14. வாய் திறக்கும் நேரம்

by நூருத்தீன்

பிரச்சினைக்கு உரியவருடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்காமல் அமைதியாக இருந்து விடுவோம் என்று முடிவெடுக்கிறோம் இல்லையா, அதற்கு என்ன காரணம்? பெரும்பாலும், நம்மால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்ற அவநம்பிக்கை. அது நமது இன்னல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

 

உடனே அவர்களோ அல்லது அந்தச் சூழ்நிலைகளோதாம் முட்டுக்கட்டை; பிரச்சினைகள் தீராததற்கு அவையே காரணம் என்று நம்பி மூக்கைச் சிந்துவோம். அதனால் பிரச்சினை தீர்ந்து விடுமா. ம்ஹும்! மாறாக அது பிரச்சினைகளை நமது கட்டுக்குள் அடக்காமல் ஆக்கிவிடும்.

உங்கள் சகலையிடம் உங்களுக்குப் பிரச்சினை. அதைப் பற்றி உங்கள் நண்பரிடம் நீங்கள் புலம்பித்தள்ள, இறுதியில் அவர், “இதை அவரிடம் பேசியிருக்கியா?” என்று கேட்கிறார். அதற்கு உங்கள் பதில், “அந்தாளு கிட்ட யாரு பேசுவா? சரியான கிறுக்கன்” என்கிறீர்கள்.

குடும்பப் பிரச்சினையில் கணவரிடம் உள்ள அதிருப்தியைத் தோழியிடம் பகிர, “அவரிடம் இதையெல்லாம் சொல்லிப் பாரேன்” என்று ஆலோசனை அளிக்கிறார் தோழி. “ஆமாம் போ! அந்த மனுசன் என் பேச்சை அப்படியே கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறாராக்கும்” என்ற ரகத்தில் அமையும் பதில்கள் நமக்குப் பரிச்சயமானவை.

பேசி மோத வேண்டிய இடத்தில் வாயைப் பொத்திக் கொண்டு இருந்துவிட்டு ஏன் இப்படி அங்கலாய்க்கிறோம்? ‘நான் இல்லை; அவன்தான் காரணம்’ என்ற மனோபாவம்.

பிரச்சினைகள் தீராமல் நம் முயற்சிகள் தோல்வி அடைவதற்குப் பிறரின் குறைகள் காரணம் அன்று. நாம் அந்தப் பிரச்சினைகளுடன் தவறான முறையில் மோதுவதே காரணம்.

குறித்த நேரத்தில் வரவில்லை என்பதற்காகச் சிப்பந்தியிடம் பேசும்போது பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசாமல் அவரைத் தனிப்பட்ட முறையில் சீண்டிக் கேலிசெய்து, வெறுப்பேற்றி உள்குத்துக் குத்தினால் என்னாகும்? அது அவரது தன்மானத்தைத் தாக்குமா இல்லையா? அவருக்குக் கோபம் உண்டாகி யதார்த்தமான பிரச்சினை இப்பொழுது சண்டை, சச்சரவாக மாறிவிடும். அதைப் பார்த்து, ‘செய்றதையும் செஞ்சுட்டு இப்ப சண்டைக்கு நிற்கிறானே’ என்று மேற்கொண்டு நமக்கு ஆத்திரம் ஏற்படுமே தவிர, பக்குவமின்றிப் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டோமே என்று நாம் நமது தவறை உணர்வதில்லை.

சிணுங்கும் குழந்தையைச் சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில், அதன் தொடையில் கிள்ளிவிட்டு, அது ‘வீல்’ என்று அழ ஆரம்பித்ததும் அதை நொந்து கொள்ளலாமோ?

வீட்டில் அட்டகாசம் செய்யும் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறீர்களா? ‘நான் வேணும்னே அடிக்கலேம்மா. அவன்தான் முதல்ல என்னைப் பிடிச்சுத் தள்ளினான்’ என்று தப்பிக்கப் பார்ப்பார்கள்.

நம்முள் பலரிடம் மற்றொரு பிரச்சினை உள்ளது. ஒரு பிரச்சினையுடன் மோதுவதற்கு நாம் பொறுப்பேற்கும்போது ஏதோ பெரிய சாமர்த்தியசாலியைப்போல் நாம் செயல்படுவோம். நமது பக்குவமின்மையால் அந்தப் பிரச்சினையோ உச்சக்கட்டத்தை அடைந்துவிடும். பிரச்சினை எளிதாகியிருக்காது. நாம் எப்படி இந்த அனுமானத்திற்கு வந்தோம்?

நம்முடைய பாடத்திட்டத்தின்படி நாம் நம்முடைய நேரத்தைத் தலைநகரங்களின் பெயர்களை மனனம் செய்வதிலும் இன்னும் பிறவற்றிலும் செலவிடுகிறோமே தவிர, மக்களுடன் உறவாடும் ஆற்றலைப் பாடங்களின் மூலம் கற்க வேண்டும், கற்க முடியும் என்பதையே உணர்வதில்லை. அதனால் நமக்குச் சமூகத்துடன் சரியான முறையில் உறவாடி அவர்கள்மீது செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் அமைவதில்லை. ஆனால் உண்மை யாதெனில், இந்தத் திறமையைக் கற்கவும் முடியும்; அதை மேம்படுத்தவும் முடியும்.

பிரச்சினையைப் பேசித் தீர்க்க முனையாமல் அதற்கு அஞ்சி ஸைலண்ட் மோடுக்கு நாம் சென்றிருப்போம். நமது அச்சம் உண்மையானதே. அதனால் என்ன? உலகம் ஒன்றும் முற்றுப் பெற்றுவிடாது. மனத்தைத் தேற்றிக்கொண்டு திறமைகளை மேம்படுத்திப் பட்டைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அவநம்பிக்கையாகத் தோன்றினால் நம்மைச் சுற்றிப் பாருங்கள். எத்தனை வெத்து வேட்டுகள் அரசியலிலும் சமூகத்திலும் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களே அப்படி என்றால் உறவை உருப்படியாக மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் நமக்கு என்ன பிரச்சினை?

உறவாடும் திறமையில் குறை இருக்கிறது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் நாம் அழுது அழுகிப் போகத் தேவையில்லை. அந்தக் குறையினால் நமக்கு ஏற்படும் அச்சம் நம்மைச் செயலற்றுப் போகச் செய்யாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிக்கலைக் கையாளும் திறமை நம்மிடம் குறைவாக இருக்கத்தான் செய்யும். அதைச் சீர் செய்துகொள்வதுதான் முறையே தவிர அச்சத்தின் காரணமாய் வாயை மூடிக்கொள்வது தப்பு.

வாயை மூடிக் கொள்வது என்று நாம் முடிவெடுத்தால் பிரச்சினையிலிருந்து பின் வாங்குகிறோமா, அல்லது அந்தப் பிரச்சினைக்கு உரிய சரியான முடிவு அதுதானா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொண்டால் போதும். உள்மனம் நமது காதுக்குள் உண்மையைச் சொல்லிவிடும்.

பேச வேண்டிய விஷயத்தில் பேசாமல் அச்சம், தயக்கம் போன்றவற்றின் காரணமாக வாயை மூடிக் கொள்கிறோமா என்பதை அறிய நான்கு சூட்சமங்கள் உள்ளன.

முதலாவது நமது உணர்ச்சிகளை நமது செயல்களில் வெளிப்படுத்துவது. வாயை மூடிக்கொண்டு அதன் வலியைச் செயல்களில் காட்டுவோம். பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு துன்பப்படுகிறோம் என்ற தவறான நினைப்பை மனத்தில் விதைத்துவிட்டு, சம்பந்தப்பட்டவருடன் இணக்கமற்ற வகையில் செயல்களால் மோதிக் கொண்டிருப்போம். இது தவறு. வாயைத் திறந்து பிரச்சினைகளை அவருடன் பேசித் தீர்த்துக் கொள்வதே சரி.

அடுத்தது, ஊர் உலகமே இந்தப் பிரச்சினையைக் கண்டு கொள்ளவில்லை. நமக்கு என்ன போச்சு என்று வாயை மூடிக் கொள்வது. ஆனால் இவ்விஷயத்தில் நமது உள்மனம் நம்மைக் குத்திக் குடைந்துகொண்டே இருக்கும். வாயைத் திறந்தே ஆக வேண்டும் என்பதை உள்மனம் நம்மிடம் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். நமது அமைதி தவறு என்பதற்கான சரியான அறிகுறி அது. செவிமடுக்க வேண்டும்.

மூன்றாவது, வாயைப் பொத்திக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை மட்டுப்படுத்தியும் திறப்பதால் பெரும் விபரீதம் நிகழ்ந்து விடும் என்று மிகைப்படுத்தியும் நினைப்பது. அதனால் பேச்சுவார்த்தை பெரும் பாரம் என்று அச்சப்பட்டு நம்மை நாமே வலுக்கட்டாயமாகச் சமாதானம் செய்து கொள்கிறோம். மோதினால் பேச்சு வார்த்தை கடினமாகுமா என்று சிந்திக்காமல் நாம் இந்தப் பிரச்சினையில் பேச வேண்டுமா, கூடாதா என்று நம்மைக் கேட்டுக் கொண்டால் குழப்பம் வராது.

நான்காவது, நாம் இந்தப் பிரச்சினையில் தலையைக் கொடுப்பதால் பயன் ஏதும் இல்லை என்று நினைத்துக் கொள்வது. பிரச்சினைக்கு உரியவர்களுடன் பேசுவது சாத்தியமற்றது அல்லது நான் எனது உச்சக்கட்டத் திறமையைப் பிரயோகித்துவிட்டேன்; இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தவறாக நம்புவது. பிரச்சினைக்கு உரியவர்களை அணுகுவது சாத்தியமற்றது என்பதைவிட அவர்களை எப்படி அணுகுவது என்பதை நாம் அறியாததுதான் பிரச்சினை.

ஆக –

சற்று மெனக்கெட்டு நாம் நமது திறமையையும் வார்த்தைப் பிரயோகங்களையும் அணுகுமுறையையும் செப்பனிட்டு மேம்படுத்திக்கொண்டால், பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளில் வாயை மூடிக்கொண்டு இருந்துவிடாமல் சரியான வகையில் பேசி வெற்றி அடைய முடியும்.

அடுத்து, பேசக் கூடாத விஷயங்களில் பேசி மாட்டிக்கொள்வதையும் அதை எப்படித் தவிர்ப்பது என்பதையும் பார்ப்போம்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 23 மார்ச் 2016 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

 

Related Articles

Leave a Comment