ஒவ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. உரத்துச் சொல்லி விளம்பரம் வேண்டாம், அங்கலாய்த்து எரிச்சலைக் காட்ட வேண்டாம் என்று எழுதாத விதியில் ஊடகங்கள் கட்டுப்படுத்திக் கொண்டாலும் முற்றிய கத்திரிக்காய் அவ்வப்போது செய்திகளாக, வீடியோ பதிவாக சந்தைக்கு வந்துவிடுகின்றன. ‘தாதா’வின் மகன் போலீஸாகும் விசித்திர ஜில்லா மேற்குலகம்.
தமிழ்த் திரை உலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன் இஸ்லாத்தை ஏற்றதாகச் செய்தி வந்ததும் தமிழகத்தில் அனைவர் மத்தியிலும் அச்செய்தி இயல்பான அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. யாரோ ஒருவர் அப்துல் காதர் ஆனாலும் சரி; சமூகப் பிரபலம் ஒருவர் முஸ்லி்ம் ஆனாலும் சரி இறைவனின் பார்வையில் அவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை. மனம் மாறியவரின் இனியான இறையச்சமும் செயல்பாடுகளுமே அவனது தராசின் எடைக்கற்கள்.
ஆனால் சமூகப் பிரபலங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அச்செய்தி சமூகத்தின் இரு தரப்பினர் மத்தியிலும் அவரவர் மனநிலைக்கேற்ற தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அது தவிர்க்க முடியாத தாக்கம். அவற்றுள் ஒன்று பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தியது! இன்றைய சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான பா.ராகவன் எழுதிய பிரளயத் தாலாட்டு.
பொழுது விடிந்து, சாய்ந்து, மீண்டும் விடியும்வரை பல்லில் சிக்கிய துணுக்கு, கர்மம் ஒரே நிறத்திலான இட்லி எனத் துவங்கி கார்ப்பரேஷன்காரன், பிச்சைக்காரன் எனத் தொடர்ந்து, செத்துத் தொலைக்கலாம் என்றால் வராத கடன் பாக்கி வரை ஏராளத் தொல்லை, மாளாத சிக்கல்கள் – மதம் மாறு; தீர்ந்தது விஷயம் என முடியும் எள்ளல் தாலாட்டு (sarcasm) அது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் நிலத்தின் இரத்த வரலாற்றை ஆழ உட்புகுந்து எழுதிய ஒருவருக்கு, மத்திய கிழக்கின் எண்ணெய் அரசியல், தீவிரவாதம் போன்றவற்றை நடுநிலையுடன் அணுகிய எழுத்தாளருக்கு, இஸ்லாமிய மதமாற்றம் என்பதைப் பற்றி இத்தகைய குறுகிய எண்ணவோட்டமா?
இத்தனைப் பிரளயமுள்ள நம் நாட்டின் யுவன் போகட்டும், நிறம் மாறாத இட்லி கிடக்கட்டும், பிரட்டிஷ் நாட்டின் யுவான் ரிட்லிக்கு என்ன கேடு? துப்பாக்கியா, வாளா எந்த கருமாந்தரத்திற்கு அஞ்சி துண்டை உதறித் தலையில் முக்காடு?
முஸ்லிம் பெண்களுக்கு உரிமை பெற்றுத் தந்தே தீருவோம், அவர்கள்தம் தலை முக்காட்டைக் களை நீக்குவோம்; அவிழ்த்துப்போட்டு அரை நிர்வாணம், முழு அவமானமாகத் திரிவதை சட்டப்படி கடமையாக்குவோம் என்று முஷ்டி முறுக்கி நிற்கின்றனவே ஐரோப்பிய நாடுகள், அந்த நாடுகளில்தாம் அந்த மண்ணின் மகள்கள்தாம் இஸ்லாத்தை ஏற்று, ‘கட்டுப்பெட்டித் தனத்திற்கு’ மாறுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் ‘கொடூர பெண் அடக்குமுறைகளுக்கு’த் தங்களைச் சமர்ப்பித்துக் கொள்கிறார்கள்.
