தோழியர் – 13 உம்முமஅபத் (ரலி)

by நூருத்தீன்
13. உம்முமஅபத் (أم معبد)

ட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் கணவர். “நான் இவற்றை ஓட்டிக்கொண்டு போகிறேன். மிச்சம் மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால் இவை உண்ணும்.”

தலையாட்டினார் மனைவி. சில நோஞ்சான் ஆடுகள் தடுமாறிக்கொண்டு அவருடன் சென்றன.

குதைத் என்றொரு கிராமம். மக்கா-மதீனா சாலையில் மக்காவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சாலையோரம் கூடாரம். அதில்தான் அந்தப் பெண்மணியும் அவரின் கணவரும் வாழ்ந்து வந்தனர். அந்தப் பெண்மணியின் பணி, தம் கூடாரத்திற்கு வெளியே உணவுப் பொருட்களுடன் அமர்ந்துகொண்டு, பயணிகள், வழிப்போக்கர்களுக்கு உணவு விற்பது.

இன்று நெடுஞ்சாலையில் சாலையோரக் கடைகள் உள்ளனவே அதைப்போல் அந்தக் காலத்திய கடை. பேரீச்சம் பழம், இறைச்சி, பால், ரொட்டி இதுபோல் ஏதாவது இருக்கும். அவ்வளவுதான். பாலையில் அலுத்து, களைத்து வரும் பயணிகளுக்கு வழியில் கிடைக்கும் அந்த உணவே பெரும் விஷயம். இருப்பவர்கள் பணம் கொடுத்து வாங்கி உண்பார்கள். இல்லாதவர்களுக்கு, ‘பரவாயில்லை. உண்ணுங்கள்’ என்று இலவசமாக வழங்கிவிடுவார் அந்தப் பெண்மணி.

அந்தக் குறிப்பிட்ட ஆண்டு மழை பெய்யாமல் மிகவும் வறண்டுபோய்ப் பஞ்சம் நிலவி வந்தது. கால்நடைகள் எலும்பும் தோலுமாய் நின்றன. பாலும் சுரக்கவில்லை. அறுத்தால் இறைச்சியும் தேறவில்லை. விற்பனைக்கு என்று உணவு எதுவும் இல்லாதபோதும் கூடாரத்திற்கு வெளியே, துணியால் தம்மைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு, எப்போதாவது கடந்து செல்லும் மனிதர்களையும் ஒட்டகங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெண்.

சூடாகிக் கொண்டிருந்த வெயில்; அரவமற்ற சாலை; அமைதியாக இருந்தது அந்தக் கிராமம்.

oOo

அன்றைய அரேபியாவில் ஏகப்பட்ட குலம், கோத்திரம் என்று மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தங்களுக்கு இடையே ஏதாவது சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்துப் போரிட்டு மடிந்தும் வந்தார்கள். அவற்றுள் குழாஆ, பனூ பக்ரு என இரண்டு குலங்கள். என்ன காரணமோ, நியாயமோ, இந்த இரண்டு குலத்தவரும் ஒருவர் தாடியை மற்றவர் பிடித்து இழுத்துக்கொண்டு ஏகப்பட்ட சண்டை; குத்திக்கொண்டு கொலை.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் குரைஷிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டதை முன்னரே பார்த்திருக்கிறோம். அதில் ஓர் அம்சம் முஸ்லிம்களுடனும் முஸ்லிமல்லாத குரைஷிகளுடனும் எந்தக் குலம் வேண்டுமானாலும் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ளலாம். அப்படி ஏற்பட்டதும், அந்தக் குலத்தினரின் பொறுப்பும் பாதுகாப்பும் அவரவர் சார்ந்துள்ள குழுவினரைச் சேர்ந்தவை.

அதன் அடிப்படையில் குழாஆ குலத்தினர் நபியவர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர். இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்பே நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபுடன் நட்புறவு கொண்டிருந்தவர்கள் அவர்கள். பனூ பக்ரு குலத்தினர் இணைவைக்கும் குரைஷிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர்.

