தோழியர் – 02 உம்முஹராம் பின்த் மில்ஹான் (ரலி)

by நூருத்தீன்
2. உம்முஹராம் பின்த் மில்ஹான் (أم حرام بنت ملحان)

துமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின்போது அவரிடம் கோரிக்கை வைத்தார், முஆவியா ரலியல்லாஹு அன்ஹு. கோரிக்கை வைத்தார் என்பதைவிட, முந்தைய கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடம் கூறிக்கொண்டிருந்த ஆலோசனையை மீண்டும் துவக்கினார் என்றுதான் கூற வேண்டும். அந்தக் கோரிக்கை, கடல் தாண்டி சைப்ரஸ் தீவின் மீது படையெடுக்க வேண்டும். அதற்கு வலுவான காரணம் இருந்தது.

ஆயினும், உமர் அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்காமல் தவிர்த்து வந்தார். அதுவரை முஸ்லிம்கள் கடல் கடந்து சென்று போர்புரிந்த அனுபவமில்லை என்ற உண்மை ஒருபுறம். அத்தகு கடல் பயணத்தில் பொதிந்திருந்த ஆபத்து இன்னொருபுறம். இதெல்லாம் அவரைப் பலமுறை யோசிக்க வைத்தது. முஸ்லிம்களின் நலனே பிரதானம் எனக் கருதிய உமர், முஆவியாவின் கோரிக்கையை நிறுத்தி வைத்திருந்தார்.

ஹிம்ஸ் பகுதியை முற்றிலுமாய் முஸ்லிம்களிடம் இழந்து வெளியேறிய பைஸாந்தியர்களுக்கு சிரியா நாட்டைத் தாண்டி மேற்கு எல்லையைக் கடந்து கடலில் அமைந்திருந்த சைப்ரஸ் தீவு பெரும் வசதியாய் இருந்தது. ரோமர்களின் படைக்கு அருமையான ஓய்வுத் தளமாகவும் அவர்களது படைகள் புத்துணர்ச்சி பெறவும் ஆயுதங்களை மறுசேகரம் செய்து கொள்ளவும் வாகான நாடாக அமைந்திருந்தது சைப்ரஸ்.

சிரியாவில் ஆளுநராய் இருந்த முஆவியாவுக்கு, ரோமர்கள் முஸ்லிம்களிடம் மோதுவதற்கு சைப்ரஸில் தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதை நினைத்துப் பெரும் கவலை. அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. காலடியில் ஆபத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தால், தலைக்கே வினையாகுமே என்று கவலைப்பட்டார். ஆகவே உதுமான் (ரலி) கலீஃபாப் பொறுப்பை ஏற்றதும் இதைப்பற்றி மீண்டும் பலமுறை வலியுறுத்த ஆரம்பித்தார் அவர். நீண்ட யோசனைக்குப் பிறகு, இறுதியில் அதற்கு அனுமதியளித்தார் கலீஃபா, முக்கியமான நிபந்தனையுடன்.

“இந்தப் படையெடுப்பிற்கு வீரர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது; குலுக்கல் முறையிலும் தேர்வு செய்யக்கூடாது; யாரெல்லாம் தாமாகவே கலந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் உம்முடைய படையில் இணைந்துகொள்ளட்டும். அவரவர் விருப்பம்.”

ஏகத்துக்கும் ஆபத்து நிறைந்த இந்தப் படையெடுப்பிற்கு எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது கலீஃபா உதுமானின் தீர்மானமாயிருந்தது. ஆனால் ஆச்சரியம் நிகழ்ந்தது! எவ்வித வற்புறுத்தலும் இன்றிக் கடல் கடந்த போருக்கு, அதுவும் அவ்விதம் நடைபெறவிருக்கும் முதல் போருக்கு, பெருமளவில் திரண்டது முஸ்லிம்களின் படை. முக்கியத்துவம் வாய்ந்த நபித் தோழர்களான அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், அபூதர்தா, உபாதா இப்னு ஸாமித், அவர் மனைவி (ரலியல்லாஹு அன்ஹும்), என்று பலரும் அந்தப் படையில் இணைந்து கொண்டனர்.

