‘மோதுவதா? வேண்டாமா?’ என்று முடிவெடுக்க இரண்டு முக்கிய விஷயங்களை அறிய வேண்டும்; அதில் முதலாவது – ‘பேச வேண்டிய விஷயங்களில் பேசாமல் மௌனம் காக்கிறோமா என்பதாகும்’ என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பேச வேண்டிய விஷயங்களில் ஸைலன்ட் மோடைத்
தேர்ந்தெடுத்து அமைதி காப்பது என்பது குடும்பங்களில், அலுவலகங்களில் நிகழும் அன்றாட நிகழ்ச்சிதான். சில நேரங்களில் இடம், பொருள், ஏவல் உணராமல் வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொள்வது நிகழ்ந்தாலும் பெரும்பாலும் வாயைப் பொத்திக்கொண்டு அமைதி காப்பது நமது வழக்கம். நமக்கு மிகவும் வசதியான தேர்வு அது.
‘நமக்கு ஏன்ம்பா வம்பு?’ என்பது பொதுவான காரணமாக இருக்கலாம். ஆனால் எந்த நேரத்தில், எந்த விஷயத்தில் பேச வேண்டும், எவ்வகையான பிரச்சினைகளில் அமைதி காக்க வேண்டும் என்பதை நாம் சரிவர உணர முடியாததுதான் முக்கியமான காரணம். இன்னும் சொல்லப்போனால் சரியான காரணம். அதை எப்படிக் கண்டறிவது?
அதற்கு நம்மை நாமே நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, காப்பி அடிக்காமல், கூகுளில் தேடாமல் மெய்யான பதில் உரைக்க வேண்டும். அவை –
- பேசாமல் பொத்தி வைத்த கவலைகளும் அக்கறைகளும் எனது செயல்களில் வெளிப்படுகின்றனவா?
- உள் மனதில் உறுத்துகிறதா?
- பேசி இன்னலுக்கு உள்ளாவதைவிட வாயைப் பொத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேனா?
- ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கையாலாகத்தனமாக எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேனா?
இதில் முதலாவது கேள்வியைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவில் பால் எக்மேன் (Paul Ekman) என்றோர் மனோவியலாளர். அவருக்கு வயது எண்பத்தொன்று. ‘மன உணர்ச்சிகளும் அது வெளிப்படுத்தும் முக பாவனைகளும்’ மனோவியலில் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடம். அந்த ஆராய்ச்சியில் மூழ்கிக் கரையேறிய அவர் பத்தாயிரம் முகபாவனைகளைக் கொண்டு ‘atlas of emotions’ என்று ஒரு தொகுப்பையே உருவாக்கிவிட்டார். ‘பொய்களைக் கண்டுபிடிப்பதில் உலகின் தலைசிறந்த மனிதக் கருவி’ (the best human lie detector in the world) என்று சொல்லும் அளவிற்கு அவருக்குப் பெரும் மதிப்பு.
அவர் தமது முப்பதாண்டுக் கால ஆராய்ச்சியில் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில், ‘நாம் நமது யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு உடலின் சில தசைகள் இயங்குகின்றன; ஆனால், உள் மன உணர்ச்சிகளை மறைத்தாலோ, அல்லது பொத்தி வைத்தாலோ அந்தத் தசைகளுக்குப் பதிலாக வேறு சில தசைகள் இயங்குகின்றன’ என்பது ஒன்று.
இதற்கு எளிய உதாரணம் உண்டு. மெய்யான உற்சாகத்துடன் கூடிய புன்னகையின்போது கண்களைச் சுற்றியுள்ள தசைகள் இயங்கும். பொய்யான, சம்பிரதாயமான புன்னகைகளின்போது அந்தத் தசைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிடும். இதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நமது மெய்யான மன உணர்ச்சியை நமது முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
இதைவிட எளிய உதாரணமும் உண்டு. மனைவியிடம் பொய் சொல்லிப் பாருங்கள். அடுத்த நொடி உங்கள் சாயம் வெளுத்துவிடும். அதென்ன மாயமோ தெரியவில்லை, பட்டப்படிப்போ, ஆராய்ச்சியோ எதுவுமே தேவையின்றி அது அவர்களுக்குக் கைவந்த கலை.
‘சரி, சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதானே?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், அதேதான். ஆனால், அதை விட இன்னும் கொஞ்சம் அதிகம். அதாவது நமது உடல் மொழியும் செயல்களும் நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்; நமது ஆழ்மன உளைச்சலை வெளிப்படுத்திவிடும்.
|
பேசித் தீர்க்காமல், வாயைப் பொத்தி அடைத்து வைக்கும் பிரச்சினைகளை நமது உடலாலும் அதன் செயல்பாடுகளாலும் நாம் நிச்சயமாக வெளிப்படுத்திவிடுவோம்.
‘னங்’ என்ற சப்தத்துடன் டேபிளின்மீது தேநீர்க் கோப்பையை உங்களது மனைவி கொண்டுவந்து வைத்தால் அது ஒரு வகையான வெளிப்பாடு.
பட்டப்படிப்பு முடித்தும் எவ்வித அக்கறையும் இன்றித் தண்டச்சோறாய் வீட்டைச் சுற்றி வரும் மகனைக் கண்டிக்காமல் வாய்ப்பொத்தி இருக்கிறார் தகப்பனார். சேர்ந்து அமர்ந்து உணவருந்தும் சமயத்தில் ஒருநாள், ‘ரொம்பக் களைப்பா இருப்பார்; துரைக்கு இன்னொரு ஆம்லெட் போட்டுக் குடும்மா’ என்கிறார் தம் மனைவியிடம். வெறும் வாக்கியமாக வாசித்தால் அக்கறையாகத் தென்படும் அந்த வார்த்தைகளை அவர் தம் மனைவியிடம் கூறும் தொனியும் முகபாவனையும் அவரது உள்மனக் கோபத்தைச் சந்தேகமேயின்றித் தெளிவாக வெளிப்படுத்திவிடும்.
நீங்கள் மேனேஜராக வேலைக்குச் சேரும் நிறுவனத்தில் நெடுங்காலமாக உழைக்கும் ஊழியர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதே இயல்பாக இருக்கிறது. ஆனால், அதற்கேற்றாற்போல் அவர்கள் சற்று அதிகமான நேரம் தங்கியிருந்து தங்களது வேலைகளை முடித்து விடுகிறார்கள். நிறுவனம் குறிப்பிட்டுள்ள வேலை நேரத்தை உதாசீனப்படுத்தும் அவர்களது செய்கைகள் உங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. ஆனாலும், ‘சரி அதற்கென்ன? ஆக வேண்டிய வேலை சரியாகத்தானே நடக்கிறது’ என்று சமாதானப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்து விடுகிறீர்கள்.
உங்களது நிறுவனம் அந்நிய நாட்டு நிறுவனத்துடன் தொழில் தொடர்பு உடையதாக இருப்பதால் சில மீட்டிங்கிற்காகக் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுடைய சக ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அவர்களுடைய காலதாமதமான வருகையினால் அடிக்கடி மீட்டிங் நேரத்தை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கால தாமதப் பிரச்சினையைப் பேசாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உங்களது உள் மனசு, அதை இப்பொழுது உங்களது செயல்பாடுகளில் வேறுவிதமாக வெளிப்படுத்த ஆரம்பிக்கும். எள்ளலாகவோ, பரிகாசமாகவோ, சம்பந்தமற்ற வேறு விஷயங்களில் வேறு வடிவிலான கோபமாகவோ அவை உங்களுடைய ஊழியர்கள்மீது பாயும். அது இணக்கமற்ற சூழலை உருவாக்கி வேறுவகையான நிர்வாகப் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும்.
இப்படியான உங்களது செயல்களை நீங்கள் அறிந்து கொண்டால், ‘நான் இருப்பது ஸைலண்ட் மோட். மோதிப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையைப் பேசாமல் அமைதி காக்கிறேன்’ என்பது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மை.
எனவே மோதுங்கள்.
(தொடரும்)
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 19 ஜனவரி 2016 அன்று வெளியானது