தோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு (ரலி)

by நூருத்தீன்
12. ருபைய்யி பின்த் அந்-நள்ரு (الربَيّع بنت النضر)

த்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவிற்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி! தத்தம் குடும்பத்து ஆண்களை வரவேற்கக் குதூகலத்துடன் காத்திருந்தனர் மக்கள். அடைந்தது பெருவெற்றி என்றாலும், முஸ்லிம்கள் தரப்பிலும் உயிரிழப்பு இல்லாமலில்லை. முந்நூற்றுப் பதின்மூன்று முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்த படையில் பதினான்கு தோழர்கள் உயிர் நீத்திருந்தார்கள். அத்தோழர்களின் குடும்பங்களில் மட்டும் வெற்றிச் செய்தியின் மகிழ்வைத் தாண்டிய சோகம் இலேசாகப் பரவியிருந்தது.

மறுநாள் முஸ்லிம்களின் படை ஊர் திரும்பியது. போரில் தம் மகனை இழந்திருந்த ஒரு தாய், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார். “அல்லாஹ்வின் தூதரே எனக்கு என் மகனைப் பற்றிக் கூறுங்கள். அவன் இப்பொழுது சொர்க்கத்தில் இருந்தால் நான் அழப்போவதில்லை. இல்லையாயின், நான் எவ்விதம் மாய்ந்து அழப்போகிறேன் என்பதைத் தாங்கள் பார்ப்பீர்கள்.”

அதைக்கேட்டு அந்தப் பெண்ணுக்கு உறுதி அளித்தார்கள் நபியவர்கள். “சொர்க்கத்தை அடைந்தார் உம் மைந்தர். அதன் படித்தரங்கள் ஏராளம். ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார் அவர்.”

பெரும் நிம்மதி பரவியது உம்முஹாரிதா என்றழைக்கப்பட்ட ருபைய்யி பின்த் அந்-நள்ருக்கு. ரலியல்லாஹு அன்ஹா.

oOo

மதீனத்து அன்ஸார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ருபைய்யி பின்த் அந்-நள்ரு. பல முக்கியத் தோழர்கள், தோழியர் நிறைந்திருந்த குடும்பம் அது. உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹாவின் முதல் கணவர் மாலிக் பின் அந்நள்ரு, தம் மனைவி உம்முஸுலைம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் பிரச்சினை ஏற்பட்டுப்போய் மனைவியை விட்டுப் பிரிந்து சிரியாவுக்குச் சென்றுவிட்டார் என்று அபூதல்ஹா, உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வரலாற்றில் படித்தோமே நினைவிருக்கிறதா? அந்த மாலிக் என்பவரின் சகோதரிதான் ருபைய்யி. சிறுவராக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதருக்குப் பணியாளாக நியமனம் பெற்றுப் புகழடைந்தவரும் உம்முஸுலைமின் மைந்தருமான அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ருபைய்யி அத்தையாவார். மாலிக் பின் அந்நள்ருவுக்குத்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டதே தவிர, அவரின் சகோதரி ருபைய்யி, மற்றொரு சகோதரர் அனஸ் பின் அந்நள்ரு ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தது மட்டுமல்லாமல், சிறப்பாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

மதீனாவில் இஸ்லாம் அறிமுகமான ஆரம்பத் தருணங்களிலேயே ருபைய்யி பின்த் அந்-நள்ரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். இவருக்கு ஹாரிதா என்றொரு மகன். அச்சமயம் மிகவும் இளவயதினராக இருந்த அவரும், ‘அம்மா! இந்த மார்க்கம் இனிய மார்க்கம்’ என்று உளச்சுத்தியுடன் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார். அதைத் தொடர்ந்து நபியவர்களிடம் குர்ஆனும் மார்க்கமும் பயில்வதில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது ஹாரிதாவுக்கு. பசுமரம் என்பதால் அவரது உள்ளத்தில் ஆழப்பாய்ந்த ஆணியாய் அமர்ந்து விட்டன இறை அச்சமும் இஸ்லாமிய போதனைகளும்.

ஒருநாள் நபியவர்கள் ஹாரிதாவிடம் நலம் விசாரித்தார்கள். “எப்படிக் கழிகிறது இன்றைய பொழுது?”

“அல்லாஹ்வின் தூதரே! நான் மிகவும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக என்னை உணர்கிறேன்” என்றார் ஹாரிதா.

ஓரிறையின்மீது ஈமான் கொள்வது எளிதாக அமைந்துவிடலாம். ஆனால் அதன் முழு அர்த்தமும் அப்பட்டமான இறையச்சமும் இவற்றில் முழுக்க முழுக்கத் தோய்த்தெடுத்ததைப் போன்று உள்ளத்தை உணர்வதும் மிக உயர்ந்த நிலை. அது அவ்வளவு எளிதில் அமைந்து விடுவதில்லை. எனவே அதை ஹாரிதாவுக்கு எளிய மொழியில் நினைவூட்டி, அவரது பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்கள் நபியவர்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலக ஆசாபாசங்களில் எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை; அது எனக்குப் பொருட்டுமில்லை. அதைவிட்டு நீங்குகிறேன். இரவு நீண்டநேரம் விழித்திருந்து இறை வழிபாட்டில் ஈடுபடுகிறேன். நோன்பு நோற்றுப் பகலெல்லாம் தாகத்தில் தவித்திருக்கிறேன். அல்லாஹ்வின் அர்ஷை எனது அகக்கண் உணருகிறது. சொர்க்கவாசிகள் ஒருவரையொருவர் சந்தித்து நலம் பரிமாறிக்கொள்வது எனக்குத் தெரிகிறது; நரகவாசிகள் ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்தி, குற்றம் கூறி, அடித்துக்கொள்வதையும் காண்கிறேன்.”

இஸ்லாம் அறிவிக்கும் இவ்விஷயங்கள் அனைவருக்கும் அறிமுகமான செய்திதான். இவற்றை வாசிப்பது எளிது; சொல்வதும் மிகச் சுலபம். ஆனால் அவற்றின் அர்த்தங்களை முற்றும் முழுக்க ஆழ்மனத்தில் உள்வாங்கி, உணர்ந்து சுவாசித்து வாழ்வது இருக்கிறதே, அது ஈமானின் உச்சக்கட்டம். அதைத்தான் நபியவர்களிடம் தெரிவித்தார் இளைஞர் ஹாரிதா. இத்தனைக்கும் இவற்றை எத்தனை ஆண்டு பட்டப்படிப்பில் உணர்ந்திருக்கிறார்? நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகள்கூட ஆகியிருக்கவில்லை.

“இத்தகைய ஞானம் உனக்கு ஏற்பட்டுள்ளதைப் பற்றிப் பிடித்துக்கொள் ஹாரிதா” என்றார்கள் நபியவர்கள். தலையசைத்த ஹாரிதா கோரிக்கை ஒன்றை வைத்தார். ‘எனது வாழ்வின் எஞ்சியிருக்கும் காலத்திற்கும் இப்படியே ஆன்மீகத்தில் மூழ்கி வாழ்ந்து நிம்மதியாய்க் கண்ணை மூடவேண்டும்’. எளிய கோரிக்கை. அடுத்து அவர் வைத்தது, தம் மறுமை வாழ்க்கையை ஆக உயர்ந்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் கோரிக்கை!

“நான் அல்லாஹ்வுக்காக உயிர் நீத்த தியாகியாக வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும்” என்று ஹாரிதாவுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள் நபியவர்கள். “இறை நம்பிக்கையில் உள்ளம் ஒளிரும் இறைவனின் அடிமை ஒருவனைக் கண்டு யாரேனும் மகிழ்வுற விரும்பினால், அவர் ஹாரிதாவைக் காணட்டும்” என்று தோழர்களிடம் நற்சான்று வழங்கினார்கள்.

அடுத்துச் சில மாதங்களில் உருவானது பத்ரு யுத்தம். ஓடிவந்து முஸ்லிம்கள் படையில் இணைந்துகொண்ட முந்நூற்றுப் பதின்மூன்று வீரர்களுள் ஒருவர் ஹாரிதா. களத்தில் படு தீரத்துடன் போரிட்ட அவரது கழுத்தில் வந்து குத்திய அம்பொன்று அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது. உயிர் தியாகியானார் ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு!

அந்தச் செய்தி அறிய வந்ததும்தான் பத்ரிலிருந்து திரும்பிய நபியவர்களிடம் தம் கேள்வியைக் கேட்டார் ருபைய்யி பின்த் அந்-நள்ரு. “அல்லாஹ்வின் தூதரே! என் இதயத்தில் என் மகன் ஹாரிதாவுக்கு உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவன் இப்பொழுது சொர்க்கத்தில் இருந்தால் நான் அழப்போவதில்லை. இல்லையாயின், நான் எவ்விதம் மாய்ந்து அழுவேன் என்று தாங்கள் பார்ப்பீர்கள்.” இகலோகத்தை ஒரு சிறிதுகூடக் கருத்தில் கொள்ளாத இதயம்!

அந்தத் தாயை கரிசனத்துடன் பார்த்த நபியவர்கள், “மகனின் இழப்பால் துடிக்கிறாயா? அதென்ன, சொர்க்கம் என்பது ஒன்றுதான் உள்ளதா? அதன் படித்தரங்கள் ஏராளம். ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார் ஹாரிதா” என்று உறுதி அளித்தார்கள் நபியவர்கள்.

ஒரு பாத்திரத்தில் நபியவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதில் கைவிட்டுத் தண்ணீர் எடுத்துத் தம் வாயைக் கொப்பளித்துவிட்டு, பாத்திரத்தில் மீதமிருந்த தண்ணீரை ருபைய்யி, அவர் மகள் இருவரிடமும் அளித்து, “இத்தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

தெளித்துக்கொண்ட நீர் அவ்விருவருக்கும் தெளிவையும் ஆறுதலையும் நிம்மதியையும் அளித்தது.

oOo

ஒருமுறை ருபைய்யி பின்த் அந்-நள்ருக்கும் அன்ஸார் குலத்தைச் சேர்ந்த ஒரு பணிப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்சினை முற்றிப் போனது. ருபைய்யி, அப்பணிப் பெண்ணைத் தாக்கியதில் அப்பெண்ணின் முன்வரிசைப் பல் ஒன்று உடைந்துவிட்டது. பணிப் பெண்ணின் குடும்பத்தினர் பல்லையும் வழக்கையும் நபியவர்களிடம் கொண்டு வந்தனர்.

“கிஸாஸ்! பல்லுக்குப் பல்” என்று தீர்ப்பளித்தார்கள் நபியவர்கள்.

ருபைய்யி குடும்பத்தினருக்கு அதிர்ச்சி! ருபைய்யியின் சகோதர் அனஸ் இப்னு நள்ரு, “அல்லாஹ்வின்மீது ஆணையாக! அப்படியெல்லாம் நடக்கக் கூடாது” என்று தம் கவலையைத் தெரிவித்தார். ஆனால் நபியவர்கள், “அல்லாஹ்வின் கட்டளை இது” என்று அறிவித்துவிட்டார்கள். உயர்ந்தோன், தாழ்ந்தோன், செல்வாக்கு, குலப்பெருமை எதுவும் இறைவனின் சட்டத்தில் குறுக்கிட முடியாது எனும் திட்டவட்டமான அறிவிப்பு.

நியாயம் கிடைத்த திருப்தியில், இரக்க மேலீட்டால் அப்பணிப் பெண்ணின் குடும்பத்தினர் நபியவர்களிடம் வந்து தாங்கள் ருபைய்யி பின்த் அந்-நள்ரை மன்னித்துவிடுவதாகக் கூற, தண்டனை கைவிடப்பட்டது.

நபியவர்கள், “அல்லாஹ்வின் ஊழியர்கள் சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அவர்கள் சில விஷயங்களைக் கூறினால், அருளாளனான அல்லாஹ் அதை அவர்களுக்காகக் கண்ணியப்படுத்துகிறான். அவர்களுள் ஒருவர் அனஸ் இப்னு நள்ரு” என்று தெரிவித்தார்கள். இத்தகு பெருமைக்குரிய அனஸ் இப்னு நள்ரு உஹதுப் போரில் நிகழ்த்திய காரியம் வெகு முக்கியமானது.

உஹதுப் போரின் உக்கிரமான தருணத்தில் எதிரிகளின் கை ஓங்கிய நிலையில், ‘நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்று பரவிய வதந்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வெலவெலத்துப்போய், ஒடிந்துபோய் அமர்ந்துவிட்டார்கள் தோழர்கள் பலர். ஆயுதங்கள் கைநழுவித் தரையில் விழுந்தன. களத்தில் அவர்களைக் கடக்க நேரிட்ட அனஸ், “ஏன் இப்படி?” என்று அவர்களை விசாரித்தார்.

“அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டுவிட்டார்களே. இன்னும் என்ன?” என்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டுவிட்ட பின், இந்த உயிரை வைத்துக்கொண்டு இன்னும் என்ன? எழுந்திருங்கள். நபியவர்களைப்போல் நீங்களும் மரணத்தைத் தழுவுங்கள்” என்றார். பிறகு, “அல்லாஹ்வே! இவர்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இணைவைப்பாளர்கள் புரிந்த குற்றத்திலிருந்து உன்னிடம் மீள்கிறேன்” என்று இறைஞ்சினார்.

அந்த வார்த்தை மாயம் புரிந்தது. குதித்து எழுந்தார்கள் சோர்ந்து அமர்ந்துவிட்ட அந்தத் தோழர்கள். எதிரிகளை நோக்கிப் படு ஆவேசமாய்த் திரும்பி ஓடினார் அனஸ். வழியில் அவரைப் பார்த்த ஸஅத் இப்னு முஆத், “அபூஉமர்! எங்கே ஓடுகின்றீர்கள்?” என்றார்.

“சொர்க்கத்தின் நறுமணம் பெரும் சுகந்தம். அதை இதோ நான் உஹதில் முகர்கிறேன்” என்றார் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு.

வீரம் வாளில் சுழன்றது. உயிர் பிரியும்வரை களத்தில் சாகசம் நிகழ்ந்தது. விளைவு, அவரது உடல் எதிரிகளின் சரமாரியான வெட்டுகளால் சிதறுண்டது. உடல் கண்டதுண்டமாகி, அடையாளம் காண இயலாத அளவிற்கு ஆகிப்போனது. எல்லாம் முடிந்தபின் விரல் நுனியைக் கொண்டு, ‘இதுதான் அனஸ்’ என்று தம் சகோதரனை அடையாளம் காட்டினார் ருபைய்யி பின்த் அந்-நள்ரு.

ருபைய்யியின் ஆயுள் நீண்டகாலம் நீடித்திருந்ததை வரலாற்றுக் குறிப்பொன்றின் மூலம் அறிய முடிகிறது.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

சத்தியமார்க்கம்.காம்-ல் 05 அக்டோபர் 2012 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்: Read More

Related Articles

Leave a Comment