிவரை நின்று எல்லாவற்றையும் காப்பாற்றுவேனாக!

“இப்போது தங்கள் திருச்சமுகத்தில் இறைவன் சாட்சியாகச் செய்து கொடுக்கும் பிரமாணத்தினின்று அணுவளவேனும் யான் பிறழ்வேனானால், அந்த இறுதித் தீர்ப்பு நாளன்று அவ் வேகவல்லோனின் கொடிய சினத்துக்கு இரையாகக் கடவேனாக! சகல சக்தியும் ஒருங்கே படைத்த அந்த அருளாளனே இந்த நாட்டையும், இங்குள்ள அரியாசனத்தையும், ஐயூபிகளின் இணையற்ற கீர்த்தியையும், என்றென்றும் நிலைநாட்ட எனக்குப் போதிய சக்தியை அளித்தருள்வானாக! இன்னம் எப்படிப்பட்ட மாகொடிய சோதனைகள் வந்துற்ற போதினும், இந்த ஜிஹாதெ கபீரில் யான் சர்வசங்க பரித்தியாகம் செய்து, இணையற்ற பெரு வெற்றியையே நிலைநாட்டி வைப்பேனாக!…

“ஏ, எல்லாம் வல்ல இறைவனே! யான் என் நிஷ்களங்கமான ஹிருதயத்துடன் மிக்க மெய்யாகப் பேசுகிற வார்த்தைகளை நிறைவேற்ற எனக்கு நீ சக்தியையும் சாமர்த்தியத்தையும் அளித்தருள்வாயாக!” என்று கூறி, இறுதி வாக்கியத்தின்போது ருக்னுத்தீன் தலையை ஆகாயத்தின் பக்கல் அண்ணாத்தினார். அதுபோது ஷஜருத்துர் தம்மையறியாமலே “ஆமின்!” என்றார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 39>> <<அத்தியாயம் 41>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment