முன் தேதி மடல்கள், மடல் 9

by நூருத்தீன்
9. கலீஃபா அபூபக்ரு (ரலி) எழுதிய மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

இஸ்லாத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்ரு சித்தீக் (ரலி) பதவியேற்றதும் அனைத்து அரபு குலங்களுக்கும் மக்கள் அனைவருக்கும் முக்கியச் செய்தியை அவசரமாக, கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அது வெறும் செய்தி என்பதையும் தாண்டி கடுமையான எச்சரிக்கையை அறிவிக்க வேண்டிய நிலை. காரணம் இருந்தது.

‘இனி நாங்கள் முஸ்லிம்கள் அல்லர்’ என்று அப்பட்டமாய் அறிவித்து (முர்தத்) குழப்பம் விளைவித்தனர். ‘போனால் போகிறது; தொழுது கொள்கிறோம். ஆனால் ஸகாத் வரி என்று ஒத்தைக் காசு கூட கொடுக்க முடியாது’ என்று பகிரங்கமாய் அறிவித்த முர்தத்களின் கோத்திரம் மற்றொன்று. அவர்களது மனங்களில் பிழையான ஒரு கணிப்பு இருந்தது. சுபாவத்தில் மென்மையான, தோற்றத்திலும் படு எளிமையான அபூபக்ருவிடம் ஆட்சிப் பொறுப்பு என அறிய வந்ததும், ‘ஹஹ்! இவரா? என்னத்தைப் பெரிதாகச் செய்துவிடுவார்? அதட்டினால் மதீனாவில் வீடடங்கிவிடுவார்’ என்ற தப்புக் கணக்கு அது.

குழப்பவாதிகள்மீது எடுத்ததுமே வாள் கொண்டு பாயாமல் பேசிப் பார்க்க முடிவெடுத்தார் கலீஃபா. அவர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்பி பாவ மன்னிப்பு பெற வாய்ப்பு வழங்குவது என்று முடிவெடுத்தார். செய்தியை மக்களிடம் அறிவிக்கத் தூதுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மடலும் போர் படையும் அனுப்பி வைக்கப்பட்டது. படையினருக்கு அந்தத் தூதுவர்களே தலைவர்கள்.

அவர்கள் பரந்து விரிந்துள்ள கோத்திரத்தாரிடம் செல்ல வேண்டும்; அவர்கள் மத்தியில் அந்த மடலை வாசிக்க வேண்டும்; கேட்பவர்கள் மற்றவருக்கு அச்செய்தியை பரப்ப வேண்டும்; கலீஃபாவின் செய்தி அரேபிய தீபகற்பத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும். அவன் குழப்பவாதி என்றால் மனம் மாறி இஸ்லாத்திற்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால்? மடல் விவரித்தது.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கலீஃபா அபூபக்ரு உங்கள் அனைவருக்கும் எழுதிக்கொள்வது. தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும், இஸ்லாத்தில் நிலைத்து நிற்பவர்களுக்கும் அதைவிட்டு திரும்பி விட்டவர்களுக்கும் இந்த மடலின் நோக்கமானது ஒன்றே. நேர்வழியின்பால் நடத்தப்பட்டு, அதன்பின் தவறான வழிக்கும் அஞ்ஞானத்திற்கும் திரும்பாமல் மெய்வழியைப் பின்பற்றுபவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக, புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, வணக்கத்திற்குரிய உரிமை அவனன்றி யாருக்கும் இல்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அவனுடைய தூதரும் அடிமையுமாவார்கள் என்று சாட்சி பகர்கிறேன். நபியவர்கள் கொண்டுவந்தததில் நாம் நம்பிக்கைக் கொள்கிறோம். அவர்கள் கொண்டு வந்ததை மறுப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று கருதுகிறோம். அந்த இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போராடுவோம்.

அல்லாஹ் தனது சத்தியத்தைக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். தனது படைப்பினங்களுக்கு நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அல்லாஹ்வின்பால் அவனது நாட்டப்படி அழைப்பு விடுப்பவராகவும் பிரகாசமான ஒளி அளிக்கும் ஒரு விளக்கைப் போலவும் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் – உயிரோடிருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் நிராகரிப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்ற வாக்கை மெய்ப்படுத்துவதற்காகவுமே.

அவர்களுடைய எச்சரிக்கையை யார் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் சத்திய மார்க்கத்தில் வழி நடத்தினான். அந்த எச்சரிக்கையையும் செய்தியையும் ஏற்காமல் திரும்பியவர்களை அல்லாஹ்வின் தூதர் அல்லாஹவின் அனுமதியுடன் எதிர்த்து, சரிசெய்தார்கள். மக்கள் அடிபணிந்து இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.

நபியவர்கள் தமது வாழ்நாளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து கழித்தார்கள். மக்களிடம் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அல்லாஹ்விற்குரிய அனைத்துக் கடமைகளையும் அவனுடைய அடிமையாகவும் தூதராகவும் நிறைவேற்றினார்கள். தன்னுடைய தூதர் இறந்துவிடுவார் என்பதை அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் தெளிவாக அறிவித்துள்ளான்.

“(நபியே!) திண்ணமாக நீர் மரணிப்பவர்தாம்; அவர்களும் மரணிப்பவர்களே!” (39:30)

அவன் மேலும் கூறியுள்ளான்,

“(நபியே!) உமக்கு முன்வாழ்ந்த எந்தவொரு மனிதருக்கும் நிரந்தர வாழ்வை நாம் வழங்கவில்லை. நீர் மரணித்து, அவர்கள் மட்டும் நிரந்தரமானவர்களாக (உலகில்) வாழ்வார்களோ?” (21:34)

இறை நம்பிக்கையாளர்களுக்கு அவன் கூறியுள்ளான் :

“முஹம்மது இறைத்தூதர்தாம் (என்றும் வாழும் இறைவனல்லர்). அவருக்கு முன்னர் பல தூதர்கள் (இறந்து) போய்விட்டனர். அவர் (இயற்கையாக) இறந்துபட்டலோ கொல்லப்பட்டாலோ நீங்கள் (உங்கள் மார்க்கத்தை விட்டும்) புறமுதுகு காட்டி ஓடிவிடுவீர்களோ? அவ்வாறு ஓடுபவனால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. நன்றியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான்.” (3:144)

ஆகவே, யாரெல்லாம் முஹம்மதை மட்டும் வணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களுக்கு முஹம்மது நிச்சயமாக இறந்து விட்டார். யாரெல்லாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தீர்களோ (அறிந்து கொள்ளுங்கள்) – அவனுக்கு இணை துணையில்லை. அல்லாஹ் என்றென்றும் கவனிக்கக் கூடியவனாய் இருக்கிறான். அவன் என்றென்றும் வாழ்பவன்; நிலைத்திருப்பவன். வளம் வழங்குபவன்; பாதுகாப்பவன். அவனை சிறுதுயிலே, உறக்கமோ பீடிக்கா. அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும் உங்களுக்குரிய வெகுமதியை அல்லாஹ்விடம் ஈட்ட, அடைய, நற்காரியமாற்றும்படியும் அறிவுறுத்துகிறேன்.

உங்களுடைய நபியவர்கள் எதைக் கொண்டு வந்தார்களோ அதைப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்வினால் கைவிடப்பட்டவன் நிச்சயமாக வழிகெட்டவனாவான்.

எவரையெல்லாம் அல்லாஹ் பாதுகாத்து மார்க்கத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்கிறானோ அவன் இந்த வாழ்க்கையில் சோதிக்கப்படுவான். அல்லாஹ் ஒருவனுக்கு உதவி புரியவில்லையெனில் அவன் கைவிடப்பட்டவனாவான். அல்லாஹ் ஒருவனை வழிநடத்தினால் அவன் நேர்வழியில் இருப்பவனாவான். அல்லாஹ் ஒருவனைக் கைவிட்டால் அவன் நிச்சயமாக வழிகெட்டவனாவான்.

“அல்லாஹ் நேர்வழியை வழங்கியவர் (மட்டுமே) நேர்வழி பெற்றவர். அவனால் வழிகேட்டில் தள்ளப்பட்டவருக்கு நல்வழி காட்டக்கூடிய உதவியாளர் எவரையும் நீர் காணவே முடியாது.” (18:17)

வழிகெட்டவர்கள் இவ்வாழ்க்கையில் புரியும் எந்த நற்காரியங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையிலோ, அவர்கள் புரிந்த கட்டாயக் கடமைகள் உபரியான வழிபாடுகளை் எவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

இஸ்லாத்தை நம்பி ஏற்றுக்கொண்டு அதன் அறிவுரைகளின்படி வாழவும் ஆரம்பித்தபின் உங்களுள் சிலர் இம்மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டதை நான் அறிந்தேன். அல்லாஹ்வைப் பற்றிய ஞானம் அவர்களுக்கு இல்லை. அறிவின்றி அவர்கள் தம்மை ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் ஷைத்தானுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

அல்லாஹ் கூறியுள்ளான், “‘ஆதமுக்கு சிரம் பணியுங்கள்’ என்று நாம் வானவர்களுக்குக் கட்டளையிட்டபோது, ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தனர். அவன் தன் இறைவனின் கட்டளையை மீறினான். எனவே, என்னை விடுத்து உங்களுடைய எதிரிகளான அவனையும் அவனுடைய வழித்தோன்றல்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக (மாற்றி)க் கொள்வீர்களோ? அவ்வாறு மாற்றிக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிக மட்டமானதாகும்.” (18:50)

அவன் மேலும் கூறியுள்ளான், “திண்ணமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். எனவே, அவனை (எப்போதும்) எதிரியாகவே கொள்ளுங்கள். அவனுடைய (அடிச்சுவட்டைப் பின்பற்றும்) கூட்டத்தினரை அவன் அழைப்பதெல்லாம் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்புக்கு அவர்களை உரியவர்களாக்குவதற்கேயன்றி வேறில்லை.” (35:6)

உங்களிடம் நான் இன்னாரை அனுப்பியுள்ளேனன். அவருடன் முஹாஜிர்கள், அன்ஸார்கள், நற்காரியங்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்ட படை உள்ளது. அவர் முதலில் ஒருவரை அல்லாஹ்வின்பால் அழைக்காதவரை அவரிடம் சண்டையிடக்கூடாது என நான் கட்டளையிட்டுள்ளேன். யாரெல்லாம் அவருடைய அழைப்பை ஏற்று, இஸ்லாத்தில் நம்பிக்கைக் கொண்டு, தன்னுடைய கலக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, நற்காரியங்கள் புரிகிறாரோ அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். அவருடன் சண்டையிடாமல் அவர் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நான் அனுப்பியவர் உதவுவார்.

அவருடைய அழைப்பை நிராகரிப்பவரிடம் நான் அனுப்பியவர் சண்டையிட வேண்டும் என்றும் அத்தகையவர் கைது செய்யப்பட்டால் அவரை உயிருடன் விடக்கூடாது என்றும் நான் கட்டளையிட்டுள்ளேன். (அவர்கள் முஸ்லிம்களை தீயிட்டுக் கொளுத்தியிருந்தால் அதைப் போன்று) அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும் அவர்கள் ஒவ்வொருவரையும் கொல்லவும் அவர்களுடைய பெண்கள் பிள்ளைகளை அடிமைகளாகக் கைப்பற்றவும் நான் கட்டளையிட்டுள்ளேன்.

இப்பொழுது மக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படுவது இஸ்லாம் மட்டுமே. அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு நல்லது. அதைக் கைவிடுபவர் அல்லாஹ்வுக்குக் குறைந்தபட்ச தீங்கைக்கூட புரிய முடியாது.

நீங்கள் குழுமும் இடங்களில் இந்த மடலை வாசிக்கும்படி என்னுடைய தூதருக்கு நான் கட்டளையிட்டுள்ளேன். இன்றியமையாத தேவையாக பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்லப்படும். ஆகவே முஸ்லிம்கள் பாங்கு சொன்னதும் இஸ்லாத்திற்குத் திரும்பியவர்கள் தொழுகைக்கு விரைய வேண்டும். நான் அனுப்பி வைத்தவர்கள் அவர்களிடம் சண்டையிட மாட்டார்கள். அப்படி இல்லையெனில் என்னுடைய படை அவர்களைத் தாக்கும். அப்படி அவர்கள் தொழுகையை நிறைவேற்றினாலும் அவர்கள் அளிக்க வேண்டிய ஸகாத் அவர்களிடமிருந்து திரட்டப்படும். அதை அவர்கள் அளிக்க மறுத்தால் தாக்குதல் நடத்தப்படும்.

அவர்கள் ஸகாத் வரியை அளிக்க ஒப்புக்கொண்டால் என் படையினர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்.

கலீஃபாவின் இந்த மடலைப் படித்து அல்லது கேட்டுவிட்டு உண்மையையும் கடுமையையும் உணர்ந்து கணிசமான மக்கள் திரும்ப வந்து இணைந்தார்கள். ஈடேற்றமும் பெற்றார்கள். மற்றவர்கள் அநியாயமே சரி என்று கலகம் புரிந்து, முஸ்லிம் படைகளிடம் மடிந்து மாய்ந்ததுதான் மிச்சம்.

இதன் பிறகு, முஸ்லிம் படைகளின் தளபதிகளுக்கு கலீஃபா அபூபக்ரு (ரலி) எழுதிய மடல்களைப் பின்னர் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 1-15, டிசம்பர் 2013

Related Articles

Leave a Comment