11. அஸ்மா பின்த் அபீபக்ரு (أسماء بنت أبي بكر)
மக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது! கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய கற்கள். அந்த அதிர்ச்சியில் மக்காவிலுள்ள வீடுகள் அதிர்ந்தன. அதுவரை மக்கா எதிர்கொண்டிராத மிகவும் இக்கட்டான, பயங்கரமான, சூழ்நிலையில் தம் தாயைச் சந்திக்க வந்தார் தனயன்.
அந்தத் தாயாருக்கு நூறு வயதிருக்கும். மிகவும் முதுமையடைந்து, தளர்வடைந்து, கண் பார்வையையும் இழந்திருந்தார். முகமன் கூறி நுழைந்தார் மகன். வரவேற்றார் தாயார்.
“எதிர் தரப்புத் தூதர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். என்னுடைய ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என்று ஒப்புதல் அளித்துவிட்டால், நான் என்ன கேட்டாலும் எதைக் கோரினாலும் அளிக்கத் தயாராம். தங்களுடைய ஆலோசனை என்ன?”
அவரை அப்பட்டமாய்ச் சரணடையச் சொல்லித் தூது அனுப்பியிருந்தார்கள் எதிர்த் தரப்பினர். கவலை, குழப்பம், விரக்தி ஆகிய கலவையான உணர்வுகளால் சஞ்சலம் சூழ்ந்த மனத்துடன் தாயாரின் அன்பையும் ஆதரவையும், அதற்கும் மேலாய் அவரது அறிவார்ந்த ஆலோசனைகளையும் பெறுவதற்காக வந்திருந்தார் மகன். வயதை மீறிய உறுதியுடன் பலமான குரலில் பதில் வந்தது தாயிடமிருந்து.
“மகனே! இது உன்னுடைய விஷயம். உனக்கு எது சிறப்பானது என்பதை நீ மட்டுமே நன்கு அறிய முடியும். நீ நியாயத்தின் பக்கம் நிற்பதாய் உறுதியாக நம்பினால், நீ எதை நோக்கி அவர்களை அழைக்கிறாயோ அது உண்மையென்றால், நீ பொறுமையிலும் திடமான உறுதியிலும் நிலைத்திருக்க வேண்டும். உன்னுடன் இணைந்து உனக்காகப் போரிட்டு மடிந்தார்களே, அவர்கள் நீதி நிலைபெறவேண்டும் என்பதற்காகத்தான் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஆனால் உன் மனத்தில் இருப்பது உலக ஆதாயம் மட்டுமே என்றால் நீயொரு இழிபிறவி! உன்னுடைய தோழர்களின் வீரமரணத்திற்கு அர்த்தமில்லை. உனது அழிவையும் நீயே தேடிக்கொண்டதாய் ஆகும்.”
கடினமான தருணங்களில் உலக வழக்கில் வழங்கப்படும் ஆதரவான ஆறுதல் வார்த்தைகள், யதார்த்த மொழிகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டிருந்தது அந்த பதில்.
“எப்படி இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயமாயிற்றே!” இடைமறித்தார் மகன்.
“எனில், அவர்களிடம் சரணடைந்து உன் தலை கொய்யப்பட்டுப் பந்தாடப்படுவதைவிட, நீ தனியனாகப் போரிட்டு மடிவதே மேல்.”
“தாயே! மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. அவ்வாறு என்னை நீங்கள் வளர்க்கவுமில்லை. ஆனால், நான் வெட்டப்பட்டபின், எனது உடல் சிதைக்கப்படுமே என்பதை நினைத்தால்தான் திகில் ஏற்படுகிறது.”
“வெட்டப்பட்ட ஆட்டிற்குத் தோல் உரிக்கப்பட்டாலும் வலியில்லை; வெட்டித் துண்டு போடப்பட்டாலும் கவலையில்லை. நீ மரணமடைந்தபின் உனக்கு ஏது வலியும் கிலியும்?”
தம் தாயின் பதில் அவருக்கு மனவுறுதியை அதிகரிக்கச் செய்தது. புன்னகைத்தார். “உங்களைத் தாயாக அடைந்ததற்கு எப்பேறு பெற்ற மகன் நான்!” விடைபெற்றார்.
விண் நோக்கிக் கையுயர்த்தித் தம் மகனுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் தாயார் – அஸ்மா பின்த் அபீபக்ரு, ரலியல்லாஹு அன்ஹா.
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ வருகை புரிவது நாள் தவறாத வழக்கம். அந்தளவு தோழமையும் அலாதியான அணுக்கமும் இருவருக்கும் இடையில் அமைந்திருந்தது. ஒருநாள் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரும் அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா – ரலியல்லாஹு அன்ஹுமா – மட்டுமே இருந்தனர்.
ஆச்சரியத்துடன் நபியவர்களைப் பார்த்தார் அபூபக்ரு. வந்த விஷயத்தை மெல்லத் தெரிவித்தார்கள் நபியவர்கள். அத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு விடிவாய், இறைவனிடமிருந்து அனுமதி வந்திருந்தது. நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்வதற்கான அனுமதி. அவர்களுடன் தாமும் சேர்ந்து செல்ல அனுமதி உண்டு என்பதை அறிந்ததும், கண்ணீர் மல்க ஆனந்தமடைந்தார் அபூபக்ரு! எதிரிகளுக்குச் சற்றும் சந்தேகம் ஏற்பட்டுவிடாமல் மளமளவென்று ரகசியத் திட்டம் உருவாகியது. தேவையான பயண ஏற்பாடுகளைக் கிடுகிடுவெனச் செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் வாயை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா சட்டென்று தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து, அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, “தாத்துந் நித்தாக்கைன் – வாரிரண்டு வனிதை” என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.
நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவிற்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் – ரலியல்லாஹு அன்ஹும் – தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் இதையெல்லாம் அறியாத எதிரிகள் நபியவர்களைக் கொன்றுவிடுவது என்று முடிவுக்கு வந்திருந்தார்கள். இரவு வந்தது. இருள் சூழ்ந்தது. நபியவர்களை அவரது வீட்டில் புகுந்து கொலை செய்யக் குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அங்கிருந்து நேரே அபூபக்ருவின் வீட்டிற்கு அவர்கள் வந்துசேர, அவர் அங்குத் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள்.
நபியவர்களின் வீட்டிற்கு வெளியே பதுங்கியிருந்த கொலைக் கும்பல், நபியவர்கள் தப்பித்துவிட்டதை அறிந்து எழுப்பிய கோபக் கூச்சல் ஊரெங்கும் தெருவெங்கும் மூலை முடுக்கெங்கும் பரவி, மக்காவில் அன்றைய தலைப்புச் செய்தியானது.
“முஹம்மது இரவோடு இரவாக மக்காவிலிருந்து வெளியேறி விட்டாராம்!”
குரைஷிக் கூட்டத் தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. “அது எப்படி முடியும்? வீடு வீடாகத் தேடுங்கள்” என்று ஓட ஆரம்பித்தார்கள். நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தார் வீடுகளில்தான் முதலில் தேடினர். பிறகு தோழர்களின் வீடுகள்.
அபூபக்ருவின் வீட்டின் கதவைத் தட்ட அஸ்மா வெளியே வந்தார். அப்பொழுது மிக இளவயதினர் அவர். அபூஜஹ்லு கோபத்துடன், “ஏய் பெண்ணே, உன் அப்பன் எங்கே?” என்றான்.
“அவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது” என்றார் அஸ்மா.
தேடிக் களைத்த கோபத்திலும் எரிச்சலின் உச்சத்திலும் இருந்த அபூஜஹ்லு, பெண் என்றும் பாராமல் அஸ்மாவின் முகத்தில் ஓங்கி அறைய, அவரது காதணி தெறித்து விழுந்தது. சீற்றத்தில் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது குரைஷித் தலைவர்களுக்கு. முஹம்மது நிச்சயமாய் மக்காவில் ஒளிந்தில்லை; வெளியேறிவிட்டார் என்பது அவர்களுக்கு உறுதியானது. அடியையும் வலியையும் துடைத்துவிட்டுக்கொண்டு அமைதி காத்தார் அஸ்மா.
நபியவர்களுடன் புலம்பெயரும்போது அபூபக்ரு தம்மிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். நிறையப் பணம். ஏறத்தாழ ஆறாயிரம் திர்ஹம். அதைத் தவிர வீட்டில் பணம் இல்லை. அபூபக்ருவின் தந்தை அபூகுஹாஃபா அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோதுதான் இஸ்லாத்தினுள் நுழைய அவருக்கு வாய்த்தது.
முஹம்மதுவுடன் சேர்ந்து தம் மகனும் வெளியேறிவிட்டார் என்ற செய்தி அவருக்குக் கிடைத்ததும் பேரக் குழந்தைகளைப் பற்றிய கவலை அவருக்கு ஏற்பட்டது. முதிய வயது, பார்வையும் அற்றுப்போயிருந்தது அவருக்கு. இருந்தாலும் தட்டுத் தடுமாறித் தம் மகனின் வீட்டிற்குச் சென்றார்.
.அங்கிருந்த அஸ்மாவிடம் தம் ஆத்திரத்தையும் கரிசனத்தையும் கொட்டினார் பாட்டனார். “சத்தியமாகச் சொல்கிறேன். உங்களையெல்லாம் நிராதரவாய் விட்டுவிட்டுச் சென்றதும் இல்லாமல், தன்னுடைய செல்வத்தையும் எடுத்துச் சென்று உங்களைச் சிரமத்தில் விட்டுவிட்டான் என் மகன்.”
“அப்படியெல்லாம் இல்லை. உண்மையில் எங்களுக்கு நிறைய விட்டுச் சென்றிருக்கிறார்” என்று மறுத்தார் அஸ்மா.
தந்தையின் நோக்கம் நன்கு அறிந்திருந்தவர் அஸ்மா. அவரை விட்டுத்தர முடியாது. அதே நேரத்தில் பாட்டனாரைச் சிரமப்படுத்துவதும் கூடாது. இஸ்லாத்தை ஏற்றிருக்காத அவரிடமிருந்து உதவி கோரிப் பெறுவதோ உசிதமில்லை; அதில் அஸ்மாவுக்கு விருப்பமும் இல்லை. புத்திசாலித்தனம் மிகுந்திருந்த அஸ்மாவுக்கு சமயோசிதம் கைகொடுத்தது.
அபூபக்ரு தம் பணத்தைச் சேர்த்து வைக்கும் மாடம் ஒன்று அவ்வீட்டில் இருந்தது. அங்கு அவர்களது அந்தக் காலத்து இரும்புப் பெட்டகம் ஒன்றிருந்தது. அஸ்மா அதில் கூழாங்கற்கள் சிலவற்றை நிரப்பி, அதன்மேல் துணி ஒன்றைப் போர்த்தினார். கண்பார்வையற்ற தம் பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, அதைத் தடவச்சொல்லி, “இதோ பாருங்கள். எங்களுக்கு எவ்வளவு காசு பணம்.”
தடவிப்பார்த்த அபூகுஹாஃபா, “மிக்க நன்று. இந்தளவு உங்களிடம் பணம் இருந்தால் நான் கவலைப்பட ஏதுமில்லை” என்று சமாதானமடைந்தார்.
அபூபக்ருவின் மனைவி குத்தைலா பின்த் அப்துல் உஸ்ஸாவுக்குப் பிறந்தவர்கள் அஸ்மாவும் அப்துல்லாஹ்வும். மற்றொரு மனைவியான உம்முரூமானுக்கு ஆயிஷா, அப்துர் ரஹ்மான். இஸ்லாமிய மீளெழுச்சியின் ஆரம்பத் தருணங்களிலேயே அஸ்மா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்குமுன் ஆண்களும் பெண்களுமாய்ப் பதினெழுவர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். நட்பு வகையிலும் சரி, உறவு வகையிலும் சரி, நபியவர்களுக்கு மிக மிக நெருக்கமான குடும்பம் அஸ்மாவினுடையது. தந்தை அபூபக்ரு (ரலி), நபியவர்களின் அணுக்கத் தோழர் என்பது மட்டுமல்ல; அவரின் மகள் ஆயிஷா (ரலி) நபியவர்களின் மனைவி. அஸ்மாவின் திருமணமும் நபியவர்களின் நெருங்கிய உறவினருடன் நிகழ்ந்தது.
நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர் அவ்வாம் – நபியவர்களின் அத்தை ஸஃபிய்யா தம்பதியருக்குப் பிறந்தவர் ஸுபைர் பின் அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு. சொர்க்கம் உறுதி என்று நபியவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட பத்துப்பேருள் ஒருவர். ஸுபைருக்கு அச்சமயம் செல்வம் என்று எதுவும் இல்லை. ஏழ்மையையும் வறுமையையும் உடுத்திக்கொண்டிருந்தார். பகரமாய் அசைக்க முடியாத ஈமான், கலங்கடிக்கும் வீரம், நபியவர்கள் அளித்த பெரும்பேறான ‘சுவர்க்கவாசி’ எனும் முன்னறிவிப்பு என்று எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சந்தையில் வாங்க இயலாத தகுதிகள் அவரிடம் உயர்ந்து மலிந்து கிடந்தன. சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட இவருக்கு அஸ்மாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமுடித்து வைத்தார் அபூபக்ரு.
ஸுபைர், அஸ்மா தம்பதியருக்கு, அப்துல்லாஹ், உர்வா, ஆஸிம், முஹாஜிர், கதீஜா அல்-குப்ரா, உம்முல் ஹஸன், ஆயிஷா ஆகியோர் பிறந்தனர்.
oOo
நபியவர்கள் மதீனா சென்றடைந்ததும் மக்காவிலுள்ள தம் வீட்டுப் பெண்களை அழைத்துவர ஸைது இப்னு ஹாரிதா, அபூராஃபிஉ இருவரையும் அனுப்பிவைத்தார்கள். இரண்டு ஒட்டகங்களும் அபூபக்ருவிடமிருந்து தாம் பெற்றிருந்த 500 திர்ஹமும் அவர்களிடம் அளித்து, `சவாரி செய்யத் தேவைப்படும் ஒட்டகங்களை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருந்தார்கள். அந்த இருவருடன் அப்துல்லாஹ் பின் உரைகித் என்பவரைத் தம் சார்பாய்த் தம் பெண்களிடம் அனுப்பிவைத்தார் அபூபக்ரு. இரண்டு அல்லது மூன்று ஒட்டகங்களும் கூடவே, தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு ஒரு கடிதமும் அளித்தார். தம் மனைவி உம்முரூமானையும் மகள்கள் அஸ்மா, ஆயிஷாவையும் அழைத்துக்கொண்டு மதீனா வந்து சேரும்படி விபரம் எழுதப்பட்டிருந்தது. அஸ்மாவின் தாயார் குத்தைலா இஸ்லாத்தை நிராகரித்துவிட்டதால், அவருடனான தம் திருமணத்தை முறித்துக்கொண்டார் அபூபக்ரு.
மதீனாவிலிருந்து கிளம்பிய இச்சிறு குழு, குதைத் வந்தடைந்தது. இது மக்காவிற்கு அருகிலுள்ள ஊர். தம்மிடம் நபியவர்கள் அளித்திருந்த 500 திர்ஹத்தில் மூன்று ஒட்டகங்களை வாங்கினார் ஸைது இப்னுல் ஹாரிதா. இதற்குள் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அபூபக்ருவின் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கிளம்பிக்கொண்டிருக்க, சரியான தருணத்தில் வந்து சேர்ந்தார்கள் ஸைதும் தோழர்களும். ‘சற்றுப் பொறுங்கள். அனைவரும் சேர்ந்து கிளம்புவோம்’ என்று நபியவர்களின் மனைவி ஸவ்தா பின்த் ஸம்ஆ, நபியவர்களின் மகள்கள் ஃபாத்திமா, உம்முகுல்தூம் ஆகியோரை ஸைது அழைத்துக்கொண்டார். அபூபக்ருவின் மனைவி உம்முரூமானையும் அவருடைய மகள்கள் அஸ்மா, ஆயிஷா இருவரையும் அப்துல்லாஹ் பின் அபூபக்ரு அழைத்துக்கொண்டார். வந்தவர்களுடன் புலம்பெயர்ந்தார்கள் மற்றவர்கள்.
அஸ்மா மதீனாவிற்குப் புலம்பெயரும்போது நிறைமாத கர்ப்பிணி. ஆடம்பரப் போக்குவரத்து வசதி, நெடுஞ்சாலை என்றெல்லாம் இல்லாத அக்காலகட்டத்தில், பாலை வெயிலின் உஷ்ணத்தில் பயணத்தின் கடுமை பெரும் கொடுமை. அதையும் பிறந்த மண்ணைப் பிரியும் ஆற்றாமை என அனைத்தையும் சகித்துக்கொண்டு பயணம் துவங்கியது. குபாவை அடைந்திருப்பார்கள். அஸ்மாவுக்குப் பிரசவம் நிகழ்வுற்றுப் பிறந்தார் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர். முஸ்லிம்களுக்கு – குறிப்பாக முஹாஜிர்களுக்கு – அந்தப் பிரசவம் அசாதாரண கூடுதல் மகிழ்வை அளித்தது. காரணம்?
மக்கத்துக் காஃபிர்கள் முஸ்லிம்களிடம், “யூதர்களிடம் சொல்லி சூனியம் வைத்துவிட்டோம். உங்களுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது” எனப் பூச்சாண்டி காட்டி வைத்திருந்தனர். கடும் சோதனை, புலம் பெயர்ந்த புது மண்ணில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் இக்கட்டு என்று மூழ்கிக்கிடந்த முஹாஜிர்களுக்கு, யூத சூனியத்தைப் பொய்யாக்கிப் பிறந்த முஹாஜிர்களின் முதல் குழந்தை என்ற பாசம்தான். வேறென்ன!
சிசுவை எடுத்துச் சென்று நபியவர்களின் மடியில் வைத்தார் அஸ்மா. பேரீச்சம் கனியொன்றை மென்று அதன் சாறைக் குழந்தையின் வாயில் தடவினார்கள் நபியவர்கள். அக்குழந்தைக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள். பிறந்த நொடியிலேயே இத்தகைய தனிச்சிறப்புடன் உருவானார் அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு.
ஸுபைர் ஏழை என்று பார்த்தோமில்லையா? சற்று விரிவாகச் சொன்னால் அவரிடம் சொத்து என்று இருந்ததெல்லாம் தண்ணீர் இறைத்துச் சுமந்துவர ஓர் ஒட்டகம்; போருக்கும் போக்குவரத்துக்குமாக ஒரு குதிரை. அவ்வளவுதான். இவற்றையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது அஸ்மாவின் பணியாக இருந்தது. இதென்ன பெரிய பணி? என்று நமக்குத் தோன்றலாம். பேரீச்சம்பழக் கொட்டைகளை அரைத்து குதிரைக்குத் தீனி வைப்பார். அவற்றை அரைக்க மின்சார சாதன வசதிகள் இல்லாத காலத்தில் அதுவே பெரும் பணி. குழாய் வசதி கிடையாது. தொலைவிலிருந்து தண்ணீர் இறைத்து ஒட்டகத்தில் சுமந்து வரவேண்டும். ஸுபைரின் பயணத்திற்குச் சேணம் தயார் செய்து வைக்க வேண்டும். இதெல்லாம் முடித்து, குழந்தைகளைக் கவனித்து, உணவுக்கு ரொட்டி சுட மாவு அரைத்து, பிசைந்து வைத்து என்று நாள்தோறும் சுழன்று கொண்டிருந்த அஸ்மாவுக்குச் சுவையாய் ரொட்டி சுடும் கைமணம் மட்டும் பிடிபடவில்லை. ‘அதற்கென்ன? நாங்கள் இருக்கிறோம்’ என்று உதவினார்கள் அண்டை வீட்டில் இருந்த அன்ஸாரிப் பெண்கள்.
பெண்களின் குடும்பப் பொறுப்பு என்பது கொச்சைப்படுத்தப்படாத காலம் அது.
நபியவர்கள் ஸுபைருக்குச் சிறிதளவு நிலம் அளித்திருந்தார்கள். அது அவருடைய இல்லத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு. அங்குச் சென்று பேரீச்சம் பழங்களைச் சேகரித்துக் கூடையில் அள்ளித் தலையில் சுமந்து வருவார் அஸ்மா. ஒருநாள் அவ்விதம் அவர் வந்து கொண்டிருந்தபோது, நபியவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அவ்வழியே வந்தார்கள். அஸ்மாவைக் கண்டதும் அவரை அழைத்து, தம் ஒட்டகத்தை மண்டியிடச்செய்து, ‘ஏறிக்கொள் அஸ்மா’ என்று கனிவுடன் அழைக்க, தயங்கினார் அஸ்மா. யோசனை செய்தவர் அடக்கமாய் மறுத்தார். இதர ஆண்கள் இருக்க அவர்களுடன் சேர்ந்து செல்லும் வெட்கம் ஒருபுறம்; தம் கணவர் ஸுபைருடைய தன்மானத்துக்குத் தம்மால் இழுக்கு நேர்ந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை மறுபுறம்.
அஸ்மா வெட்கப்படுவதை அறிந்த நபியவர்கள் வற்புறுத்தவில்லை; சென்றுவிட்டார்கள். பின்னர் வீட்டிற்கு வந்த அஸ்மா தம் கணவரிடம் நடந்ததை விவரித்தார். ‘உங்களுடைய தன்மானமும் என்னுடைய வெட்கமும் தடுத்துவிட்டன’ என்ற காரணத்தையும் கூறினார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களுடன் நீ பயணித்து வருவதைவிட, உன் தலையில் பேரீச்சம் பழங்களைச் சுமந்து வருவதே என் மனத்தை வருத்துவதாகும்” என்று தம் அன்பைப் பகர்ந்தார் ஸுபைர். இவற்றையெல்லாம் அறியவந்த அபூபக்ரு, தம் மகள் அஸ்மாவின் குடும்பப் பொறுப்பிற்கு ஒத்தாசையாய் பணியாள் ஒருவரையும் குதிரை ஒன்றையும் அனுப்பிவைத்தார்.
இவ்வளவு சிரமத்துடன் வாழ்ந்துவந்த அஸ்மாவின் பரோபகாரம் மிகவும் பிரசித்தம். “என் சிற்றன்னை ஆயிஷா, அவர் சகோதரி அஸ்மா ஆகியோரைப் போல் தர்ம சிந்தனையுள்ள பெண்களை நான் கண்டதில்லை. ஆனால் அதைச் செயல்படுத்துவதில் இருவரும் வித்தியாசப்பட்டனர். என் சிற்றன்னை தமக்குக் கிடைப்பதைச் சேமித்து வைத்து அது ஓர் அளவை எட்டியதும் அப்படியே எடுத்து ஏழைகளுக்கு வழங்குவார். ஆனால் என் அன்னையோ தமக்குக் கிடைப்பதை உடனுக்குடனே அளித்து விடுவார். நாளைக்குச் சேமித்து வைப்போம் என்பது அவரிடம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல்லாஹ்.
oOo
உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் படுகொலை, அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் கிலாஃபத், அவரது படுகொலை, அதற்குப்பின் தொடர்ந்த நிகழ்வுகள் ஆகியன இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் உக்கிரமான காலகட்டம். பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. ஹிஜாஸ் பகுதியை யஸீத் இப்னு முஆவியா ஆண்டுகொண்டிருந்தார். அவர் மரணமடைந்தவுடன், ஸிரியாவின் பெரும்பகுதி, ஹிஜாஸ், எகிப்து, குரஸான் ஆகிய பகுதி மக்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரைக் கலீஃபாவாக ஏற்றுக்கொண்டனர். மக்கா தலைமையகமாக இருந்தது. ஆனால் பனூ உமைய்யாக் கோத்திரத்தினர், ஹாஷிம் குலத்து இப்னு ஸுபைரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதாயிரம் வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் படையொன்று ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் அல்-தகஃபி என்பவரின் தலைமையில் மக்காவை வந்து முற்றுகையிட்டது. கடுமையான சண்டை, போர், இருதரப்பு முஸ்லிம்கள் மத்தியில் ஏகப்பட்ட உயிரிழப்பு. கஅபாவின் வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பெரும் வீரத்துடன் அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தார். ஆனால் சண்டை நீண்ட நாள் நீடிக்க, பலர் கொல்லப்பட்டிருந்தனர்; மற்றும் பலர் அப்துல்லாஹ்வின் படையை வீட்டு நீங்கிச் சென்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் மக்காவினுள் கஅபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். எதிரிகளின் கவணிலிருந்து கற்பாறைகள் பறந்து வந்து மக்கா நகரினுள் விழுந்து கொண்டிருந்தன. பெரிய பெரிய கற்கள். அந்த அதிர்ச்சியில் மக்காவிலுள்ள வீடுகளெல்லாம் அதிர்ந்தன. மிகவும் இக்கட்டான, பயங்கரமான சூழ்நிலை.
அதற்குமேல் சண்டை நீடிக்க வாய்ப்பில்லை, இன்று தமது மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தார் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர். தாயாரின் அன்பும் ஆதரவும் அதற்கும் மேலாய் அவரது அறிவார்ந்த ஆலோசனைகளும் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது. இறுதியாகத் தம் தாயைச் சந்திக்க வந்தார். மிகவும் முதுமையடைந்து, கண்பார்வை அற்றுப்போய், அந்திமக் காலத்தில் இருந்தார் அஸ்மா. தாய்க்கும் தனயனுக்கும் இடையில் அன்று நடைபெற்ற உரையாடல், சிறப்புமிக்க ஒரு நிகழ்வாய் வரலாற்றில் பதியப்பட்டது. ஈமானிய உறுதியும் வீரமும் போட்டி போட்ட அந்த நிகழ்வு, முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு கருவூலம்.
“தாயே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு” முகமன் கூறி உள்ளே நுழைந்தார் அப்துல்லாஹ்.
“வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு” தம் மகனைக் குரலால் அடையாளம் கண்டுகொண்ட அஸ்மா கேட்ட முதல் கேள்வியே நமக்கு ஆச்சரியம். “ஹஜ்ஜாஜ் கவணிலிருந்து எறியும் கற்பாறைகள் உன்னுடைய வீரர்கள் மீதும் புனித கஅபாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்காவிலுள்ள வீடுகள் அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்?”
“தங்களுடைய ஆலோசனையை நாடி வந்திருக்கிறேன்.”
“என்னுடைய ஆலோசனையையா? எதைப் பற்றி?”
“என்னுடன் இருந்தவர்களுள் பலர் என்னை ஏமாற்றமுறச் செய்துவிட்டனர். ஹஜ்ஜாஜ் மீதுள்ள அச்சத்தினாலோ, அல்லது அவரது பதவி, செல்வம், போன்றவற்றில் பங்கு பெறுவதற்காகவோ எனக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக்கொண்டு என்னை விட்டு நீங்கிவிட்டனர். நம் குடும்பத்து உறவினர்களும் பிள்ளைகளும் என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். வெகு சிலர் மட்டுமே இப்பொழுது என்னுடன் உள்ளனர். அவர்கள் எவ்வளவுதான் உறுதியுடன் நிலைத்து நின்றாலும், சொற்ப நேரத்துக்குமேல் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.”
ஆதரவு அளித்தவர்கள் எல்லாம் விலகிப்போய், தனித்துவிடப்பட்ட நிலையில் இருந்தார் அப்துல்லாஹ். மிச்சம் இருந்ததெல்லாம் ஈமானும் மன உறுதியும் அவரைப் போன்ற மிகச் சிலரும்.
“எதிர் தரப்புத் தூதர்கள் வாக்குறுதியோடு வந்துள்ளார்கள். என்னுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, அப்துல் மாலிக் பின் மர்வானை நான் கலீஃபாவாக ஏற்றுக்கொள்வதாகப் பிரமாணம் அளித்துவிட்டால், நான் என்ன கேட்டாலும் எதைக் கோரினாலும் அளிக்கத் தயார் என்கிறார்கள். தங்களுடைய ஆலோசனை என்ன?”
தனயனின் பேச்சை உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்ருந்தவரிடமிருந்து வயதை மீறிய உறுதியுடன் பலமான குரலில் பதில் வந்தது. “மகனே! இது உன்னுடைய விஷயம். உனக்கு எது சிறப்பானது என்பதை நீ மட்டுமே நன்கு அறிய முடியும். நீ நியாயத்தின் பக்கம் நிற்பதாய் உறுதியாக நம்பினால், நீ எதை நோக்கி அவர்களை அழைக்கிறாயோ அது உண்மையென்றால், நீ பொறுமையிலும் திடமான உறுதியிலும் நிலைத்திருக்க வேண்டும். உன்னுடன் இணைந்து, உனக்காகப் போரிட்டு மடிந்தார்களே, அவர்கள் நீதி நிலைபெறவேண்டும் என்பதற்காகத்தான் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஆனால் உன் மனத்தில் இருப்பது உலக ஆதாயம் மட்டுமே என்றால் நீயொரு இழிபிறவி! உன்னுடைய தோழர்களின் வீரமரணத்திற்கு அர்த்தமில்லை. உனது அழிவையும் இழிவையும் நீயே தேடிக்கொண்டதாய் ஆகும்.”
“எப்படி இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயமாயிற்றே!” இடைமறித்தார் மகன்.
“எனில், அவர்களிடம் சரணடைந்து உன் தலை கொய்யப்பட்டு, பந்தாடப்படுவதைவிட, நீ தனியனாகப் போரிட்டு மடிவதே மேல்.”
“தாயே! மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. தாயே! அவ்வாறு என்னை நீங்கள் வளர்க்கவுமில்லை. ஆனால், நான் வெட்டப்பட்டபின் எனது உடல் சிதைக்கப்படுமே என்பதை நினைத்தால்தான் திகில் ஏற்படுகிறது.”
“வெட்டப்பட்ட ஆட்டிற்குத் தோல் உரிக்கப்பட்டாலும் வலியில்லை; வெட்டித் துண்டு போடப்பட்டாலும் கவலை இல்லை. நீ மரணமடைந்தபின் உனக்கு ஏது வலியும் கிலியும்?”
தம் தாயின் பதில் அவருக்கு மனவுறுதியை அதிகரிக்கச் செய்தது. புன்னகைத்தார் மகன்.
“உங்களைத் தாயாக அடைந்ததற்கு எப்பேறு பெற்ற மகன் நான்! தங்களிடம் நற்குணமும் தகுதியும் ஏராளம் மிகைத்துள்ளன. நான் என்ன விரும்பினேனோ அதைத் தாங்கள் சொல்லி என் காதால் கேட்கவே நான் இங்கு வந்தேன். நான் எனது துணிவையும் பலத்தையும் இழக்கவில்லை என்பதை அல்லாஹ் நன்கறிவான். நான் சந்தித்துள்ள இந்தச் சோதனை, பதவிக்காகவோ உலக ஆதாயத்திற்காகவோ இல்லை என்பதற்கு அவனே சாட்சி. புனிதமென அவன் நிர்ணயித்துள்ள அனைத்தையும் பாதுகாக்கும் அக்கறையுள்ள ஒரு பாதுகாவலனாகவே நான் செயல்பட்டுள்ளேன். என்னுடைய எந்த விதிக்குத் தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளீர்களோ, அதை நோக்கிச் செல்கிறேன். எனவே நான் மரணமடைந்தால் தாங்கள் அதை நினைத்து வருந்த வேண்டாம். தங்கள் மகனின் இழப்பிற்கான சிறப்பான பரிகாரத்தை அல்லாஹ் தங்களுக்கு அளிக்கட்டும்.”
“உலகாதாயத்திற்காக நீ இறந்தால்தான் நான் வருந்துவேன்,” என்றார் அந்த வீரத் தாய்.
“உங்களின் மகன் அறிந்தே எத்தகைய தீமையோ, ஒழுக்கங்கெட்டச் செயலோ இதுவரை செய்ததில்லை. அல்லாஹ்வின் கட்டளைகளை அவன் மீறியதில்லை. நம்பிக்கைத் துரோகம் இழைத்ததில்லை. முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் எவரையும் அடக்கித் துன்புறுத்தியதில்லை. அல்லாஹ்வின் திருப்தியை மீறி எவருக்கும் முன்னுரிமை அளித்ததில்லை. இவை யாவற்றையும் தற்பெருமைக்காக நான் சொல்லவில்லை. என்னுடைய உண்மையான தகுதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவன். இந்த உண்மைச் செய்திகளை அறிந்து தாங்கள் ஆறுதல் அடையுங்கள். தாங்கள் மகிழ்வடையும் பொருட்டே இவற்றைச் சொல்கிறேன்.”
“அவனுக்கும் எனக்கும் உன்னை உவப்பானவனாக ஆக்கிவைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் மகனே! என்னருகில் வா. இறுதி முறையாக உன்னைத் தொட்டுப்பார்த்து முகர்ந்து கொள்கிறேன்” என்றார் அஸ்மா. மகனின் மரணம் இன்று நிச்சயம் என்று உறுதியாக அறிந்துகொண்ட தாயின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்?
தம் தாயை நோக்கிக் குனிந்து அவரது கரங்களில் முத்தமிட்டார் அப்துல்லாஹ். தம் மகனின் தலையை நோக்கிச் சாய்ந்த அஸ்மா அவரது கேசத்தை முகர்ந்தார்; முத்தமிட்டார்; தட்டிக் கொடுத்தார். பிறகு தம்மைவிட்டு அவரைத் தள்ளி, “உன் உடம்பில் என்ன அணிந்திருக்கிறாய் அப்துல்லாஹ்?” என்று கேட்டார்.
“சங்கிலிக் கவசம்” என்றார் அப்துல்லாஹ்.
“வீர மரணம் அடைய விரும்புபவர் இதை அணிவதில்லை என் மகனே.”
“தாங்கள் என்னைக் குறித்து வருந்தக்கூடாது என்பதற்காகவே இதை அணிந்துள்ளேன்.”
“இதைக் கழற்றிப்போடு. உன் வீரம் அதிகப்படும். களத்தில் விரைவாய், சுறுசுறுப்பாய் நீ இயங்க அது உதவும். ஆனால் நீளமான இடுப்பாடையை அணிந்துகொள். ஏனெனில், நீ மரணமடைந்தபின் உனது அங்கம் ஆபாசமாய் வெளிப்படுவதை அது காக்கும்.”
தம் தாயின் ஆலோசனைப்படி உடனே செயல்பட்டார் அப்துல்லாஹ். கவசம் நீக்கி, இடுப்பு ஆடையை வரிந்து இறுகக் கட்டிக்கொண்டு, “தாயே! எனக்காக இறைஞ்சுவதை நிறுத்திவிட வேண்டாம்” என்று களம் நோக்கி விரைந்தார்.
விண் நோக்கிக் கையுயர்த்தித் தம் மகனுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் அஸ்மா. “யா அல்லாஹ்! அவன்மீது கருணைகொள். மற்றவரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்க, இரவின் நீண்ட பகுதியைத் தொழுகையிலும், அழுகையிலும் கழித்தவன் அவன். அவன்மீது கருணை கொள். மக்கா, மதீனா நகர்களின் வெப்பத்தில் தாகமுடனும் பட்டினியுடனும் நோன்பு நோற்றவன் அவன். அவன்மீது கருணை கொள். தம் தாய்-தகப்பன்மீது ஏராளம் கருணைகொண்டவன் அவன். யா அல்லாஹ்! நான் அவனை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். அவன்மீது நீ எந்த விதியை நிர்ணயித்திருந்தாலும் நான் அதில் திருப்தியுறுகிறேன். பொறுமையாளர்களுக்கான வெகுமதியை எனக்கு நீ நல்குவாயாக.”
பெற்ற பாசம், அன்பு, அக்கறை என்பனவெல்லாம் அவர்களுக்கு ஈமானிய உறுதிக்குள் கட்டுப்பட்டு இருந்திருக்கிறது. வாழ்வோ, சாவோ, செயல்பாடுகள் அனைத்தும் இறை உவப்புக்காக மட்டுமே அமைய வேண்டும் என்ற தெளிவுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியான மேன்மை நிலையை அடைந்ததும் இறைவன் நிர்ணயித்த விதி எதுவானாலும் அதை உவப்புடன் தழுவும் பொறுமையும் பக்குவமும் அவர்களுக்கு எளிதாகிப் போனது.
அன்று மாலை அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் போரில் வீர மரணம் எய்தினார். அவரது தலை மட்டும் தனியாக வெட்டி எடுக்கப்பட்டு கஅபாவின் அருகில் குத்தி வைக்கப்பட்டது – கூடவே கஅபா வரலாற்றில் ஒரு பெரும் கரும்புள்ளியோடு.
அடுத்து இருபது நாள் கழிந்திருக்கும். ஹிஜ்ரீ 73ஆம் ஆண்டு அஸ்மா பின்த் அபீபக்ரு மரணமடைந்தார்.
ரலியல்லாஹு அன்ஹா!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
சத்தியமார்க்கம்.காம்-ல் 05 செப்டம்பர் 2012 அன்று வெளியான கட்டுரை
உதவிய நூல்கள்: Read More