தோழர்கள் – 39 ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி)

by நூருத்தீன்
39. ஜஅஃபர் பின் அபீதாலிப் (جعفر بن أبي طالب)

ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு முக்கியமான யுத்தம். மதீனாவிற்கு வடக்கே ஏறத்தாழ 160 கி.மீ. தொலைவில் இருந்த கைபருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் படையெடுத்துச் சென்றிருந்தது முஸ்லிம்களின் படை.

அந்த நேரத்தில் முஸ்லிம்களின் குழு ஒன்று வெளிநாட்டில் இருந்து மதீனாவிற்கு வந்திருந்தது. நபியவர்கள் மக்காவில் இருக்கும்போது அங்கிருந்து அகதிகளாய் அபிஸீனிய நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்த அவர்கள், யத்ரிபிற்கு நபியவர்கள் புலம்பெயர்ந்து ஏழு ஆண்டுகள் கழிந்திருந்த நிலையில் இப்பொழுதுதான் வாய்ப்பு அமைந்து அபிஸீனியாவிலிருந்து நேரே மதீனா வந்து சேர்ந்திருந்தார்கள்.

நபியவர்கள் படையுடன் கைபர் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும், அக்குழுவில் இருந்த ஒருவர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே கைபர் நோக்கி விரைந்தார். அவர் கைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம். அந்த மகிழ்வில் திளைத்திருந்த நபியவர்கள், விரைந்து வரும் இவரைக் கண்டுவிட்டார்கள். அப்பட்டமாய் இரட்டிப்பானது அவர்களது மகிழ்ச்சி.

வந்தவரோ மிக நீண்ட பிரிவிற்குப் பிறகு நபியவர்களைக் காண வந்தவர். பெருக்கெடுத்த சந்தோஷத்தில், மரியாதைப் பெருக்கில், அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தலைகால் புரியாமல் ஒரு காலால் நபியவர்களிடம் ஓடினார். அது அபிஸீனிய நாட்டின் கலாச்சாரம். தாம் அறிந்திருந்த வகையில் மரியாதைப்பெருக்குடன் ஓடினார் அவர்.

நபியவர்களோ இவரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தம் ஈந்து “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது கைபர் வெற்றியா? இவரைச் சந்தித்ததா?” என்று வாய்விட்டே அதை வெளிப்படுத்தினார்கள்.

அப்படியொரு அலாதியான பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அந்தத் தோழர், நபியவர்களின் மிக நெருங்கிய உறவினரும்கூட.

oOo

முஹம்மது நபியவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன், ஓர் ஆண்டு மக்காவில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. கடுமையான பஞ்சம். வறட்சியில் சுத்துப்பட்டு வட்டாரத்தில் எவ்வித விளைச்சலும் இல்லாமல்போய், குரைஷி மக்களெல்லாம் கால்நடைகளின் பழைய எலும்புகளை உண்ண வேண்டிய அசாதாரணச் சூழல். நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிபும் அந்தப் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். குரைஷி குலத்தின் கண்ணியமிக்கத் தலைவர்களுள் ஒருவர் அவர். அம் மக்களிடம் நல்ல செல்வாக்கும் உண்டு. ஆனாலும் பரந்து விரவியிருந்த பஞ்சமானது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவரது குடும்பத்தையும் தாக்க, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுப் போனது அவருக்கு. பெரிய குடும்பம். பெரும் கஷ்டத்தில் இருந்தார் அவர்.

அந்தக் கடுமையான காலகட்டத்தில் குரைஷி குலத்தில் இருவர் ஓரளவு சுமாரான நிலையில் இருந்தனர். ஒருவர் முஹம்மது நபி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மற்றொருவர் அவரின் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.

ஒருநாள் முஹம்மது நபி (ஸல்) தம் சிறிய தந்தையிடம் சென்று, “நம் மக்களெல்லாம் பஞ்சத்தின் கொடுமையால் எப்படிப் பசியில் வாடித் தவிக்கின்றனர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். உங்கள் சகோதரர் அபூதாலிபு தம்முடைய பல பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வசதியற்ற நிலையில் இருக்கிறார். நாம் அவரிடம் செல்வோம். அவரின் மகன்களில் இருவரை நாம் ஆளுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வோம். என் பெரிய தந்தையின் சிரமத்தை இலேசாக்குவோம்”

“இது மிகச் சிறந்த உபகாரம்; நல்லறம்” என்று உடனே ஆமோதித்தார் அப்பாஸ்.

இருவரும் அபூதாலிபைச் சென்று சந்தித்தார்கள். “இந்தக் கடுமையான பஞ்ச காலம் தீரும்வரை உங்களின் பிள்ளைகள் இருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு உங்களது சிக்கல்களை இலேசாக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றனர்.

அபூதாலிபுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் தாலிப், அகீல், ஜஅஃபர், அலீ. அவர்களுள் அகீலின் மீது தனி வாஞ்சை அபூதாலிபுக்கு. எனவே, “நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அகீலை மட்டும் என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார். நபியவர்கள் அலீயை ஏற்றுக்கொள்ள, அப்பாஸ் ஜஅஃபரை அழைத்துக் கொண்டார். இருவரும் அவர்களைத் தத்தமது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். தங்களின் பிள்ளைகளைப் போலவே அன்பு, அக்கறை, உபசரிப்பு என்று வளர்க்கலானார்கள்.

அதன்பிறகு அலீ முஹம்மது நபியுடனே இருந்து வளர்ந்துவர ஆரம்பித்தார். பிறகு அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டபோது அதை ஏற்று நம்பிக்கைக்கொண்டு இஸ்லாத்தில் அடியெடுத்து வைத்த முதல் சிறுவர் அவர். ரலியல்லாஹு அன்ஹு.

ஜஅஃபர் தம் சிற்றப்பா அப்பாஸ் வீட்டில் வளர்ந்து வந்தார். அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் (ரலி) நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தார் என்று முன்பு படித்தோமல்லவா? அதைப்போல் ஜஅஃபர் இப்னு அபீதாலிபும் நபியவர்களின் தோற்றத்தை ஒட்டியிருந்தவர். ஜஅஃபர் பருவ வயதை எட்டியதும் அஸ்மா என்ற பெண்மணியுடன் அவருக்குத் திருமணம் நிகழ்வுற்றது. இந்த அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா வேறு யாருமல்ல, அப்பாஸின் மைத்துனி.

அப்பாஸின் மனைவி உம்மு ஃபள்லுக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒருவர் பிற்காலத்தில் நபியவர்களை மணம் புரிந்துகொண்ட மைமூனா ரலியல்லாஹு அன்ஹா. மற்ற இருவர் அஸ்மா, ஸல்மா. ஸல்மாவை நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு மணம் புரிந்துகொண்டார். இவ்விதம் நபியவர்களின் குடும்பத்துடன் அந்த நான்கு சகோதரிகளுமே மண உறவு கொண்டிருந்தனர்.

நபியவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு விஷயம் மெதுவே வெளியே தெரியவர ஆரம்பித்ததும், அபூபக்ரு (ரலி) மூலமாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் ஜஅஃபரும் அஸ்மாவும்.

துவங்கியது தொந்தரவு.

குரைஷிக் குலத்தின் மிக முக்கியக் கோத்திரத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் மதிப்பும் மரியாதையும் அதுவரை இருந்ததெல்லாம் மறைந்து போய், குரைஷிகள் மறந்துபோய், புதிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தொந்தரவுகளுக்கும் அக்கிரமங்களுக்கும் ஜஅஃபர் தம்பதியரும் உட்பட நேர்ந்தது. ஆனால் அது அவருக்குள் உரம் வளர்த்தது. சொர்க்கத்தின் பாதை கடினமானது என்பதை உணர வைத்தது. பொறுமை காக்க ஆரம்பித்தனர் அந்தப் புதுத் தம்பதியர்.

இருந்தாலும் அவர்களை அதிகம் மன உளைச்சலுக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கிய விஷயம் ஒன்று இருந்தது – இறைவனுக்கு உண்டான தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைக்கூட, தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரிலேயே, சுதந்தரமாய் நிறைவேற்ற முடியாமற் போன அவலநிலை. முஸ்லிம்கள் ஒன்றுகூடினால், தொழுதால் தேடித்தேடி வந்து ரகளையும் ரௌடித்தனமும் புரிந்துகொண்டிருந்த குரைஷிகளிடம் அவர்கள் ஒளிந்துகொள்ள வேண்டி வந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போன தருணத்தில்தான் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு அனுமதி அளித்தார்கள். ‘புறப்படுங்கள்’

ஹிஜ்ரத் எனும் புலப்பெயர்வுக்கு அனுமதி கிடைத்தது. ‘புறப்படுங்கள். அண்டை நாட்டில் நீதியுடன் ஆட்சி செலுத்தும் அரசர் ஒருவர் இருக்கிறார். அவர் நாட்டில் தஞ்சம் பெறுங்கள்’

புறப்பட்டது முஸ்லிம்களின் குழு. ‘அல்லாஹ்வே எங்களின் ஒரே இறைவன்’ என்று உரைத்துக் கொண்டிருந்த ஒரே பாவத்திற்காக புலம்பெயர வேண்டி வந்தது அவர்களுக்கு. என்ன செய்ய? அவர்களுக்கு அப்பொழுது அதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்காவின் சுடு மணல் கடந்து, கடல் கடந்து, அபிஸீனியா வந்து இறங்கியதும்தான் அவர்களுக்கு சுதந்தரமான சுவாசம் சுகமாய் வெளிவந்தது. அச்சமின்றி, குறுக்கீடின்றி, நீதியான அரசாங்கத்தின் பாதுகாப்பில் தங்களது ஏக இறை வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர் அவர்கள். இந்நிலையில்,

‘என்ன இது? கொஞ்சம் கொஞ்சமாய் மக்காவில் மக்கள் காணாமல் போகிறார்களே!’ என்று வியர்க்க ஆரம்பித்தது நபியவர்களின் எதிரிகளுக்கு. அதைத் துடைத்துவிட்டுக்கொண்டு அதற்கடுத்து அவர்கள் நிகழ்த்திய மின்னல் வேக புலன்விசாரனையில் அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ‘ஆஹா! அப்படியா சேதி?’ என்று கோபத்தில் கர்ஜித்தவர்கள் தங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கையை விரைந்து முடிவெடுத்தனர். ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்’

‘அதற்கு அபிஸீனியா மன்னன் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் இந்தக் காரியத்தை நிறைவேற்ற வேண்டுமே’

‘செய்வோம்’

இந்த முடிவை எட்டியதும், உடனே தயாரானது இருநபர் குழுவொன்று. அவர்கள், அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ.

பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் போர்க் களங்களில் வீரபவனி வந்த அம்ரிப்னுல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு, தமது அஞ்ஞான காலத்தில் இஸ்லாத்திற்கும் நபியவர்களுக்கும் எதிராய் உக்கிரமாய்ச் செயல்பட்டவர். மிகச் சிறந்த ராஜதந்திரி. கிறித்தவ மன்னர் நஜ்ஜாஷியிடம் சென்று ‘இந்த முஸ்லிம்கள் விலாசம் தவறி வந்து விட்டார்கள்; நான் அவர்கள் ஊர்காரன்தான்; ஓட்டிக்கொண்டு செல்கிறேன்’ என்று சொன்னாலெல்லாம் காரியத்திற்காவது என்பது குரைஷிகளுக்கு நன்றாகத் தெரியும். நைச்சியம் பேசி சாதிக்க வேண்டும். அதற்கு அவர்களின் சரியானத் தேர்வு அம்ரிப்னுல்-ஆஸ்.

பயணத்திற்கென தனக்குத் தேவையான உடைமைகளை எடுத்துக் கொண்டாரோ இல்லையோ, முதலில் கவனமாய் நஜ்ஜாஷியின் அரசவையைச் சேர்ந்த பாதிரிகளுக்கும் மன்னனுக்கும் உயர்ந்த பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சேகரம் செய்து கொண்டார் அம்ரிப்னுல்-ஆஸ். ஹிஜாஸ் பிராந்தியத்தில் கிடைக்கக்கூடியவற்றில் மிகப் பிரமாதமான பரிசுகள் அவை. மன்னன் நஜ்ஜாஷிக்கென சிறப்பான பரிசாய் ஒட்டகத்தின் உயர்தரத் தோலில் செய்யப்பட்ட வெகுமதிகள். அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு குரைஷிகளிடம், ‘நீங்கள் வாள்களைச் சாணை தீட்டிவையுங்கள். நாங்களிருவரும் விரைந்து திரும்புவோம்’ என்று அபிஸீனியாவிற்குக் கப்பல் ஏறினார்கள் இருவரும்.

oOo

துவேஷம் இல்லை, சண்டை சச்சரவு இல்லை; தொந்தரவு இல்லை, அடி, உதை இல்லை; இணக்கமான மக்கள், கருணையுடன் மக்களை நடத்தும் அரசாங்கம் என்று சுமுகமான ஒரு சூழலில் அபிஸீனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் முஸ்லிம்கள். தாங்கள் உண்டு; தங்களது இறை வழிபாடு உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் அறியாமல் அவர்களை நோக்கி கடல்மேல் நகர்ந்துவந்தது தொல்லை.

அபிஸீனியா கரைக்கு வந்தடைந்தது அந்த இருநபர் குழு. இறங்கியவர்கள் முதல்வேலையாகச் சென்று சந்தித்தது நஜ்ஜாஷி அவையின் பாதிரிகளைத்தான். மன்னனின் சிந்தனைப் போக்கை பெருமளவிற்கு நிர்ணயிப்பது ராஜபிரதானிகள் இல்லையா? அதான். அவர்களிடம் பரிசுப் பொருட்களை அள்ளி இறைக்க, அதை வாங்கி மன மகிழ்ந்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள் அவ்விருவரும்.

“எங்கள் கோத்திரத்தைச் சோ்ந்த அறிவற்ற இளைஞர்கள் உங்கள் மன்னனின் இராச்சியத்திற்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் எங்கள் மதத்தைவிட்டு, எங்கள் மூதாதையர்களின் மதத்தைவிட்டு விலகிவிட்டார்கள்; மட்டுமல்லாது எங்கள் மக்கள் மத்தியில் சண்டை சச்சரவைத் தோற்றுவித்துவிட்டார்கள். நாங்கள் உங்கள் மன்னனிடம் பேசும்போது, மதக்கொள்கையிலிருந்து விலகிப்போன இந்த மக்களை அவர்களது மத நம்பிக்கையைப்பற்றி எதுவும் விசாரரிக்காமல் எங்கள் வசம் ஒப்படைக்கும்படிப் பரிந்துரையுங்கள். அதுபோதும். ஏனெனில் அந்த மக்களின் உயர்குடி தலைவர்கள் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களின் புதிய சமய நம்பிக்கையின் கேட்டினைச் சரியாகப் புரிந்தவர்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்”

எளிமையான தர்க்கம். ‘ஒருவனைப் பற்றி அவன் ஊர்க்காரன்தானே சிறப்பாய் அறிந்திருக்க முடியும். எனவே அனுப்பிவிடுங்கள்; அவர்கள் ஊர்க்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ அதேநேரத்தில் புதுமதத்துக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால் தாழி உடையும் சாத்தியம் நிச்சயம் என்றும் தெரிந்திருந்தது அந்த இருவருக்கும். அதனால் முன்னெச்சரிக்கையாய், ‘அவர்களிடம் அவர்களது நம்பிக்கை பற்றி கேட்டு நேர விரயம் வேண்டாம்’ என்ற செய்தி அவர்களது பேச்சில் கச்சிதமாய் இடைச்செருகியிருந்தது. யதார்த்தத்தில் இந்த வாக்கு சாதுர்யம் அந்த இருநபர் குழுவுக்கு வெற்றியைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனின் திட்டம் வேறுவிதமாய் அமைந்திருந்தது.

‘நீங்கள் உரைப்பது மிகச் சரி; அப்படியே செய்வோம்’ என்று ஏற்றுக்கொண்டார்கள் பாதிரியார்கள்.

அடுத்து மன்னரைச் சென்று சந்தித்தது அந்தத் தூதுக்குழு. மன்னரிடம் பரிசுப் பொருட்களை அளிக்க, பெரிதும் மகிழ்வடைந்தார் நஜ்ஜாஷி். இதுவே சரியான தருணம் என்று ஆரம்பித்தார்கள்.

“ஓ மன்னா! எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்”

நஜ்ஜாஷி தம் ராஜபிரதானி பாதிரியார்களை நோக்கித் திரும்ப, ‘நமக்கு எதுக்குப்பா வம்பு’ என்பதைப்போல், “இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டை சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்ன செய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்”

முகம் சிவந்தார் நஜ்ஜாஷி! எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.

“அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன் – முடியாது. அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”

அடுத்து, என்ன நிகழக்கூடாது என்று அனைத்துப் பிரயாசையையும் மக்கா குழு மேற்கொண்டதோ, அது நடந்தது. முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவரச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”

நடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா?’ மல்லுகட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக் குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.

“அரசர் நம்மிடம் நம் மதத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றி தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிபைத் தேர்ந்தெடுத்தார்கள். உணர்ந்து பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்த சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை, அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.

அனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் பச்சை அங்கி அணிந்து தலையில் உயரமான தலைப்பாகையுடன் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.

முஸ்லிம்கள் வந்து அமர்ந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் எழுந்து நின்றார். பேச ஆரம்பித்தார். இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம் எவ்வித ஆரவாரமுமின்றி பிரமாதமாய் அரங்கேற ஆரம்பித்தது.

“மன்னரே! நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுதிகள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;

“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;

“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;

“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.

தெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது? அந்நிலையில், தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், உள்ளது உள்ளபடி உண்மையை உரைத்த அந்தப் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் நமக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில் அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்!

ஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா?”

‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,

“நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கேட்டனர். “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். “என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது”

என்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது! அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.

“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்தவழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”

அழுத்தந்திருத்தமான தீர்ப்பு உரைக்கப்பட்டது; அவை கலைந்தது.

பலத்த ஏமாற்றமடைந்து போனார்கள் அவ்விருவரும். மகிழ்வடைந்தார்கள் முஸ்லிம்கள். ஆனால் தம் முயற்சியில் மனந்தளரா அம்ரிப்னுல்-ஆஸ், முஸ்லிம்களின் காதுபட, அவர்களை அச்சுறுத்தும் விதமாய் தம் சகா அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவிடம் கூறினார், “இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நாளை நான் மீண்டும் மன்னரைச் சந்திப்பேன். அப்பொழுது நான் சொல்லப்போகும் செய்தியில் ஏற்படப்போகும் கடுஞ்சீற்றத்திலும் வெறுப்பிலும் இவர்களை மன்னன் அடியோடு வேரறுப்பான் பார்”

அதைக் கேட்டு சதையாடியது அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவுக்கு. “அப்படியெல்லாம் செய்துவிடாதே அம்ரு. நம்மை விட்டு விலகிப்போனால் என்ன? என்ன இருந்தாலும் அவர்கள் நம் இனமாச்சே”

“போதும் அந்தக் கரிசனம். மர்யமின் மகன் ஈஸாவை இவர்கள் அடிமை என்று கூறுகிறார்கள் என்று சொல்லப்போகிறேன். அதைக் கேட்டு மன்னனுக்குக் காலடியில் நிலம் அதிரப்போகுது பார்”

அதைக் கேட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு உள்ளம் அதிர்ந்தது.

மறுநாள் –

நஜ்ஜாஷியை மீண்டும் அரசவையில் சந்தித்தார் அம்ரிப்னுல்-ஆஸ். “மன்னா! தாங்கள் அடைக்கலம் அளித்துள்ளீர்களே இந்த மக்கள், இவர்கள் மர்யமின் மகன் ஈஸாவைப் பற்றி கூறும் அவதூறை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் அழைத்து விசாரித்துப் பாருங்கள், தெரிந்துகொள்வீர்கள்”

மறுஅழைப்பு வந்தது முஸ்லிம்களுக்கு. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களை அதிகப்படியான கவலை சூழ்ந்தது! இப்பொழுது அரசனிடம் என்ன பதில் சொல்வது என்று கூடி விவாதித்தார்கள்; முடிவெடுத்தார்கள். ‘அல்லாஹ் குர்ஆனில் என்ன கூறியிருக்கிறானோ அதை மட்டுமே சொல்வோம். நபியவர்கள் கற்றுத் தந்ததைவிட ஒரு வார்த்தை கூட்டியோ குறைத்தோ சொல்லப்போவதில்லை. விளைவு என்னவாக இருந்தாலும் சரியே. நம் சார்பாய் மீண்டும் ஜஅஃபரே இன்று பேசுவார்’

மீண்டும் அரசவைக்குச் சென்றனர் முஸ்லிம்கள். முந்தைய தினம் போலவே நஜ்ஜாஷியும் அவரது இருமருங்கிலும் பாதிரிகளும் அமர்ந்திருந்தனர். கூடவே அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு

அபீரபீஆ. முஸ்லிம்கள் உள்ளே நுழைந்ததுமே நஜ்ஜாஷி கேட்டார்: “மர்யமின் மகன் ஈஸாவைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்தென்ன?”

“எங்கள் நபி (ஸல்) மூலமாய் எங்களுக்கு அறிய வந்ததை நாங்கள் நம்புகிறோம்” என்றார் ஜஅஃபர் இப்னு அபூதாலிப்.

“அவர் என்ன சொல்கிறார்?”

“ஈஸா அல்லாஹ்வின் அடிமை; அவனின் தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியத்திற்குரிய கன்னி மர்யமுக்கு அவன் சொல்லால் பிறந்தவர் என்று அவர் சொல்கிறார்”.

அதைக் கேட்டதுதான் தாமதம்; நஜ்ஜாஷி வியப்பால் தரையைத் தட்டினார். ஒரு குச்சியை எடுத்து, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் நபி கொண்டு வந்திருப்பதும் ஈஸா சொல்லியதும் இந்த குச்சியின் அளவுகூட அதிகமில்லை”

ஆனால் ஜஅஃபர் சொன்னதைக் கேட்டு பாதிரிகள் மத்தியிலிருந்து மட்டும் முனகலும் ஆட்சேபனைக் கனைப்பும் எழுந்தன. “நீங்கள் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் உண்மை” என்று அவர்களிடம் அறிவித்துவிட்டார் நஜ்ஜாஷி.

பிறகு முஸ்லிம்களை நோக்கி “நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழுப் பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்க மலையையே எனக்குக் கொடுத்தாலும் சரியே. நான் உங்களைத் துன்புறுத்த விரும்பமாட்டேன்” என்று கூறியவர், தமது அவையில் உள்ளவர்களிடம், “அவ்விருவரும் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்பக் கொடுத்து விடுங்கள். எனக்கு அது தேவையே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! முன்னர் பறிபோன எனது ஆட்சியை அல்லாஹ் எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு அல்லாஹ் உதவாதபோது அவனுக்கு எதிராக கெடுமதியாளர்களுக்கு நான் உதவுவேனோ?” என்றார்.

அதன்படி குரைஷிகளின் அன்பளிப்புகள் திரும்பக் கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர் அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும். சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.

பத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு. ஜஅஃபரும் அவர் மனைவி அஸ்மாவும். அப்துல்லாஹ், முஹம்மது, அவ்ன் எனும் மூன்று குழந்தைகளை ஈன்றிருந்தனர்.

oOo

ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு. முஸ்லிம்களை மதீனாவிற்கு அனுப்பி வைக்கும்படி மன்னன் நஜ்ஜாஷிக்குக் கடிதம் எழுதி, தம் தோழர் அம்ரிப்னு உமையா அல்ளம்ரீ (ரலி) மூலம் கொடுத்தனுப்பினார்கள் நபியவர்கள்.

அதற்குச் சில காலம் முன் அபூமூஸா அல்-அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்த செய்தி அறிந்து அவர்களைச் சந்திக்க ஒரு குழுவாய் யமனிலிருந்து மதீனா கிளம்பியிருந்தார். அவர்கள் பயணம் செய்த படகு ஏதோ காரணத்தினால் அபிஸீனியாவில் கரை ஒதுங்க, அவர்கள் அங்கு இறங்கிக்கொள்ள நேர்ந்தது. அங்கு ஜஅஃபரையும் இதர முஸ்லிம்களையும் இவர்கள் சந்திக்க, ‘நபியவர்கள் நாங்கள் இங்குத் தங்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். நீங்களும் எங்களுடன் தங்கிக் கொள்ளுங்களேன்’ என்று சொல்லி அவர்களையும் உடன் வைத்துக்கொண்டார் ஜஅஃபர்.

இப்பொழுது அந்த அத்தனைபேரும் பயணம் புரிய இரண்டு படகுகளைத் தயார் செய்து அளித்தார் நஜ்ஜாஷி. ஜஅஃபர் தலைமையில் அந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனா வந்தடைந்தனர்.

அந்த நேரத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபருக்குப் படையெடுத்து சென்றிருந்தார்கள். அந்தச் செய்தியை அறிந்த ஜஅஃபர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே கைபர் நோக்கி விரைந்தார். அவர் கைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம். அந்த மகிழ்வில் திளைத்திருந்த நபியவர்கள், விரைந்து வரும் ஜஅஃபரைக் கண்டுவிட்டார்கள். அப்பட்டமாய் இரட்டிப்பானது அவர்களது மகிழ்ச்சி.

ஜஅஃபரோ மிக நீண்ட பிரிவிற்குப் பிறகு நபியவர்களைக் காண வந்தவர். பெருக்கெடுத்த சந்தோஷத்தில், மரியாதைப் பெருக்கில், அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தலைகால் புரியாமல் ஒரு காலால் நபியவர்களிடம் ஓடினார். அது அபிஸீனிய நாட்டின் கலாச்சாரம். தாம் அறிந்திருந்த வகையில் மரியாதைப்பெருக்குடன் ஓடினார் அவர்.

நபியவர்களோ இவரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தம் ஈந்து “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது கைபர் வெற்றியா? இவரைச் சந்தித்ததா?” என்று வாய்விட்டே அதை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் கைபர் போரில் கைப்பற்றிய செல்வங்களைப் படையினர் மத்தியில் பங்கிடும்போது அபிஸீனியாவிலிருந்து படகில் வந்தடைந்தவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பங்கு அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜஅஃபர் அபிஸீனியாவில வாழ்ந்திருந்த காலம் அவருடைய இறைவழிப் போராகவே கருதப்பட்டது என்பது இஸ்லாமிய வல்லுநர்களின் கருத்து.

ஜஅஃபர் மீது நபியவர்கள் கொண்டிருந்த அன்பும் பாசமும் போலவே மிக விரைவில் அவர்மேல் மற்ற தோழர்களுக்கும் அலாதியான பாசம் ஏற்பட்டுப் போனது. காரணம் இருந்தது. ஜஅஃபரின் தயாள குணம்! இரக்க சிந்தை! வறியவர்களிடம் அவர் கொண்டிருந்த அலாதி அக்கறையால் ‘வறியவர்களின் தந்தை’’ எனும் பட்டப் பெயர் வந்து ஒட்டிக்கொண்டது ஜஅஃபருக்கு. திண்ணைத் தோழராய் வாழ்ந்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அதற்குச் சான்று பகர்கிறார்.

“மதீனாவில் வாழ்ந்துவந்த ஏழைகளாகிய எங்கள் மீது அளவற்ற பரிவு கொண்டவர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப். எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவரிடம் என்ன உணவு இருக்கிறதோ அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அவரிடம் உணவு ஏதும் இல்லையெனில், வெண்ணெய் இருந்த ஜாடியை எடுத்துவருவார். அதை உடைத்து, ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசிச் சொட்டுவரை எங்களுக்கு அளிப்பார்”

ஜஅஃபரின் தயாள மனப்பான்மையை அறிந்து கொள்ள இது போதாது? இத்தனைக்கும் அந்த மதீனத்து முஸ்லிம்கள் எத்தனை நாள் பழக்கம் அவருக்கு? அவர் மதீனாவில் வாழ்ந்திருந்தது, ஏன் உலகிலேயே தங்கியிருந்தது அடுத்து ஓர் ஆண்டுவரைதானே! சகோதரத்துவம் – அது சகோதரத்துவம்! ஆனால் அது இன்று நம் உதடுகளில் மட்டுமே அல்லவா மீந்துபோய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நபியவர்களின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம். முதல்முறை தோழர்களுடன் உம்ரா கிளம்பிச் சென்று, மக்காவின் உள்ளே நுழையவிடாமல் குரைஷிகளால் தடுக்கப்பட்டு, பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டு, அதற்கு அடுத்து ஆண்டுதான் நபியவர்கள் தம் தோழர்களுடன் மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் அனைவரும் மதீனா கிளம்பும் தருணம். அனாதரவாகிவிட்டிருந்த ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் மகள் தம்மையும் அவர்களுடன் அழைத்துச் செல்லும்படி அழ ஆரம்பித்துவிட்டார். அலீ (ரலி) உடனே அச்சிறுமியின் கையைத் தாம் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் தாம்தான் அச்சிறுமிக்கு பாதுகாவலராய்ப் பொறுப்பேற்றுக் கொள்வோம் என்று ஜஅஃபர், ஸைது இப்னு ஹாரிதா என்று இருவரும் அவருடன் போட்டிக்கு வந்துவிட்டனர்.

‘என் சிறிய தந்தையின் மகள். அதனால் எனக்கே உரிமை அதிகம்’ என்பது அலீ (ரலி)யின் வாதம். ‘எனக்கும் அவள் சிற்றப்பா மகள். மட்டுமின்றி, என் மனைவியின் சகோதரி மகள் அவள். அதனால் எனக்கே அதிக உரிமையுள்ளது’ என்பது ஜஅஃபர் (ரலி)யின் வாதம். மக்காவில் ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் அவரையும் ஸைது இப்னு ஹாரிதாவையும் சகோதரர்களாக ஆக்கி வைத்திருந்தார்கள் நபியவர்கள். அதனால், ‘இவள் என் சகோதரரின் மகள். எனக்கே உரிமை அதிகம்’ என்பது ஸைது (ரலி)யின் கூற்று.

விஷயம் நபியவர்களிடம் சென்றது. இறுதியில், ஜஅஃபருக்கு அதிக உரிமையுள்ளது என்று அறிவித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). “தாயாரின் சகோதரியே குழந்தைக்கு நெருக்கமானவர். எனவே அச்சிறுமி ஜஅஃபரின் வீட்டில் வளர்வதே சரி” என்பது நபியவர்களின் தீர்ப்பு.

இங்குத் தீர்ப்பின் சிறப்பல்ல முக்கியம். அது சட்ட வகுப்பு சமாச்சாரம். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பொறுப்புகளை உதறித்தள்ள ‘என்னடா காரணம் கிடைக்கும்’ என்று வழிவகை தேடும் பழக்கம் மலிந்துள்ள நம்மிடம் எத்தகு செல்வ வசதியும் அற்ற அபலைச் சிறுமியை வளர்த்து ஆளாக்கும் மாபெரும் பொறுப்புக்கு போட்டா போட்டி என்று நின்றார்களே அவர்கள், அந்தச் சகோதரத்துவம், அது முக்கியம். நற்காரியங்களுக்கு முண்டியடித்துக் கொண்டார்களே அது முக்கியம்.

தோழர்கள் அவர்கள் – ரலியல்லாஹு அன்ஹும்.

oOo

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு துவங்கியது. கூடவே ரோமர்களுடனான முதல் போரும் துவங்கியது. பிற்காலத்தில் ரோமர்களை கதிகலங்க அடிக்கப்போகும் புயலுக்கான முன்னுரை முஅத்தாப் போரில் எழுதப்பட்டது.

முஅத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் போருக்கான காரணத்தை விரிவாய்ப் பிறிதொரு தோழருடன் நாம் காண இருந்தாலும், இங்குச் சுருக்கமான அறிமுகம் செய்து கொள்வோம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பஸ்ரா நாட்டுக்கு ஹாரித் இப்னு உமைர் அல்-அஸ்தி (ரலி) என்பவரைத் தம் தூதராக அனுப்பி வைத்தார்கள். அண்டை நாட்டு மன்னர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு விடுத்துத் தூதர்களை அனுப்பி வைத்ததை முந்தைய அத்தியாயங்களிலேயே பார்த்தோம். அவ்விதம் தூதராகச் சென்ற இவரை ஷுராஹ்பீல் இப்னு அம்ரு அல்-கஸ்ஸானி என்பவன் அநியாயமாய்க் கொன்றான். என்ன காரணம்?

ரோமப் பேரரசின் நட்புக் குலம் என்ற திமிர். முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல என்று கேவலமாய்க் கருதிய குணம். என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோமே என்ற மமதை.

முகாந்தரமே இன்றித் தம் தூதர் இவ்விதம் கொல்லப்பட்டது நபியவர்களுக்கு அளவற்ற வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிச்சயம் போர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்றாகி விட்டதால், மூவாயிரம் வீரர்களை அணி திரட்டினார்கள் அவர்கள். படைத் தலைவராக ஸைது இப்னு ஹாரிதா (ரலி) நியமிக்கப்பெற்றார். நிச்சயம் ரோமர்கள் உதவிக்கு வரப்போகிறார்கள்; போர் உக்கிரமாக இருக்கும் என்ற நபியவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே,

“ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள். கிளம்பியது படை.

முஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது.

எண்ணிக்கை பிரமிப்பு ஏற்படுத்தியதென்றாலும் அதையெல்லாம் ஒதுக்கிக் தள்ளிவிட்டுத் துணிச்சலுடன் களம் புகுந்தனர் முஸ்லிம்கள். ஸைது இப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமை ஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது. சரிசமமற்ற படை பலத்துடன் நடைபெறும் போரின் அபாயம் தெளிவாய்த் தெரிந்திருந்தது அவருக்கு. அது முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் என்பதும் புரிந்தது. இருப்பினும், வீராவேசமாய்க் களத்தில் சுழல ஆரம்பித்தார் அவர். ஆனால் குதிரையில் அமர்ந்து போரிடுவது மிகச் சிரமமாய் இருந்தது. குதித்து இறங்கியவர் வாளெடுத்து அதன் கால்களை முடமாக்கினர். எதிரிகள் அதைக் கைப்பற்றினால் உபயோகப்படக் கூடாது என்பது அவரது எண்ணம். பின்னர் முஸ்லிம்களின் கொடியை ஏந்திக் கொண்டு, பாடிக்கொண்டே எதிரிப்படைகள் மத்தியில் புகுந்தார்.

சொர்க்கம் பேரழகு!

இதோ அது என்னருகில்

அதன் சுகந்தம் முகர்கிறேன்;

குளிர்ச்சி உணர்கிறேன்.

ரோமும் ரோமர்களும்

அவர்களுக்கு நெருங்கி விட்டது

அதிரும் கொடுந் தண்டனை

என் கடமை என்பது

எதிர்கொண்டு தாக்குவதே!

ஜஅஃபரிடம் எந்தவிதத் தயக்கமும் பயமும் இருந்ததாய்த் தெரியவில்லை. எதிரியின் அணிகளுக்கு இடையே தாக்கிக்கொண்டே அவர் ஊடுருவ, ஊடுருவ சகட்டுமேனிக்குக் காயங்கள். அப்பொழுது எதிரியின் ஒரு வாள் வீச்சு அவரது வலக் கரத்தைத் துண்டாடியது. விழுந்த அங்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கொடியை இடக் கையில் ஏந்திக் கொண்டவர் போரைத் தொடர்ந்தார். மற்றொரு வீச்சில் அந்தக் கையும் துண்டானது. இப்பொழுது சொச்சம் இருந்த கரங்களால் கொடியை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு அவர் மேலும் தொடர, இறுதியாய் முழுவதும் வெட்டுண்டு வீழ்ந்தார் ஜஅஃபர்.

அதற்கடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) தலைமை ஏற்றுக் கொண்டு போரிட்டு அவரும் வீர மரணம் எய்தினார். அதன்பிறகு காலீத் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, நிலைமையைச் சமாளித்து, மேற்கொண்டு இழப்பில்லாமல் படையை மீட்டது அந்தப் போரின் மிச்ச நிகழ்வு.

இந்த மூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தியை அறிய வந்த நபியவர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிப் போனார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் அனைவருக்குமே அந்தப் போர் பெரும் சோகத்தை அளித்திருந்தது. ஆறுதல் சொல்ல ஜஅஃபரின் இல்லத்தை அடைந்தார்கள் முஹம்மது நபி (ஸல்). அங்கு ஜஅஃபரின் மனைவி அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளை குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டிருந்தார்.

நபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததை பார்த்ததுமே, ‘விபரீதமோ?’’ என்று அவருக்குத் தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் அடக்கிக் கொண்டார். அஸ்மாவுக்கு முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக்குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.

புரிந்துவிட்டது அஸ்மாவுக்கு. “அல்லாஹ்வின் தூதரே! ஜஅஃபர் அவரின் இரு தோழர்கள் பற்றிய சோகச் செய்தி அறிந்து வந்தீர்களோ?”

”ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவர்கள்”

அழுதார் அஸ்மா. ஆருயிர்க் கணவனின் பிரிவு துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.

“ஜஅஃபரின் மகன் முஹம்மது, அபூதாலிபைப் போல் தோற்றமளிக்கிறான். வடிவத்திலும் செயல்முறைகளிலும் அப்துல்லாஹ் என்னைப் போல் இருக்கிறான்” என்ற நபியவர்கள் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ்! ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக. ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக”

பிற்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் மாபெரும் பெருந்தன்மையாளராகத் திகழ்ந்தார் என்கிறது வரலாறு.

அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் பிள்ளைகளின் அனாதரவான நிலைபற்றி வருந்தியபோது, “அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆதரவளிப்பவனாக நான் இருக்கையில் அவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற அச்சம் ஏன்?” என்று வினவினார்கள் நபியவர்கள். தம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவர் மீதும் நபியவர்களுக்கு எத்தகைய வாஞ்சையும் பாசமும் அக்கறையும் இருந்தன என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தம் மகள் ஃபாத்திமா (ரலி) வீட்டிற்குச் சென்ற நபியவர்கள், “ஜஅஃபர் குடும்பத்தினருக்கு உணவு சமைத்து அனுப்பவும். அவர்கள் இன்று துக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.

பிறகு நபியவர்கள் அறிவித்தது மிக முக்கியத் தகவல். “நான் கண்டேன். ஜஅஃபர் சொர்க்கத்தில் ஒரு பறவையாய் உல்லாசமாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். சொர்க்கத்தில் எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்லலாம். இழந்த கைகளுக்குப் பகரமாய் சிறகுகள் உள்ளன. அவை இரத்தத்தில் தோய்ந்துள்ளன. பிரகாசமான சிகப்பு நிறத்தில் உள்ளன அவரது கால்கள்”

தமது 41ஆவது வயதில் உயிர்த் தியாகம் புரிந்து உலக வாழ்வை நீத்தார் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப். அவரை நல்லடக்கம் செய்யும்போது அவரது உடலில் விழுப்புண்களாக 90 வெட்டுக் காயங்கள் இருந்ததைக் கவனித்ததாய்க் குறிப்புகள் அறிவிக்கின்றன.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment