44. அபூலுபாபா (أَبو لُبَابة)
ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹாவின் வீடு அது. அங்குதான் அன்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கியிருந்தார்கள். சிரிப்பொலி கேட்ட அன்னை உம்மு ஸலமா ஆச்சரியத்துடன் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க, “மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது,” என்றார்கள் நபியவர்கள்.
அதைக்கேட்ட அன்னை உம்மு ஸலமாவுக்கு ஏகப்பட்ட வியப்பு!, மகிழ்வு!. “நான் சென்று தெரிவிக்கட்டுமா?”
“நீ விரும்பினால், அப்படியே செய்.”
தம் வீட்டு வாயிற்படிக்கு விரைந்தார் அன்னை. செய்தியை அறிவித்தார். அதிகாலைத் தொழுகைக்காக விழித்துவிட்டிருந்த மதீனத்து மக்கள், இந்தச் செய்தியைக் கேட்டதும், பள்ளிவாசல் நோக்கி ஓடினார்கள். பலருக்கும் அதைக்கேட்டு மகிழ்ச்சி!.
அந்த அதிகாலை வந்து இறங்கிய இறை வசனம்,
“வேறு சிலர், தங்கள் நல்ல செயல்களைத் தீய செயல்களோடு (அறியாமல்) கலந்துவிட்டனர். அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பவன்; கருணையாளன்“
இந்த வசனத்தையும் அதைச் சார்ந்த நபியவர்களின் அறிவிப்பையும் கேட்டு அனைவரிடமும் ஏன் இந்தப் பரபரப்பு?
oOo
பழைய சங்கதிகள் சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளதால், முதலில் இந்தத் தோழரின் சிறு அறிமுகத்தை முதலில் முடித்துக் கொள்வோம்.
இந்த உடன்படிக்கை சார்ந்த நிகழ்வுகளும் அதன் முக்கியத்துவத்துவமும் முன்னரே நமக்கு நன்கு தெரியும். ஆகவே, அகபா என்றதுமே அந்த வார்த்தையை அதன் அனைத்துச் சிறப்புகளுடன் நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முக்கியமானவர்களுள் ஒருவர் அபூலுபாபா பின் அப்துல் முன்திர், ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் முந்திரின் மகன்களான ரிஃபாஆ, முபஷ்ஷிர், புஷைர் ஆகியோருள் புஷைர்தாம் பேறுபெயரால் பிரபலமான அபூலுபாபா என்பது இமாம் இப்னு இஸ்ஹாக் மற்றும் அபுல் கல்பீ ஆகியோரின் வரலாற்றுக் குறிப்பு.
இஸ்லாத்தை ஏற்ற தருணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிப் போனார் அபூலுபாபா. மதீனாவில் இருந்த தோழர்களுக்கு அவர்களது வாழ்க்கையின் ஆதாரத்திற்கு விவசாயம், தொழில் என்று பலதரப்பட்ட அலுவல்கள். அபூலுபாபாவுக்கு வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார்.
மூன்று யூத கோத்திரத்தினர் மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள் என்று படித்தோமில்லையா? அதில் ஒன்றான பனூ குறைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகேதான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் கேந்திரம் அமைந்திருந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் அவ்ஸ் கோத்திரத்தினருக்கு பனூ குரைளாவுடன் நெருங்கிய நட்பும் நெருக்கமும் இருந்து வந்தன. அபூலுபாபா அவ்ஸ் கோத்திரம் என்பதாலும், பனூ குரைளா மக்களுக்கு மத்தியிலேயே அவரது வீடும் தொழிலும் அமைந்திருந்ததாலும் பனூ குரைளா யூதர்களுடன் அவருக்கு நல்ல நேசம், சகவாசம். அது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டுத் தொடர்ந்து கொண்டு இருந்தது.
பத்ருப் போருக்கு முஸ்லிம்கள் கிளம்பிச் சென்றபோது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை நபியவர்கள் அளித்தார்கள் என்று அறிந்தோம். அபூலுபாபா அப்பொழுது பத்ருப் படையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் நபியவர்கள், அபூலுபாபாவை அழைத்து அவரிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அந்த அளவிற்கு அவர் மீதும் அவரது தகுதியின்மீதும் நபியவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
உரிய காரணங்களுடனோ, இதர பணிகளினாலோ பத்ருப் போரில் நேரடியாகக் களத்தில் பங்கு பெறாமல் பிற அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்ட தோழர்களும் பத்ருத் தோழர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தத் தோழர்களை அப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள். பத்ரு வெற்றிக்குப் பின்னர் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் போர் வீரர்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட்டதோ அதே விகிதாசாரத்தில் அபூலுபாபாவுக்கும் அளிக்கப்பட்டது.
இத்துடன் அபூலுபாபாவின் அறிமுகத்தை முடித்துக்கொள்வோம். இப்பொழுது நாம் முன்னோக்கிச் சென்று அகழியைத் தாண்ட வேண்டியிருக்கிறது.
oOo
ஒருநாள் நண்பகல் நேரம். இறை வசனம் சுமந்து வரும் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களிடம் வந்து இறைச் செய்தி ஒன்றைச் சொன்னார். “முஹம்மது! அல்லாஹ் உம்மைக் குரைளாவை நோக்கி அணிவகுத்துச் செல்லக் கட்டளையிட்டுள்ளான். நான் மற்ற மலக்குகளுடன் அவர்களின் இதயத்தை உலுக்க இப்பொழுது அங்குச் செல்கிறேன்.”
உடனே நபியவர்களின் உத்தரவின்படி மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டது. “அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் ஒவ்வொருவரும் குரைளாவில் இன்று அஸர் தொழட்டும்.”
அதாவது, ‘உடனே குரைளா நோக்கி அணிவகுத்துச் செல்லுங்கள். அஸ்ருத் தொழுகைக்காகக் கூடத் தாமதிக்க வேண்டாம்’ என்பது செய்தியின் கரு. அறிவிப்பை அறிந்த நொடியிலேயே கடகடவென்று ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கிளம்பியது முஸ்லிம்களின் படை. இதில் சொல்லி மாளாத ஆச்சரியம் ஒன்று அடங்கியிருந்தது!.
அன்று காலைதான், பெரியதொரு படையெடுப்பை முடித்துக்கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு, தம் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் முஸ்லிம்கள். தத்தமது ஆயுதங்களைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, “உஸ்…“ என்று அமர்ந்து இளைப்பாற ஆரம்பித்திருப்பார்கள்; அதற்குள் இப்படியோர் அறிவிப்பு வீதிகளில் ஒலித்தது. அதைக் கேட்ட ஒவ்வொருவரையும் பார்க்க வேண்டுமே – களைப்பு, அலுப்பு, அசதி அனைத்தையும் வியர்வையுடன் துடைத்து உதறிவிட்டு, இறக்கி வைத்ததைச் சுமந்துகொண்டு, குரைளா குடியிருப்புகளை நோக்கி விரைந்தார்கள் அனைவரும்.
ஒரு மாதம் எங்குச் சென்றிருந்தார்கள்? திரும்பி வந்த கையுடன் இப்பொழுது அவசரமாய் விரைகிறார்களே எதற்கு? நாற்பத்தோரு அத்தியாயம் பின்னோக்கித் திரும்பிப்பார்த்தால் நுஐம் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹுவின் அத்தியாயம் தென்படும். அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
“இணக்கமாய் வாழலாம் வாருங்கள்” என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த பனூ கைனுக்கா (بنو قينقاع), பனூ நதீர் (بنو النظير), பனூ குரைளா (بنو قريظة) ஆகிய யூத கோத்திரங்களுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். யூதர்களும் கையெழுத்திட்டார்கள். ஆனால் எக்காலத்திலும் அவர்களுக்கு உடன்படிக்கை என்பது ஏட்டுச் சுரைக்காய். தவிர அவர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த இறைத் தூதர் யூத குலத்தில் தோன்றாமல் குரைஷிக் குலத்தவர் என்றாகிப் போனதை அவர்களால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எனவே மெதுமெதுவாக உடன்படிக்கையை மீற ஆரம்பித்தார்கள்.
முதற்கட்டமாக பனூ கைனுகா யூதர்களுள் ஒருவன் முஸ்லிம் பெண்மணி ஒருவரின் மானத்துடன் அயோக்கியத்தனமாய் விளையாட, சடுதியில் பெரும் பிரச்சினையொன்று உருவாகிவிட்டது. இருதரப்பிலும் உயிரிழப்பு. அத்துடன் அந்தக் கோத்திரத்தினர் அனைவரும் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பனூ நதீர் … முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் பற்றி முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கவிதைகள் புனைவது; மக்காவிற்குச் சென்று முஸ்லிம்களின் விரோதிகளாய்த் திகழ்ந்த குரைஷிகளுக்குத் தூபமிடுவது என்று அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் முஹம்மது நபியவர்களின் தலைமேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லவே துணிந்து விட்டனர். பனூ நதீர் விஷயத்தில் கடைப்பிடித்த பொறுமையின் எல்லை அத்துடன் முடிவடைந்து, முஸ்லிம்கள் போர் தொடுக்கத் தயாரானாதும் தங்களது கோட்டை-கொத்தளங்களுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர் அவர்கள். கோட்டை-கொத்தளங்கள் முற்றுகையிடப்பட்டன. ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் சரணடைய, தண்டனை ஏதும் இன்றி ஊரைக் காலி செய்துகொண்டு செல்ல அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
மதீனாவிலிருந்து கிளம்பிய பனூ நதீர் கூட்டத்தில் ஒரு பகுதி சிரியா சென்றுவிட, பெரும்பகுதியினர் கைபர் சென்று குடியேறினார்கள். அங்கிருந்து கொண்டும் தொடர்ந்து தொந்தரவு, அக்கிரமம் என்று கெட்ட ஆட்டம். இறுதியில் அவர்களின் கொட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது பின்னர் நடைபெற்ற கைபர் யுத்தத்தில்தான்.
கைபருக்குப் புலம்பெயர்ந்த புதிதில் மாபெரும் போர் ஒன்றுக்கு வித்திட்டார்கள் பனூ நதீர் யூதர்கள். முஸ்லிம்களுடனான முந்தைய போர்களில் தோற்றுவிட்டு அதன் வலியால் கோபத்துடன் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்களே மக்கத்துக் குரைஷிகள் … அவர்களைச் சென்று சந்தித்தான் பனூ நதீரின் ஹுயை பின் அக்தப் (حيي بن أخطب) குரைஷிக் கோத்திரம், கத்தஃபான் கோத்திரம் என்று அதன் தலைவர்களைச் சந்தித்து அவன் சரியானபடி உசுப்பேற்ற, முஸ்லிம்களை எதிர்த்துப் பெரும் கூட்டணிப் படை ஒன்று திரண்டது. ஏறக்குறைய பத்தாயிரம் வீரர்கள்.
மதீனா நோக்கித் திரண்டுவரும் அந்தப் பெரும்படையைத் தடுத்து நிறுத்த முஸ்லிம்கள் கடைப்பிடித்த உபாயமே அகழி! முன்புறம் அகழி. பின்புறம் சுற்றி வந்து தாக்கிவிட முடியாதபடி பனூ குரைளா யூதர்களின் குடியிருப்பு. அச்சமயம் முஸ்லிம்களுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் படு சமர்த்தாய் வாழ்ந்து வந்தார்கள் அந்த யூதர்கள்.
அந்தத் தற்காப்பை உடைக்க பனூ நதீர் கூட்டத்தார் சரியானதொரு சதித் திட்டம் தீட்டினர். பின்புறமிருந்து முஸ்லிம்களின் முதுகை அவர்கள் குத்திவிட்டால் மற்றவை அனைத்தும் எளிதல்லவா? ரகசியமாக பனூ குரைளா யூதர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் தயங்கினார்கள், பயந்தார்கள் அவர்கள்.
“நாங்கள் விரும்பி நிறைவேற்ற நினைக்கும் ஒரு காரியத்திற்கு எங்களையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறீர்கள். ஆனால் முஹம்மதுக்கும் எங்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை இருப்பது உங்களுக்குத் தெரியும். அமைதியும் நிம்மதியும் மதீனாவில் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவருடன் சமாதானம் மீறக் கூடாது என்று அது கூறுகிறது. அந்த உடன்படிக்கை இன்னமும் அமலில்தான் உள்ளது. நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்ளப்போய், முஹம்மத் இந்தப் போரில் வென்று விட்டால் அவரின் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் சூழ்ச்சிக்குப் பலனாய் நாங்கள் நாடு துறக்கும்படியாகிவிடும்” என்றெல்லாம் கவலை தெரிவித்தனர்.
ஆனால் தொடர்ந்து சளைக்காமல் நடந்த பேச்சுவார்த்தையும், “முஹம்மதும் முஸ்லிம்களும் இத்துடன் தீர்த்துக்கட்டப்படப் போவது உறுதி” என்று பனூ நதீர் முன் வைத்த தர்க்கமும் எல்லாமாகச் சேர்ந்து, இறுதியில் இனம் இனத்தோடு சேர்ந்தது. ஒப்பந்தம் காற்றில் பறந்தது.
தங்களது முதுகுக்குப் பின்னால் அமைந்திருந்த பாதுகாப்பு அரணே இப்பொழுது தங்களுக்கு எதிராய்த் திரும்பிவிடப்போவதை அறிந்ததும் முஸ்லிம்களின் நிலைமை படு மோசமாகிப்போனது. முற்றுகையிட்டுள்ள எதிரிகளை நோக்கி முஸ்லிம் ஆண்களின் படை குழுமியிருக்க, வீட்டில் விட்டுவிட்டு வந்த பெண்களும் குழந்தைகளும் என்று தங்களது முழு சமூகத்திற்கே ஆபத்து வந்துவிட்டது அவர்களை ஏகத்துக்கும் திக்குமுக்காடச் செய்தது.
எந்த அளவு? இதயமே தொண்டைக் குழிக்கு வந்ததைப்போல் ஆகிவிட்டது அவர்களுக்கு.
தோழர்கள் நபியவர்களிடம் ஆன்ம பலம் வேண்டினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது இதயம் தொண்டைக் குழியை அடைக்கிறது. நாங்கள் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?” என்று அவர்கள் நபியவர்களிடம் முறையிட்டதை அபூ ஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு விவரித்துள்ளார்.
இறைவனிடம் இறைஞ்சுவதற்கு, நபியவர்கள் சொல்லித் தந்தார்கள், “அல்லாஹும்ம உஸ்துர் அவ்ராதினா வ அமின் ரவ்ஆதினா – எங்கள் மறைவிடங்களைப் போர்த்தி மூடுவாயாக! எங்களுடைய சுடர்களை அணையாமல் காத்தருள்வாயாக”!
அன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலையை அல்லாஹ்வே பின்னர் வசனம் ஒன்றில் விவரித்துள்ளான். “உங்களுக்கு மேற்புறத்திலிருந்தும் கீழ்ப்புறத்திலிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்தபோது, (உங்களுடைய) கண்கள் நிலைகுத்தி, இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைத்து, (திணறிப்போய்) அல்லாஹ்வைப் பற்றிப் பலவாறான எண்ணங்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த அந்நிகழ்வை நினைவு கூருங்கள்” குர்ஆனில் சூரா அல்-அஹ்ஸாபின் 10ஆவது வசனமாகப் பதிவாகியுள்ளது அது.
அதன் பிறகு, எதிரிப்படையில் இருந்த நுஐம் ரலியல்லாஹு அன்ஹுவின் மனத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய மாற்றம்; அதைத் தொடர்ந்து அவர் பிரயோகித்த ராஜ தந்திரம், இரவில் இறைவன் அனுப்பிவைத்த புயல், பேய்க்காற்று, இரவோடு இரவாகக் காலியான எதிரிகளின் கூடாரம் ஆகியன இதர அற்புத நிகழ்வுகள். இங்கு இவை அனைத்தையும் முன்கதைச் சுருக்கம் போல் நாம் பார்க்க நேர்ந்தது பனூ குரைளா யூதர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நயவஞ்சகத்தை நினைவுபடுத்திக் கொள்ள மட்டுமே.
oOo
ஏறக்குறைய ஒருமாத காலம் நீடித்த அகழி யுத்தம் ஒருவழியாய் முஸ்லிம்களுக்கு அற்புதமான வெற்றியை ஈட்டித்தந்து முடிவுக்கு வந்தது. ஏகப்பட்ட சோதனைகள், மன உளைச்சல், பிரச்சினைகள் அனைத்தும் இறைவனின் பேரருளுடன் ஒரு முடிவுக்கு வந்து முஸ்லிம்கள் களைத்து ஓய்ந்து வீடு திரும்பிய சற்று நேரத்திலேயே அவகாசம் அளிக்காமல் இப்படியொரு கட்டளை வந்து சேர்ந்தது.
“பனூ குரைளாவை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்கள்!”
முஸ்லிம்களின் முதுகில் குத்துவதற்கு எதிரிகளுடன் ஒன்றுசேர்ந்த பனூ குரைளா யூதர்கள், தங்களது திட்டம் படுதோல்வியடைந்து முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதை உணர்ந்ததும் தங்களது நயவஞ்சகத்திற்கான எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து யூகம் செய்திருப்பர். ஆனால் அந்த எதிர்வினை நடைமுறைக்குவர சற்றுக் காலம் எடுக்கும் என்பதே அவர்களின் எண்ணம். ஏனெனில், ஒருமாத காலக் கடுமையான போர்க் களைப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் தங்களைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், தகுந்த முன்னேற்பாடுகள் செய்துகொண்டு இங்கு வருவார்கள் என்பது குரைளாவினரின் யதார்த்தமான சிந்தனை. அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் திட்டமிடுவதற்கும் முன்னேற்பாடுகளுக்கும் வேறு யாரையாவது கூட்டணி சேர்த்துக்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதற்குப் போதிய அவகாசம் இருக்கிறது என்று குரைளாவினர் நம்பிக்கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த யூதர்களுக்குச் சிறிதுகூட அவகாசம் அளிக்காமல் விரைந்து சென்று அவர்களது கோட்டைக் கதவுகளை உலுக்கி, திகைக்க வைக்க வேண்டும் என்பதே நபியவர்களின் நோக்கமாயிருந்தது. அன்று மாலையே பனூ குரைளா யூதர்களின் குடியிருப்பைச் சுற்றி வளைத்தது முஸ்லிம்களின் படை.
ஆன்ம வழிபாடோ, போர்க்களமோ; இரவோ, பகலோ எந்நேரமும் எந்நொடியும் எதற்கும் தயாராய் இருந்த அந்தத் தோழர்களின் அர்ப்பணிப்பும் சுறுசுறுப்பும் இருக்கிறதே … அது ஒரு பேராச்சரியம். சோம்பலில் உழன்று கொண்டிருக்கும் நமக்கு அதில் நிறைய பாடங்கள் பொதிந்துள்ளன.
திகைத்துப்போன குரைளாவினர் அந்த நேரத்திலும் நிலைமையின் தீவிரத்தை உணராமல் திமிர்த்தனமாய் நடந்துகொண்டது வியப்பான செய்தி அலீ இப்னு அபீதாலீப் ரலியல்லாஹு அன்ஹு தம் அணியிலிருந்த வீரர்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த யூதர்கள் கெட்ட காரியம் ஒன்று செய்தனர். இதற்குமுன் என்ன நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் என்று இதை மட்டும் குறைப்பட்டுக்கொள்ள? ஆனால் இது கேவலமானது. முஸ்லிம்களை உசுப்பேற்ற, கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தைகள் பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் யாரை? அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியையும் நபியவர்களின் மனைவியர்களையும். ஏகத்துக்கு இழித்துப் பேசி அர்ச்சனை. அது எந்தளவிற்கு மோசமாக இருந்ததென்றால், நபியவர்கள் களத்திற்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட அலீ ரலியல்லாஹு அன்ஹு விரைந்து அவர்களிடம் சென்று, “யூதர்களின் குடியிருப்பின் அருகில் நெருங்க வேண்டாம்” என்று தடுக்கும்படி இருந்தது.
நபியவர்களுக்கு நிலைமை புரிந்துபோனது. “என்னைக் கண்டதும், அவர்கள் அத்தகு பேச்சை நிறுத்திவிடுவார்கள்” என்று திட்டவட்டமாகக் கூறினார்கள் நபியவர்கள்.
யூதர்களின் கோட்டையை நெருங்கிய நபியவர்கள், “ஏ குரங்கின் சகோதரர்களே! அல்லாஹ் உங்களுக்கு அவமானத்தை அளித்து, உங்கள்மீது வினைப்பயனையும் இறக்கி வைத்துவிட்டான்” என்றார்கள்.
“ஓ காஸிமின் தந்தையே! நீர் ஒரு முட்டாள்தனமான மனிதர் இல்லை,” என்று பதில் வந்தது. அதாவது தாங்கள் அப்படியொன்றும் முஸ்லிம்களிடம் மாட்டிக்கொள்ளவில்லை என்ற அகங்காரமான பதில்.
“முற்றுகை இடுங்கள்” என்று கட்டளையிடப்பட, பனூ குரைளா சுற்றி வளைத்து முற்றுகை இடப்பட்டது. தம் எதிரிகளால் முற்றுகை இடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்கள் இப்பொழுது அந்த எதிரிகளுக்குத் துணைபுரிந்தவர்களை முற்றுகையிட்டு நின்றார்கள். வித்தியாசம் என்னவெனில் இங்கு எதிரிகள் பொறியில் அகப்பட்ட எலியைப்போல் வசமாக மாட்டிக் கிடந்தனர் என்பதுதான்.
ஆரம்பத்தில் இந்த முற்றுகையை வெகு இலேசாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தனர் யூதர்கள். ஒருநாள் இரண்டு ஆனது. இரண்டு நான்கு ஆனது. வாரமானது. இப்படியே இருபத்து ஐந்து இரவுகள் கழிந்தன. வலிக்க ஆரம்பித்தது. முஸ்லிம்களின் பொறுமை யூதர்களுக்கு வலிக்க ஆரம்பித்தது. இறுதியில் அவர்களது கோட்டைகளும் கொத்தளங்களும் மட்டும் உறுதியுடன் இருக்க, உள்ளத்தளவில் உடைந்து நொறுங்கிப் போனார்கள் பனூ குரைளா யூதர்கள். வேறு வழியில்லை; என்பது தெளிவாகிப் போனது. அறிவு கெட்டத்தனமாக துஷ்டர்களுக்குத் துணைபுரிந்து, நயவஞ்சகத்தில் இறங்கப்போக, அது தங்களை அழிவின் விளிம்பிற்கு முழுமுற்றிலுமாய்க் கொண்டுவந்து நிறுத்தியிருப்பது இப்பொழுது தெள்ளத்தெளிவாய்ப் புரிந்துபோனது அவர்களுக்கு.
என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். இதற்குமுன் பனூ நதீர் கோத்திரத்தினருக்கு ஏற்பட்ட நிலைமையும் அவர்களுக்கு நபியவர்கள் அளித்த தீர்வும் அவர்களுக்கு நினைவில் வந்தன. பனூ நதீர் தங்களின் பெண்கள், பிள்ளைகள், ஒட்டகம் சுமக்க இயன்ற அளவிற்கான பொருள்கள் ஆகியனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு ஊரைக் காலி செய்து கொண்டு போகவேண்டும் என்பது நபியவர்கள் அவர்களுக்கு அளித்த தீர்ப்பு. அதேபோன்ற சலுகை அளிக்கப்பட்டால்கூட போதும்; கண் காணாத இடத்திற்குச் சென்று விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டிருந்தார்கள் பனூ குறைளாவினர்.
தூது சொல்லி அனுப்ப, அந்தக் கோரிக்கை மிகத் தெளிவாய் மறுக்கப்பட்டது. ஏனெனில் குற்றத்தின் வித்தியாசம் அப்படி. அல்லாஹ்வின் தூதரைக் கொல்லத் துணிந்த பனூ நதீருக்கும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து, முதுகில் குத்தி, முஸ்லிம்களை அடியோடு வேரறுத்துவிட வாய்பளித்த பனூ குறைளாவின் துரோகத்திற்கும் அடிப்படையில் மிகப்பெரும் வித்தியாசம் இருந்தது.
‘அப்படியானால் எங்கள் பெண்டுகள், பிள்ளைகளுடன் மட்டும் ஊரைக் காலி செய்துவிடுகிறோம். எங்களது பொருள், சொத்து, ஆயுதங்கள் அனைத்தையும் இங்கேயே விட்டுவிடுகிறோம். அனுமதியுங்கள்.’
அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. “உங்களுக்கு உள்ளதெல்லாம் ஒரேயொரு வாய்ப்பு. நிபந்தனையற்ற சரண்! அல்லாஹ்வின் தூதர் உங்களக்குத் தீர்ப்பளிப்பார்.”
விபரீத புத்தி முழு நட்டத்திற்கு இட்டுச் சென்றுவிட்டது அறிந்து அவர்களுக்கு முழு அளவிலான கவலை வந்து தொற்றியது. வேறு எந்தவித வாய்ப்போ, வழியோ இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை.
அந்த இக்கட்டான தருணத்தில்தான் அவர்களது நினைவிற்கு வந்தார் ஒருவர். அபூலுபாபா.
oOo
இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் அவ்ஸ் கோத்திரத்தினர் பனூ குறைளாவின் கூட்டாளிகள் என்பதையும் அபூலுபாபா அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதையும் பார்த்தோமில்லையா? பின்னர் மதீனாவில் இஸ்லாம் பலமாக வேரூன்றி அவ்ஸ் கோத்திரத்தினர் முஸ்லிம்களாகிவிட்டாலும், பனூ குரைளா யூதர்கள் அவ்ஸ் கோத்திரத்து முஸ்லிம்கள் பலருடன் தொடர்ந்து நல்ல நட்பில் இருந்துவந்தனர். அவர்களுள் முக்கியமானவர் அபூலுபாபா. அவரது இல்லமும் தொழிலும் பனூ குரைளா குடியிருப்பினர் மத்தியில் இருந்து வந்ததால், அவர்களுக்கு அவரிடம் அதிகப்படியான நெருக்கம் இருந்தது. எனவே, அவரை வரவழைத்துப் பேசினால் தங்களுக்கு நல்ல உபாயம் சொல்வார்; நபியவர்களிடம் இணக்கம் ஏற்படுத்தித்தர ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தால் வழிவகை சொல்வார் என்று அவர்களுக்குத் தோன்றியது.
“அபூலுபாபாவிடம் கலந்துரையாட வேண்டும், தயவுசெய்து அவரை எங்களிடம் வரச்சொல்லுங்கள்” என்று கோரிக்கை வந்தது.
அதைக்கேட்டு, “நபியவர்கள் சொன்னால் ஒழிய அவர்களிடமெல்லாம் நான் போக முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் அபூலுபாபா. அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.
அபூலுபாபா, பனூ குரைளா மக்களை அடைந்ததுதான் தாமதம், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கூடிச்சேர்ந்து ‘குய்யோ முறையோ’வென்று என்று அழுகை, ஒப்பாரி! அதுவும் உரத்த குரலில். அழுது அரற்ற வேண்டிய நிலையில்தான் அவர்கள் இருந்தார்கள் என்றாலும், அபூலுபாபவின் இரக்கத்தை எப்படியும் ஈட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியிருந்தார்கள் அந்த யூதர்களின் தலைவர்கள். அதையெல்லாம் கண்டு, ‘இந்த இழிநிலைக்கு இவர்கள் தங்களை உட்படுத்தியிருக்க வேண்டாமே’ என்று இலேசான கருணை அபூலுபாபாவுக்குள் எட்டிப்பார்த்தது.
அவரைச் சூழ்ந்துகொண்டார்கள் புனூ குரைளாவின் ஆண்கள். “நீ என்ன நினைக்கிறாய் அபூலுபாபா? நாங்கள் எடுத்துவைத்த அத்தனை கோரிக்கைகளையும் முஹம்மது நிராகரித்துவிட்டார். நாங்கள் அவரது தீர்ப்பிற்கு அடிபணிவது மட்டுமே ஒரே வாய்ப்பு என்று சொல்லப்பட்டுள்ளது.”
“ஆம்! நிபந்தனையின்றி நீங்கள் சரணடைவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை” என்று பதில் அளித்தார் அபூலுபாபா. பிறகு தம் கழுத்தை வெட்டுவதுபோல் கையால் சாடை செய்தார். அதாவது சரணடைந்ததும் அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனை பற்றியக் குறிப்பு.
நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தச் செய்கையின் தீவிரத்தை அடுத்த கணமே உணர்ந்துவிட்டார் அபூலுபாபா. ‘இது ராசத்துரோகம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இழைத்த நம்பிக்கைத் துரோகம்!’ என்று வெலவெலத்துப் போயின அவரது கைகளும் கால்களும். வெட்கமும் குற்ற உணர்ச்சியும் அவரைப் பிடுங்கித் தின்றன. பனூ குரைளா மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கிளம்பியவர், களத்திற்குத் திரும்பவில்லை; நபியவர்களைச் சந்திக்கவில்லை. வேகவேகமாய் மதீனாவின் பள்ளிவாசலுக்கு விரைந்தார். அங்குள்ள ஒரு கம்பத்தில் தம்மைத் தாமே கட்டிப்போட்டுக் கொண்டார்; சத்தியம் செய்துவிட்டார்.
“நான் செய்த காரியத்திற்கு அல்லாஹ் என்னை மன்னிக்கும்வரை நான் என்னை இந்தத் தண்டனையிலிருந்து விடுவித்துக்கொள்ள மாட்டேன். பனூ குரைளா விஷயத்தில் இனி நான் தரகு வேலையில் ஈடுபடவே மாட்டேன். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் இழைத்த பனூ குரைளாவின் குடியிருப்புப் பகுதிக்கு நான் இனி செல்லவே மாட்டேன்.”
நீண்ட நேரமாகியும் சென்றவர் வரவில்லையே என்பதை உணர்ந்தார்கள் நபியவர்கள். ஆச்சரியத்துடன் தம் தோழர்களிடம், “இன்னுமா அபூலுபாபா அவர்களுடன் ஆலோசனையை முடிக்கவில்லை?” விஷயம் அறியவந்திருந்தவர்கள், நபியவர்களிடம் நடந்ததை விவரித்தார்கள்
“அவர் என்னிடம் நேரடியாக வந்திருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கு இறைஞ்சியிருப்பேனே. இப்பொழுது இதை அவரே தமக்கு இழைத்துக் கொண்டதால் அல்லாஹ் மன்னிக்கும்வரை என்னால் அவரை விடுவிக்க இயலாது” என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள்.
தவறு இயல்பாய் நடைபெற்றுவிட்ட ஒன்று. யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கலாம்; நபியவர்களிடம் தனிமையில் சந்தித்து அழுதிருக்கலாம். ஆனால் எந்தளவு அவர் கூனிக்குறுகிப் போயிருந்தால் இத்தகு கடுமையான முடிவை எடுத்திருப்பார்?
கம்பத்தில் தம்மைக் கட்டிக்கொண்ட அபூலுபாபா உண்பதையும் பருகுவதையும்கூட நிறுத்திக் கொண்டார். ஒவ்வொரு தொழுகை நேரத்தின்போதும் அவரின் மனைவி வந்து அவரது கட்டுகளை அவிழ்த்துவிடுவார். அவ்வேளையில் தம் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபின் உளுச் செய்துகொண்டு மக்களுடன் இணைந்து தொழுகையை நிறைவேற்றுவார் அபூலுபாபா. தொழுகை முடிந்ததும் மீண்டும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுவார் அவர் மனைவி. இவ்விதமாகவே ஆறு இரவுகள் கழிந்தன. அதன் பிறகுதான் அதிகாலை நேரம் இறை வசனம் வந்து இறங்கியது.
“வேறு சிலர், தங்கள் நல்ல செயல்களைத் தீய செயல்களோடு (அறியாமல்) கலந்துவிட்டனர். அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பவன்; கருணையாளன்“
என்ற அந்த இறை வாசகம் சூரத்துத் தவ்பாவின் 102ஆவது வசனமாக இடம்பெற்றுவிட்டது.
அந்த வசனம் அருளப்பெற்றதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அதைக் கண்ட அன்னை உம்மு ஸலமா ஆச்சரியத்துடன் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க, நபியவர்கள், “அபூலுபாபாவுக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.”….
அதைக்கேட்ட அன்னை வியப்பும் மகிழ்வுமாய் நபியவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, தம் வீட்டு வாயிற்படிக்கு விரைந்தார். நபியவர்களின் மனைவியர் இல்லங்கள் பள்ளிவாசலின் அருகிலேயே அமைந்திருந்த சிறு குடில்கள்.
”ஓ அபூலுபாபா. நற்செய்தி கேளுங்கள். அல்லாஹ் உம்முடைய பாவத்தை மன்னித்து விட்டான்” என்று உரத்து அறிவித்தார்கள் அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.
அதிகாலைத் தொழுகைக்காக விழித்துவிட்டிருந்த மதீனத்து மக்கள் காதிலும் இந்தச் செய்தி விழுந்தது. அனைவரும் பள்ளிவாசல் நோக்கி ஓடினர். தம்மை விடுவிக்க வந்தவர்களைத் தடுத்தார் அபூலுபாபா.
“நபியவர்கள் வந்து என்னை விடுவிக்கும்வரை என் கைகள் கட்டப்பட்டே இருக்கட்டும்.”
பின்னர் தொழுகைக்குப் பள்ளிவாசல் வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் கைகளால் கட்டை அவிழ்க்க, விடுதலையானார் அபூலுபாபா.
சரணடைந்த பனூ குரைளாவின் ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் அந்தத் தீர்ப்பு தொடர்பான இதர முக்கியமான நிகழ்வுகளும் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹுவின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த வரலாறு.
oOo
நபித்தோழர்கள் என்ற பெயரில் வரலாற்றில் இடம்பெற்று, இறை உவப்பைப் பெற்றுவிட்ட அந்த நாயகர்கள் தாங்கள் வாழ்ந்த காலங்களில் தங்களை மிக மிகச் சாதாரண மனிதர்களாகவே கருதியிருந்தார்கள். யதார்த்தமான மனித இயல்புகள் அனைத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது அவர்களது வாழ்க்கை. அல்லாஹ்வின் அடிமையாகவும் அவன் தூதருக்குக் கட்டுப்பட்டு வழிநடப்பவர்களாகத் தம்மை மாற்றிக் கொள்வதாகவும்தான் வாழ்ந்திருக்கிறார்களே தவிர, பிற்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவில்லை அவர்கள். பிற்காலம் என்று அவர்கள் மனத்தில் பதிந்திருந்ததெல்லாம் அநிச்சயமான இவ்வுலக வாழ்வைத் தாண்டிய நிச்சயமான மறுமை மட்டுமே. அதுதான் அவர்களது லட்சியப் புள்ளியாக இருந்திருக்கிறது.
அதனால், அல்லாஹ்வுக்காக உயிரையே வாளில் ஏந்தி ஓடிவருபவர்கள் எங்காவது இப்படி தட்டுக்கெட்டு சற்றுத் தடுமாறிவிட நேர்ந்தால், அதை நினைத்து நினைத்து மாய்ந்து மருகும் அவர்களின் மெய்-மன வருத்தம் அவர்களது உன்னதத்தை வரலாற்றில் நிலைநிறுத்தி விடுகிறது. தடுமாற்றம் ஏகத்துக்கும் நிறைந்த நம் வாழ்க்கைக்கு இதில் குறிப்புகள் பல உள்ளன.
மக்கா வெற்றியின்போது தம் குலத்தின் சார்பாய் கொடியேந்திச் சென்றார் அபூலுபாபா. பின்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் மறைவிற்குப் பிறகு இவ்வுலக வாழ்வை நீத்தார் அவர்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்