அனைத்து அனாச்சாரங்களும் சீர்கேடுகளும் காமக் களியாட்டங்களும் சட்டப்படி ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டில் வாழும் அந்த மண்ணின் மைந்தர்கள்தாம் இஸ்லாத்தை ஏற்று, கட்டற்ற சுதந்திரங்களை இழக்கிறார்கள்.
ஏன் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் இஸ்லாமிய அதிருப்தியாளர்களும் அதன் எதிரிகளும்?
மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளும் நீட்டப்படும் விரல்களும் இஸ்லாத்தின் சட்ட திட்டத்தைப் பற்றியும் வரலாற்றின் சில நிகழ்வுகளைப் பற்றியும் சுற்றி வருகின்றனவே தவிர, பகவான் என்பவன் யார் என்ற மூலத்தைத் தொடுவதில்லை. அனைத்து அண்டங்களும் அதன் நிர்வாகமும் யார் என்ற சூட்சுமத்தைத் தேடுவதில்லை. தெளிவின் துவக்கம் அங்கல்லவா புதைந்துள்ளது?
இவன்தான் பகவான் என்ற அந்த ஒருவனை மட்டுமே ஏற்றுக் கொள்ளாத வரை, நம்பாத வரை எந்தத் தர்க்க ரீதியான பதில்களில் ஒருவருக்கு விடை கிடைத்துவிட முடியும்?
இவன்தான் பகவான் என்று நம்புவதில் தயக்கம் இருக்கும்வரை அவன் அறிவித்த இறுதித் தூதரிடம் எப்படி நம்பிக்கை கொண்டுவிட முடியும்?
அதனால்தான், ஆரம்பக்கட்டக் கேள்விகளில் விடை தேடிப் பெறுபவர்கள் என்னதான் சொல்கிறது இந்த நூல் என்று குர்ஆனை வாசிக்கிறார்கள்; பயில்கிறார்கள். சட்டெனப் புத்திக்குப் பொறிதட்டி இஸ்லாத்தைத் தாமே ஏற்கிறார்கள். அதற்கடுத்த கட்டமாக குறுக்கெழுத்துப் புதிர் கட்டங்களுக்கான அத்தனை விடைகளும் கச்சிதமாக அவர்களுக்குப் புலப்பட்டுவிடுகின்றன.
சென்னையிலுள்ள செங்கிஸ்கான் எனும் சகோதரர் ஒருவர் கடந்த வாரம் தமக்கு ஏற்பட்டிருந்த அனுபவத்தை எழுதி, புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். அவரும் நண்பர்களும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்குக் குர்ஆன் தமிழாக்கம் அளித்திருக்கிறார்கள்.
நெற்றி நிறைய நாமத்துடன் வந்த பெரியவர் ஒருவருக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி, ‘படியுங்கள். இதில் சந்தேகம் ஏற்பட்டால் எனது மொபைல் எண் அதில் உள்ளது! தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற போது, பதில் அளித்திருக்கிறார் பெரியவர்.
“பகவானோட வார்த்தைன்னு சொல்றேள். எப்படி சந்தேகம் வரும்? கண்டிப்பா விளங்கும்! உங்களிடத்தில் கேட்க மாட்டேன்!”
நெற்றிப்பொட்டில் அடித்ததைப்போல் இருந்தது என்று எழுதியிருந்தார் அந்தச் சகோதரர். அது மிகையான வார்த்தையாக இருக்க முடியாது. ஏனெனில் –
குர்ஆனைத் திறந்து திறப்பை ஓதிவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினால் பகவான் சொல்கிறான்,
“இஃது இறைமறை; இதில் எவ்வித ஐயமுமில்லை. இறையச்சம் உடையோருக்கு இது நேர்வழிகாட்டியாகும்.” (2:2).
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 02 மார்ச் 2014 அன்று வெளியானது
Image courtesy of Stuart Miles / FreeDigitalPhotos.net