முஸ்லிம்களைச் சிறுமைப் படுத்தத் திட்டமிட்டு, சிரத்தையெடுத்து, குரைஷிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கை அம்சங்களை வரைந்ததையும் அதன் ஓர் அம்சம் அவர்களுக்கு எதிராகவே திரும்பியதையும் உம்முகுல்தூம் பின்த் உக்பாவின் வரலாற்றில் பார்த்தோம். அந்த விஷயமாவது, குடும்ப அளவில் ஏற்படுத்திய பாதிப்பு. ஆனால் குரைஷிகளுக்கு ஒட்டுமொத்த பாதகத்தை ஏற்படுத்திய மற்றொரு நிகழ்வும் நிகழ்ந்தது. அதுவும் ஹுதைபிய்யா உடன்படிக்கை அம்சத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கண்ணைக் குத்தியது. அதற்கு அடித்தளம் இட்டவர்கள் பனூ பக்ரு. குழாஆவுக்கும் பனூ பக்ருக்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருந்த சண்டை, போர் நிறுத்த அடிப்படை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு அமைதி நீடித்து வந்தது. ஆனால் குரோதம் மட்டும் புகைந்து கொண்டேயிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் புத்தி கெட்டுப் போன பனூ பக்ருவினார், ‘போட்டுத்தள்ளு அவர்களை’ என்று குழாஆ குலத்தினரைத் தாக்க, காப்புறுதி உடன்படிக்கையின்படி குரைஷிகளும் அதற்கு முழு மனத்துடன் உடந்தையாகிப் போனார்கள். கொஞ்சமே கொஞ்சம் நிதானம் இருந்திருந்தாலும் ‘இதெல்லாம் வேணாம். நிறுத்துங்கப்பா’ என்று அறிவுறுத்தத் தோன்றியிருக்கும். என்ன சொல்ல? விபரீத புத்தி! அந்தச் செயல் அவர்களே தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக் கொண்ட மண். அப்பட்டமாய் முறிந்து போனது ஹுதைபிய்யா உடன்படிக்கை.

அம்ரிப்னு ஸாலிம் அல்-குஸைய்யி என்பவர் மதீனாவிற்கு ஓடிவந்து நபியவர்களிடம் நடந்ததைச் சொன்னார்.

“உமக்கு உதவி அளிக்கப்படும் அம்ரு” என்றார்கள் நபியவர்கள்.

இதுதான் முஸ்லிம்கள் மக்காவின்மீது படையெடுக்கக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி. மக்காவை அடைந்தது முஸ்லி்மகளின் படை. புனிதத்தலத்தில் இரத்தச் சேதாரம் இருக்கக்கூடாது என்பதில் நபியவர்கள் பெரும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். முஸ்லிம் படைகளுக்கு அதன்படிக் கட்டளையும் இடப்பட்டது. முக்கியத் தோழர்களின் தலைமையில் நான்கு படைப்பிரிவுகளை ஏற்படுத்தி மக்காவின் நாற்புறமிருந்தும் உள்ளே வர உத்தரவிட்டிருந்தார்கள் நபியவர்கள். அதன்படி காலித் இப்னுல் வலீத் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் ஒரு படை தெற்குவாசல் வழியாக மக்காவிற்குள் வந்து கொண்டிருந்தது. ஆனால், குரைஷிகளின் சிறு குழுவினர், ஸஃப்வான், ஸுஹைல், இக்ரிமா இப்னு அபூஜஹ்லு ஆகியோரின் தலைமையில் ஆயுதங்களுடன் முஸ்லிம்களைத் தாக்கினர். என்னதான் அமைதிப்படையாக முஸ்லிம்கள் நகர்ந்து வந்தாலும் அந்தச் சிறு குழுவிற்கு இணக்கம் ஏற்படவில்லை. அம்புகள் பறந்து வந்தன. வேறுவழியின்றி தற்காப்பிற்காக முஸ்லிம்கள் திருப்பித் தாக்கும்படி ஆனது. குரைஷிகளின் எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது. ஆனால் அந்த மோதலில் இருபது குரைஷியரும் இரண்டு முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட அந்த இருவரில் ஒருவர், குனைஸ் இப்னு காலித் அல்-குஸைய்யி. நபியவர்களிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டிருந்த குழாஆ குலத்தைச் சேர்ந்தவர். ஆதிக்கா பின்த் காலித் என்ற பெண்மணியின் சகோதரர்.

ஆதிக்கா பின்த் காலித்?

oOo

“முஹம்மதே! அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன், உங்களது மார்க்கம் விரைவில் மேலோங்கப் போகிறது, அது எனக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. நீங்கள் வலிமையுள்ளவராய்த் திகழப் போகிறீர்கள். நான் அந்தச் சமயம் உங்களது ராஜாங்கத்திற்கு வருகை தந்தால் என்னை நீங்கள் கௌரவிக்க வேண்டும். அந்த வாக்குறுதியை நீங்கள் எனக்கு எழுத்திலும் தரவேண்டும்.”

நபியவர்கள் விவரிக்க, ஆமிர் உலர்ந்த எலும்பொன்றில் எழுத, ஸுராக்காவுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. பெருமகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸுராக்காவிடம் நபியவர்கள் கூறினார்கள், “குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதைக் கற்பனை செய்து கொள் ஸுராக்கா.”

“யார்? பாரசீக நாட்டின் சக்கரவர்த்தி குஸ்ரூவா? அவரது கடகங்களா?” ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் ஸுராக்கா.

“ஆம். பாரசீக நாட்டின் சக்கரவர்த்தியும் ஹுர்முஸின் மகனுமான குஸ்ரூவேதான்” என்று பதில் வந்தது.

நபியவர்கள் தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்ததை அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) வரலாற்றில் பார்த்தோம். அவர்கள் இருவருடன் அபூபக்ருவின் அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா, வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்று அந்தக் குழுவில் நால்வர்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் வழக்கமான பாதையைக் கவனமாய்த் தவிர்த்து, பரிச்சயமற்ற தடத்தில் அவர்களது பயணம் அமைந்திருந்தது. நபியவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்பதை அறிந்ததும் அவர்களைக் கொல்ல மக்கத்துக் குரைஷிக் கும்பல் கொலை வெறியுடன் அலைய ஆரம்பித்தது.

“முஹம்மது தப்பித்துவிட்டார். அவரை உயிருடனோ உயிரின்றியோ கண்டுபிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பான நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும்” என்று அருகிலுள்ள ஊர்களுக்குத் தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டுத் தேடிக் கண்டுபிடித்துத் துரத்திக் கொண்டு வந்திருந்தார் ஸுராக்கா இப்னு மாலிக் என்பவர். அப்பொழுது நிகழ்ந்த சில அசாதாரண நிகழ்வுகள், தாம் துரத்தி வந்த முஹம்மது நிச்சயம் ஒரு சாதாரண மனிதர் அல்லர் என்பதை ஸுராக்காவுக்கு உறுதிப்படுத்திவிட்டன. அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவைதாம் மேற்சொன்ன உரையாடல்கள்.

அதன்பின் ஸுராக்கா தமது ஊருக்குக் குதிரையைத் திருப்ப, நபியவர்களும் குழுவினரும் மதீனாவை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். குதைத் என்ற ஊரை அடைந்தது குழு. அங்குச் சாலையோரம் ஒரு கூடாரம். அதன் வெளியே, துணியால் தம்மைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு எப்போதாவது பாலையில் கடந்து செல்லும் மனிதர்களையும் ஒட்டகங்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் உம்முமஅபத் என்ற பெண்மணி.. அவரின் கணவர் அபூமஅபத் ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிருந்தார்.

உம்முமஅபத், தம் கூடாரத்திற்கு வெளியே உணவுப் பொருட்களுடன் அமர்ந்துகொண்டு, பயணிகள், வழிப்போக்கர்களுக்கு உணவு விற்பார். பேரீச்சம் பழம், இறைச்சி, பால், ரொட்டி இதுபோல் ஏதாவது இருக்கும். பாலையில் அலுத்து, களைத்து வரும் பயணிகளுக்கு அது மிகப்பெரும் விருந்து.

பயணத்தில் மிகவும் களைத்துப் போயிருந்த நபியவர்களும் மற்றவர்களும் உம்முமஅபத் கூடாரத்தை அடைந்தனர். ஏதேனும் உணவு இருந்தால் விலைக்குத் தரவும் என்று கேட்க, “தாங்கள் அனைவரும் என் மரியாதைக்குரிய விருந்தினர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். என்னிடம் ஏதும் உணவுப்பொருள் இருந்திருந்தால் உங்களுக்கு விருந்தோம்பல் புரிவதில் எனக்குத் தயக்கமே இல்லை. ஆனால் மன்னிக்கவும், தங்களை உபசரிக்க என்னிடம் உணவு ஏதும் இல்லை” என்றார் உம்முமஅபத்.

அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மழை எதுவும் இன்றி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுப் போயிருந்தது. மழை பெய்தால் மட்டும் பாலையில் முப்போகம் அறுவடையா நடைபெறப் போகிறது? தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் முக்கியம். கட்டாந்தரையில் புல் முளைத்து, கால்நடைகள் அவற்றை மேயும். அவை குட்டி ஈன்றால் பால்; அறுபட்டால் இறைச்சி என்று பாலை நிலத்தவர்க்கு அதுதான் உணவு. மழை இல்லாததால் கால்நடைகள் பஞ்சத்தில் அடிபட்டு எலும்பும் தோலுமாக நின்றன. அவற்றிடம் மடி இருந்தது. கனமில்லை. பால் சுரப்பது நின்றுபோயிருந்தது.

நபியவர்கள் சுற்றுமுற்றும் பார்க்க, கூடாரத்தின் ஓர் ஓரத்தில் படு நோஞ்சானாய் பெண் ஆடு. “இந்த ஆட்டில் நான் பால் கறக்கட்டுமா?” எனக் கேட்டார்கள் நபியவர்கள்.

‘பாலா? இதனிடமா?’ என்று ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்த உம்முமஅபத், “என் கணவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ள ஆடுகளுடன் இணைந்து கொள்ளக்கூட இதற்கு சக்தியில்லை. அதனால் இங்குத் தங்கிவிட்டது. கறந்து பாருங்கள். எத்தனை சொட்டுக் கிடைத்தாலும் தாராளமாய்ப் பருகுங்கள்.”

உம்முமஅபதின் இயற்பெயர் ஆத்திக்கா பின்த் காலித் அல்-குஸைய்யி. உறுதியான, திடகாத்திரமான பெண்மணி. இவரது குழாஆ குலத்தினர்தாம் பிற்காலத்தில் நபியவர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டவர்கள். குழாஆக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராய்த்தான் நபியவர்கள் மக்காவை நோக்கிப் படைதிரட்டிச் சென்றார்கள்.

இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சிவிட்டு, ஆட்டின் மடியைத் தடவிக் கொடுத்தார்கள் நபியவர்கள். பிறகு அதிகப்படியான இறைஞ்சுதல் ஒன்றும் கூறினார்கள், ‘என் இறைவனே! இந்தப் பெண்மணிக்காக இந்த ஆட்டின்மீது நல்லருள் புரிவாயாக!’

வெகு விரைவில் அந்த ஆட்டின் பால்மடி நிரம்பி நின்றது. உம்முமஅபதிடம் பெரியதொரு பாத்திரம் எடுத்துவரும்படி நபியவர்கள் கேட்க, கொண்டுவந்து தந்தார் அவர். நபியவர்கள் தாமே தம் கைகளால் பால் கறக்க, அந்தப் பாத்திரம் நிரம்பி வழிந்தது. முதலில் அதை உம்முமஅபதிடம் நீட்ட, தம் வயிறு முட்ட அதைப் பருகினார் அவர். அடுத்து, தம்முடன் வந்திருந்த மூவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவருக்கென அதை அளித்தார்கள் நபியவர்கள். பரிமாறுபவர் இறுதியில் பருக வேண்டும் என்று தாம் கடைசியில் பருகினார்கள்.

அனைவரின் வயிறும் பசி தணிந்து நிரம்பியிருந்தது. மீண்டும் அப்பாத்திரம் நிரம்பும் மட்டும் பால் கறந்து அதை உம்முமஅபதிடம் அளித்தார்கள் நபியவர்கள். பிறகு சற்று நேரம் அந்தக் கூடாரத்தில் இளைப்பாறிவிட்டு, தம் பயணத்தைத் தொடர்ந்தனர் நால்வரும்.

மாலை, மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டுடன் திரும்பினார் உம்முமஅபதின் கணவர். அவர் பெயர் அஃக்தம் இப்னு அபில்-ஜவ்ன் அல்-குஸைய்யி. பாத்திரத்தையும் அதில் நிரம்பியுள்ள பாலையும் கண்டார்.

“ஆத்திக்கா! என்ன இது? ஏது இந்தப் பால்? நம்மிடம் பால் சுரக்கும் அளவிற்கு ஆடு இல்லையே!”

“ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் நம்மைக் கடந்துச் சென்றார்” என்று அன்று நடந்த முழு நிகழ்வையும் கூறினார் உம்முமஅபத். அனைத்தையும் கேட்ட அபூமஅபதுக்குச் சட்டெனப் பொறி தட்டியது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் குரைஷியர் தேடி அலையும் மனிதர். நான் அவரைச் சந்தித்தால், அவரைப் பின்பற்றுவேன்.”

நபியவர்களைத் தேடிக் கிளம்பியிருந்த மக்களுள் சிலர் அடுத்தடுத்த நாள் உம்முமஅபத் கூடாரம் வரை வந்துவிட்டார்கள். அவர்கள் விசாரித்தபோது, “அப்படி யாரும் இப்பாதை வழியே கடந்து செல்லவில்லையே” என்று அடித்துச் சொல்லிவிட்டார் உம்முமஅபத்.

கல்வியறிவு குறைந்த முரட்டுத்தனமான பதுஉக் குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் உம்முமஅபதுக்கு அற்புதமான அறிவுத்திறன் அமைந்திருந்தது. நபியவர்களைக் கண்டு பழகிய சிறு நேரத்திற்குள்ளேயே அந்த மனிதர், மாமனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று அவரால் உணர முடிந்திருக்கிறது. ‘இவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது; மற்றவர்களைப்போல் அல்லர் இவர்’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சில குறிப்புகள் அவர் அன்றே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்கின்றன. இதரக் குறிப்புகள் அவரும் அவரின் கணவரும் பின்னர் மதீனா சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்று தெரிவிக்கின்றன. அவர் நபியவர்களின் உருவத்தைப் பற்றி அளித்துள்ள வருணனை மிகவும் துல்லியம்.

“இயல்பாகவே ஒளிவீசும் முகம்; ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஈர்க்கும் வசீகரம். உடல் பெருத்தவரோ ஒல்லிக்குச்சியோ அல்லர்; சீரான உடல்வாகு; கருகருவென கருத்து நீண்ட வில்லொத்த புருவம்; களங்கமற்ற கருவிழிகள்; சுருண்டு தொங்கும் தலைமுடி; அடர்த்தியான தாடி; உயர்ந்த கழுத்து; அவர் பேசாமலிருந்தால் கம்பீரமான அமைதி; பேசினால் அளந்து, தெளிவாகப் பேசினார். அவரது பேச்சில் நாவன்மை மிளிர்ந்தது. உயரத்தால் நெடியவருமல்லர்; குட்டையானவருமல்லர்; நடுத்தர உயரம் கொண்டவர். எட்டத்தில் பார்க்கும்போது வசீகரமானவராகவும் அண்மிப் பழகினால் இனிமையானவராகவும் திகழ்ந்தார். இருவருடன் சேர்ந்திருக்கும்போது, பழுத்த ஈச்சந்தோகைகள் இரண்டின் நடுவே புதிதாகத் தோன்றிய இளந்தளிர்த் தோகைபோல் தெரிந்தார். அவர் பேசினால் அவருடைய தோழர்கள் மரியாதையுடன் செவிதாழ்த்தினர். அவர் கட்டளையிட்டால் கட்டுண்டு சடுதியில் நிறைவேற்றினர். அவர்தம் தோழர்களிடையே கண்ணியம் மிக்கவராகத் திகழ்ந்தார்.”

விளக்கமாய் அமைந்து வரலாற்றில் சிறப்பாய் நிலைபெற்றுவிட்டது உம்முமஅபதின் இந்த வருணனை.

oOo

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நபியவர்களின் மனைவியர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும்பொழுது உம்முமஅபதின் கூடாரத்தைக் கடக்க நேரிட்டது. அது உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டம். உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு, நபியவர்களின் மனைவியருக்குத் துணையாய்ச் சென்று கொண்டிருந்தார். அப்பெண்டிர்களைக் கண்ட உம்முமஅபத், அன்றொரு நாள் நபியவர்கள் தம் விருந்தினராய் அமைந்த பழைய நினைவு தாக்கி, விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். அந்த நினைவுகள் நபியவர்களின் மனைவியருக்கும் சோகத்தை அளிக்க, அவர்களும் அழுதனர். அவர்கள் ஒவ்வொருவரும் உம்முமஅபதுக்கு ஏதோ ஒரு பரிசு அளித்துவிட்டு, நாட்டின் வருவாயை கலீஃபா பகிர்ந்தளிக்கும் நேரத்தில் தங்களைச் சந்திக்கும்படி அறிவுறுத்திவிட்டு விடைபெற்றனர்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பின்னர் மதீனா சென்று அவர்களைச் சந்தித்தார் உம்முமஅபத். அச்சமயம் நபியவர்களின் ஏழு மனைவியர் உயிர் வாழ்ந்திருந்தனர். அனைவரும் தலா 50 தீனார்களை உம்முமஅபதுக்கு நன்கொடையாக அளித்தனர். நீண்ட காலம் உயிர் வாழ்ந்து மறைந்தார் உம்முமஅபத்.

ரலியல்லாஹு அன்ஹா!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 30 அக்டோபர் 2012 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்: Read More

Related Articles

Leave a Comment