15. யமன் நாட்டு முஸ்லிம்களுக்கு மடல்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல். முந்தைய மடல்களில் அபூபக்ரு (ரலி) கலீஃபாவாகப் பொறுப்பேற்றபின் குழப்பவாதிகளுடன் நிகழ்த்திய போர்களைப் பற்றி சிறிது படித்திருந்தோமில்லையா? அவர்களையெல்லாம் அடக்கி, ஒடுக்கி அந்தப் பிரச்சினைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததும் ரோமர்களை நோக்கி அவரது கவனம் குவிந்தது.
ரோமர்களுடன் போர் என்பது சல்லிசான விஷயமன்று; பெரும் அளவில் படை வீரர்கள் தேவை என்பதைக் கலீஃபா தெளிவாகவே உணர்ந்திருந்தார். அரேபியாவின் பல தரப்பில் இருந்த முஸ்லிம்களுக்குக் கடிதங்களும் தகவலும் அனுப்பப்பட்டன. யமன் நாட்டு முஸ்லிம்களுக்கும் அப்படியொரு கடிதம் எழுதப்பட்டது. முஸ்லிம்களுக்கான கடமையை எடுத்துரைத்து அதை வலியுறுத்தும் மடல் அது.
‘எடுத்துச் சென்று அவர்களுக்குப் படித்துக்காட்டுங்கள்’ என்று தூதுவர்களை அனுப்பிவைத்தார் அபூபக்ரு (ரலி).
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபாவிடமிருந்து. யமனில் உள்ள முஸ்லிம்கள் யாருக்கெல்லாம் படித்துக் காண்பிக்கப்படுகிறதோ அவர்களுக்கு. உங்கள்மீது சாந்தி உண்டாவதாக. அல்லாஹ்வுக்கே அனைத்துப் பெருமையும் புகழும்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.
அல்லாஹ் நம்பிக்கையாளர்கள்மீது அறப்போரைக் கடமையாக்கியுள்ளான். சொற்பமான போர்த் தளவாடங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறையப் போர்த் தளவாடங்களைக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களைப் போருக்குக் கிளம்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளான். பொருள்களையும் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய ஆணையிட்டுள்ளான்.
நிச்சயமாக அறப்போர் கட்டாயக் கடமையாகும். அதை நிறைவேற்றுபவருக்கு அவன் அளிக்கும் வெகுமானம் மிகச் சிறப்பானதாகும். ஷாமில் உள்ள ரோமர்களுக்கு எதிராக அறப்போர் புரிய தன்னார்வலர்களாக இணையும்படி இங்குள்ள முஸ்லிம்களை நான் கோரியபோது அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வந்து இணைந்தனர். அதற்கான தங்களுடைய நோக்கத்தைச் சீராக்கிவிட்டனர். சிறப்பான வெகுமதிக்கு ஏற்றவர்களாய் ஆகிவிட்டனர்.
அல்லாஹ்வின் அடிமைகளே! நீங்களும் அவ்விதம் அவர்களைப் போலவே அதே காரணத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வந்து இணையுங்கள். உங்களுடைய நோக்கத்தை சீராக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இரண்டில் ஒன்றை நீங்கள் வெல்வீர்கள். ஒன்று உயிர்த்தியாகம்; அல்லது வெற்றியும் பகைவரிடம் கைப்பற்றும் செல்வமும்.
உயர்ந்தோன் அல்லாஹ் தன் அடிமைகள் செயல்படாமல் பேசும் பேச்சினால் மகிழ்ச்சி அடைவதில்லை. அவனுடைய எதிரிகளை எதிர்த்து, அவர்கள் சத்தியத்திற்கு அடிபணிந்து அவனது குர்ஆனில் உள்ள சட்டங்களுக்கு அடிபணியாதவரை நாம் நமது போரைத் தொடர வேண்டும்.
அல்லாஹ் உங்களுடைய மார்க்கத்தைப் பாதுகாப்பானாக. உள்ளங்களை வழிநடத்துவானாக. செயல்களைத் தூய்மையாக்குவானாக. அவனுக்காகப் போராடி பொறுமையுடன் இருப்பவர்களுக்கு அவன் அளிக்கும் வெகுமதியை உங்களுக்கு அருள்வானாக.
ஈமான் கொண்டேன்; முஸ்லிமானேன் என்று வெற்றுப் பேச்சுடன் முடங்கி விடுபவர்களைக் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து விடுவதில்லை என்பதை அழுத்திக் கூறியிருந்தது அந்த மடல். போர் என வந்துவிட்டால் வாழ்வோ, சாவோ, முஸ்லிமுக்கு இரண்டுமே வெற்றி என்று நற்செய்தியைச் சுமந்தது அந்தக் கடிதம்.
இம்மடலையும் அதன் செய்தியையும் அறிந்த யமன் நாட்டு முஸ்லிம்கள், பத்து, நூறு என்றில்லாமல் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக, பல குழுக்களாக ஓடிவந்து இணைந்தனர். தன்னார்வத்துடன், இறைவனுக்காக அவர்கள் வரவேண்டும், வற்புறுத்தப்படக் கூடாது என்பது கலீஃபா அபூபக்கரின் நிலைப்பாடு என்பதால், அவர்களுள் ஒருவர்கூட வற்புறுத்தப்படவில்லை. அனைவரும் தாமாக முன்வந்து இணைந்தார்கள். அனைவரிடமும் ஆர்வமும் ஊக்கமும் பெருகிக் கிடந்தன. பலர் தத்தம் குடும்பத்துடன் புறப்பட்டுவிட்டார்கள்.
ஊர், வீடு, வாசல், நிலம், சொத்து, சுகம், சொகுசு என அனைத்தையும் தள்ளிவிட்டு, மரணத்திற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ள ஒரு செயலை நோக்கி விழுந்தடித்து ஓடுவதற்கு எப்படித் துணிந்தார்கள்? அது எப்படிச் சாத்தியம்?
அவர்கள் உள்ளமெல்லாம் இஸ்லாம். விளைவு? சென்றார்கள்; வென்றார்கள்!
நமது வரலாற்றில் இன்னும் பல மடல்களும் இருக்கலாம். அவற்றை வாசிக்க பின்னர் ஒருநாள் நேரமும் அமையலாம். இதுவரை நமக்குப் படிக்க வாய்த்த மடல்களில் உள்ளதை அசைபோட்டு சிந்திக்கவே விஷயம் நிறைய உள்ளதால் தற்சமயம் இளைப்பாறி அதை முயல்வோம். பொறுமையுடன் அனைத்து மடல்களையும் வாசித்த உங்களுக்கு என் நன்றி.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 1-15, மார்ச் 2014