03. காகிதாயுதம்

by நூருத்தீன்

சென்னையில் பிரபலமான அச்சக நிறுவனம் ஒன்று. அச்சுத் தொழிலுக்கு முக்கியமான மூலப் பொருள் எது? அச்சு இயந்திரம், மை என்று பலவற்றைச் சொன்னாலும் வெகு முக்கியமானது காகிதம். நிறைய காகிதப் பணத்தைச் செலவழித்து

வாங்கும் காகிதம் என்பதாலா அல்லது தங்களுடைய தொழிலுக்கு முக்கியமான அடிப்படை அது என்பதாலா என்று தெரியாது, நிறுவன முதலாளிக்கும் அவருடைய உறவினர்களான நிர்வாகிகளுக்கும் காகிதத்தின்மீது அக்கறை அதிகம். மிக மிக அதிகம்.

குறிப்புகள் எழுதுவதாக இருந்தாலும் பஸ் டிக்கெட் அளவிலான துண்டுக் காகிதத்தில் விஷயத்தை அடக்கி விடுவார்கள். அனாவசியமான முறையில் யாராவது காகிதத்தை வீணாக்குவதைப் பார்த்தால் எரிச்சலும், அதட்டலும் வெளிப்படும். அச்சுத் தொழிலில் சம்பந்தப்படாத வெளியாட்களுக்கு ‘அட! ஒரு பேப்பருக்கா இவ்ளோ அக்கறையும் ஆத்திரமும்’ என்று தோன்றும். என்ன செய்ய? அவர்களது ஜீவாதாரம் அது என்பதால் அதன் முக்கியத்துவம் அவர்களுக்குத்தான் புரியும். அதில் குறை சொல்வதற்கும் ஒன்றுமில்லை.

மேல்நாட்டினருக்கும் காகிதம் மிக முக்கியம். ஆனால் அது வேறுவித முக்கியத்துவம். தண்ணீர் ஒவ்வாமையான அவர்களுக்குக் காகிதத்தின் பயன்பாடு முற்றிலும் வேறு வகை. அந்தக் கண்றாவியெல்லாம் இருக்கட்டும், அச்சு நிறுவனம் இப்பொழுது இங்கு எதற்கு என்று பார்த்துவிடுவோம்.

கடமை தவறாத ஊழியர்கள் என்று எந்த நிறுவனத்திலாவது உள்ளனரோ? அந்த நிறுவனத்திலும் கடமை தவறுபவர் இருந்தனர். வேலையில் கோக்குமாக்கு புரியும் அச்சுத் தொழிலாளிகளுடன் நிறுவன மேலாளர்களுக்கு நாள்தோறும் ஏதாவது அக்கப்போர் நடக்கும். அது என்னவாகும் என்றால் கடமை தவறும் ஊழியர்களைச் சீர்படுத்த, சரியானபடி வேலைவாங்க, அதட்டலும் தொழிலாளர்களுக்கு இணக்கமற்ற நடவடிக்கைகளும் என்று அவர்கள்மீது மேலாளர்கள் பாய்வர்.

எதிர்த்துப் பேச முடியாத ஊழியர்கள் அதையெல்லாம் கேட்டுவிட்டு, சகித்துக்கொண்டு தங்கள் பணிக்குத் திரும்புவார்கள். ஆனால் அவர்களது மனத்திற்குள் பொங்கியெழுந்த வெறுப்பு இருக்கிறதே அதை என்ன செய்வார்கள்? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருந்தார்கள்.

அச்சு இயந்திரத்தில் ஏற்றுவதற்குத் தயாராக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்குமே பெரிய அளவிலான வெள்ளைக் காகிதகங்கள், அவற்றிலிருந்து  ஒன்றை முழுசாக உருவி உணவு உண்ட தங்கள் கையைத் துடைத்துக் குப்பையில் வீசிவிடுவார்கள்.

துண்டு காகிதத்தையும் வீணாக்காத முதலாளியின் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் ஏற்படுத்தும் நட்டம் அது. அதில் திருப்திபட்டுக் கொள்ளும் அவர்களது மனது.

சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமே, முரட்டுத்தனமான வகையில் பிரச்சினையை எதிர்கொள்வது கூடாது என்று. அதன் பக்க விளைவுகளுள்  ஒன்றுதான் இது.

அதிகாரத்தில் இருப்பவர் தமக்குக் கீழுள்ளவரிடம் பிரச்சினையை முரட்டுத்தனமாகக் கையாள்வது இயல்பான சங்கதி. பெற்றோர் பிள்ளைகளை முதுகில் சாத்துவது, ஆசிரியர்கள் மாணவர்களை முட்டியில் தட்டுவது, தம்பதியருள் அதிகாரம் ஓங்கியவர் மற்றவரை மோசமாகத் திட்டுவது, என்று பிரச்சினைகள் மீதான இவ்வகையான முரட்டுத்தன மோதல் போக்கு உலக யதார்த்தம். அது பிரச்சினையைத் தீர்க்குமோ? தீர்க்காது. தீர்ந்துவிட்டதைப் போல் தெரிந்தால் அது மாயை. அல்லது தற்காலிகம்.

நாம் உறவாடும் மனிதர்களிடம் ஏற்படும் தொடர் பிரச்சினைகளை அப்படியே அமைதியாகவும் விட்டுவிடக் கூடாது; அதை முரட்டுத்தனமாகவும் எதிர்கொள்ளக்கூடாது; பேச வேண்டும்; முறைப்படி பேசித் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே மேற்சொன்ன உதாரணம்.

முரட்டுத்தனத்திற்கு ஆட்பட்டவருக்கும் அதிகாரம் இருக்கும். அது அவர் அளவிலான சிறு அதிகாரமாக இருக்கம். அதை அவர் தமது இயல்புக்கு ஏற்பப் பிரயோகித்துத் தம்முடைய எதிர்ப்பை, எதிர்வினையைக் காட்டத்தான் செய்வார்.

ஏனெனில் அனைவரிடமும் அவரவருக்கேற்ற காகிதம் உண்டு!

சரி, இந்தளவிற்குப் புரிகிறது. பிரச்சினைகளைப் பிறகு எப்படித்தான் பேசுவது? எவ்விதம் எதிர்கொள்வது?

அவற்றையெல்லாம் விலாவாரியாகப் பார்க்கும் முன் மற்றொரு விஷயம் வெகு முக்கியம். இன்னும்  சொல்லப்போனால் முக்கியமான எச்சரிக்கை.

உங்களது தெருவில் ஒரு ரௌடி வசிக்கிறான். பொழுது விடிந்து பொழுது போனால் தெருவில் போவோர், வருவோரிடமெல்லாம் சண்டை, ஆபாச வசவு, சில சமயம் வழிப்பறி என்று அவனோர் அராஜகப் பேர்வழி. நீங்களும் அவனைத் தவிர்க்க, ஒவ்வொரு முறையும் பக்கத்துத் தெருவைச் சுற்றி வந்து, அதையே உங்கள் வீட்டிற்குப் பாதையாகவும் ஆக்கிக் கொண்டீர்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் பொறுத்தது போதும் என்று உங்கள் வீர உணர்ச்சி பொங்கியெழுந்து விட்டது. அல்லது தெரியாத்தனமாய் இந்தத் தொடரைப் படித்த வேகத்தில் அவனிடம் பேசி மோதி உறவாடிவிடுவோம் என்று துணிந்து தெருவில் இறங்கிவிட்டீர்கள்.

அவனிடம் சென்று, “மிஸ்டர் சண்டியர். உங்களது செயல்களெல்லாம் இத் தெருவின் பிரஜைகளாகிய எங்களுக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்துகின்றன. நாங்களெல்லாம் உங்கள்மீது அதிருப்தியில் இருக்கிறோம்” என்ற ரீதியில் ஆரம்பித்தால் தலையில் நாலு தட்டும் முகத்தில் குத்தும் இலவசமாகக் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

இந்த ரௌடியின் பிரச்சினை சட்டப் பிரச்சினை. இது காவல் துறையின் உதவியை நாட வேண்டிய விஷயம். இதைப்போல்-

நிறுவனத்தில் பெண்களிடம் முறைதவறி நடக்கும் சக பணியாளர், மருத்துவமனையின் மருந்துகளைத் திருடி விற்கும் நர்ஸ், முதலாளிக்குத் தெரியாமல் கல்லாவில் கைவிட்டு ‘ஆட்டயப் போடும்’ ஊழியன் போன்றவர்களிடம் பேசித் தீர்க்க முனைவது சரியான அணுகுமுறையன்று. அவை சிகரெட்டை விடமோசமாக உங்களது உடல்நலனுக்கு உடனடியாக ஊறு விளைவிக்கக் கூடும். எனவே அவற்றைச் சட்ட ரீதியாக அணுகுவதே முறை. அப்படித்தான் அணுகவேண்டும்.

சட்ட ரீதியாகவா? என்று மனந் தளரக் கூடாது. தமிழ் சினிமா பார்த்துக் கெட்டுப் போய்த் தம்மை ஹீரோவாக நினைத்துக் கொண்ட நேர்மையான போலீஸார் இன்னம் நமது காவல் துறையில் மிச்சமிருக்கிறார்கள்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 2 நவம்பர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment