சிற்றரசர்களுக்கு அச்சமூட்டும் பேரரசராய் இருக்கலாம்; எதிரிகள் அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மூர்ச்சிக்கும் அவ்வளவு சக்திமிக்க பெரிய சுல்தானாக இருக்கலாம்;
தமது வெண்கொற்றக் குடையின் கீழே லட்சக்கணக்கான மக்களை வைத்து அணுவளவும் நியதி பிறழாது நடுநியாயம் புரிகிற உத்தமோத்தம உன்ன மன்னராய் ஒளிரலாம். ஆயினும், அத்தன்மைத்தாய பெருமை மிக்க மன்னாதி மன்னரும் எல்லோரையும் போல மனிதர்தாமே? பிறரடையும் சுகதுக்கத்துக்கும் மன்னரடையும் சுகதுக்கத்துக்கும் ஏதேனும் வித்தியாசமுண்டா? சாதாரண மனிதனுக்கு மனைவியிடமுள்ள காதலுக்கும், மன்னருக்குத் தம் மனைவிமீது பிறக்கும் காதலுக்கும் வேற்றுமையுண்டா? இன்ப நுகர்ச்சிகளையும் துன்பத் துயர்களையும் ஆண்டவன் எல்லா மனிதர்க்கும் ஒரேவிதமாக அமைத்தருளியிருக்கிறான் அல்லவா?
யுத்தத்துக்குச் செல்ல சர்வ ஆயத்தங்களும் செய்துவிட்டு, இறுதியாக மனைவியிடம் விடைபெற்றுச் செல்லவந்த சுல்தான் ஸாலிஹுக்கு ஷஜருத்துர்ரின் பரிதாபகரமான முகத்தைக் கண்டதும், அவர் கொண்டிருந்த வீறாப்பும் ரோஷமும் எங்கோ ஓடி ஒளிந்தன. தம் மனைவியை இந்த ஸ்திதியில் கருவுயிர்த்த கட்டிலே விட்டுப் பிரிய நேர்ந்ததுடன், ஸல்தனத்தின் சர்வ அதிகாரத்தையும் இவள் கையில் தனியே விட்டுச் செல்ல வேண்டி வந்ததே என்று அவர் வருந்தினார். முன்னமே ஒரு மனைவியையிழந்து, பெறற்கரிய மாணிக்கத்தை மறுதாரமாய் அடையப்பெற்ற அவர் இப்போது எங்ஙனம் இவளையும் இவள் பெற்ற பெறற்கருங் குழவியையும் விட்டுப் பிரிவது?
சுல்தானின் இருதலைக் கொள்ளி நிலைமை ஒரு பக்கல் கிடக்க, அவளுடைய கதியோ? சூன்யத்திலிருந்து இவ்வளவு பெரிய சுகபோக நிலையை யெட்டியிருக்கிறாள். அற்பப் பெண்ணாயிருந்தவள் இன்று அரசியாகவும், ஒருசிறு அரசக் குழவியின் தாயாகவும் உயர்ந்திருக்கிறாள். தான் கற்ற வித்தை அத்தனையும் செலவிட்டு, மன்னரின் மனத்தை முழுக்க முழுக்கத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டிருக்கிறாள். விவாகமானது முதல் இதுவரை சுல்தானுக்கு மிகச் சிறந்த மந்திராலோசனைகளைக் கூறி, அவரது அபிப்பிராயத்திலே அதியுச்சத்தை எட்டியிருக்கிறாள். அப்படிப்பட்ட ஷஜரை அரசர் தனியே விட்டுச் செல்வதுடன், அரச பாரத்தையும் அவள் தலைமீது சுமத்தி வைத்து, குடும்பத்தையும் அவள் மேற்பார்வையில் விட்டுச் செல்வதென்றால், அவளுக்கு எப்படியிருக்கும்? என்ன இருந்தாலும், அவளொரு சிறு பெண் தானே!
“நாதா! நான் கவலைப்படுவதெல்லாம், தாங்கள் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றுச் சீக்கிரம் வாகை மாலையுடன் திரும்ப வேண்டுமே என்பதும், தாங்கள் ஈங்கில்லாத வேளையில் எதிர்பாராத இன்னல்களோ இடையூறுகளோ ஏற்படக் கூடாதே என்பதும், என்னால் சுமக்கமுடியாத சுமையை என்மீது சுமத்திச் செல்வதை யான் சர்வ ஜாக்கிரதையுடனே ஏற்று நடாத்திக் குறையேதும் வாராமல் காப்பாற்ற வேண்டுமே என்பதும், இவ்வளவையும் சகிப்பதற்கு இறைவன் எனக்குப் போதிய சக்தியை அளித்தருள வேண்டுமே என்பதும் மட்டுமேயாம். ஆண்டவன் நாடியபடியேதான் சர்வமும் நிகழ்வுறுமென்றாலும், ஏதும் இசகுபிசகாய்ப் போய்விட்டால், ‘எல்லாம் இந்த ஷஜருத்துர்ரால் ஏற்பட்ட அனர்த்தந்தான்!’ என்று உலகோர் சுலபமாகக் கூறிவிடுவரன்றோ? உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட உலைமூடியுண்டோ!” என்று அவள் தன் கடைக்கண்ணால் கணவனை நோக்கிக்கொண்டே கூறினாள்.
“ஏ ஷஜர்! இந்த ராஜ்யம் இன்று அடைந்திருக்கும் கீர்த்திக்கும் கியாதிக்கும், நான் பிறரிடையே கண்ணியமான பெருமையைப் பெற்று வாழ்வதற்கும் நீயே முற்றமுற்றக் காரணமாயிருக்க, இப்போது நீ ஏன் அதைரிய மடைகிறாய்? உன் கையில் என் செங்கோல் இருக்கிறவரையில் நீ எந்தவிதமான இழுக்கையோ அபகீர்த்தியையோ உண்டுபண்ண மாட்டாய் என்று நானே அழுத்தந் திருத்தமாய் முடிவுகட்டி இருக்கின்றேனே! அப்படியிருக்க, உன்னால் அனர்த்தம் விளைந்தது என்று எவரே கூறத்துணிவர்?”
“நாதா! நானென்ன அதிசயப் பிறவியா? நானும் ஒரு சர்வ சாதாரண மனுஷிதானே? எல்லாம் ஒழுங்காகச் செய்வதாகவே நினைத்துக்கொண்டு நான் செய்கிற காரியங்கள் இறுதியில் தவறாகவும், செப்பனிட முடியாதனவாகவும் போய்விட்டால், நான் உலகோர்க்குத்தாம் என்ன சமாதானம் சொல்லமுடியும்? அல்லது ஆண்டவனின் திருமுன்பினில்தான் எப்படிக் கழிவிரக்கத்துடன் குறையிரக்க முடியும்? பிறர் நடத்துகிற ராஜ்யாதிகாரத்தில் குறை கண்டுபிடித்து, அதை நிவர்த்திக்கவும் மார்க்கம் சொல்கிற தன்மையை நான் பெற்றிருப்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால், அதே ராஜ்யாதிகாரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கு நான் தகுதியுள்ளவள்தானா என்பதை இப்போது எப்படிக் கூறமுடியும்? நாதா! என்னால் பொறுக்கமுடியாத, அல்லது சுமக்கமுடியாத அவ்வளவு பெரிய பொறுப்பை – நாடாளும் பொறுப்பை, அதிலும் அனைவரையும் திருப்திசெய்ய வேண்டிய மிகவு மகத்தான பொறுப்பை – அடியவளும் அனாதையும் பேதையுமாகிய என் கையிலா ஒப்படைக்க விரும்புகிறீர்கள்! வேண்டாம், நாதா, வேண்டாம்! என்னை மன்னியுங்கள்!”
“ஏன் அசட்டுத்தனமாய் ஏதேதோ உளறுகிறாய், ஷஜர்! என்றைக்கு என் கோப்பெருந் தேவியாயினையோ, அல்லது என்றைக்கு நான் உன்னை என் வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக்கொள்ள நாடினேனோ, அன்றைக்கே இந்த ராஜ்யதின் சகல லாப நஷ்டத்துக்கும் நீயும் ஒரு சமப் பங்காளியாக ஆக்கப்பட்டாய் என்பதை மறந்துவிட்டனையோ? மிகச் சிறந்த குணம்படைத்த நீயா இப்படியெல்லாம் வேற்றுமைப்படுத்திப் பேசுகிறாய்? நானே இங்கிருந்து கொண்டு உன் நல்லுபதேசங்களைக் கேட்டு, அதன்படி நாடாண்டாலென்ன? அல்லது நீயேதான் அரியாசனமேறி உன் தீர்க்காலோசனைப்படி ஆட்சி செலுத்தினாலென்ன? உனக்கு இந்தப் பதவி தகுதியில்லையா, அல்லது நிர்வகிக்கத்தான் உனக்குத் திறமையில்லையா? இன்று மூனிஸ்ஸா உயிருடனிருப்பதாயிருந்தால், இந்த ஸல்தனத்தை அவளுடைய ஆளுகையின்கீழே விட்டுச் செல்ல நான் மிகவும் ஆழமாய் யோசிப்பேன். என்னெனின், வீர ஸலாஹுத்தீன் மன்னரின் புத்திரியாயிருந்தாலும், அவள் நாடாள அருகதை பெற்றிருந்ததில்லை. ஆனால், நீயோ அரச குடும்பத்தில் பிறக்காவிட்டாலும், நீ கூறுவதுபோல் அற்ப அனாதைப் பேதையாயிருந்தாலும், உன்னைவிட வேறு தகுதியான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வழியில்லாத அத்துணைப் பெரிய கெட்டிக்காரியாய் உயர்ந்து மிளிர்கின்றாய். இதோ நிற்கும் என் மைந்தன் தூரான்ஷாவுங்கூட உன்னிடம் மாணவனாயிருந்துதான் இந்நாட்டை எப்படி ஆளவேண்டுமென்னும் படிப்பினையைக் கற்க வேண்டியதிருக்கிறது. இவன் ஐயூபி வமிசத்தில் பிறந்தால் மட்டும் இந்த ஸல்தனத்தின் உயர் பதவிக்கு ஏறவேண்டிய அருகதையை முற்றும் பெற்றுவிட்டானென்றா நினைக்கிறாய்? நான் உன்னை முகஸ்துதி செய்துவிட்டு, இந்த ராஜ்ய பாரத்தை உன் தலைமீது வீணே சுமத்திவிட்டுச் செல்கிறேனென்று நினைக்காதே. என் மனப்பூர்வமாகவே சொல்கிறேன் : நீ அந்த மகத்தான பொறுப்பை ஏற்க மறுப்பையானால், இப்போதே நான் ஷாமுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டு, படைகளையும் கலைத்துவிடுகிறேன்.”
“என்ன, முன்வைத்த காலையா தாங்கள் பின்வைக்கப் போகிறீர்கள்?”
”வேறென்ன செய்வது, ஷஜர்! நீ இந்நாட்டைப் பாதுகாத்துக் கொள்வாயென்ற திடமான நம்பிக்கையால் நான் ஷாம் சிற்றரசருக்கு வாக்குக் கொடுத்தேன். இதுபோது நீ மறுப்பதால், நான் என்வாக்கை எப்படி மீறாதிருக்க முடியும்?”
“நாதா! என்னை இப்படிப்பட்ட சங்கடமான நிலைக்கு ஏன் கொண்டுவந்து வைத்தீர்கள்? ஓர் அபகீர்த்தியிலிருந்து தப்பிக்கொள்ள மற்றோர் அபகீர்த்தியையா நான் சம்பாதிக்க வேண்டும்? சுல்தானின் மனைவி அந்தரங்கத்தில் விரும்பாத காரணத்தால், சுல்தான் தாம் பகிரங்கத்தில் கொடுத்த வாக்கை மீறினாரென்னும் பழிச்சொல்லுக்கா நான் ஊழியூழிக்காலம் பலியாகி நிற்கவேண்டும்?”
“பிரியை! நீ வீணே வாட்டமுறாதே! நான் கூறுவதைக் கேள் : ஆண்டவன் என்றைக்கும் நம்மைக் கைவிட மாட்டான். நான் கூறுகிறபடி நீ கேட்பதாயிருந்தால், நானும் என் வாக்கைக் காப்பாற்ற முடியும்; நீயும் இவ்வுலகினர்க்கு நேர்முகமாக உன் சக்திமிக்க ஆட்சித்திறனை நிரூபித்துக்காட்டி நற்புகழெய்த முடியும். நீ ஒன்றுக்கும் கவலைப்படாமல் நம் மந்திரி பிரதானிகளின் துணையை வைத்துக்கொண்டு, ஆட்சியை மேற்கொள். உன் பிள்ளைப் பேற்றுத் தீட்டுக் கழிய வேண்டிய நாற்பது நாட்களும் நீ நன்றாய் ஓய்வெடுத்துக்கொள். அப்பாலே நீயே உன் இஷ்டப்படி ஸல்தனத்தை நடத்து. அப்பால், ஒரு குறைவும் வராதென்று என் மனமே உறுதி கூறுகிறது.”
“நாதா! ஸல்தனத்தை நான் காப்பாற்றுவது ஒருபுறமிருக்கட்டும்; அது ஆண்டவனின் கட்டளை. ஆனால், எதிர்பாராத சங்கடங்கள் ஏதும் ஏற்படுவதாயிருந்தால்?”
“எந்தவிதமான சிக்கலையுந்தான் நீ சாமார்த்தியமாய் அவிழ்த்துவிடுவாயே, ஷஜர்! இப்போது அப்படியென்ன பிரமாதமான சங்கடம் விளையுமென்று நீ அஞசுகிறாய்?”
“நாதா! என்ன, ஒன்றும் அறியாதவர்போலே பேசுகிறீர்களே! முஸ்லிம்களின் செல்வாக்குப் பெருகப் பெருக வயிறெரிந்து நிற்கும் கிறிஸ்தவர்கள் அஸ்தமித்தா போய்விட்டார்கள்? திடீர் திடீரென்று அகாரணமாய்ச் சிலுவையுத்தங்களைத் தொடுப்பதற்கு அவர்கள் காத்துக்கொண்டிருக்க, நம்முடைய ஸல்தனத்துக்குத்தானே சோதனை அதிகம் பெருகுகிறது!”
“சிலுவை யுத்தந்தான் வரட்டுமே! ஷாமில் ஷாவை நிர்மூலமாக்குகிற இதே படைகளை வைத்துக்கொண்டு, எதிர்த்து வருகிற கிறிஸ்தவர்களை அந்த ஷாமிலிருந்தே தகைத்தெறிய எனக்குச் சக்தியில்லையா?
ஷஜர் இவ் வார்த்தைகளைக் கேட்டுக் குபீரென்று நகைத்தாள். வீராவேசத்துடன் பேசிக்கொண்டேயிருந்த சுல்தான் இதைக் கண்டு கடுங்கோபங் கொண்டுவிட்டார்.
“பித்துக்கொள்ளிப் பேதையேபோல் நீ ஏன் நகைக்கின்றாய்? நானென்ன, வீண் வாயளப்பு அளக்கிறேனென்று நீ நினைக்கிறாயோ? அந்தக் கிறிஸ்தவ மதவெறியர்களைக் கசக்கி நசுக்கும் சக்தியைப் பெறாத கோழையாகவா இம் மாண்புமிக்க ஐயூபி வம்சத்தில் நான் பிறந்திருக்கிறேனென்று நீ கருதுகிறாய்? ஏன் நீ சிரிக்கிறாய்?”
அவருடைய அந்தக் கடைசி வார்த்தைகளின் கடுந்தொனியின் பேரிரைச்சல் கேட்டுப் பக்கத்திலிருந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிசு கலீல் கதறியழுதது. ஸாலிஹ் மிகவும் ஸாலிஹான குணம் மிக்கவர்தாம். ஆனால், அவர் கோபங் கொண்டுவிட்டால், அவருக்கு நிகர் அவரேதாம். ஷஜருத்துர்ரைக் கூடத் தூக்கிப்போட்டுவிட்டது அவருடைய கடுஞ்சொல். அவள் மெதுவாக அத் தொட்டிலை ஆட்டினாள்; ‘ஆராரோ…?’ என்று தாராட்டினாள்.
“வீணே ஏன் கோபத்தால் துடிக்கிறீர்கள்? தங்களுக்குச் சக்தியோ சாமர்த்தியமோ இல்லையென்றா நான் கூறுகிறேன். ஆனால், ….“
“ஆனால் – என்ன?”
“ஒன்றுமில்லை. அந்தச் சிலுவையுத்தம் புரிகிறதாகக் கூறிக்கொள்ளும் பேடிகள் நேருக்குநேர் நின்று தங்களுடன் பொருதால்தான் தாங்கள் அவர்களை வாயாலேயே ஊதி வீழ்த்தி விடுவீர்களே! ஆயின், அவர்கள் எப்போதுமே கபட மார்க்கமாகவல்லவோ நம்மை வஞ்சித்துக் கழுத்தை அறுக்கிறார்கள்?”
“அப்படியானால், இப்போது அவர்கள் என்ன செய்வார்களென்று நீ கருதுகிறாய்?”
“ஏன் அவசரப்படுகிறீர்கள்? தாங்களே நன்கு யோசியுங்களே. அவர்கள் சென்றமுறை இங்கே சுல்தான் ஆஜரில் இல்லாதபோது என்ன செய்தார்களென்பதைதத் தாங்கள் இதற்குள்ளே மறந்தா போனீர்கள்?”
“ஷஜர்! வீணே காலந் தாழ்த்தாதே! எனக்கிருக்கிற மூளைக் கிறுகிறுப்பில் ஒன்றுமே நிலவரப்படவில்லை. இந்த நேரத்தில் நீ புதிருக்குமேல் புதிர் போடாதே! உன் மனத்தில் என்ன படுகிறதோ, அதைத் திறந்தே சொல்லிவிடு. இப்பொழுது ஒன்றும் நான் யோசிக்கிற நிலைமையில் இல்லை.”
“என்ன! திரிகாலத்தையும் நன்கு ஆலோசித்துச் செய்ய வேண்டிய தாங்களா இப்படிக் கூறுகிறீர்கள்! சரி; அதெல்லாம் இருக்கட்டும். முன்பு இந்த ஸல்தனத்தை ஒப்புவிக்கப் பெற்றிருந்த அமீர் தாவூத் காலத்தில் தமீதாவைக் கிறிஸ்தவர்கள் முற்றுகையிடுவார்களென்று எவர் எதிர்பார்த்தார்? அதேபோல், இன்று சுல்தானாகிய தாங்கள் மிஸ்ரை விட்டு வெகுதூரத்தில் இருக்கிறீர்களென்று தெரிந்துகொண்டு, அக் கிறிஸ்தவர்கள் நேரே மத்தியதரைக்கடலைக் கடந்து வந்து, தமீதாவையும் கைப்பற்றி, காஹிராமீதும் படையெடுத்தால்? சரித்திரம் என்பது திரும்பித் திரும்பி நிகழும் நிகழ்ச்சிகளைக் கொண்டதுதானே? முன்பு தங்கள் பாட்டனாரை ஷாமில் நிற்க வைத்து, இந்நாட்டின்மீது பாய்ந்தார்கள் அக் கிறிஸ்தவர்கள். அப்போது ஆண்டவன் நீலநதியின் வெள்ளத்தைக் கொண்டு முஸ்லிம்களைக் காப்பாற்றினான். முன்பு இங்கே பேரவமானத்தையும் படுதோல்வியையும் பெற்றுச் சென்ற அந்தக் கொடிய அரக்கர்கள் இப்போது பழிதீர்க்காமல் போவார்களென்றா எண்ணுகின்றீர்கள்?
ஷஜருத்துர்ரின் கூரிய வார்த்தைகளைக் கேட்ட ஸாலிஹ் மன்னர் நெருப்பை மிதித்தவன் துடிப்பதைப்போல் வாய்பிளந்தார். கண்களை உருட்டினார். இம்மாதிரியான பேரிடியினை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண நேரத்தில் அவர் கண்முன்னே பழைய நிகழ்ச்சிகள் மிகவேகமாய் ஓடின. ஆறாவது சிலுவை யுத்தத்தின் பெயராலேற்பட்ட தமீதா முற்றுகையும், அதனையடுத்துத் தாம் ஈடு வைக்கப்பட்ட சம்பவமும், அப்பால் தொடர்ந்த காஹிராவின் படையெடுப்பும், தந்தை காமில் பட்ட பாடுகளும் அவர் கவனத்துக்கு வந்தன. நினைக்கவே மனங்குமுறும் அச் சம்பவங்களை எண்ணிய மாத்திரத்தில் மனந் துடித்த அவர் மெய்பதறி விட்டார். பிரளய காலத்தில் உயிருக்கு மன்றாடும் உதவியற்ற மனிதனைப் போலவே அவர் உள்ளஞ் சோர்ந்தார்.
“நாதா! இதுபோது தமீதாவை யார் நிர்வகித்து வருகிறார்?” என்று ஷஜருத்துர் நிதானமாகவும் அமைதியுடனும் கேட்டாள்.
”ஏன்? என் தந்தையின் காலந்தொட்டு ஷெய்கு ஜீலானீ என்பவரே தமீதாவின் கவர்னராய் இருந்து வருகிறார். எதற்காக இதைக் கேட்கிறாய்?”
“அந்த ஷெய்கு ஜீலானீ கெட்டிக்காரர்தாமா?”
“அவர் கெட்டிக்காரராய் இருப்பதாலேதான் இன்னமும் அங்கே நிர்வாகியாக இருந்து வருகிறார். உன் கருத்தென்ன என்பதைச் சொல்லாமல் மேலும் மேலும் புதிர்க் கேள்வியே கேட்கிறாயே?”
“சரி, நாதா! உடனே ஷாமுக்குப் புறப்படுங்கள். முஹம்மத் ஷாவை வீழ்த்திவிட்டு, உடனே திரும்பி விடுங்கள். அதற்கிடையில் ஆண்டவன் முன்னும், யான் இரண்டாவதாகவும் இருந்து இந்த ஸல்தனத்தைக் கவனித்துக் கொள்கிறேன். திவ்வியமாய்ப் போய்வாருங்கள்!”
சுல்தான் ஸாலிஹ் அவளுடைய இந்த விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு, ஒன்றுந் தோன்றாமல் திகைத்தார். முதலில் அவள் அஞ்சுகிறாள்; பின்னர் அவள் தயங்குகிறாள்; அப்பால் அவள் ஏதேதோ கடாக்களை விடுக்கிறாள்; கடைசியாகச் சரியென்று தலையசைக்கிறான். – சுல்தானுக்கு எல்லாம் மர்மமாகவே இருந்தன. எனினும், அவளை மேற்கொண்டு அவர் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. ஷஜருத்துர்ருடைய ஞான விகாசத்தின் முழு விஸ்தீரணத்தையும் மிக நன்குணர்ந்திருந்த அவர் இதில் ஏதோ ஆழ்ந்த கருத்துப் பொதிந்திருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டார். அன்றியும், இறுதியாக அவள் தமக்கு அனுமதி கொடுத்து விட்டாளே என்னும் பெருமிதத்தால் விம்மிப் பூரிப்படைந்தார். அப்பால் அவர் தூரான்ஷாவை நோக்கினார்.
“என்னருங் குமார! நான் வெளிநாடு சென்று வருமளவும நீ இங்கேயே பத்திரமாயிருக்கவேண்டும். உன் சிற்றன்னை சொல்கிறபடியே நடக்கவேண்டும். நீ நாளையொரு காலத்தில் நம் ஸல்தனத்தின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய படிப்பினைகளை உன் சிற்றன்னையிடந்தான் கற்க வேண்டும்; இவளே உனக்குச் சிறந்த அழகிய முன் மாதிரியாகவும், பொருத்தமான தாயாகவும் விளங்கி வருகிறாள். இவள் வார்த்தைகளை நீ எப்போதும் தட்டி நடக்காதே. இவளது ஆக்ஞையை மீறாதே. நீ இன்னம் சிறுவனல்ல; வயது வந்துவிட்டது. எனவே, இனியும் நீ விளையாட்டுப் பிள்ளையாகவோ, பேதைமை நிறைந்த சிறுவனாகவோ காலங்கடத்தாதே. அரசாங்க அலுவல்கள் இலேசான விளையாட்டல்ல; அவை மிகவும் பொறுப்பு வாய்ந்தவை. நீ இனியும் கவனமாக இல்லாமற் போவையாயின், நம் முன்னோர்கள் வளர்த்த இந்த ஸல்தனத்தும் ஐயூபிகளின் மாபெரும் புகழும் இருக்கிற இடம் தெரியாமற் பறந்து போய்விடும். ஜாக்கிரதை!
“நான் இன்னொன்றுகூடச் சொல்ல ஆசைப்படுகிறேன் : என் ஆசைக் குமாரனே! கேள்! நம் ஸல்தனத்துக்கு ஆபத்து விளைக்கக் காத்து நிற்பவர்களை நேசிக்காதே. என்னுடைய மம்லூக்குகளை நீ சிறிதும் பகைத்துக் கொள்ளாதே. உன் சிற்றனை பேசுகிற பேச்சுக்களுக்கு மாற்றம் உரைக்காதே. இவள் எவரெவரிடம் உன்னை நட்புப்பூணச் சொல்கிறாளோ, அவரவரிடம் மட்டுமே சிநேகங் கொள். எவரெவரை ஒதுக்கச் சொல்லுகிறாளோ, அவரவரை உடனே ஒதுக்கிவிடு. ஆண்டவன் உன் ஆயுளை நீளமாக்கி வைத்து, உனக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னதப் பதவிகளைத் தந்து, அருள் சுரப்பான். ஜாக்கிரதை!” என்று தம் மைந்தனிடம் சுல்தான் நீண்ட பிரசங்கம் புரிந்தார். அவனும், மௌனமாய் நின்று அவர் கூறியவற்றுக்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் மெதுவாக அங்கிருந்து நழுவிவிட்டான்.
கணவனும் மனைவியும் மட்டுமே தனித்திருந்தனர்.
“கண்ணே! ஷஜருத்துர்! நான் உனக்கு உரைக்க வேண்டிய உபதேசம் என்ன இருக்கிறது? நீயோ விஷயங்களை நன்கு அறிந்தவள். எல்லாவற்றையும் நீயே கவனித்துக் கொள். இதுவரை தூரான்ஷா உன்னை மாற்றாந்தாய் என்று பாவிக்காமலே திறந்த மனத்துடனே நடந்து வருகிறான். நீயும் அவனைப் பெற்ற பிள்ளையினும் உற்ற பிள்ளையாய் நேசித்து வளர்த்து வருகிறாயென்பதை நான் நன்கறிவேன். என்றாலும், நானில்லாத சமயத்தில் அவன் ஏதும் தவறாய் நடந்துகொண்டால், அவனைத் திருத்து. மீறிக் குற்றமேதும் இழைத்துவிட்டால், அவனை மன்னித்துவிடு. என்ன இருந்தாலும், அவன் தாயிழந்த சிறுவனல்லவா?”
“நாதா! யுத்தத்துக்குச் செல்லும் தங்களுக்கேன் இந்தக் குடும்பக் கவலையெல்லாம்? தாங்களொன்றுக்கும் வருந்த வேண்டாம். நிம்மதியான மனத்துடனே திவ்யமாய்ச் சென்று வாருங்கள். எல்லாவற்றையுந்தாம் தாங்கள் என்னிடம் ஒப்படைத்து விட்டீர்களே! இனித் தாங்கள் ஷாம் விஷயமான கவலையை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் – மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சுருக்கமாக விடையளித்தாள்.
இதற்குள் நடுப்பகல் கழிந்துவிட்டது. சுல்தான் அவசரம் அவசரமாக ஹம்மாமில் குளித்துவிட்டு, உணவருந்தினார். போர்க்களத்துக்கு வேண்டிய எல்லாத் தலைச்சீரா, கவசஉடைகளையும் தரித்துக்கொண்டு, மீண்டும் ஷஜரிடம் வந்தார். தூங்கிக்கொண்டிருந்த சிசு கலீலின் கன்னத்தில் மிருதுவாய் முத்தமிட்டார். ஷஜருத்துர்ரோ, தன் கயற்கண்ணைச் சிமிட்டாமல் ஆஜாநுபாகுவான தன் ஆருயிர்க் கணவரை ஆசைமிக்க ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவர் தம் பாசமிக்க பதில் பார்வையை அவள்மீது செலுத்திய வண்ணம், பிரிய மனமில்லாமல் பிரிந்து விர்ரென்று வெளியேறினார்.
அன்றொருநாள் அவள் பரிகாசத்துடனும், அர்த்தமில்லாமலும் யூசுபிடம் தான் ராணியாகப் போவதாகவும், சுல்தானை மணக்கப் போவதாகவும் கூறிய வார்த்தைகள் இன்று இவ்வண்ணமாக எல்லாம் மெய்யாய்விட்டன.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<அத்தியாயம் 25>> <<அத்தியாயம் 26>>