7. உம்முஅய்மன் (أم أيمن)
அடிமைப் பெண்ணொருவர் மக்காவின் வீதியில் அலறிக்கொண்டு ஓடினார். அழுகை, அரற்றலுடன் தம் எசமானியின் வீட்டை நோக்கி ஓட்டம். மக்காவில் மிகவும் புகழ்பெற்ற குரைஷி குலத் தலைவர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டிலிருந்துதான் அந்தப் பெண் அடிமை ஓடிக்கொண்டிருந்தார்.
அந்தக் குரைஷித் தலைவர் ஷைபாவுக்கு நிறைய மகன்கள். அவர்களுள் இளைய மகனை வர்த்தக வேலையாய் ஷாம் நாட்டுக்கு அனுப்பியிருந்தார் அவர். ஆனால் மக்கா திரும்பும் வழியில் அந்த மகன் நோய்வாய்ப்பட்டு யத்ரிபில் தங்கும்படி ஆகிவிட, செய்தி மட்டும் அவருக்கு வந்து சேர்ந்திருந்தது. மிகவும் கவலையடைந்த தந்தை, தம் மூத்த மகனை அழைத்து, என்ன ஏது என்று பார்த்து, அவனைப் பத்திரமாக அழைத்துவா என்று அனுப்பியிருந்தார். தம் தம்பியை அழைத்துவர அண்ணனும் விரைந்து செல்ல, அவருக்கு யத்ரிபில் காத்திருந்தது துக்கச் செய்தி மட்டுமே. அண்ணன் வருவதற்கு முன்பே தம்பி இறந்துபோய், நல்லடக்கமும் நடைபெற்றுவிட்டது. பெரும் சோகத்துடன் அந்தச் செய்தியைச் சுமந்துகொண்டு திரும்பினார் அண்ணன்.
மக்காவில், தந்தை மட்டுமின்றி, அந்த அற்புதச் செல்வரின் வருகையை மற்றொருவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர், அந்த மகனின் புது மனைவி. ஷாமுக்குச் சென்றிருந்த மற்றவர்களெல்லாம் நலமே திரும்பி, அவரவரும் தத்தம் குடும்பத்துடன் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, தம் கணவனின் வருகை தாமதமாகிறதே என்று சோகமும் கவலையுமாய் நாளைக் கடத்திக்கொண்டிருந்தார் அவர். அவரின் அடிமைப் பெண் ‘பரக்கா’தான் தம் எசமானரின் வருகை பற்றிய செய்தியை அறிய குரைஷித் தலைவரின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு, தம் எசமானரின் அண்ணன் வந்து சொல்லிய துக்கச் செய்தியைக் கேட்டுத் தம் எசமானியின் இல்லம் நோக்கி அழுது கொண்டே ஓடினார். ஓடி வந்து மூச்சிரைக்கச் செய்தியைச் சொல்ல, மூச்சற்று மயங்கி விழுந்தார் அடிமையின் எசமானி.
oOo
மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி அடைந்த புதிதில் தோழர் அர்கமின் இல்லத்தில் நபியவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் கூடுவதும் குர்ஆன் கற்றுக்கொள்வதும் தொழுவதும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதை மோப்பமிட்ட குரைஷிகள், ஒருநாள் அர்கமின் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுது நபியவர்களைச் சந்தித்து, அன்னை கதீஜா சொல்லியனுப்பிய முக்கியச் செய்தியொன்றைத் தெரிவிக்க வேண்டியிருந்தது ஒருவருக்கு.
அவர்- உம்முஅய்மன் ரலியல்லாஹு அன்ஹா.
முஸ்லிம்களின்மீது சினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து, அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்முஅய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடமுண்டு, உம்முஅய்மன்.”
நபியவர்கள் அறிவித்தால் அது தீர்க்கமானது என்பது முஸ்லிம்களின் திடநம்பிக்கை. தம் இஷ்டத்திற்கு எந்த ஒன்றையும் அறிவித்ததில்லை அந்த மாமனிதர். மகிழ்வுடன் உம்முஅய்மன் கிளம்பிச் சென்றதும், அங்கு அமர்ந்திருந்த தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்முஅய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்” என்றார்கள்.
அப்பொழுது உம்முஅய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்முஅய்மனின் அகத்தையும் கருத்தில்கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.
“அல்லாஹ்வின் தூதரே! நான் உம்முஅய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”
உம்முஅய்மனும் சரி, அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்த ஸைது இப்னு ஹாரிதாவும் சரி, நபியவர்களின் வாழ்க்கையுடன் மிக ஆழமாய்ப் பின்னிப் பிணைந்தவர்கள். நபியவர்களுக்கு ஸைது மகனைப்போன்றவர் என்றால், உம்முஅய்மன் அன்னை.
நாற்பத்துச் சொச்சம் ஆண்டுகளுக்குமுன் –
தம் இளைய மகன் அப்துல்லாஹ் வாலிப வயதை அடைந்ததும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார் மக்காவில் ‘ஷைபா’ என்று அறியப்பட்ட அப்துல் முத்தலிப். குரைஷி குலத்தின் பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர். பத்து மகன்களுடனும் ஆறு மகள்களோடும் கூடிய பெரிய குடும்பம் அவருடையது. மகன் அப்துல்லாஹ்வின்மீது அவருக்கு அலாதிப் பாசம். நல்ல அழகும் குணநலமும் நிறைந்த மணமகள் தேடினார். யத்ரிபின் ஸுஹ்ரா கோத்திரத்தின் பெரும்புள்ளியான வஹ்ப் இப்னு அப்து மனாஃபுக்கு ஆமினா என்றொரு அழகு மகள் இருப்பது தெரியவர, அவரிடம் சென்று, பேசி முடித்தார் அப்துல் முத்தலிப். அடுத்த சில நாள்களில் திருமணம் நலமே நடைபெற்று முடிந்தது. இனிய மண வாழ்க்கையைத் துவக்கினார்கள் அப்துல்லாஹ்-ஆமினா தம்பதியர். புதிய மணமக்களுக்கு உரிய இயல்பான அத்தனை இன்பங்களையும் அவர்கள் சுவைத்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் அப்துல்லாஹ்விடம் வந்தார் அப்துல் முத்தலிப்.
“அப்துல்லாஹ் நீ ஷாமுக்குச் செல்லவேண்டும்” என்றார். தேன்நிலவுப் பயணமில்லை. வர்த்தகப் பயணம். மக்காவின் தெற்குப் பக்கம் உள்ள யமனுக்கும் வடக்குப் பக்கம் உள்ள ஷாமுக்கும் குரைஷியர்கள் வர்த்தகப் பயணம் மேற்கொள்வது இயல்பாய் நடைபெற்ற ஒன்று. கோடைக் காலம் என்றால், ஷாம். அது கோடைக் காலம். ஷாமுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த குழுவொன்றுடன் தம் மகனையும் அனுப்பிவைக்க முடிவெடுத்திருந்தார் அப்துல் முத்தலிப். திருமணம் முடிந்த புது மெருகு கலையாத புதிதிலேயே புதுப் பெண்ணைப் பிரிய யாருக்குத்தான் மனம் வரும். தம்பதியர் இருவருக்கும் ஏக சங்கடம். அதற்காகக் கோடைதான் தாமதமாகுமா? வர்த்தகக் கூட்டம்தான் காத்திருக்குமா? வேறு வழியில்லாத நிலையில், ‘போய் நாலு காசு சம்பாதித்துவிட்டு வருவோம்’ என்று பயணம் கிளம்பினர் புது மாப்பிள்ளை அப்துல்லாஹ். சோகமும் வருத்தமும், கண்கள் நிறைய நீருமாகக் கணவனை வழியனுப்பி வைத்தார் ஆமினா. இருவருக்கும் அப்போது தெரியவில்லை அப்துல்லாஹ்வின் இறுதிப் பயணமாக அது அமையப் போகிறது என்பது.
ஒட்டகத்தின் மீதேறிக் கிளம்பினார் அப்துல்லாஹ்.
‘புது மணப்பெண் நான். மருதாணியின் கறைகூட மறையவில்லை. அதற்குள் என் கணவர் வர்த்தகம் என்று என்னைப் பிரிந்து வெளிநாடு செல்லும்படி ஆகிவிட்டதே? என்ன கொடுமை இது?’ என்று ஆமினாவின் நெஞ்சை சோகம் தாக்கியது. அடுத்த சில நாள்களில் நோயுற்றவரைப் போல் படுத்த படுக்கையானார் ஆமினா. யாரையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை; எவரிடமும் பேசுவதில்லை. மாமனார் அப்துல் முத்தலிப் வரும்போது அவரிடம் மட்டும் தம் சோகத்தைப் பகிர்ந்து மரியாதை செலுத்திக்கொள்வார். இப்படிப் பசலை படர்ந்து கிடந்த ஆமினாவை அருகிலிருந்து கவனித்துக் கொண்டு அனைத்து ஒத்தாசையும் புரிந்து கொண்டிருந்தார் மிக இள வயதுப் பெண் பரக்கா! அவர் அப்துல்லாஹ்வின் அடிமைப் பெண். அபிஸீனிய நாட்டைச் சேர்ந்தவர்
இந்நிலையில் ஆமினா கருவுற்றிருந்தார். தாம் சுமப்பது நாளை உலகை மாற்றப்போகும் வரலாற்று நாயகர் என்பதையோ, இறைவனின் இறுதி நபிக்குத் தாம் தாயாகத் திகழப் போகிறோம் என்பதையோ அறியாமல், தம் சோகத்தையும் கருவையும் சுமந்துகொண்டு கணவனைப் பிரிந்த கவலையில் மூழ்கிக் கிடந்தார் ஆமினா. ஆறுதல், ஒத்தாசை என்று அருகில் இருந்தவர் பரக்கா ஒருவர் மட்டுமே. இரவெல்லாம் கணவனை நினைத்துத் தேம்பிப் புலம்பியவாறு இருந்த ஆமினாவின் முனகல் ஒலி, சிலவேளை பரக்காவைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும்.
அதே ஆண்டு மற்றொரு முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது, மக்காவை நோக்கிக் கிளம்பி வந்த அப்ரஹாவின் யானைப் படையும் அதையொட்டி நிகழ்ந்த இறை அற்புதமும் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன என்று குறித்து வைத்துள்ளனர் வரலாற்று ஆசிரியர்கள்.
ஸிரியாவுக்குப் பயணம் கிளம்பிச்சென்ற புது மணமகன் அப்துல்லாஹ்வைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.
சுட்டெரிக்கும் கோடை வெயில்; கொதிக்கும் பாலை மணல்; அந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது அப்துல்லாஹ்வுக்கு. உடல் நலம் குன்றி, நோய் வாய்ப்பட்டார் அவர். சென்ற வேலை முடிந்து ஷாமிலிருந்து திரும்பும் வழியில் மேலும் மோசமானது அவர் நிலைமை. தகுந்த சிகிச்சைக்கான வாய்ப்பு வசதி ஏதும் இல்லாத நிலையில் வர்த்தகக் கூட்டம் யத்ரிபை நெருங்கும்போது அதற்குமேல் அப்துல்லாஹ்வினால் பயணத்தைத் தொடர முடியாமல் ஆகிப்போனது. யத்ரிபில் பிறந்த அப்துல் முத்தலிபின் தாய் வழி உறவினர்கள் பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அரபுக் குல வழக்கப்படி, அந்தக் குலத்தினர் அப்துல் முத்தலிபின் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் மாமன் உறவு முறையில் அமைந்துவிடுவர். எனவே அப்துல்லாஹ்வின் உடல் நலம் சற்றுச் சீராகும்வரை அவர் யத்ரிபில் மாமன்களிடம் தங்கி ஓய்வெடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளட்டும் என்று முடிவாகி, அவரை அங்கு இறக்கிவிட்டு மக்கா வந்தடைந்தனர் மற்றவர்கள்.
தம் செல்ல மகன் அப்துல்லாஹ்வின் உடல் நிலை பற்றியும் அவர் திரும்பி வரவில்லை என்பதையும் அறிந்த அப்துல் முத்தலிப் மிகுந்த கலக்கமடைந்துவிட்டார். அந்த மகனின்மேல் அவர் வைத்திருந்த அன்பும் பாசமும் மிக அலாதியானது. முன்னர் ஒரு காலத்தில் அந்த மகனைக் காப்பாற்ற நூற்றுக்கணக்கில் ஒட்டகங்களைக் காவு கொடுத்தவர் அவர். முடிந்தால் அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
கவலை மேலிட, தம் மூத்த மகன் ஹாரிதை அழைத்து, அவரை யத்ரிபிற்கு அனுப்பி வைத்தார் அப்துல் முத்தலிப். வியர்க்க விறுவிறுக்கப் பலநாள் பயணித்து யத்ரிபை அடைந்த ஹாரிதுக்கு, தம்பி அப்துல்லாஹ் இறந்துபோய்விட்ட செய்தி மட்டுமே கிடைத்தது. பெரும் சோகத்துடன் அந்தச் செய்தியைச் சுமந்துகொண்டு மக்கா திரும்பினார் ஹாரித். அப்துல்லாஹ்வின் மரணச் செய்தி கோடை இடியாய் இறங்கியது அப்துல் முத்தலிபுக்கும் ஆமினாவுக்கும்.
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பரக்கா – அவ்வளவே. நிரந்தரமாகிப்போன சோகத்துடன் பிள்ளையைப் பெற்றெடுத்தார் ஆமினா. பிறந்தார் அப்துல்லாஹ்-ஆமினாவின் மகன் முஹம்மது. அந்தப் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர் பரக்கா. பிறந்த நொடியிலிருந்து அந்தக் குழந்தையின் அறிமுகம் பரக்காவுக்கு ஏற்பட்டுப்போனது.
பேரன் பிறந்ததில் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு ஏக மகழ்ச்சி. அன்பு மகனை இழந்த சோகத்தில் இருந்தவருக்குப் புதுப் பேரனின் வரவு இதம் அளித்தது. குழந்தையைக் கஅபாவிற்கு எடுத்துச் சென்று பெருமை பொங்கக் குரைஷியர்களுக்குக் காட்டினார். தம் குடும்பத்தில் பிறந்துள்ளது சாதாரணக் குழந்தையன்று என்பது அப்பொழுது பாட்டனாருக்கும் தெரியாது; அந்தக் குழந்தை நாளை தங்களது விதியையே மாற்றி மீளெழுச்சிக்கு வித்திடப்போகிறது என்பது குரைஷிகளுக்கும் தெரியாது. அப்துல் முத்தலிபுக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டார்கள் குரைஷிப் பெரும்புள்ளிகள்.
oOo
அக்காலத்தில் குரைஷியர் மத்தியில் ஒரு வழக்கம் இருந்தது. பாலைவனப் பகுதிகளிலிருந்து செவிலித் தாய்கள் மக்கா நகருக்கு வருவார்கள். வறிய நிலையில் உள்ள அவர்கள், பெரும் குலத்தைச் சேர்ந்த குரைஷிகளிடமிருந்து சிசுக்களைப் பொறுப்பேற்று எடுத்துச் சென்று, பாலூட்டி வளர்ப்பார்கள்; மொழி கற்றுக் கொடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு அக் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்த்து, பிறகு பெற்றோரிடம் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டுப் பணமோ, பொருளோ பெற்றுச் செல்வது இயல்பான நடைமுறையாக இருந்து வந்தது. அவ்விதம் தம் மகன் முஹம்மதைச் செவிலித்தாய் ஹலீமாவிடம் ஒப்படைத்தார் ஆமினா. குழந்தை முஹம்மது ஹலீமாவுடன் சென்றுவிட, இங்கு ஆமினாவின் தேவைகளை பரக்கா கவனித்துக்கொண்டிருந்தார்.
சில ஆண்டுகள் கழித்துத் தம் அன்னை ஆமினாவிடம் சிறுவராகத் திரும்பினார்கள் குழந்தையாயிருந்த முஹம்மது. அவர்களுக்கு ஏறத்தாழ ஆறு வயது நிரம்பியபோது, மகனுடன் யத்ரிபு சென்று தம் கணவனின் அடக்கத்தலத்தைப் பார்வையிட்டுத் திரும்ப எண்ணினார் ஆமினா. அத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மணமுடித்துச் சில நாள்கள் இணைந்து வாழ்ந்த ஆருயிர்க் கணவரின் இழப்பு மட்டும் அவரது உள்ளத்தில் சோக வடுவாகவே நிலைத்திருந்தது. பயணமென்பது பெரும் பிரயத்தனமாக இருந்த காலமாதலால், அதிலுள்ள சிரமத்தையும் ஆபத்தையும் சொல்லித் தடுத்துப் பார்த்தாகள் அப்துல் முத்தலிபும் பரக்காவும். தம் முடிவில் தீர்மானமாய் இருந்தார் ஆமினா. அனுமதித்தார் அப்துல் முத்தலிப்.
ஓர் ஒட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முதுகில் அமைக்கப்பட்டிருந்த சிவிகையில் ஆமினா, தம் மகனுடனும் பரக்காவுடனும் ஏறி அமர்ந்து கொண்டார். ஷாமை நோக்கிச் செல்லும் வர்த்தகக் கூட்டத்துடன் இணைந்துகொள்ள, துவங்கியது அவர்களது பயணம். எங்குச் செல்கிறோம், எதற்குச் செல்கிறோம் என்று தெரியாமல் பெரும்பாலான நேரம் பரக்காவின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டும் உறங்கிக்கொண்டும் பயணித்தார் சிறுவர் முஹம்மது. பத்து நாள் பயணத்திற்குப் பிறகு யத்ரிபை அடைந்தார்கள் அவர்கள். தம் கணவர் அப்துல்லாஹ்வின் அடக்கத்தலத்திற்குச் சென்று துக்கம் பொங்க நிறைய அழுதார் ஆமினா. ஒரு மாத காலம் யத்ரிபில் தங்கியிருந்துவிட்டு மக்காவிற்குக் கிளம்பினார்கள் மூவரும். வழியில் காத்திருந்தது, இறைவன் நிர்ணயித்திருந்த அடுத்த பெரிய விதி!
அப்வா என்பது யத்ரிபிற்கும் மக்காவிற்கும் இடையில் இருந்த ஓர் ஊர். இளைப்பாறுவதற்கு அங்கு வாகனத்தை நிறுத்தினார்கள் அவர்கள். யத்ரிபிலிருந்து கிளம்பியதிலிருந்தே அன்னை ஆமினாவுக்குக் காய்ச்சலும் சோர்வும் ஏற்பட்டிருந்தன. அது மேலும் அதிகமாகி அவரின் உடல்நிலை மிக மோசமடைந்திருந்தது. கருமை சூழ்ந்திருந்த இரவு. பரக்காவை அருகில் அழைத்தார் ஆமினா. நோயின் வேதனையால் அவரது குரல் கம்மிப் போயிருந்தது. பரக்காவின் காதில் குசுகுசுப்பான ஒலியில்தான் அவரால் பேச முடிந்தது.
“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன். என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன், இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான். ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பரக்கா. அவனை விட்டு விலகாதே.”
அதை பரக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார். தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது. ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் அநாதையானார்.
துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பரக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். பிறகு தம் கைகளாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, சிறுவர் முஹம்மதை அழைத்துக்கொண்டு மக்கா வந்து சேர்ந்தார். பேரனைத் தம் பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டார் அப்துல் முத்தலிப். மறைந்த எசமானியின் வேண்டுகோளின்படி அவர் வீட்டிலேயே தங்கிக் குழந்தை முஹம்மதைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார் பரக்கா. அனாதையாகிப்போன தம் பேரனின் மீது அளவற்ற அன்பு செலுத்தி வந்தார் அப்துல் முத்தலிப். உணவு உண்ணும்போதெல்லாம், “எங்கே என் பையன்? அழைத்து வாருங்கள்” என்று பேரனை வரவழைத்து அமர்த்தி, உணவைப் பகிர்ந்து அளிப்பார். “என் பையனை நன்றாகக் கவனித்துக் கொள் பரக்கா” என்று அவ்வப்போது கூறுவார்.
சோகத்திற்கு இடைவெளி விடாமல் தொடர்ந்தது இறைவிதி. இரண்டு ஆண்டுகளே கழிந்திருக்கும். வயது முதிர்ந்திருந்த பாட்டனார் அப்துல் முத்தலிபும் காலமானார். அதைத் தொடர்ந்து சிறுவர் முஹம்மதைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார் அப்துல்லாஹ்வின் மூத்த சகோதரர் அபூதாலிப். இப்பொழுது அபூதாலிப் வீட்டிற்குத் தாமும் இடம் மாறினார் பரக்கா. சிறுவர் முஹம்மதின் மீது ஒரு தாயைப் போலவே பாசமும் நேசமும் ஏற்பட்டிருந்தது அவருக்கு.
oOo
சிறுவர் முஹம்மது அவர்கள் வளர்ந்து, வாலிப வயதை அடைந்திருந்தார்கள். அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுடன் அவர்களுக்குத் திருமணம் நிகழ்வுற்றது. எக்கணமும் பிரியாமல், விலகாமல் அருகிலிருந்து தம்மைக் கவனித்து வளர்த்த அந்த அன்னை பரக்காவின் மேல் வளர்ப்பு மகனுக்குச் சொல்லி மாளாத பாசம் ஏற்பட்டுப் போயிருந்தது. அவரை ‘அன்னையே!’ என்றுதான் எப்பொழுதும் அழைப்பார்கள். அடிமைத் தளையிலிருந்து அவரை விடுவித்து விட்டுத் தம்முடனேயே தங்கவைத்துக் கொண்டார்கள்.
ஒருநாள், “அன்னையே! எனக்கோ திருணமாகிவிட்டது. தாங்களோ திருமணம் புரியாமலேயே இருந்துவிட்டீர்கள். யாரேனும் வந்து தங்களை மணமுடிக்க விரும்புவதாகக் கூறினால் என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டார்கள்.
அவர்களை உற்றுப் பார்த்தார் பரக்கா. “நான் உம்மை விட்டு விலக மாட்டேன். ஒரு தாய் தன் மகனை விட்டுவிட்டுச் சென்று விடுவாளா என்ன?”
புன்னகையுடன் பரக்காவின் தலையில் பாசமுடன் முத்தமிட்டார்கள் முஹம்மது. தம் மனைவி கதீஜாவை நோக்கி, “இவர் பரக்கா. என்னைப் பெற்ற தாய்க்குப் பின் எனக்குத் தாயாகிப் போனவர். என்னுடைய குடும்பத்தவர்” என்று பெருமையுடன் கூறினார்கள்.
அன்னை கதீஜா பரக்காவை நோக்கி, “பரக்கா! உங்களுடைய இளமையை இவருக்காகவே தியாகம் புரிந்துவிட்டீர்கள். இப்பொழுது இவர் தம் கடமையைச் செய்து உங்களுக்குக் கைம்மாறு புரிய விரும்புகிறார். உங்களை முதுமை ஆட்கொள்வதற்குமுன் எங்கள் இருவரின் பொருட்டாவது நீங்கள் திருணம் புரிந்துகொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.
“நான் யாரை மணமுடித்துக் கொள்வது?” என்று கேட்டார் பரக்கா.
“இருக்கிறார் ஒருவர். தங்களைப் பெண் கேட்டு வந்திருக்கிறார் அவர் – உபைத் இப்னு ஸைது. யத்ரிபின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். என் பொருட்டுக் கேட்கிறேன். தயவுசெய்து இந்த வரனை நிராகரித்துவிடாதீர்கள்” என்றார் கதீஜா.
ஏற்றுக்கொண்டார் பரக்கா. உபைதுக்கும் பரக்காவுக்கும் திருமணம் நலமே நிகழ்வுற்று யத்ரிபிலிருந்த தம் கணவன் வீட்டிற்குச் சென்றார் பரக்கா. அநாதையாகிப்போன சிறுவர் முஹம்மதிடமிருந்து ஒருநாள்கூடப் பிரியாமல் – அதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தவர், முதன்முறையாக இப்பொழுதுதான் பிரிந்தார். உபைது-பரக்கா தம்பதியருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அய்மன் என்று பெயரிட்டார்கள். பரக்கா அன்றிலிருந்து உம்முஅய்மன் ஆகிப்போனார் – ரலியல்லாஹு அன்ஹா.
பின்னர் உபைத் இப்னு ஸைது இறந்துவிட, கைம்பெண்ணாகிப் போன உம்முஅய்மன், ‘இங்குத் தனியாய் இருந்து என்ன செய்வது?’ என்று மக்கா திரும்பிவிட்டார். முஹம்மது தமது இல்லத்திலேயே அவரைத் தங்க வைத்துக்கொண்டார்கள். அங்கு அப்பொழுது முக்கியமான மற்றவர்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர். அபூதாலிபின் மகன் அலீ, ஸைது இப்னு ஹாரிதா, கதீஜாவின் முதல் கணவர் வாயிலாய்ப் பிறந்த மகள் ஹிந்த்.
இப்படிக் காலம் ஓடிக்கொண்டிருக்க, முஹம்மது அவர்களின் நாற்பதாவது வயதில் வந்து இறங்கியது முதல் செய்தி. அருளப்பட்டது நபித்துவம். அதுவரைக்கும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாக இருந்தவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர்’ என்ற பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிப்போனார்கள் – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அந்த அறிவிப்பை ஏற்று நம்பிக்கை கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களுள் முக்கியமானவர்கள் ஸைது இப்னு ஹாரிதாவும் உம்முஅய்மனும். பின்னர் விஷயம் பரவி, மக்காவில் முஸ்லிம்களுக்குக் கொடுமையும் அக்கிரமமும் நடைபெற ஆரம்பித்தபோது அதற்கு இலக்காகிப்போனார்கள் இவர்களும். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு மக்கத்துக் குரைஷிகளை உளவு பார்த்து, அவர்களது திட்டங்களை நபியவர்களுக்குத் தெரிவிப்பதில் திறம்படச் செயல்பட்டார் உம்முஅய்மன்.
அப்படியான ஒருநாளில்தான், நபியவர்களின் கேள்விக்குக் கை தூக்கி பதில் கூறினார் ஸைது. “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்முஅய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக, வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”
ஸைதுக்கும் உம்முஅய்மனுக்கும் திருமணம் நிகழ்வுற்று, ஆண் குழந்தையொன்றும் பிறந்தது. அவர்தாம் உஸாமா இப்னு ஸைது. தமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஸைதுக்கு மகன் பிறந்ததும் அந்தக் குழந்தை உஸாமாவின் மீதும் நபியவர்களுக்கு நிறைய வாஞ்சை. தம் மகனைப் போலவே உஸாமாவின் மீதும் பாசத்தைப் பொழிந்தார்கள் அவர்கள். ‘நேசத்திற்கு உரியவரின் நேச மகன்’ என்று முஸ்லிம்கள் உஸாமாவைக் குறிப்பிடும் அளவிற்கு அந்தப் பாசம் பிரசித்தம். பிற்காலத்தில் ரோமர்களை நோக்கி அணிவகுத்த முஸ்லிம்களின் படைக்கு உஸாமாவைத் தளபதியாக நியமிக்கும் அளவிற்கு நபியவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிப்போனார் அவர். ரலியல்லாஹு அன்ஹு.
oOo
மக்காவில் குரைஷியர் கொடுமை முடிவுக்கு வராமல், இறுதியில் நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தார்கள் இல்லையா? அதற்குப்பின் மக்காவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனாவிற்கு நகர ஆரம்பித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பயணம் என்பதே மிகவும் சிரமமான ஒன்று. இதில் வெறியுடன் அலைந்து கொண்டிருந்த குரைஷிகளுக்குத் தெரியாமல் பயண ஏற்பாடு செய்து கொள்வது என்பது அதைவிடச் சிரமமாகியிருந்தது. அதனால் என்ன செய்ய? ஒருநாள் தன்னந்தனியாக, கால்நடையாகவே கிளம்பிவிட்டார் உம்முஅய்மன்.
மலை, கரடு முரடான பாதை, பாலைவனம், மணல், மண்டையைப் பிளக்கும் வெயில், புழுதிப் புயல் இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அல்லாஹ்வுக்காகவும் அவன் தூதருக்காகவும் பொறுத்துக்கொண்டு மதீனாவை வந்தடைந்தார் அவர். புண்ணாகி வீங்கிப் போயிருந்தன கால்கள். சொர்க்கத்திற்குரிய அந்த மங்கையின் முகமெல்லாம் மணற் புழுதி ஒப்பனை பூசியிருந்தது.
“என் அன்னையே! ஓ உம்முஅய்மன்! வெகு நிச்சயமாக உமக்குச் சொர்க்கத்தில் ஓர் இடமுண்டு!” என்று அகமகிழ்ந்து வரவேற்றார்கள் நபியவர்கள்.
தமது கரங்களால் அந்த அன்னையின் முகத்தையும் கண்களையும் துடைத்துவிட்டு, அவரது பாதங்களை இதமாகப் பிடித்துவிட்டு, அவரது தோள்களை அமுக்கி நீவிவிட்டுப் பணிவிடை புரிந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
சொர்க்கத்துக்கான முன்னறிவிப்புக் கிடைத்துவிட்டது; என் பாசத்திற்குரிய மகனின் அன்பிற்குரிய தாய் நான் என்றெல்லாம் முடங்கிவிடாமல், பின்னர் மதீனாவின் வரலாற்றில் இஸ்லாத்திற்கான தம் பங்கை ஆற்றத் துவங்கினார் உம்முஅய்மன். உஹதுப் போரில் தோழியர் சிலரும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களுள் உம்முஅய்மனும் ஒருவர். முஸ்லிம் வீரர்களுக்குக் குடிநீர் அளிப்பது, காய அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது என்று சுறுசுறுப்பான களப்பணி.
பின்னர் ஃகைபர், ஹுனைன் யுத்தங்களின் போதும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்தார் உம்முஅய்மன். முஃத்தா யுத்தத்தில் அவர் கணவர் ஸைதும் ஹுனைன் யுத்தத்தில் அவர் மகன் அய்மனும் உயிர்த்தியாகிகளாகிப் போனார்கள். எழுபது வயதை எட்டிவிட்டிருந்த அவர் அதன் பிறகு பெரும்பாலான காலத்தை வீட்டிலேயே கழித்தார். தம் அணுக்கத் தோழர்கள் அபூபக்ரு, உமரை அழைத்துக்கொண்டு நபியவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து வருவது வழக்கம்.
“என் அன்னையே! தாங்கள் நலமா?” என்று கனிவுடன் விசாரிப்பார்கள் நபியவர்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்திற்கு ஆபத்து இல்லாதவரை நான் நலமே” என்று பதில் வரும். மிகையின்றிச் சொன்னால் இஸ்லாம் அவருக்கு உயிர் மூச்சாய் இருந்திருக்கிறது.
நபியவர்கள் இறந்த பிறகு உம்முஅய்மனை நலம் விசாரிக்கச் சென்றனர் கலீஃபா அபூபக்ரும் உமரும். ‘வாருங்கள். நாம் சென்று உம்முஅய்மனைச் சந்தித்துவிட்டு வருவோம். நபியவர்கள் செய்ததை நாமும் செய்வோம்’ என்று உமரை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார். அபூபக்ரு.
இவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அழ ஆரம்பித்துவிட்டார் உம்முஅய்மன். “ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் தன் தூதருக்கு வாக்களித்துள்ளது சாலச் சிறப்பானதன்றோ!” நபியவர்களின் இழப்பை நினைத்து அழுகிறார் என்று நினைத்தார்கள் அவர்கள். ஆனால் அவரின் அழுகைக்கான காரணம், அதையும் மிகைத்திருந்தது.
“வானத்திலிருந்து இறங்கும் இறைச்செய்தி (வஹி) நின்று போய்விட்டதே என்று அழுகிறேன்” என்றார் உம்முஅய்மன்.
அல்லாஹ்வின் தூதர் மறைந்தவுடன் அவர் மூலம் இறங்கிவந்த வேத வசனங்களும் முடிவுக்கு வந்துவிட்டனவே என்று வருந்தியிருக்கிறார் உம்முஅய்மன். குர்ஆனின் வசனங்கள் அவருக்கு இறைவனுடனான உரையாடலாகவே இருந்திருக்கிறது. இதைக் கேட்டதும் அபூபக்ரும் உமரும் விம்மி அழ ஆரம்பித்துவிட்டார்கள். குர்ஆனுடன் அந்த அளவிற்குப் பின்னிப் பிணைந்து கிடந்த இதயங்கள் அவை.
பிற்காலத்தில் மற்றொரு முறையும் அழுதார் உம்முஅய்மன். உமர் ரலியல்லாஹு கொல்லப்பட்ட செய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது” என்றார் உம்முஅய்மன். உமரின் திறமையின் மீதும் இறைப்பற்றின் மீதும் அவரது திட உறுதி, புத்திக் கூர்மை, ஆளுமையின்மீதும் உள்ளார்ந்த பார்வை இருந்திருக்கிறது உம்முஅய்மனுக்கு.
நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது மரணமடைந்தார் உம்முஅய்மன்.
ரலியல்லாஹு அன்ஹா!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்
உதவிய நூல்கள்: Read More