வெள்ளிக்கிழமை பிரியாணி

by நூருத்தீன்

சியாட்டில் downtown-இல் ஜும்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ள amazon.com சகோதரர்கள் சில வாரங்களுக்குமுன் ஒரு வேலை செய்தார்கள். முஸ்லிம் உணவகத்திடம் பேசி, சகாய விலைக்கு சிக்கன் பிரியாணி வாங்கி ஏழு டாலர் நன்கொடைக்கு ஒரு பாக்ஸ் வினியோகம். வேலையிலிருந்து தொழ வரும் சகோதரர்களின் மதிய உணவு தேவையைக் கவனித்ததாகவும் ஆச்சு; அந்த இடத்திற்கான வாடகைத் தொகையைச் சமாளித்ததாகவும் ஆச்சு என்று திட்டம்.

நாள்தோறும் வீட்டிலிருந்து உணவு கட்டிச் செல்லும் சமர்த்துப் பையன் நான். அதனால் என்ன? இப்படியான நல்வாய்ப்பைத் தவற விடுவது குற்றமாகிவிடாது? நாக்கின் சாபத்திற்கு ஆளாகலாமோ? அதனால், வெள்ளியன்று மட்டும் வீட்டில் லீவு சொல்லிவிட்டு, இங்கு நன்கொடையாளன் ஆனேன்.

ஆனால் இன்றைய ஜும்ஆவில் திட நெஞ்சினனாக ஆக வேண்டியதாகிவிட்டது. நஃப்ஸுடன் போராடி ஜெயிக்க வேண்டும் என்று வீராப்பு ஏற்பட்டு, வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து, பிரியாணி பாக்ஸகளைக் கண்டதும் எங்கே நொடி நேர சபலத்தில் மனவுறுதியை இழந்து விடுவேனோ என்று அஞ்சி தொழுகைக்குக் கிளம்பும்முன் வீட்டு உணவைச் சாப்பிட்டும் முடித்துவிட்டேன்.

‘அப்படியென்ன திடீர் வைராக்கியம்? ஏழு டாலர்கூட நன்கொடை அளிக்காமல் கஞ்சத்தனமா?’ என்றெல்லாம் கேட்கத் தோன்றினால் தாராளமாகக் கேளுங்கள்.

மிக நெருங்கிய நண்பர் ஒருவர். Fiji நாட்டைச் சேர்ந்த சகோதரர். 57 வயதுதான் ஆகிறது. ஓடியாடி வேலை செய்பவர். நேற்றைய முன்தினம், பள்ளிவாசலில் என்னிடம், ‘திடீரென்று நெஞ்சடைப்பு. மருத்துவரிடம் காண்பித்தேன். அடைப்பு இருக்கிறது. நீக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சில வாரங்கள் அல்லது மாதங்கள் வேலைக்கும் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும்’ என்றார். மிகவும் அதிர்ச்சியும் வருத்தமாகவும் இருந்தது. நேற்று சிகிச்சை முடிந்து அவர் நலம். அல்ஹம்துலில்லாஹ்.

அவரது அந்தப் பேச்சால் என் உடல்நலம் பற்றிய அதிகப்படியான அக்கறை ஏற்பட்டு, திடீர் வைராக்கியம் தோன்றி, அதன் விளைவு நீங்கள் மேலே வாசித்த பத்திகள். எப்பொழுதாவது கையை வலித்தால்கூட வாய்வுத் தொல்லையா, வேறு ஏதாவதா என்று எண்ணம் ஏற்படுகிறது. அதனால் இந்த ஜும்ஆ பிரியாணியுடன் என் நஃப்ஸுக்கு போட்டி வைத்துக்கொண்டேன்.

பூகோளம்போல் பாக்ஸிங்கில்கூட மோதி விடலாம். ஆனால் முதல் வரிசையில் தொழுகையில் நின்று, கண் எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரியாணி பாக்ஸ்களின் மீதான பார்வையைத் தவிர்த்து, அது காற்றில் பரப்பும் நறுமணத்தைத் தவிர்க்க முடியாமல் சுவாசித்து, அதனால் நாக்கில் சுரக்கும் நீரை உலரவிட்டு, ‘அடக்கு! அடக்கு!’ என்று மனத்திற்கு ஆணையிட்டு வெளியேறி வருவது இருக்கிறதே, உலக மகா சவால். (நன்கொடையை மட்டும் அளித்துவிட்டேன் என்பதை அடைப்புக் குறிக்குள் இட்டுவிடுகிறேன்.)

இன்று ஜெயித்துவிட்டேன்! ‘இதைப்போல் அடுத்த வாரமும் பாக்ஸை நோக்கி என் கை நீளாது’ …

என்பதற்கு உத்தரவாதமில்லை. யார் கண்டது? கையை நீட்டிவிட்டாலும் நீட்டிவிடுவேன்.

‘அவ்வளவுதானா நீயும் உன் வைராக்கியமும்?’ என்று யாராவது கேட்டால், ‘பிரியாணிப் பித்தன் பேச்சு; ஜும்ஆ வந்தால் போச்சு’ என்று புதுமொழி சொல்லி சமாளித்தால் போச்சு.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment