தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (ரலி) – பகுதி 3

46. ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) – 3

“அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் – எங்களைச் சேர்ந்தவர்” என்று அலீ (ரலி) ஸல்மானைப் பற்றி கூறியதற்குக் காரணம் இருந்தது. அந்த விபரம் அறிய அகழிவரை செல்லவேண்டும்.

அகழிப் போர் என்று பெயர் பெற்றுவிட்ட கூட்டணிப் படையினருக்கு எதிரான முஸ்லிம்களின் போரில், அகழிக்குக் காரணம் ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவை நோக்கித் திரண்டு வரும் எதிரிகளின் கூட்டணியை எப்படி எதிர்கொள்வது, மதீனாவை எப்படித் தற்காப்பது என்று தம் தோழர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள் நபியவர்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அப்பொழுதுதான் அரபியர்கள் அறிந்திராத அந்தப் புது யுக்தியை முன்மொழிந்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ. பாரசீகர்களின் தற்காப்புப் போர் முறை அது. அந்நாட்டைச் சேர்ந்த ஸல்மான் அதை நன்றாக அறிந்திருந்தார். பரந்த நிலப்பரப்பில் போரிட்டுப் பழகியிருந்த அரபியர்களுக்கோ இந்தத் திட்டம் புதியது. அதன் பலனும், தற்காப்பு அம்சமும் அவர்களுக்கு உடனே பிடித்துப் போயின. தவிர மதீனா நகரின் அமைப்பும் அதற்கு உகந்ததாய் இருந்தது மற்றொரு காரணம்.

மதீனாவின் கிழக்குப் பகுதியில் வகீம் எனும் எரிமலைக் குன்று வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. மேற்கே அதேபோல் மற்றொரு எரிமலை வபரா. தெற்கே வெகு அடர்த்தியான பேரீச்சைத் தோட்டங்கள். தோட்டங்களைத் தாண்டி பனூ குரைளா யூதர்களின் குடியிருப்புகள். அவற்றிற்கு கோட்டைச் சுவர் அரண். பனூ குரைளா யூதர்கள் அச்சமயத்தில் முஸ்லிம்களுடன் நல்லிணக்க உடன்படிக்கை செய்திருந்தனர். (அதைத்தான் பின்னர் இப்போரின் முக்கிய தருணத்தில் அவர்கள் காற்றில் பறக்கவிட்டனர்.) இவ்விதம் மூன்று திசையிலும் இயற்கை அரண் அமைந்திருந்தது மதீனாவுக்கு.

ஆக, வடக்குப் பகுதியிலிருந்து மட்டுமே எதிரிகள் உள்ளே நுழைய முடியும் என்பதால் அங்கு அகழி தோண்டும் வேலை உடனே ஆரம்பமாகியது. 3000 தோழர்கள் இப்பணியில் இறங்க, அவர்களைப் பத்துப் பேர் கொண்ட குழுவாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் 40 கெஜம் தோண்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள். இராப் பகலாக போர்க்கால நடவடிக்கை தொடர, மளமளவென்று உருவானது அகழி.

பணியைப் பகிர்ந்தளிக்க இவ்விதம் குழு பிரிக்கும் போதுதான், மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்கள் கூறினார்கள், “ஸல்மான் எங்களவர்.”

மதீனத்து அன்ஸார்கள் போட்டியிட்டார்கள், “இல்லை, இல்லை. அவர் எங்களவர். எங்களது அணியில் இருப்பார் அவர்.”

இவற்றைச் செவியுற்ற நபியவர்கள் அந்தப் பாசப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்: “ஸல்மான் முஹம்மதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.”

சிறப்பான முற்றுப்புள்ளி. எத்தகைய பெரும்பேறு இது? உலகில் எத்தகு உன்னதம் இது? இதைத்தான் அலீ (ரலி) மறக்காமல் குறிப்பிட்டார். ஸல்மான் பெற்ற பெருமை அது மட்டுமன்று. மற்றொருமுறை –

“அவன்தான் கல்வி அறிவில்லாத (அரபு) மக்களிலிருந்து ஒருவரைத் தன் தூதராகத் தேர்ந்தான். அம்மக்கள் வெளிப்படையான வழிகேட்டில் உழன்றிருந்தனர். இத்தூதர், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் கற்பித்து, அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு வேதத்தோடு ஞானத்தையும் கற்பிக்கிறார். (இவருடன் சேர்ந்திருக்கும் இவரது சமகாலத்தவர்க்கும்), இவர்களுடன் சேராத(பிற்காலத்த)வர்களுக்காகவும், (இவரைத் தூதராக அல்லாஹ்) அனுப்பி வைத்தான். அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்” என்று வசனம் ஒன்றை அருளினான் அல்லாஹ். சூரத்துல் ஜுமுஆவின் 2 & 3ஆவது வசனங்கள் அவை. அவை நபியவர்களுக்கு அருளப்பட்ட நேரத்தில் அவர்கள் அருகில் அபூஹுரைரா, ஸல்மான் அல் ஃபாரிஸீ மற்றும் சில தோழர்கள் அமர்ந்திருந்தனர்.

”அல்லாஹ்வின் தூதரே! இவர்களுடன் சேராதவர்களுக்காகவும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானே அவர்கள் யாவர்?” என்று கேட்டார் அபூஹுரைரா. சற்று நேரம் அமைதியாக இருந்த நபியவர்கள், தொடர்ந்து மூன்றாவது முறையாக அபூஹுரைரா கேட்டதும் விளக்கம் அளித்தார்கள்.

தம் கையை ஸல்மான் மீது போட்டு, “ஈமானிய அறிவு என்பது அத்-துரைய்யாவில் இருந்தாலும் இவரது மக்கள் – அதாவது பாரசீகர்கள் – அதைத் தேடிப் பெறுவார்கள்” என்று விளக்கமளித்தார்கள் நபியவர்கள். அத்-துரைய்யா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். ஞானம் என்பது எட்டாத தொலைவில் இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவார்கள் பாரசீகர்கள் என்ற உவமைக்கு ஸல்மான் அல் ஃபாரிஸீ சாட்சியாக அமர்ந்திருந்தார் அங்கு.

oOo

மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனத்து அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவை ஏற்படுத்தியிருந்தார்கள் நபியவர்கள் என்று முந்தைய அத்தியாயங்கில் பார்த்தோமில்லையா? அதன்படி அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைந்த ஸல்மானுக்கும் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் இடையே சகோதர உறவு ஏற்பட்டுப் போயிருந்தது. ஒருநாள் அபூதர்தாவைச் சந்திக்க வந்தார் ஸல்மான். அங்கு அபூதர்தாவின் மனைவி ஆடை-அலங்காரங்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் எளிமையிலும் எளிமையாக இருந்ததைக் கண்டு அவருக்கு ஆச்சரியம். உதுமான் பின் மள்ஊன் வரலாற்றில் அவர் மனைவி ஃகவ்லா பற்றி படித்தது நினைவுக்கு வருகிறதா? ஏறக்குறைய அதே காரணம்தான் இங்கும்.

”ஏன் இப்படி?” என்று கவலையுடன் விசாரித்தார் ஸல்மான்.

“உங்கள் சகோதரர் அபூதர்தா இவ்வுலக சொகுசை விரும்புவதில்லை” என்று பதில் அளித்தார் உம்மு தர்தா. அபூ தர்தாவின் எளிமையையும் ஆன்மீக ஈடுபாட்டையும்தான் நாம் விரிவாகப் பார்த்தோமே!

சற்று நேரத்தில் அங்கு வந்தார் அபூதர்தா. உணவு தயாரானது. அதை அக்கறையாய் சகோதரர் ஸல்மானுக்கு பரிமாறிவிட்டு அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அபூதர்தா. தாம் மட்டும் உண்ணவில்லை! இருவருக்கும் போதுமான உணவு இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கவேண்டும் ஸல்மானுக்கு. இருப்பது ஒற்றை பேரீச்சம்பழம் என்றாலும் அதைப் பிய்த்து பகிர்ந்து உண்பவர்கள் அவர்கள். எனும்போது தாம் மட்டும் எப்படி தனியாய் சாப்பிடுவார்? “நீங்களும் என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்” என்றார் ஸல்மான்.

“இல்லை நீங்கள் உண்ணுங்கள். நான் இன்று நோன்பு நோற்றுள்ளேன்” என்று வேறுவழியில்லாமல் காரணத்தைக் கூறினார் அபூதர்தா. கடமையல்லாத உபரி நோன்பு அது.

“நீங்கள் என்னுடன் உண்ணாவிட்டால் நானும் உண்ணப்போவதில்லை.”

ஸல்மானின் திட்டவட்டமான பதிலால் விருந்தோம்பலுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய கட்டாயம் அபூதர்தாவுக்கு ஏற்பட்டுப்போனது. தமது நோன்பை முறித்துக்கொண்டு ஸல்மானுடன் உணவு உட்கொண்டார். உண்டார்கள்; பருகினார்கள்; அளவளாவினார்கள். இரவு வந்தது. அன்று தம் சகோதரர் வீட்டிலேயே தங்கினார் ஸல்மான். உறங்கச் சென்றார்கள்.

இரவின் சிறு பகுதி கழிந்தது. அபூதர்தா எழுந்து இரவில் தொழும் உபரித் தொழுகைக்குத் தயாரானார். அதைக் கண்ட ஸல்மான், “உறங்குங்கள் அபூதர்தா” என்று தடுத்துவிட்டார்! மேலும் சிறு பகுதி கழிந்தது. ‘சரி இப்பொழுதாவது தொழலாம்’ என்று எழுந்தார் அபூதர்தா. மீண்டும் அவரைத் தடுத்து உறங்க வைத்தார் ஸல்மான்! ஏறக்குறைய இரவின் கடைச்சாம நேரம். இப்பொழுது ஸல்மான் அபூதர்தாவை எழுப்பினார்.

இருவரும் தொழுதனர். தொழுது முடித்தபின், “உம் இறைவனுக்கு உம் மீது உரிமையுண்டு; உமது ஆன்மாவுக்கு உம் மீது உரிமையுண்டு; உம் குடும்பத்தினருக்கு உம் மீது உரிமையுண்டு. எனவே அவரவர் உரிமையை முறைப்படி நிறைவேற்றுங்கள் அபூதர்தா” என்று உபதேசம் புரிந்தார் ஸல்மான். அதன்பின் நபியவர்களைச் சந்தித்த அபூதர்தா, நடந்தவற்றை விவரித்து விளக்கம் கேட்க, “ஸல்மான உண்மையுரைத்தார்” என்றார்கள் நபியவர்கள்.

இவ்வாறு ஆழ்ந்த இறை ஞானத்துடன் விளங்கிய ஸல்மான் அல் ஃபாரிஸீக்கு வீரம் உபரிப் பாடமாய் ஆகிவிடவில்லை. இறைவழியில் அறப்போர் என்பது எத்தகைய கட்டாயக் கடமை என்பதை அவரும் தோழர்களும் மிகத் தெளிவாய் அறிந்திருந்தனர். அதற்கான தருணங்களிலெல்லாம் களத்தில் வீர பவனி வந்திருக்கின்றனர். ஆனால், வாழ்வோ, சாவோ, அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற உயர்வான நிலையும் பக்குவமும் மனத்தில் ஆழப் பதிந்து அவர்களது இயல்பாகவே ஆகிவிட்டதால் எந்த நிலையிலும் அவர்களது பணிவும் அடக்கமும் மட்டும் அவர்களைவிட்டு விலகவில்லை. பகட்டாரவாரம், செருக்கு என்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் மத்தியில் மறைந்தே போய்விட்டன.

உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபொழுது பாரசீகத்தின் மதாயின் நகரை ஸஅத் பின் அபீவக்காஸ் தலைமையில் முஸ்லிம்கள் படை தாக்கியது. மன்னன் குஸ்ரோ மதாயின் நகரைப் பாரசீகத்தின் தலைநகராய் அமைத்திருந்தான். எனவே அது அவர்களுக்கு மிக முக்கிய நகரம்.

பாரசீகர்களுக்கு எதிராய் நிகழ்ந்த பல யுத்தங்களில் கலந்துகொண்டு, போர் நடைபெறும் முன் அந்தப் பாரசீகர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பது ஸல்மான் அல்-ஃபாரிஸீயின் முக்கியப்பணியாய் இருந்திருக்கிறது. கிந்தா எனும் ஊரிலிருந்து கிளம்பிய முஸ்லிம்களின் படையில் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் ஸல்மான். தளபதி என்றதும் நமது மனக்கண்ணில் ஒரு பிம்பம் ஓடுமே அத்தகைய படோடபம் எதுவும் இல்லை. ஒரு சாதாரண போர்வீரருடன் அவரது கோவேறு கழுதையில் ‘எனக்கும் இடம்கொடேன்’ என்பதுபோல் ஏறி அமர்ந்து கொண்டார். அப்படி அமர்ந்து பயணித்து மதாயின் நகரை அடைந்தார் தளபதி. அவரது கையிலிருந்த கொடியை ”நாங்கள் ஏந்திக்கொள்கிறோம் தாருங்கள்” என்று மற்றவர்கள் கேட்டபோதும் தரவில்லை ஸல்மான். எந்த சிறு பொறுப்பும் பெரும் பொறுப்பு அவருக்கு. தாமேதாம் அதை ஏந்தியிருந்தார்.

கடுமையான போர் நடைபெற்று இறுதியில் மதாயின் நகரை முஸ்லிம்கள் வெற்றிகரமாய்க் கைப்பற்றினர். பிறகு திரும்பும்பொழுதும் வெற்றிக்களிப்பு, மமதை எதுவும் இன்றி, அதே வீரருடன் அதேபோல் கழுதையில் தொடர்ந்தது அவரது பயணம். இத்தகு தோழர்களை என்ன செய்வார் உமர்?

மதாயின் நகரின் ஆளுநர் பதவியை ஸல்மான் அல் ஃபாரிஸீக்கு அளித்தே தீருவது என்று உமர் அவர் பின்னால் நிற்க ஆரம்பித்தார். மாட்டவே மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஸல்மான். “இருவருக்குத் தலைவனாக இருப்பதா, மண்ணைத் தின்று வாழ்வதா என்று என்னிடம் கேட்டால் மண்ணைத் தின்று வாழ்வதே மேல் என்று சொல்வேன்” என்று பதவியை வெறுத்து மறுத்து ஓடியிருக்கிறார். ஆனால் ‘உன்னைப் போன்றவர்களே மக்களை ஆள்வதற்கு சகல அருகதையும் உள்ளவர்கள்’ என்று உமர் ஒரு கட்டத்தில் அவரை மடக்கிவிட்டார். கடமையைச் செய்ய வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காக, உலக இச்சை, பதவி ஆசை என்பதெல்லாம் எதுவுமே இன்றி பதவியை ஏற்றார் ஸல்மான் அல் ஃபாரிஸீ.

முப்பதாயிரம் குடிமக்களுக்கு ஆளுநர் என்ற பதவி அவரை அடைந்தது. ஆண்டுக்கு ஐயாயிரம் திர்ஹம் ஊதியம்; தவிர, முதல் இரு கலீஃபாக்களின் ஆட்சியின்போது இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்து, செல்வம் பெருக ஆரம்பித்தபோது, அவற்றையெல்லாம் மக்களுக்குப் பங்கிட்டு அளித்தவகையில் அவரது பங்காக கிடைத்த தொகை ஆண்டுக்கு நாலாயிரத்திலிருந்து ஆறாயிரம் திர்ஹம். இவ்வாறு கைநிறைய செல்வம் அவரை அடைந்தது.

பாரசீகத்தின் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து, தம் இள வயதில் அனைத்து சொகுசும் அனுபவித்து வாழ்ந்து, அறிவுத் தேடல் என்று சுற்றிச் சுற்றி அனைத்தையும் இழந்து, அடிமையாய்க் கிடந்து, இன்னலே வாழ்க்கையாய் வாழ்ந்தவருக்கு இறுதியில் செல்வம் அவரது வாசலில் வந்து கொட்ட, அவர் செய்த முதல் காரியம் என்ன? பெரும் விந்தை! தமக்கென கிடைத்த ஆயிரக்கணக்கான திர்ஹத்தை அப்படியே முழுக்க முழுக்க அள்ளி ஏழைகளுக்குத் தந்துவிட்டார். தனக்கென அவர் வைத்திருந்தது? ஓர் ஆடை; பயணம் செய்ய ஒரு கழுதை. ஆச்சா! உணவு என உண்டது பார்லி ரொட்டி. அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்படியானால் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்தார் என்று கேள்வி எழுமல்லவா. அது மேலும் விந்தை! கூடை பின்னி விற்று அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தியிருக்கிறார் ஆளுநர். ஈச்ச ஓலைகளை ஒரு திர்ஹத்திற்கு வாங்கி அதைப் பின்னி மூன்று திர்ஹத்திற்கு விற்பனை. அதில் ஒரு திர்ஹம் மீண்டும் ஓலை வாங்க முதலீடு. ஒரு திர்ஹம் குடும்பத்தைப் பராமரிக்க. மீதம் ஒரு திர்ஹம்? அதுவும் தானம்.

“நான் இப்படி வாழ்வதை உமர் கத்தாப் தடுத்தாலும் கேட்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு வாழ்ந்திருக்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பது நமக்கு வேண்டுமானால் நியதியாக இருக்கலாம். அவரோ அனைத்தையும் தானமளித்துவிட்டு மீதமிருந்ததில் வாழ்க்கையை கழித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை என்று இல்லாமல் அவரது பொது வாழ்க்கையும் விலக்கின்றியே இருந்திருக்கிறது.

ஒருநாள் ஸல்மான் சாலையில் நடந்து சென்றபோது ஷாம் நாட்டிலிருந்து வந்திருந்த பயணியொருவர் அவரைக் கவனித்தார். பயணியிடம் பேரீச்சம் பழம், அத்திப் பழம் நிரம்பிய சுமை இருந்தது. நெடுந்தூரம் வந்த பயணக் களைப்பில் இருந்த அந்த வழிப்போக்கர் ஸல்மானைப் பார்த்துவிட்டு ‘யாரோ ஓர் ஏழை போலிருக்கிறது’ என்று நினைத்துவிட்டார். இரக்கப்பட்டவர், அவருக்கும் உபகாரம், தனக்கும் உதவி என்று தம் சுமையைத் தூக்கும் கூலியாளாக அவரை உதவிக்கு அழைத்தார். “சரி” என்று ஏற்றுக்கொண்டு, மூட்டையைத் தூக்கி தோளில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தார் ஆளுநர்.

வழியில் அவரைச் சந்தித்த மக்கள், “அமீருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்கள்; சிலர் அவரிடமிருந்து மூட்டையை வாங்கி தாங்கள் சுமக்க ஓடிவந்தார்கள்… அதிர்ந்துவிட்டார் ஷாம் நாட்டுப் பயணி. “எனது மூட்டையைச் சுமக்கும் கூலியாள் மதாயின் நகரின் ஆளுநரா?”

“மிகவும் மன்னியுங்கள்” என்று மூட்டையை வாங்கிக் கொள்ள யத்தனிக்க அதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை ஸல்மான்.

”அதெல்லாம் முடியாது. முதலில் நாம் பேசிக் கொண்டபடி நீ சொன்ன இடத்தில்தான் சுமையை இறக்குவேன்,” என்று வேலையை முற்றிலுமாய் செய்து முடித்துவிட்டுத்தான் திரும்பினார். என்ன சொல்வது? இதையெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் படித்து பெருமூச்சு விடவேண்டியதுதான்.

ஆட்சி அதிகாரத்தில் இச்சை இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். தாம் அதைச் சுமப்பதையே வெறுத்திருக்கிறார் ஸல்மான் அல் ஃபாரிஸீ. ஒருவர் அவரிடம், “நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்பை வெறுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது,

“அதை அனுபவிப்பதில் உண்டாகும் இனிமையும்; துறப்பதில் நேரிடும் கசப்புணர்வுமே காரணம்” என்று வந்திருக்கிறது பதில். எவ்வளவு எளிய உண்மை? இன்று எந்த ஆட்சியாளர் எந்தத் தலைவர் இதற்கு விலக்கு?

இப்படிப்பட்ட ஆளுநர் ஸல்மான் அல் ஃபாரிஸீ, கலீஃபாவைச் சந்திக்க மதீனா வந்தபோது, ஒரு காரியம் செய்தார் உமர். தம் தோழர்களை அழைத்து, “என்னுடன் வாருங்கள். ஸல்மான் வந்து கொண்டிருக்கிறார். அவரைச் சென்று வரவேற்போம்” என்று மதீனா நகரின் வெளிவாயிலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். இறையச்சம், அடக்கம், எளிமை என்று மாய்ந்து மாய்ந்து வாழ்ந்தவர்களைத் தேடித்தேடி வந்துள்ளன பெருமையும், நற்பேறும்.

பதவி வேண்டாம் என்று மறுத்ததும் வெறுத்ததும் சம்பிரதாயமாக இல்லாமல் மீண்டும் மீண்டும் உமருக்குத் தெரிவித்து, ஒரு கட்டத்தில் ஹுதைஃபா இப்னுல் யமான் ரலியல்லாஹு அன்ஹுவை மதாயினுக்கு ஆளுநராக நியமித்து ஸல்மானை விடுவித்தார் உமர்.

oOo

தாரிக் இப்னு ஷிஹாப் என்பவர் ஒருமுறை ஸல்மானைச் சந்தித்தார். உரையாடும்போது அவரிடம் ஸல்மான் சொன்னார். “இரவு சூழ்ந்ததும் மக்கள் மூன்று வகையினர் ஆகிவிடுகின்றனர். முதல்வகையைச் சேர்ந்த மனிதனுக்கு இரவு என்பது சாதகமானதாக ஆகிவிடுகிறது; அவனுக்கு இரவு எதிரியல்ல. அடுத்தவகை மனிதனுக்கு இரவு சாதகமாக அமையாமல் அவனுக்கு எதிரியாகி விடுகிறது. மூன்றாம் வகை மனிதனுக்கோ இரவு அவனுக்குச் சாதகமாகவோ எதிரானதாகவோ அமைவதில்லை.”

தாரிக் இப்னு ஷிஹாபுக்குப் புரியவில்லை. “எப்படி அது?” என்று கேட்டார்.

“முதல் வகை மனிதன் இருக்கிறானே அவன் இரவு தனக்கு அளிக்கும் வாய்ப்பை சரியானவகையில் பயன்படுத்திக் கொள்கிறான். மற்றவர்கள் அக்கறையற்று கிடக்க, இவனோ ஒளுச் செய்கிறான்; இரவுத் தொழுகையை நிறைவேற்றுகிறான். எனவே இரவு இவனுக்குச் சாதகமாகிவிடுகிறது; எதிராக அமைவதில்லை.

“இரண்டாம் வகை மனிதன் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் தீய செயல்களில் இரவைக் கழிக்கிறான். இவனுக்கு இரவு சாதகமாய் அமையாமல் எதிரியாகிவிடுகிறது.

“மூன்றாம் வகை மனிதன், தூக்கத்தில் இரவைக் கழிக்கிறான். அவனுடைய இரவு அவனுக்குச் சாதகமும் இல்லை, எதிரியும் இல்லை.”

இந்த விளக்கத்தைக் கேட்ட தாரிக்குக்கு அந்த நபித் தோழரின் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டுப்போனது. மேலும் அறிய, பருக ஆசை ஏற்பட்டது. “நான் இவரைப் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன்” என்று முடிவெடுத்தார். அப்பொழுது அந்த ஊருக்கு முஸ்லிம்களின் படைப்பிரிவு ஒன்று வந்தது. அவர்களுடன் இணைந்து கொண்டார் ஸல்மான்; பின்தொடர்ந்தார் தாரிக். ஓர் இடத்தில் முகாமிட்டார்கள் அவர்கள்.

இரவின் ஒரு பகுதி கழிந்திருக்கும். எழுந்து தொழ தயாரானார் தாரிக். ஸல்மானோ உறங்கிக் கொண்டிருந்தார். ‘என்னைவிட மிகவும் மேன்மை வாய்ந்த நபியவர்களின் தோழரே உறங்குகிறாரே’ என்று தாமும் உறங்கிவிட்டார் தாரிக். இரவின் மற்றொரு பகுதி கழிந்தது. மீண்டும் எழுந்தார் தாரிக். அப்பொழுதும் ஸல்மான் உறங்குவதைக் கண்டார். தானும் உறங்கிவிட்டார். இப்படியே இரவின் பெரும் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தார் ஸல்மான். ஆனால், தூக்கத்தில் புரண்டுபடுக்கும் பொழுதெல்லாம், “ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ் வ லா இலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்” என்று அவர் முணுமுணுப்பதைக் கேட்டார் தாரிக். இறுதியாக இரவின் கடைசிப் பகுதியில் எழுந்த ஸல்மான், ஒளு செய்து நான்கு ரக்அத்துகள் தொழுவதைக் கண்டார் தாரிக். அதிகாலை ஃபஜ்ருத் தொழுகை முடிந்ததும் இதை ஸல்மானிடம் விசாரித்தார்.

“அபூஅப்துல்லாஹ்வே! தொழுவதற்கு இரவில் பலமுறை கண்விழித்தேன். ஆனால் அப்பொழுதெல்லாம் தாங்கள் உறங்கிக் கொண்டிருந்தீர்களே!”

“என் சகோதரன் மகனே! அப்பொழுது நான் ஏதும் முணுமுணுப்பதைக் கேட்டாயோ?”

”ஆம்” என்று தாம் செவியுற்றதைச் சொன்னார் தாரிக்.

“அதுவும் தொழுகையே” என்றவர் மேலும் சொன்னார். “கடமையாக்கப்பட்டுள்ள ஐவேளைத் தொழுகைகள் அவற்றுக்கு இடையே நிகழும் பிழைகளுக்குப் பரிகாரமாய் அமைந்து விடுகின்றன – கொலைக் குற்றத்தைத் தவிர. அதிகப்படியான வழிபாட்டைப் பொருத்தவரை ஒரு நடுநிலைமையை மேற்கொண்டால் அது நீடித்திருக்கும்; நிலைபெறும்.” சுருக்கமான இந்த பதிலில் மிகவும் ஆழமான கருத்து அமைந்துள்ளது.

உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாய் இருந்த காலகட்டம். அனைவருக்கும் வரும் கடைசித் தருணம் ஸல்மான் அல் ஃபாரிஸீயை வந்து சேர்ந்தது. மரணப் படுக்கையில் இருந்தவரைச் சந்திக்க ஸஅத் இப்னு அபீவக்காஸும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும் வந்தனர். இத்தகு இறுதித் தருணங்களை நெருங்கிய சில தோழர்களின் நிகழ்வுகள் நினைவிருக்கிறதா?

அழுதார் ஸல்மான்!

“அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” விசாரித்தார்கள்.

“மரண பயத்தினாலோ, உலக இச்சையினாலோ நான் அழவில்லை. ‘இவ்வுலகில் உங்கள் ஒவ்வொருவருக்கான உடைமைகள் பயணியைப் போல் அமையட்டும்’ என்று நபியவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அளித்த அந்த உடன்படிக்கையை நாம் நிறைவேற்ற இயலாமற் போனதை நினைத்து அழுகின்றேன்.”

சுற்றுமுற்றும் பார்த்தார்கள் ஸஅதும் அப்துல்லாஹ்வும். உணவருந்த ஒரு பாத்திரம், நீரருந்த, கழுவ ஒரு பாத்திரம். இவைதான் அங்கிருந்தன. ஒரு பயணிக்கு இதுவே மிக அதிகம் என்று நினைத்து அழுது கொண்டிருந்தார் ஸல்மான். நம்மைச் சுற்றி ஒருமுறை பார்த்தால் எத்தனை சொகுசுகள்; தன்னிறைவுக்கும் அதிகமான வசதிகள். அடங்குகிறதா மனது? அழவில்லை என்றாலும் போகட்டும்; மற்றவர்களையும் பார்த்து ஏங்கி ஏங்கியல்லவா மாய்கிறது!

“எங்களுக்கு அறிவுரை பகருங்கள்” என்று வேண்டினார் ஸஅத்.

“ஸஅதே! பங்கிட்டு அளிப்பதிலும் மக்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.” மீண்டும் சுருக்கமான, ஆழமான பதில்.

அவரது இறுதி நாள் வந்தது. தம் மனைவியை அழைத்தார் ஸல்மான். அவர் படுத்திருந்த அறையில் நான்கு கதவுகள் இருந்தன. மனைவியிடம், “அனைத்துக் கதவுகளையும் திறந்து வை. நான் இன்று சில விருந்தினர்களை எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்த வாசல் வழியாய் நுழைவார்கள் என்று தெரியவில்லை.”

அவரது அறைக் கதவுகளை அகலத் திறந்து வைத்தார் மனைவி. அடுத்து, தாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த நறுமண கஸ்தூரியை எடுத்து வரச்சொன்னார். ”இதைத் தண்ணீரில் கலந்து எனது படுக்கையைச் சுற்றித் தடவி வை.”

செய்தார் மனைவி. சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது உறங்குவதைப் போல் கிடந்தார் ஸல்மான் அல் பாரிஸீ. தளை உடைத்து பாரசீகத்தில் துவங்கிய அவரது வாழ்க்கை முற்றுப் பெற்றிருந்தது.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

சத்தியமார்க்கம்.காம்-ல் 29 ஏப்ரல் 2012 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment