காந்தித் தாத்தா என்று சொல்லிப் பாருங்கள். உடனே நமது மனத்தில் தோன்றும் உருவம் எது? உரோமம் அற்ற தலை, மூக்கு. முக்கியமாய் அந்த மூக்கின் மீது கண்ணாடி! வட்ட வடிவக் கண்ணாடி.
அதைத் தாண்டி அவரைப் பற்றிய தகவல்களை மிகக் குறைவாக அறிந்துள்ள பாமரர்களுக்கும் இன்றைய தலைமுறைக்கும் இந்தியாவின் ஒரு மாநிலம் இன்றைய தேதிக்கு அதிகம் அறிமுகம். சத்தியத்திற்கு வந்த அந்தச் சோதனை பிறகு!
ஸான் டியாகோ (San Diego) அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு நகரம். அந்நகரில் வேக அளவை மீறிச் சென்ற காரை துரத்திச் சென்று ‘ஸ்டாப்’ என்று ஆங்கிலத்தில் மடக்கினார் டிராஃபிக் காவலர். அபராதம் விதிக்க நெருங்கியவர், அந்த ஓட்டுநர் ஸெஸிலியா அபாதி (Cecilia Abadie) அணிந்திருந்த கண்ணாடியைப் பார்த்துவிட்டு, ‘இதற்கெல்லாம் அனுமதியில்லை’ என்று அதற்கும் சேர்த்து இரண்டு விதமான அபராதச் சீட்டுகளை தந்துவிட்டார்.
‘அமெரிக்காவில் கண்ணாடி அணிந்து வண்டி ஓட்டினால் அபராதமா? இதென்ன கொடுமை? பார்வை குறைபாடு உடையவர்கள் எங்கே சென்று காருடன் முட்டிக் கொள்வது’ என்று அறச் சீற்றப்படுபவர்கள் – நிற்க.
காந்தியாரின் பழங்காலக் கண்ணாடியில் கவர்ச்சியின் விகிதாச்சாரம் எவ்வளவு? அது அதன் வடிவம் போன்றது. பூஜ்யம். ஆனால், நெடுங்காலமாய்ப் பரப்பப்பட்டு வரும் எக்ஸ்ரே கூலிங் க்ளாஸ் என்றொரு வஸ்து உண்டு. தெரியுமோ? கற்பனை. மாயக் கண்ணாடி.
அதை அணிந்து கொண்டு பார்த்தால் உருவங்கள் ஆடையின்றி தெரியும் என்று கதை, கட்டுரை, சினிமா போன்றவை கதை அளக்க, ஏங்காத ஆண் இனம் குறைவு. கூகுளில் தேடிப் பார்த்தால் இன்றும் அதைப் பற்றிய ‘உட்டாலக்கடி’ சமாச்சாரம் ஏராளம். என்றிருக்க –
கூகுளில் யாருக்கு அந்த யோசனை முதலில் உதித்தது எனத் தெரியவில்லை; ‘கூகுள் மூக்குக் கண்ணாடி’ (Google Glass) என்று ஒன்றை உருவாக்கிவிட்டது கூகுள். கூகுள் கண்ணாடியின் சாராம்சம் எளிமையானது. ஆப்பிளும் ஸாம்ஸங்கும் இணைய விசாலத்தையும் கணினி சக்தியையும் உள்ளடக்கி உள்ளங்கையில் தந்தவுடன் ஃபோட்டோ, வீடியோ, போகும் ஊருக்கு வழி, இத்யாதி, இத்யாதி என்று ஒவ்வொருவருக்கும் ஏக வசதியாகிவிட்டது. இதற்கெல்லாம் ஸ்மார்ட் ஃபோனின் திரையில் விரல்களைத் தேய்க்க வேண்டியதாக இருக்கிறது; ஒன்றிரண்டு பட்டனைத் தட்டும் சிரமம்; அதன் திரையைப் பார்க்க மெனக்கெடல் என்று மனித குலத்திற்கு எவ்வளவு அவஸ்தை? இதை மாற்றி அமைக்க முனைந்துள்ளது கூகுள் கண்ணாடி.
அணிந்து கொண்டு, ‘ஃபோட்டோ எடு கூகுள்’ என்று சொன்னால் போதும்; நாம் பார்க்கும் காட்சி ஃபோட்டோவாக ரெடி! வீடியோ எடுக்கலாம். அவற்றைச் சேமிக்கலாம். அல்லது மறுமுனையில் ஒருவருக்கு அப்படியே ஒளிபரப்பலாம். ரமணனை நம்பாமல் கூகுளிடம் வானிலை கேட்டால் கண்ணாடியில் தெரியுமாம். அமிஞ்சிக்கரையிலிருந்து கண்ணம்மா பேட்டைக்கு வழி கேட்டால் கண்ணாடியில் பாதை விரியும். பார்த்துக் கொண்டே வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். பார்வை தப்பினால் கண்ணம்மா பேட்டை நிரந்தரமான சேருமிடம் ஆகிவிடுமே என்று சற்றே கவலை தோன்றுகிறதா?
அப்படியான கவலையில்தான் இரண்டாவது அபராதச் சீட்டை ஸெஸிலியா அபாதிக்கு நீட்டிவிட்டார் ஸான் டியாகோ காவலர். அந்தம்மா அதை இணையத்தில் முறையிட்டு, இருதரப்பு வாதங்கள் கசா முசாவென்று சூடுபறக்க நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா கிடக்கட்டும். இந்தக் கண்ணாடியை இந்தியாவில் யோசித்துப் பார்த்தால்தான் அச்சமாக இருக்கின்றது. பாடம் படிப்பதில்தான் பல பிள்ளைகள் மந்தமாக இருக்க முடியுமே தவிர, இத்தகைய கண்டுபிடிப்புகளின் புறம்பான உபயோகத்தை புத்தி சாதுர்யத்துடன் செயல்படுத்துவதில் ஒருவருக்கொருவர் சளைப்பதே இல்லை.
காந்தியாரின் கண்ணாடி போலன்றி கூகுள் கண்ணாடியின் வடிவமைப்பும் படு கவர்ச்சி. அதை ஸ்டைலாக மாட்டிக் கொண்டு, கோயில், mall, சந்தை என்று அங்கிங்கெனாதபடி பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கும் தலங்களில் சுற்றி சுற்றி வந்து அமைதியாக அழிச்சாட்டியக் காரியம் புரிவது எவ்வளவு எளிது! இந்தக் கவலையெல்லாம் நாளை.
தேசப் பிதாவின் மாநிலம் இன்று அதிகம் பரபரப்பாக அறியப்பட்டுள்ளதே, அங்கு ஒரு மஸ்தான். அவரின் சாகசத்தில் கூகுள் கண்ணாடியெல்லாம் ஜுஜுபி. கண்ணுக்கே தெரியாத ஒரு மாயக் கண்ணாடியை அந்த மஸ்தான் நாடெங்கும் பரப்பி வைத்து, ‘ரத்தத்தின் நிறம் வெண்மை’; ‘ஓமக்குச்சி நரசிம்மனின் வடிவம் ரேம்போ’ என்று ஊடகமும் முற்போக்காளர்களும் என்று கண் கட்டிக் கிடக்கிறார்கள். புள்ளி விபரங்களும் உண்மைகளும் பொருட்டாகவே இல்லாமல் புத்தியெல்லாம் மாயவலை.
மஸ்தானின் மந்திரம் வென்றால் நாட்டு மக்களுக்குக் காந்தித் தாத்தாவின் தலை பாக்கியமாகும். தோற்றால், மஸ்தானின் மாயக் கண்ணாடியின் செலவினங்களின் கணக்கிற்குக் காந்தித் தாத்தா உபயம்.
என்ன நடக்கும் என்று கூகுள் கண்ணாடியிடம் கேட்க வேண்டும்.
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 04 நவம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License