தோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)

by நூருத்தீன்
16. அஸ்மா பின்த் உமைஸ் (أسماء بنت عميس)

முக்கியத் தோழர்கள் மூவரின் மரணச் செய்தி மதீனாவை வந்து அடைந்திருந்தது. அவர்கள் போரில் உயிர் தியாகிகள் ஆகியிருந்தனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களையும் தோழர்களையும் அச்செய்தி கப்பென்று அப்பியது.

அனைவருக்கும் ஆழ்ந்த சோகம். இறந்தவர்களுள் ஒருவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக நபியவர்கள் அவரது இல்லத்தை அடைந்தார்கள். அங்கு அந்தத் தோழரின் மனைவியோ போரிலிருந்து திரும்பவிருக்கும் தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளைக் குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டு வீடு கலகலப்பாக இருந்தது.

வீட்டிற்கு வருகை புரிந்த அல்லாஹ்வின் தூதரை வரவேற்ற அப்பெண்மணிக்கு நபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே, ‘விபரீதமோ?’ என்று தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக்குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க, உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.

அப்பெண்ணுக்குப் புரிந்துவிட்டது!

“அல்லாஹ்வின் தூதரே! என் கணவரைப் பற்றிய சோகச் செய்தி கொண்டு வந்தீர்களோ?”

“ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவரும் இரண்டு தோழர்களும்.”

அழுதார்! ஆருயிர்க் கணவரின் பிரிவு, துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.

oOo

நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் தாலிப், அகீல், ஜஅஃபர், அலீ ரலியல்லாஹு அன்ஹும். அவர்களுள் ஜஅஃபருக்கு அஸ்மா என்ற பெண்மணி திருமணம் செய்விக்கப்பட்டிருந்தார். இந்த அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா வேறு யாருமல்லர்; நபியவர்களின் சிறிய தந்தையர்களுள் ஒருவரான அப்பாஸின் மைத்துனி.

அப்பாஸின் மனைவியான உம்முல்ஃபள்லு லுபாபா அல்-குப்ராவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒருவர் பிற்காலத்தில் நபியவர்களை மணம் புரிந்துகொண்ட மைமூனா ரலியல்லாஹு அன்ஹா. மற்ற இருவர் அஸ்மா, ஸல்மா. ஸல்மாவை நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு மணம் புரிந்துகொண்டார். அஸ்மா ஜஅஃபரை. இவ்விதம் நபியவர்களின் குடும்பத்துடன் அந்த நான்கு சகோதரிகளுமே மண உறவு கொண்டிருந்தனர்.

நபியவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு, விஷயம் மெதுவே வெளியே தெரியவர ஆரம்பித்த அந்தத் துவக்கக் காலத்திலேயே அபூபக்ரு (ரலி) மூலமாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் ஜஅஃபரும் அஸ்மாவும். அர்கமின் இல்லத்திலிருந்து நபியவர்கள் இஸ்லாமியப் பாடங்களைத் துவங்குவதற்கு முன்பாகவே ஜஅஃபர் இஸ்லாத்தில் இணைந்திருந்தார்.

குரைஷிக் குலத்தின் மிக முக்கியக் கோத்திரத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தாம் ஜஅஃபர். ஆனால் அதுவரை இருந்த அந்தப் பெருமை, மதிப்பு, மரியாதை எல்லாம் மறைந்துபோய், புதிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தொந்தரவுகளும் அக்கிரமங்களும் ஜஅஃபர் தம்பதியருக்கும் நேர்ந்தது. ஆனால் அது அவர்களுக்குள் உரம் வளர்க்கவே உதவியது. சொர்க்கத்தின் பாதை கடினமானது என்பதை அந்த இளவயதிலேயே அவர்கள் நன்கு உணர்ந்தனர். பொறுமை காக்க ஆரம்பித்தனர் அந்தப் புதுத் தம்பதியர்.

இருந்தாலும் அவர்களை அதிகம் மன உளைச்சலுக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கிய விஷயம் ஒன்று இருந்தது – இறைவனுக்கு உண்டான தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைக்கூட, தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரிலேயே, சுதந்திரமாய் நிறைவேற்ற முடியாமற் போன அவல நிலை. முஸ்லிம்கள் ஒன்றுகூடினால், தொழுதால், தேடித் தேடி வந்து ரகளை செய்தார்கள்; அராஜகம் புரிந்துகொண்டிருந்தார்கள் குரைஷிகள். இதனால் முஸ்லிம்கள் ஒளிந்துவாழ வேண்டி வந்தது. இப்படியாக நிலைமை கட்டுக்கடங்காமல் போன தருணத்தில்தான் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம் பெயர்தலுக்கு அனுமதி அளித்தார்கள், ‘புறப்படுங்கள்!’ என்று.

‘அண்டை நாட்டில் நீதியுடன் ஆட்சி செலுத்தும் அரசர் ஒருவர் இருக்கிறாராம். அவருடைய அபிஸீனியா நாட்டில் தஞ்சம் பெறுங்கள்’ என்று மக்கத்து முஸ்லிம்களுக்கு நபியவர்களின் அனுமதி கிடைத்தது. புறப்பட்டது முஸ்லிம்களின் குழு. ஹிஜ்ரத் நிகழ்ந்தது.

தம்பதிகள் ஜஅஃபருக்கும் அஸ்மாவுக்கும் அதுதான் தேனிலவு. அவர்களும் கிளம்பினர். அல்லாஹ்வே எங்களின் ஒரே இறைவன் என்று உரைத்துக் கொண்டிருந்த ஒரே பாவத்திற்காக புலம்பெயர வேண்டி வந்தது அவர்களுக்கு. என்ன செய்ய? அவர்களுக்கு அப்பொழுது அதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்காவின் சுடு மணல் கடந்து, கடல் கடந்து, அபிஸீனியா வந்து இறங்கியதும்தான் அவர்களுக்கு சுதந்திரமான சுவாசம் சுகமாய் வெளிவந்தது. அச்சமின்றி, குறுக்கீடின்றி, நீதியான அரசாங்கத்தின் பாதுகாப்பில் தங்களது ஏக இறை வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர் அவர்கள்.

ஜஅஃபரும் அவர் மனைவி அஸ்மாவும் அப்துல்லாஹ், முஹம்மது, அவ்னு எனும் மூன்று குழந்தைகளை ஈன்று, அங்கு அவர்களது காலம் நகர, இங்கு மக்காவில் பற்பல நிகழ்வுகள், துன்பங்கள், சோதனைகள் என்றாகி, நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தது நிகழ்ந்தது. அப்பொழுதும் அபிஸீனிய நாட்டில் வசித்துவந்த முஸ்லிம்கள் அங்கேயேதான் இருந்தனர்.

பின்னர் ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு முஸ்லிம்களை மதீனாவிற்கு அனுப்பி வைக்கும்படி மன்னர் நஜ்ஜாஷிக்கு நபியவர்கள் கடிதம் எழுதி அனுப்ப, இரண்டு படகுகளைத் தயார் செய்து, அதில் முஸ்லிம்களைப் பத்திரமாய் அனுப்பிவைத்தார் நஜ்ஜாஷி. ஜஅஃபரும் அஸ்மாவும் மதீனா வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃகைபருக்குப் படையெடுத்துச் சென்றிருந்தார்கள். அந்தச் செய்தியை அறிந்த ஜஅஃபர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், இதற்குமேல் என்னால் முடியாது என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே ஃகைபர் நோக்கி விரைந்தார். அவர் ஃகைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம்.

நபியவர்கள் ஜஅஃபரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டு, “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது ஃகைபர் வெற்றியா? ஜஅஃபரின் வருகையா?” என்று வாய்விட்டே தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஃகைபர் போரில் கைப்பற்றிய செல்வங்களைப் படையினர் மத்தியில் பங்கிட்டபோது அபிஸீனியாவிலிருந்து படகில் வந்தடைந்தவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பங்கு அளிக்கப்பட்டது. போரில் பங்கு பெறுபவர்களுக்கு இஸ்லாத்தில் தனிச் சிறப்பு; போரில் கைப்பற்றிய செலவங்களைப் பங்கிடும் தனிச்சட்டம். அத்தகைய பெருமையால் அபிஸீனியாவிலிருந்து வந்தவர்களுக்கும் போர்ச்செல்வம் அளிக்கப்பட்டது.

அப்படியான பெருமை அவர்களுக்கு வாய்த்தும், ஆரம்ப காலத்திலேயே அபிஸீனியாவுக்குச் சென்று, பின்னர் ஃகைபர் போரின்போது மதீனா வந்ததால் அந்த முஸ்லிம்களுக்கு ஹிஜ்ராவின் பேறு வாய்க்கவில்லை என்றொரு கருத்து அப்பொழுது நிலவி வந்தது. அதற்கேற்ப ஒருநாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அஸ்மாவிடம், ‘நாங்களெல்லாம் உங்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் மேற்கொண்டவர்களாக்கும்’ என்று ஓர் உரையாடலின்போது குறிப்பிட்டு விட்டார்.

அது அஸ்மாவின் மனத்தை சட்டெனச் சுட்டது. “உண்மையைத்தான் உரைத்தீர்கள் உமர். நீங்களெல்லாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தீர்கள். அவர்கள் உங்களுள் பசித்திருந்தவருக்கு உணவளித்தார்கள்; கல்வி அளித்தார்கள். நாங்களோ நாடு துறந்து, தூர தேசத்தில் கிடந்தோம். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் நபியவர்களிடம் செல்வேன்; இது பற்றி முறையிடுவேன்” என்றார்.

நாடு துறந்து பட்ட கஷ்டம், அடைந்த துன்பம், எல்லாம் அவ்வளவுதானா என்று அவருக்கு அவ்வளவு கவலை. நேரே நபியவர்களிடம் வந்து இதுபற்றி விளக்கம் கேட்டார் அஸ்மா. அமைதியாக பதில் அளித்தார்கள் நபியவர்கள். “அவர்களுக்கு ஒரு ஹிஜ்ராவின் நன்மை. உங்களுக்கு இரண்டு.”

“ஓ!”

வருத்தம் நீங்கியதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சி இரட்டிப்பானது. முஸ்லிம்கள் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்தது ஒரு ஹிஜ்ராவாகவும் பின்னர் அவர்கள் அங்கிருந்து மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தது மற்றொரு ஹிஜ்ராவாகவும் இரண்டு பெரும்பேறுகள் அவர்களை அடைந்தன. இங்கு ஒன்று முக்கியம். தோழர்கள், தோழியரின் போட்டி, இன்பம், துன்பம் என்பதெல்லாம் பட்டம், பதவி, சொத்து, சுகம் என்பனவற்றை ஓர் அடிப்படை அம்சமாகக்கூடக் கருதவில்லை கவனித்தீர்களா? நாளும் பொழுதும் இறைவழியில் அறச் செயல், இறை உவப்பு, அது சார்ந்த நல்லறம் என்றே மாய்ந்து, மாய்ந்து மருகியிருக்கிறார்கள் அவர்கள்.

oOo

புலம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கை, அலைச்சல், பட்ட துன்பம் ஆகியவற்றை விஞ்சும் கடும் சோதனை, இழப்பு வந்தது அஸ்மாவுக்கு. முஃத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நிகழ்ந்தது ஒரு போர். அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

நபியவர்கள் மூவாயிரம் வீரர்களை அணி திரட்டினார்கள். படைத் தலைவராக ஸைது இப்னு ஹாரிதா (ரலி) நியமிக்கப்பட்டார். எதிரிகளுக்கு வலு சேர்ப்பதற்கு நிச்சயம் ரோமர்கள் உதவிக்கு வரப்போகிறார்கள்; போர் உக்கிரமாக இருக்கும் என்ற நபியவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபீதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக் கிரமமாய் நியமித்து வழி அனுப்பி வைத்தார்கள். கிளம்பியது படை.

முஸ்லிம்கள் முஃத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது. எண்ணிக்கை பிரமிப்பு ஏற்படுத்தியதென்றாலும் அதையெல்லாம் ஒதுக்கிக் தள்ளிவிட்டுத் துணிச்சலுடன் களம் புகுந்தனர் முஸ்லிம்கள். ஸைது இப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமை ஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது.

ஜஅஃபரிடம் எந்தவிதத் தயக்கமும் அச்சமும் இருக்கவில்லை. எதிரியின் அணிகளுக்கு இடையே தாக்கிக்கொண்டே அவர் ஊடுருவ, ஊடுருவ சகட்டுமேனிக்குக் காயங்கள். அப்பொழுது எதிரியின் ஒரு வாள் வீச்சு அவரது வலக் கரத்தைத் துண்டாடியது. விழுந்த அங்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கொடியை இடக் கையில் ஏந்திக் கொண்டவர் போரைத் தொடர்ந்தார். மற்றொரு வீச்சில் அந்தக் கையும் துண்டானது. இப்பொழுது வெட்டுப்பட்ட கைகளின் பகுதிகள் போக மீந்திருந்த பகுதிகளால் கொடியை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு அவர் மேலும் தொடர, இறுதியாய் முழுவதும் வெட்டுண்டு வீழ்ந்தார் ஜஅஃபர். அதற்கடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) தலைமை ஏற்றுக் கொண்டு போரிட்டு, அவரும் வீர மரணம் எய்தினார்.

இந்நிகழ்வு நபியவர்களையும் மதீனாவில் இருந்த அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது. ஜஅஃபரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நபியவர்கள் அவரது இல்லத்தை அடைந்தார்கள். அங்கு அஸ்மா போரிலிருந்து திரும்பவிருக்கும் தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளைக் குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டு வீடு கலகலப்பாக இருந்தது.

வீட்டிற்கு வருகை புரிந்த அல்லாஹ்வின் தூதரை வரவேற்றவருக்கு நபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே, ‘விபரீதமோ?’ என்று தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக் குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க, உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.

புரிந்துவிட்டது.

“அல்லாஹ்வின் தூதரே! என் கணவரைப் பற்றிய சோகச் செய்தி கொண்டு வந்தீர்களோ?”

”ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவரும் இரண்டு தோழர்களும்.”

அந்த நபித் தோழி அழுதார். ஆருயிர்க் கணவரின் பிரிவு துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.

“ஜஅஃபரின் மகன் முஹம்மது, அபூதாலிபைப் போல் தோற்றமளிக்கிறான். வடிவத்திலும் செயல்முறைகளிலும் அப்துல்லாஹ் என்னைப் போல் இருக்கின்றான்” என்ற நபியவர்கள் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ்! ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக! ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக!”

பிற்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் பெருந்தன்மையாளராகத் திகழ்ந்தார் என்கிறது வரலாறு.

அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் பிள்ளைகளின் அனாதரவான நிலைபற்றி வருந்தியபோது, “அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆதரவளிப்பவனாக நான் இருக்கையில் அவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற அச்சம் ஏன்?” என்று வினவினார்கள் நபியவர்கள். தம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவர் மீதும் நபியவர்களுக்கு எத்தகைய வாஞ்சையும் பாசமும் அக்கறையும் இருந்தன என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தம் மகள் ஃபாத்திமா (ரலி) வீட்டிற்குச் சென்ற நபியவர்கள், “ஜஅஃபர் குடும்பத்தினருக்கு உணவு சமைத்து அனுப்பவும். அவர்கள் இன்று துக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.

பிறகு நபியவர்கள் அறிவித்தது மிக முக்கியத் தகவல். “நான் கண்டேன். ஜஅஃபர் சொர்க்கத்தில் ஒரு பறவையாய் உல்லாசமாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். சொர்க்கத்தில் எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்லலாம். இழந்த கைகளுக்குப் பகரமாய்ச் சிறகுகள் உள்ளன. அவை இரத்தத்தில் தோய்ந்துள்ளன. பிரகாசமான சிகப்பு நிறத்தில் உள்ளன அவரது கால்கள்”

oOo

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் மனைவி உம்முரூமான் – ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹுவின் தாயார் – மரணமடைந்திருந்தார். தம் மனைவியை இழந்திருந்த அபூபக்ருவுக்கும் கணவரை இழந்த அஸ்மாவுக்கும் திருமணம் முடித்து வைத்தார்கள் நபியவர்கள். இவ்விருவருக்கும் இத்திருமணம் பெரும் மனச் சாந்தியை அளித்தது. திருப்திகரமான இன்பமான மண வாழ்க்கையின் பயனாய் அவர்களுக்கு முஹம்மது பின் அபீபக்ரு பிறந்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஹஜ்ரீ 13ஆம் ஆண்டு அபூபக்ரு மரணமடைந்தார். மரணத் தருவாயில் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் வைத்தார் அவர். ‘இறந்த என் உடலை அஸ்மா குளிப்பாட்ட வேண்டும்; என்னை நபியவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யவேண்டும்.’ தம் மனைவியிடம் எத்தகைய அன்னியோன்யம் ஏற்பட்டிருந்தால் இத்தகைய கோரிக்கை வைத்திருப்பார்? இறை உவப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த தாம்பத்யம். ஆதலால் வயது இடைவெளியை மீறிய நெருக்கமும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட்டுப் போயிருந்தது.

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் விதவையான அஸ்மாவை, ஜஅஃபரின் தம்பியான அலீ இப்னு அபீதாலிப் (ரலி) மறுமணம் புரிந்துகொண்டார். அலீ-அஸ்மா தம்பதியருக்கு யஹ்யா, அவ்னு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.

நபிமொழி அறிவிப்பில் அஸ்மாவின் பங்கும் கணிசமானது. உமர், அபூமூஸா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்பாஸின் மனைவி உம்முஃபள்லு ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இவரிடமிருந்து நபிமொழி அறிந்திருக்கின்றனர்.

நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கிறார் அஸ்மா. அவரின் மகன் முஹம்மது இப்னு அபீபக்ரு இறந்தபின் அந்தச் சோகத்தில் மூழ்கி, அஸ்மா இறந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. மற்றொரு குறிப்பின் மூலம் அலீ ரலியல்லாஹுவுக்குப் பிறகு 20 ஆண்டுகள் வாழ்ந்து, ஹிஜ்ரீ 60ஆம் ஆண்டு அவர் இறந்ததாகத் தெரிகிறது.

ரலியல்லாஹு அன்ஹா!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 05 நவம்பர் அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்: Read More

Related Articles

Leave a Comment