ஹிஜ்ரீ 28ஆம் ஆண்டு. குளிர்காலத்தின் முடிவு. துவங்கியது கடல் தாண்டிய படையெடுப்பு! முஸ்லிம்களைச் சுமந்து கொண்டு, சிம்மாசனங்கள்போல் கடலில் மிதந்தன கப்பல்கள். கரை கடந்தது ஏகத்துவ அழைப்பு. இவையனைத்திலும் மிக முக்கியமாய் நிறைவேறியது கனவொன்று. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னொரு காலத்தில் கண்ட கனவு அட்சரம் பிசகாமல் நிறைவேறியது.

oOo

குபாவில் ஈச்ச மரத் தோப்புகளுக்கு இடையே ஒரு வீடு அமைந்திருந்தது. அருகிலேயே நீருற்று, மாசுறாத காற்று என்று வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு குடும்பம். தோழர் உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹுவின் குடும்பம்.

மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) முதலில் குபாவை அடைந்தார்கள். அப்போதைய மதீனா நகருக்கு வெளியே சற்றேறக்குறைய மூன்றேகால் கி.மீ. தொலைவில் இருந்தது குபா. அந்த ஊரிலேயே சில நாள்கள் தங்கினார்கள். அங்கு பனூ அம்ரு இப்னு அவ்ஃப் எனும் குலத்தாரின் குடியிருப்புகளில் தங்கிக்கொண்டு, முதல் பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதனால் குபா நகரின்மீது அவர்களுக்குத் தனிப் பிரியம் ஏற்பட்டுப்போய், மதீனாவிலிருந்து அவ்வப்போது குபாவிற்கு வந்து போவது அவர்களது வழக்கமாக ஆகிப்போனது. அவ்விதம் வரும் போதெல்லாம் தோழர்களைச் சந்தித்து, அளவளாவி, அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு, சிறிய மதிய உறக்கம் கொள்வது என்று அன்றையப் பொழுது நகரும். அங்குள்ள மக்களும் போட்டி போட்டு, நபியவர்களைக் கவனித்துக் கொள்வதும், அவர்களிடமிருந்து போதனைகள் பெறுவதும் எனப் பரபரப்புடன் திகழும் குபா.

இதில் உபாதா இப்னுஸ் ஸாமித்தின் இல்லம் நபியவர்களுக்குத் தனிச் சிறப்பு. உபாதாவின் மனைவி உம்முஹராம் ரலியல்லாஹு அன்ஹா. உம்முஹராமும் உம்முஸுலைமும் சகோதரிகள் என்பதையும் அவர்களின் சகோதர் ஹராம் இப்னு மில்ஹான் கொல்லப்பட்டதையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அதனால் நபியவர்களின் சிறப்பான கரிசனம் அவர்களது குடும்பத்தின்மீது நபியவர்களுக்கு இருந்தது. எந்த அளவு என்றால், ‘நம்பிக்கைக்குரிய சகோதரிகள்’ என்று இவர்களைக் குறிப்பிடுவார்கள் நபியவர்கள்.

தவிர, அக்குடும்பத்துடன் நபியவர்களுக்கு உறவொன்றும் இருந்தது. பால்குடிச் சகோதர உறவு பற்றி, அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் (ரலி) வரலாற்றில் படித்திருக்கிறோம். அதைப்போல் உம்முஹராம், நபியவர்களுக்குப் பால்குடிச் சிற்றன்னை. அதாவது, நபியவர்களின் தாயார் ஆமினாவுக்குப் பாலூட்டிய செவிலித்தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர் உம்முஹராம். எனவே, நபியவர்களின் தாய்க்கு ஒப்பான உறவு அவரிடம் ஏற்பட்டிருந்தது. உபாதா இப்னு ஸாமித் (ரலி) மிகச் சிறந்த போர் வீரர்; மிகத் துணி்ச்சலானவர். அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்துக் கொண்ட அன்ஸாரீ. முஸ்லிம்களின் முதல் போரான பத்ரில் பங்கெடுத்துக்கொண்ட பத்ருப் போராளி. அதன் பிறகு ஏனையப் போர்களிலும் தவறாது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.

ஒருநாள் நபியவர்கள் குபா வந்தார்கள்; அன்றையப் பகல் உம்முஹராம் இல்லத்திற்கும் வருகை புரிந்தார்கள். ஆர்வமுடன் வரவேற்றார் உம்முஹராம். உணவும் பரிமாறினார். மதிய உணவிற்குப் பிறகு அசதியில் கண்ணயர்ந்த நபியவர்கள் திடீரெனத் தூக்கம் கலைந்தார்கள். ஆனால் முகத்தில் புன்னகை.

“அல்லாஹ்வின் தூதரே! ஏன் புன்னகை?” என்று கேட்டார் உம்முஹராம்.

“என் சமுதாய மக்கள் சிலரைக் கனவில் கண்டேன். அரசர்கள் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதைப்போல் கடலின்மீது மிதந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.”

உடனே, “ஓ அல்லாஹ்வின் தூதரே! அவர்களுள் நானும் ஒருத்தியாக இணைந்துகொள்ள அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்” என்றார் உம்முஹராம்.

“இன்ஷா அல்லாஹ், அவர்களுள் நீங்களும் ஒருவராயிருப்பீர்” என்றார்கள் நபியவர்கள்.

பிறகு சற்று நேரத்தில் மீண்டும் கண்ணயர்ந்தார்கள் முஹம்மது நபி (ஸல்). சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் புன்னகைத்துக் கொண்டே கண் விழித்தார்கள் அவர்கள். அதைக் கண்ட உம்முஹராம் ஆர்வமுடன் மீண்டும் வினவினார், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் புன்னகை?”

“என் சமுதாய மக்களுள் சிலரைக் கனவில் கண்டேன். அரசர்கள் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதைப்போல் அவர்கள் கடலின்மீது மிதந்து கொண்டிருந்தார்கள்.”

“ஓ அல்லாஹ்வின் தூதரே! அவர்களுள் நானும் ஒருத்தியாக இணைந்துகொள்ள அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்” என்றார் உம்முஹராம்.

“நீங்கள் அவர்களின் முதல் அணியினருள் ஒருவர்” என்றார்கள் நபியவர்கள்.

இந்தக் கனவு ஒரு விசேஷம் என்பது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் ஒருநாள் முஸ்லிம்கள் கடலில் பயணம் புரிந்து போருக்குச் செல்லப் போகிறார்கள் என்பதை நபியவர்களின் மூலமாய் அறியவந்த உடனேயே, தாமும் அதில் பங்குபெற வேண்டும்; நன்மையை அள்ள வேண்டும் என்று ஒரு பெண்மணி விரும்பி, அதற்கு நபியவர்களிடம் பரிந்துரையாக இறைஞ்சுதலையும் கேட்டுப் பெறுகிறார் என்றால், எதற்காக? கடல் கடந்து பயணம் சென்று, ஆபரணமும் ஆடை அணிகலனும் பெறுவதற்காகவா? நிச்சயம் இல்லை. ஆபத்து நிறைந்த அந்தப் பயணத்திலும் போரிலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதைச் சிந்தனைத் தெளிவுடன் நன்குணர்ந்து, அதைத் தியாகம் செய்யும் பேராவலும் இறை உவப்பும் தவிர வேறில்லை. ஈமானிய வலுவில், ஆடவரும் பெண்டிரும் பால் வேற்றுமையின்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

நபியவர்களின் இந்த முன்னறிவிப்புகளில் மற்றொரு நுணுக்கமான தகவலும் பொதிந்திருந்தது. “முதல் அணியில் நீங்கள் இருப்பீர்கள்” என்று உம்முஹராமிடம் உரைத்த நபியவர்கள், வேறோர் அணியைப் பற்றிச் சொல்லும்போது அதில் அவர்களைச் சேர்க்கவில்லை; அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? அதன் உட்பொருளை அனேகமாய் உம்முஹராம் ரலியல்லாஹு அன்ஹா நன்றாகவே உணர்ந்திருக்க வேண்டும். காத்திருக்க ஆரம்பித்தார்.

oOo

ஆண்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. நபியவர்களின் மறைவிற்குப் பின் அபூஉபைதா (ரலி), ஆமிர் இப்னு அப்துல்லாஹ் இப்னுல் ஜர்ராஹ் ஆகியோருடன் இணைந்து கடமையே கண்ணாய்ப் பற்பல போர்களில் கலந்து போரிட்டார் உபாதா இப்னு ஸாமித் (ரலி). தம் கணவருடன் இணைந்து, பின் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தார் உம்முஹராம்.

சிரியா நாட்டின் பகுதிகள் முஸ்லிம்களின் வசமாகின. ஃபலஸ்தீன் பகுதி மக்களுக்கு ஆசானாகவும் நீதிபதியாகவும் உபாதாவை நியமித்தார் உமர். அங்கேயே தங்கி வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள் தம்பதியர். தம் கணவரின் பதவியும் அந்தஸ்தும் உம்முஹராமிடம் எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. உலகமும் அதன் வசீகரமும் தங்களது எளிய குடிலினுள் நுழைய அவர்கள் இடம் அளிக்கவே இல்லை. குபாவில் எப்படி எளிமையாக வாழ்ந்திருந்தனரோ அதைப்போலவே இப்பொழுதும் தொடர்ந்தது அவர்களது வாழ்வு. அது பகட்டாராவாரமற்ற அடக்கமான வாழ்க்கை.

ஆனால் உம்முஹராமின் மனத்தில் மட்டும் எதிர்பார்ப்பு. அன்று நபியவர்கள் கண்ட கனவும் இவருக்காக அவர்கள் இறைஞ்சியதும் மட்டும் இனிதாய் நினைவிலாடிக் கொண்டே இருக்க, காத்திருந்தார்.

இதனிடையே,

எகிப்து பகுதியிலிருந்த ரோமர்களால் சிரியாவிற்கு அச்சுறுத்தல் இருந்தது. அவர்களை எதிர்கொள்ள அம்ரிப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் எகிப்தை நோக்கிக் கிளம்பியது ஒரு படை. அந்நாட்டின் உள்ளே நுழைந்து, பல போர்கள் புரிந்து ரோமர்களை வென்றார் அம்ரிப்னுல் ஆஸ். அதன்பின் பழைய எகிப்தில் உள்ள பாபிலோன் கோட்டைகளை முற்றுகையிட்டார் அவர். ஆனால் அந்த முற்றுகையோ அவர் எதிர்பார்த்ததைவிட நீண்டுகொண்டே போனது. உதவிப் படை அனுப்பி வைக்குமாறு கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார் அம்ரு. அதற்கான ஏற்பாடுகளை கலீஃபா உடனே நிறைவேற்ற, திரண்டு வந்தது துணைப் படை. அதிலுள்ள கால்வாசிப் படையினருக்குத் தலைமை தாங்கியவர் உபாதா இப்னு ஸாமித் (ரலி).

அந்தப் படையிலும் தம் கணவருடன் இணைந்து சென்றார் உம்முஹராம். அதன்பின் ரோமர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்கள் பெருவெற்றி அடைந்தது தனி வரலாறு. பின்னர் டமாஸ்கஸ் நகருக்குத் திரும்பிவிட்டனர் தம்பதியர். அந்தக் காலத்தில் சிரியாப் பகுதிக்கு டமாஸ்கஸ் தலைமையகமாகத் திகழ்ந்தது. வேறுபட்ட பண்பாடுகள் பலற்றின் கலவையாகத் திகழ்ந்தது அந்நகரம். பெருவாரியான மக்கள் தொகை கொண்டிருந்த அந்நகரில் முக்கியத் தோழர்களும் இருந்தனர். அவர்களின் நோக்கமெல்லாம் அங்குள்ள மக்களுக்குக் கல்வி புகட்டுவது, நல்வழி போதிப்பது, இறை வேதத்தையும் நபியவர்களின் வழிமுறையையும் பரப்புவது என்பதாக இருந்தனவே தவிர, வளம் கொழிக்கும் டமாஸ்கஸின் சொகுசோ, உல்லாசமோ அவர்களைக் கவரவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அதைக் கண்டு வெருண்டு ஓடினார்கள் அவர்கள்.

oOo

இதற்கெல்லாம் பிறகு உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் சைப்ரஸ் நோக்கித் திரண்ட முஸ்லிம்களின் படையெடுப்பைதான் நாம் மேலே அறிமுகப்படுத்திக் கொண்டோம். முஆவியா, தம் மனைவியுடன் இப்போருக்குச் செல்வதாக அறிவித்தார். அந்தத் தலைப்புச் செய்தியே மக்களை உற்சாகப்படுத்தப் போதுமானதாக இருந்தது. செவிகளில் போருக்கான அழைப்பு வந்து விழுந்ததும், ஆயுதங்களை ஏந்திக்கொண்டு விறுவிறுவென விரைந்தார்கள் முஸ்லிம்கள். உதுமான் (ரலி) எதிர்பார்த்ததுபோல் பலரும் தாமே முன்வந்து படையில் இணைந்து கொண்டனர்.

இதற்குத்தானே காத்திருந்தேன் இத்தனை நாளும் என்று படையில் இணைந்து கொண்டார் உம்முஹராம், ரலியல்லாஹு அன்ஹா. படு உற்சாகம்! வேகம்! பேராவல்!

கடலில் அலையாட, அலையில் கப்பலாட, அதில் வீற்றிருந்த முஸ்லிம்களின் கப்பற்படை கடலில் மிதந்தது. நபியவர்கள் கூறிய உவமைபோல், உம்முஹராமின் கண்ணெதிரே அக்காட்சி தெளிவாய் விரிந்தது. கப்பலின் ஓரத்தில் நின்று, கண்ணில் நீர் ததும்ப, நீரலைகளைக் கண்டவாறு முனுமுனுத்தார், “உண்மை உரைத்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே!”

முஆவியா கட்டளையிட, சைப்ரஸ் நோக்கிக் கிளம்பியது கப்பல்களின் வீர பவனி. வழியில் அவர்களை எதிர்கொண்டு தாக்கின ரோமர்களின் கடற்படை. அதையெல்லாம் முறியடித்து சைப்ரஸில் நங்கூரம் பாய்ச்சின முஸ்லிம்களின் கப்பல்கள். மளமளவென்று கரையிறங்கிப் போருக்கு வியூகம் அமைத்தனர் முஸ்லிம்கள்.

உம்முஹராம் பயணிக்க, அவருக்கு ஒரு குதிரை வழங்கப்பட்டது. அதில் ஏறி அமர்ந்தார் அவர். ஆனால் குதிரை முரண்டு பிடித்துத் திமிற, தடுமாறிக் கீழே விழுந்தார். அதில் அவருடைய கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டு, இறை வழியில் இறந்து போனார்.

மதீனாவின் குபாவிலிருந்து கிளம்பி, ஹிஜாஸ், சிரியா, ஃபலஸ்தீன், எகிப்து, பின்னர் மீண்டும் சிரியா என்று இறைவழியிலான அறப்போரில் கணவருடன் சென்று, இறுதியில் சைப்ரஸ் போரில் தம் இறுதிப் பயணத்தை முடித்து, ஷஹீத் என்னும் உயிர்த்தியாகி அந்தஸ்த்தைப் பெற்று உயர்ந்தார் உம்முஹராம்.

ரலியல்லாஹு அன்ஹா!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்: Read More

Related Articles

Leave a Comment