முன் தேதி மடல்கள், மடல் 6

by நூருத்தீன்
6. அலீ (ரலி) எழுதிய மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருளால் இங்கு அனைவரும் நலம். இதுபோல் அங்கு தங்கள் அனைவரின் நலத்திற்கும் விழைகிறேன்.

காகித மடலில் மட்டுமே தமக்குள் செய்திகள் பகிர்ந்துகொண்ட அந்தக் காலம் பற்றி தொடங்கினோம் இல்லையா? அதாவது பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான முன்னொரு காலம். அப்பொழுதெல்லாம் வெளியூருக்குப் படிப்பு, அலுவல் என்று சென்றிருப்பவருக்குப் பெற்றோர், மனைவி கடிதம் எழுதுவார்கள். இங்குள்ள பிரச்சினை, நல்லது, கெட்டது எல்லாம் எழுதிவிட்டு, அங்குள்ளவருக்கு அறிவுரையும் இருக்கும் – ‘வாரா வாரம் எண்ணெய் தேய்த்துக் குளி’, ‘கண்ட ஓட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே’.

அரபு நாட்டில் பணியில் இருக்கும் சில கணவன்மார்களுக்கு வரும் கடிதங்களில் புடவையின் ஓரம் ஒன்று வெட்டப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும் இலவச இணைப்பு போல. அண்டை வீட்டு அம்மணியின் டிஸைன் பிடித்துப்போய், ‘அதைப்போல் வாங்கிவா’ என்ற அன்புக் கட்டளையிட்டிருக்கும் பின்குறிப்பு.

இவையெல்லாம் தாண்டி, பொறுப்பான தகப்பன் வாய்க்கப்பெற்ற பிள்ளைகளுக்கு காரியக் கச்சிதமான கடிதங்கள் வரும். வெளிப்படாமல் அன்பு ஒளிந்திருக்கும் மடல்கள் அவை. நறுக்குத் தெறித்தாற் போன்ற அனுபவ அறிவுரைகள் பரவியிருக்கும்.

இதற்கெல்லாம் முந்தைய முன்னொரு காலம் இருந்தது. ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு. அலீ (ரலி) கலீஃபாவாக பொறுப்பேற்றிருந்த காலம். அது அரசியல் சிக்கல்கள், குழப்பங்கள் மிகைத்திருந்த நேரம். இஸ்லாமிய ஆட்சியின் தலைமையகம் மதீனாவிலிருந்து பஸ்ராவுக்கு நகர்ந்தது. மதீனா நகரின் பொறுப்பை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸிடம் ஒப்படைத்துவிட்டு பஸ்ராவுக்கு இடம்பெயர்ந்தார் அலீ.

அதன் பின்னர் பஸ்ரா நகரிலிருந்து கூஃபா நகருக்கு அலீ இடம்பெயரும்படி ஆனது. இப்பொழுது இப்னு அப்பாஸை அழைத்து பஸ்ராவின் ஆளுநர் பதவியை அளித்தார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) சிற்றப்பா மைந்தர் என்பது உறவுமுறைதான். ஆயினும் ‘இந்த உம்மாவின் (சமுதாயத்தின்) அறிஞர்’ என்பது அவரது பட்டம், தகுதி, நிறை. அத்தகைய அவருக்குப் பதவியை அளித்துவிட்டு அறிவுரை வழங்கினார் அலீ. என்னவென்று?

“அல்லாஹ்வுக்கு அஞ்சும்படி நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உங்களை யாருக்கு அவன் பொறுப்பாளராக ஆக்கிவிட்டானோ அவர்களிடம் நீதியுடன் நடந்துகொள்ளுங்கள். மக்களிடம் அன்புடனும் இன்முகத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ளுங்கள். உங்கள் அறிவையும் ஞானத்தையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிறரிடம் வெறுப்பும் காழ்ப்பு உணர்ச்சியும் கொள்வதில் எச்சரிக்கையுடன் இருளுங்கள். ஏனெனில் அவை மனத்தை மரணிக்கச் செய்து வாய்மையைக் கொன்றுவிடும்.

நினைவில் கொள்ளுங்கள். எவையெல்லாம் உங்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறதோ அவை உம்மை நரக நெருப்பைவிட்டு வெகுதொலைவு தள்ளிவிடும். எவையெல்லாம் உங்களை நரக நெருப்பிற்கு நெருக்கமாய்க் கொண்டு செல்லுமோ அவையெல்லாம் உங்களை அல்லாஹ்வை விட்டு தொலைவிற்குத் தள்ளிவிடும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். அசட்டையானவருள் ஒருவராக ஆகிவிடவேண்டாம்.”

அத்துடன் நின்றுவிடவில்லை. அமீருல் மூஃமினீன் அலீ அவ்வப்போது இப்னு அப்பாஸுக்கு அறிவுரை வழங்கி கடிதம் எழுதுவது தொடர்ந்தது. ஒரு மடலில்,

தனக்குக் கிடைக்கக்கூடாத ஒன்று கிடைக்காமற் போனதை நினைத்து ஒரு மனிதன் வருந்தலாம். எது தவறிப்போகாமல் அவனுக்குக் கிடைத்திருக்கக்கூடுமோ அது கிடைத்துவிட்டதே என்று அவன் மகிழலாம்.

எனவே, மறுமைக்கான விஷயங்களில் எது உங்களுக்குக் கிடைக்கிறதோ உங்களது இன்பம் அதைச் சார்ந்து இருக்கட்டும். மறுமைக்கான விஷயங்களில் எது தவறுகிறதோ அதைச் சார்ந்து உங்களின் வருத்தம் அமையட்டும்.

உலகைச் சார்ந்த ஆதாயங்கள் கிடைக்கும்போது அதிகம் மகிழ வேண்டாம். அதைச் சார்ந்த விஷயங்கள் கை நழுவும்போது அதிகம் வருந்தவும் வேண்டாம். உங்களது கவலையெல்லாம் மரணத்திற்குப் பிறகு நிகழ்வதைப் பற்றியதாக இருக்கட்டும்.”

பட்டம், பதவி என்பதே ‘நாலு காசு பார்ப்போம்’ என்ற அடிப்படையாக மாறிவிட்ட நிலை இன்று. உலக ஆதாயங்கள் தானாகவே கிடைத்தாலும் சரி, கைவிட்டுப் போனாலும் சரி அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இறந்து போவதைப் பற்றி கவலைப்படு என்றால் இதென்ன அறிவுரை?

தானாக வருவது வரத்தான் போகிறது. கிடைக்கக்கூடாது என்பது விதியாக இருந்தால் அது கிடைக்கப்போவதில்லை. பிறகு எதற்கு மகிழ்வும் வருத்தமும் என்று குட்டு வேறு.

ஆளுநர் என்றில்லை. தம்முடைய நிர்வாக ஊழியர்கள் எவ்விதம் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தியும் அவர்களுக்கு அலீ (ரலி) கடிதம் எழுதியுள்ளார்.

நீங்கள் மக்களுடைய செல்வங்களின் பாதுகாவலர்கள்; இந்த உம்மாவின் (சமூகத்தின்) பிரதிநிதிகள்; ஆட்சியாளரின் தூதர்கள். எவரும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைத் தடுக்காதீர்கள். அவர் தமக்குத் தேவையானதைத் தேடுவதைத் தடுக்காதீர்கள். நிலவரியை வசூலிக்கும்போது, மக்கள் தங்களது கோடை, குளிர்கால ஆடைகளை விற்கும்படி வற்புறுத்தாதீர்கள். தங்களது தேவைகளுக்காக அவர்கள் வைத்துள்ள வாகனங்களையோ அடிமைகளையோ விற்கும்படி வற்புறுத்தாதீர்கள். அவர் தரவேண்டிய ஒரு திர்ஹத்திற்காக கசையால் அடிக்கக் கூடாது.

முஸ்லிமாக இருந்தாலும் சரி; நம்மால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி; பிறருடைய செல்வத்தைத் தொடாதீர்கள்.

வரியை வசூலிப்பதாகவே இருந்தாலும் கருணை. ஊரார் சொத்தில் கைவைக்காதே என்று கட்டளை. ஆட்சியாளர் இப்படி இருந்துவிட்டால் மக்களுக்கு பாதிக்குமேல் பிரச்சினை தீர்ந்துவிடாது?

அதே நேரத்தில், ஆட்சியாளர் உத்தமராக இருந்துவிட்டால் மக்களெல்லாம் அப்பாவிகளாகவா இருந்து விடுகிறார்கள்? நல்லவர், கெட்டவர் கலந்த கலவைதானே சமூகம். அதில் சமூகத்தில் செல்வாக்குப் படைத்தவர்கள் உபத்திரவக்காரர்களாக அமைந்துவிடும்போது என்ன செய்வது?

நிர்வாக ஊழியர் ஒருவரைப் பற்றி உயர்குடி வகுப்பைச் சேர்ந்த சிலர் அலீயிடம் புகார் தெரிவித்தார்கள். அலீ அந்த ஊழியருக்குக் கடிதம் எழுதினார்.

“உங்களுடைய மக்களுள் உயர்குடியைச் சேர்ந்த சிலர் உம்மைப் பற்றி புகார் கூறியுள்ளார்கள். விஷயத்தை விசாரித்து ஆராய்ந்தேன். நீங்கள் கடுமையானவராக, கல் நெஞ்சத்தினராக, மரியாதை அற்றவராக, விரோதமாக நடந்து கொள்கிறீர் என்று தெரிந்தது. இறை நிராகரிப்பாளர்களாக உள்ள அவர்கள் நீர் உமக்கு நெருக்கமாக்கிக் கொள்ளும் தகுதியற்றவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தள்ளி வைக்கப்படக்கூடாது. அவர்களிடம் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதனால் அவர்களைக் கொடூரமாக நடத்தக்கூடாது.

ஆகவே மென்மையும் சிறிது கடுமையும் கலந்த போக்கைப் பின்பற்றுங்கள். கடுமையையும் அன்பையும் மாற்றி மாற்றிச் செலுத்துங்கள். சில சமயம் நெருக்கமாகவும் சில சமயம் உங்களிடமிருந்து தொலைவாகவும் அவர்களை வைத்துக் கொள்ளுங்கள்.

சுருக்கமாக இருந்தாலும் எவ்வளவு அடர்த்தியான அறிவுரைகள்? காலம் தாண்டி நிற்கும் மெய்யுரைகள்.

அடுத்த மடலில் தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, அக்டோபர் 2013

Related Articles

Leave a Comment