10. மோதல் ரெடி?

by நூருத்தீன்

பிரச்சினைகளைக் கூறு போட்டு முடித்தாயிற்று. பிரச்சினையில் எது வெகு முக்கியமான கூறு என ஆய்ந்து மூலக்கூறை கண்டுபிடித்து விட்டீர்கள். அதை ஒற்றை வாக்கியத்தில் எப்படிச் சொல்வது என்பதையும் யோசித்தாயிற்று. அடுத்து? பிரச்சினையுடன் மோத வேண்டுமா; அது மோதுவதற்கு உகந்ததுதானா

 என்று அறிய வேண்டும்.

ஒரு பிரச்சினையைத் திறம்பட அறிந்து உணர்ந்துவிட்டாலே போதும், மோதலுக்கு நான் ரெடி, நீ ரெடியா என்று எழுந்து நிற்கலாம் என நினைத்தால் அது தப்பு.

‘அட என்னங்க இது? அப்ப எதற்கு முந்தைய ஒன்பது அத்தியாயங்களாக வியாக்கியானம்’ என்று என்னுடன் மோதலுக்கு வந்துவிடாதீர்கள். சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுடன் மோதுவதற்குமுன் அதன் பின் விளைவுகளைக் கருதிப்பார்த்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாம்.

அந்தக் கால டிரான்ஸிஸ்டர் ரேடியோவில் விவித பாரதியும் உங்கள் விருப்பமும் கேட்டு வளர்ந்தவர் தங்கப்பன். அவருக்குத் திருச்சிற்றம்பலம் என்றொரு மகன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். சுற்றமும் நட்பும் அளவற்றுச் செய்த கேலியால் வெறுத்துப்போய் திருச்சிற்றம்பலத்தைத் திருகி “திரு” என்று சுருக்கி, அதை “ட்டிரு” என்று தங்லீஷாக்கிக் கொண்ட தனயன் அவன். தகப்பனாருக்கு மட்டும் வாய் நிறைய முழுப்பெயரையும் சொல்லி அழைத்தால்தான் திருப்தி.

அத்தகு லேட்டஸ்ட் மகனின் கைகள் எதைச் சுமக்கும்? எல்லோரையும்போல நவீன மானிடர்களின் அடையாளமான சாமர்த்தியக் கைப்பேசி. சதா அதில் பேசிய கதியும் டெக்ஸ்டிய விரலுமாக இருந்தான் ட்டிரு. தகப்பனாருக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பெரும் எரிச்சல். இதை ஒரு பெரும் பிரச்சினையாகக் கருதி அவனுடன் மோதுவதைவிட, தலைமுறை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அமைதி காத்து அவர் தமது எல்லையை விரிவாக்குவது நல்லது. கைப்பேசியான அந்த உபகரணம் தீயப் பழக்கத்திற்கு அவனை இட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது கண்டிப்பும் அறிவுரையுமாக அமையலாமே தவிர, அந்தச் சாமர்த்தியக் கைப்பேசியின் பொருட்டு அவர் மோதினால் பிரச்சினை திசை மாறிவிடும்.

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

எது கற்பனையான பிரச்சினை, எது உண்மையான பிரச்சினை, எதனுடன் மோதுவது என்பதை அறிவதற்கு எளிமையான சட்டங்கள் என்று எதுவுமில்லை.

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியம்மாவுக்கு, ‘தாம் வைத்ததுதான் சட்டம்; தாம் சொன்னதை மட்டும் ஊழியர்கள் செய்தால் போதும்’ என்ற எளிய எண்ணம். ஊழியர்கள் யாரேனும் சுயமாக முடிவெடுத்து அதைத் தெரியப்படுத்தினால் எகிறி விழுவதும் தாமாகவே சிறப்பாகக் காரியமாற்றினால் அவர்களைத் திட்டி அவர்களது பணியை மாற்றுவதும் பணியிலிருந்து அவர்களை நீக்கி மட்டந் தட்டுவதும் அந்த அம்மாவின் வழிமுறை. தம்மிடம் கை கட்டி, வாய் பொத்தி, அம்மா புகழ் பாடுபவர்களே சிறந்த ஊழியர்கள் என்ற நல்லுள்ளத்துடன் நிர்வாகம் புரிகிறார் அவர்.

‘இதென்ன சர்வாதிகாரம்?’ என்று முதலில் அவையெல்லாம் உங்களுக்கு உறுத்தினாலும் ‘இவர் இரும்பு மனுஷி. திறமையான நிர்வாகி’ என்று நினைத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்துவிடுகிறீர்கள்.

ஒரு கட்டத்தில் உங்களையே அவர் முட்டாள் என்று திட்டி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி விடுகிறார். வெள்ளம் கரை உடைந்தது அப்பொழுதுதான் உங்களது அறிவுக்குப் புலப்படுகிறது. விஷயம் எல்லை மீறிவிட்டதை உணர்கிறீர்கள். இப்படியான விஷயங்களில் முதல் உதாரணத்தின் எல்லை விரிவாக்கம் நல்லதில்லை. அந்த நிர்வாகத்தில் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளுடன் மோதிப் பேசித் தீர்வு காண வேண்டும்.

விஷயம் என்னவென்றால் எது கற்பனையான பிரச்சினை, எது உண்மையான பிரச்சினை, எதனுடன் மோதுவது என்பதை அறிவதற்கு எளிமையான சட்டங்கள் என்று எதுவுமில்லை. வெகு நிச்சயமாக வாக்குறுதி ஒன்று மீறப்பட்டுள்ளது என்றால் அது கண்டிப்பாக மோத வேண்டிய பிரச்சினை ஆகும்.

நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்படாதபோதோ, மீறப்படும்போதோ எதிர்பார்ப்புகள் நிச்சயமாக உடைக்கப்படுகின்றன. ஊழியர்கள் தங்களது வாக்குறுதிகளை மீறுகிறார்கள். இவை நிச்சயமாக மோத வேண்டிய பிரச்சினை.

தெளிவற்ற பிரச்சினை, மோதுவதா வேண்டாமா என்று தடுமாற்றமான நிகழ்வுகளில் முடிவெடுப்பது சிரமம் பிரச்சினையைப் பேசுவதால் அது வேறு ஆபத்திற்கு வழி வகுக்கும்… மோதுவதால் அது வேறு வகையான போருக்கு இட்டுச் செல்லும்… உறவு கெடும், வேலை போகும்… என்பதான சாத்தியங்கள் உள்ள பிரச்சினைகளில் மோதுவதா வேண்டாமா என்று எப்படி முடிவெடுப்பது?

இப்படியான ‘மோதலாமா? வேண்டாமா?’ விஷயங்களுக்கு விடை காண வேண்டிய சவாலை இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொள்ளச் சொல்கிறார்கள் தகவல் தொடர்பு கலை வல்லுநர்கள்.

முதலாவது – பேச வேண்டிய விஷயங்களில் பேசாமல் மௌனம் காக்கிறீர்களா?

இரண்டாவது – பேசாமல் அமைதி காக்க வேண்டிய விஷயங்களில் முந்திரிக் கொட்டையாக மூக்கைத் துருத்துகிறீர்களா என்று யோசிக்கச் சொல்கிறார்கள் அவர்கள்.

இதை எப்படி அறிவது? பார்ப்போம்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 10 ஜனவரி 2016 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment