10. தளபதிகளுக்கு மடல்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.
சென்ற மடலில் கலீஃபா அபூபக்ரு (ரலி) கலகக்காரர்களுக்கு சுடச்சுட அனுப்பிய மடலைப் பார்த்தோமில்லையா? அந்த கலகக்காரர்களை எதிர்த்துப் போரிட அனுப்பிவைக்கப்பட்ட படைத் தளபதிகள் அவைருக்கும் கலீஃபா ஒரே மாதிரியான மடல் அனுப்பி வைத்தார்.
ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் அரேபிய தீபகற்பத்தின் பல பகுதிகளில், பல குலங்களும் கோத்திரங்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இருந்தனர். அவர்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கவனிப்போம் என்பதெல்லாம் சரிப்படாது என்பதால் ஏக காலத்தில் பதினோரு படை அணி திரட்டப்பட்டது. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு முக்கிய நபித்தோழர் தலைவராக நியமிக்கப்பட்டு – கிளம்பிச் சென்றிருந்தார்கள். அவர்களுக்குத்தான் மடல்.
தளபதிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கடிதம் தெளிவாக விளக்கியது. மூன்றே மூன்று அடிப்படை விஷயங்கள். முதலாவது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்றில்லாமல், அந்த கலகக்காரர்களை இஸ்லாத்திற்கு மீளும்படி அழைப்பு விடுக்க வேண்டும்; அதுவரை தாக்குதல் கிடையாது. அதைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தி மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், ‘மிக்க நன்று’ என்று அரவணைத்து அழைத்து அவர்கள் இஸ்லாத்தைக் கற்று உணர தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
இரண்டாவது கட்டம் – அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போரிட்டு, பிறகு மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றால், முஸ்லிம் தளபதிகள் உடனே போரை நிறுத்திவிட்டு, அமைதிக்குத் திரும்ப வேண்டும். இஸ்லாத்திற்கு மீண்டவர்களுக்கு இஸ்லாமியப் பாடமும் கடமைகளும் உணர்த்தப்பட வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் போர்தான் என்று கலகக்காரர்கள் தூக்கிய கையும் ஓங்கிய வாளுமாக நின்றால் – சாகும்வரை போர்.
முஸ்லிம்கள் பொதுவாக போர் புரிவதற்கும் கலகக்காரர்களை எதிர்த்துப் போரிடுவதற்கும் இவ்விடத்தில்தான் வித்தியாசம் உணர்த்தப்பட்டது. பொதுவான போரில் முஸ்லிமல்லாத எதிரிகளுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்படலாம்; தற்காலப் போர் நிறுத்தமோ, அமைதிக்கான ஒப்பந்தமோ நிகழ்த்தப்படலாம். ஆனால் கலகக்காரர்களுக்கு எதிரான போரில் இஸ்லாத்திற்குத் திரும்புவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.
கலீஃபா அபூபக்ருவை சல்லிசாக நினைத்தவர்கள் இங்குதான் பெரும் தவறு செய்திருந்தார்கள். பட்டுத் தெளிந்தார்கள். தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மடலை நாம் இப்பொழுது பார்ப்போம்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவருடன் போரிட அனுப்பப்பட்டுள்ள இன்னாருக்கு அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபா அபூபக்ருவின் கட்டளை இது. பொதுவிலும் தனிமையிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளும்படி அபூபக்ரு கட்டளையிடுகிறார். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் கடுமையாக உழையுங்கள். அவனை விட்டு நீங்கி, இஸ்லாத்தைத் துறந்து, இறுதி அத்தாட்சி அவர்களுக்கு எதிராக நிறுவப்பட்டிருந்த போதிலும், மாற்றமாய் ஷைத்தானின் பொய்யான வாக்குறுதிகளைப் பின்பற்றும் அவர்களிடம் போரிடவும்.
அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும்படி அபூபக்ரு கட்டளையிடுகிறார். அவர்கள் அந்த அழைப்பைச் செவிமடுத்தால், நீங்கள் அவர்களிடம் போரிடக்கூடாது. மறுத்தால் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்வரை நீங்கள் போரிட வேண்டும்.
நீங்கள் அவர்களுக்கு அவர்களின் கடமையையும் உரிமையையும் தெரிவியுங்கள். பின்னர், அவர்கள் சட்டப்படி அளிக்க வேண்டியதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே சட்டப்படி அவர்களுக்கு உரிமையுள்ளதை அவர்களுக்கு அளித்துவிட வேண்டும். இந்தக் கடமைகளைச் செய்வதில் இடைவேளையோ, தாமதமோ கூடாது.
முஸ்லிம்கள் அவர்களுடைய எதிரிகளிடம் போரிடுவதைத் தடுக்கக் கூடாது. அவர்களுள் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு, தமது நம்பிக்கையை வெளிப்படையாக அறிவித்துவிட்டால், அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவரது நற்செயல்கள் அனைத்திற்கும் உதவியும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வை நம்ப மறுப்பவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது அவர் வெளிப்படையாக அறிவிக்கும் இறை நம்பிக்கை மட்டுமே. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வேன் என அவர் பதிலளித்தால், யாரும் அவருக்குத் தீங்கிழைக்கக் கூடாது, அல்லாஹ் அவர்களது தீர்ப்பை கவனித்துக் கொள்வான்.
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்காதவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். உங்களுக்கு அல்லாஹ் வெற்றியை அளித்தால் உங்களது எதிரியை நீங்கள் கொல்ல வேண்டும். போரில் கைப்பற்றப்படும் செல்வத்தைப் பங்கிட்டு அளியுங்கள். அது அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் உறவினர்களும் அளித்துள்ள அருட்கொடை. அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் படைகளின் தளபதியாகிய நீங்கள் உங்களது படையினர் அவசரப்படுவதைத் தடுக்க வேண்டும்; அவர்கள் ஒழுக்கக் கேட்டின் காரணகர்த்தாவாக ஆகிவிடாமல் தடுக்க வேண்டும். உங்களது படையினர் மத்தியில் அந்நியர்களை ஆராயாமல் அனுமதிக்க வேண்டாம்; அவர்கள் ஒற்றர்களாக இருக்கக்கூடும். எதிரியின் ஒற்றர்களிடமிருந்து உங்களது படையினரைத் காக்க இது நீங்கள் செய்யவேண்டிய நடவடிக்கை.
உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள முஸ்லிம்களிடம் நேர்மையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள் – பயணத்தின் போதும் இளைப்பாறலின் போதும். அவர்களுடைய ஆரோக்கியம், நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக, முஸ்லிம் சகோதரர்களின் சிறந்த தோழராக அமைந்து பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மடலில் அடிநாதமாக இழையோடும் முக்கியமான விஷயம் கவனத்திற்கு உரியது. இந்தப் போர் நடவடிக்கையின் காரணம் என்ன? கிளம்பிச் சென்று அவர்களைக் கொன்று விட்டுத் திரும்புவதா? இல்லை!
மனத்தில் கோக்குமாக்கு. குற்றம் புரிந்துவிட்டார்கள். எடுத்துச் சொல்லி, மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு புத்திச் சொல்லி திருத்த வேண்டும். அதெல்லாம் மாட்டேன் என்று மல்லுக் கட்டினால்தான் அடுத்தக் கட்டம். என்ற போதிலும்,
அது முஸ்லிம் படைகள்; தங்கள் விருப்பத்திற்கு ஆட்டம் போட அனுமதியில்லை என்று தெளிவான வரம்பு நிர்ணயித்தது மடல். எது அதை நிர்ணயிக்கும். இறை அச்சம்! எனவே, மடலின் துவக்கமே அந்த வாசகம்தான். பிறகு இறுதியில் அவசரமோ, ஒழுக்கக் கேடான காரியங்களோ கூடவே கூடாது என்ற கட்டளை.
கட்டளைகள் மட்டுமின்றி, ஒற்றர்கள் கலந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான அறிவுரையும் போர்க் களமேயாயினும் தலைவரானவர் முஸ்லிம்களின் நலனை எந்தளவு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளும் சரிவிகிதமாய்க் கலந்திருந்தது மடல். விளைவு என்னாயிற்று? சென்றார்கள்; வென்றார்கள்.
அடுத்த மடலில் வேறொன்றைப் பார்ப்போம் – இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 16-31, டிசம்பர் 2013