தோழர்கள் – 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி)

by நூருத்தீன்
43. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (عبد الله بن أم مكتوم)

பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். அதற்குமுன் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால், முஸ்லிம்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாதவாறு அவர்களது கவனம் சிதறிப் போயிருந்தது.

இப்பொழுது அதெல்லாம் நீங்கி, யஸ்தகிர்த் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து முழு மும்முரத்துடன் முஸ்லிம் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள். மளமளவென்று போருக்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தன. தன் படையை விரிவுபடுத்த, கட்டாய ஆளெடுப்புக்குக் கட்டைளையிட்டான் யஸ்தகிர்த். ஏகப்பட்ட உஷ்ணம் பரவியிருந்தது பாரசீகர்கள் மத்தியில்.

முஸ்லிம்களை எதிர்த்துப் பிரம்மாண்டமாய் உருவாகும் பாரசீகப் படைகளைப் பற்றிய இந்தச் செய்தி மதீனாவில் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை அடைந்தது. அந்தச் சமயத்தில் பாரசீகத்தினுள்ளே போரிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் படை அளவு மிகக் குறைவு. கவலை அடைந்த உமர், அங்கிருந்த அல்-முதன்னா இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹுவுக்கு விரைந்து தகவல் அனுப்பினார்.

‘அங்கு சுற்று வட்டாரத்திலுள்ள முஸ்லிம் கோத்திரங்களிலிருந்து போரிடும் அளவிற்கு உடல்வாகும் வலிமையும் உள்ள ஒவ்வொரு ஆணும் கட்டாயமாகப் படையில் இணைய வேண்டும்’ என்று கட்டளையிடப்பட்டது.

அதைப் போலவே அனைத்து ஆளுநர்களுக்கும் தகவல் அனுப்பினார். ‘ஆயுதம், குதிரை, உடல் வலிமை, புத்திக் கூர்மை என்று ஏதேனும் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களெல்லாம் உடனே இராக்கிற்குச் செல்ல வேண்டும்’ என்றது அரச கட்டளை. இந்த அறிவிப்பும் உத்தரவும் கேட்டுச் சாரிசாரியாய்க் கிளம்பி வந்து படையில் இணைய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.

“நானும் செல்கிறேன். என்னையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று வந்து நின்றார் ஒருவர்.

படையில் அணிவகுத்துச் செல்ல அவரிடம் என்ன இருந்ததோ இல்லையோ, ஆனால் மிகப் பெரும் குறையொன்று இருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்வதிலிருந்து நிச்சயமாய் விலக்கு அளிக்கும் உடல்குறை. பிறிவியிலிருந்தே கண் பார்வை இல்லாதவர் அவர். அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.

‘உங்களால் போரில் என்ன பங்கு ஆற்ற முடியும்?’

தமக்கென ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் இப்னு உம்மி மக்தூம். அதைத் தெரிவித்தார். படையுடன் இணைந்து போருக்குக் கிளம்பினார்.

சலுகை இருந்தும் ஏன் இந்த ஆர்வம்? திருவிழாவா இது, நானும் வருகிறேன் வேடிக்கைப் பார்க்க என்று கிளம்புவதற்கு?

எல்லாம் வசனம் – இறை வசனம். அதை நினைத்து விசனம்!

oOo

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்

عبد الله بن أم مكتوم

மக்காவின் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் ஃகைஸ் இப்னு ஸைது. அவரின் மனைவி ஆத்தீக்கா பின்த் அப்துல்லாஹ். இத்தம்பதியருக்குப் பிறந்தவரே அப்துல்லாஹ். அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் தாயார் ஃபாத்திமாவுக்கு, ஃகைஸ் இப்னு ஸைது சகோதரர். எனவே அன்னை கதீஜாவின் மாமன் மகன் என்ற நெருங்கிய உறவு நபியவர்களின் குடும்பத்துடன் அப்துல்லாஹ்வுக்கு அமைந்து போயிருந்தது.

பிறக்கும்போதே கண்பார்வை இன்றிப் பிறந்தார் அப்துல்லாஹ். அதனால் ‘கண்கள் மூடிய மகனின் தாய்’ –  உம்மு மக்தூம் – எனும் காரணப் பெயர் அவரின் தாயார் ஆத்தீக்காவுக்கு ஏற்பட்டுப் போய், அவரின் மகன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்றாகிப் போனார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் மகனைச் சீராட்டி வளர்த்தார் ஆத்திக்கா.

கண் பார்வைதான் ஒளியின்றிப் போனதே தவிர அகப் பார்வை பிரகாசமாக அமைந்துபோனது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமுக்கு. மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெற்ற ஆரம்பத் தருணம். அவர் செவியில் விழுந்த அந்த ஏகத்துவச் செய்தியின் புத்தொளி, தெள்ளத் தெளிவாய் அவரது புத்தியில் பதிந்தது. ‘எங்கே அவர், அல்லாஹ்வின் திருத்தூதர்?’ என்று தேடிப்பிடித்து வந்து இஸ்லாத்தினுள் நுழைந்து விட்டார் அவர். அச்சமயத்தில் வெகு சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அந்த முதன்மையானவர்களின் பட்டியலில் எளிதாய் அவர் பெயர் இடம்பெற்றது.

அதைப் போலவே அந்த ஆரம்பகாலத் தோழர்கள் அனுபவித்த சித்திரவதையின் பங்கும் கிடைத்தது, வஞ்சனையின்றி.

‘பார்வை இல்லாதவர்; குருட்டுத்தனமாய் ஏதோ செய்துவிட்டார் போலிருக்கிறது. போகட்டும் விடு’ என்றெல்லாம் குரைஷிகள் அவருக்குச் சலுகை வழங்கவில்லை. இழுத்து வைத்து சமநீதி வழங்கினர். தோழர்கள் மீது அவர்கள் புரிந்த அக்கிரமம்,  அடி, உதை அனைத்திலும் அவருக்கும் உரிய பங்கு வழங்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்தும் அவர் உள்ளத்தில் திடம் வளர்க்கத்தான் உதவின. வாய்மூடி, இமைமூடி அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். அல்லாஹ்வும் நபியும் அவருக்கு உயிரினும் மேலாகிப் போனார்கள். இஸ்லாம் அழுத்தந்திருத்தமாய் அவர் உள்ளத்துள் வேரூன்றிப் பதிந்தது. அந்த வேர், குர்ஆனிலும் இஸ்லாமியக் கல்வியிலும் படர்ந்து பரவி, ஞானத்தில் சிறந்தவராக வளர ஆரம்பித்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

குர்ஆன் கற்பதில் எக்கச்சக்க ஆர்வம், நபிமொழிகள் அறிவதில் அடங்காத தாகம் என்று தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் நபியவர்களிடம் பாடம் பயில்வதும், குர்ஆன் வசனங்களைக் கேட்டு அறிவதும் அவரது இயல்பாகிப் போனது.

அதே நேரத்தில், முஸ்லிமான மக்களுக்குக் கல்வி ஞானம் போதிப்பதும், அவர்களது இன்னல்களுக்கு ஆறுதல் பகர்வதும் ஒருபுறம் இருந்தாலும்,  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  தம் குல மக்களுக்கு ஏகத்துவச் செய்தியை அயராமல் எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் அக்கிரமும் அழிச்சாட்டியமும் குரைஷிகளின் தினசரி நடைமுறை ஆகியிருந்தபோதும், ‘எப்படியாவது இவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடாதா’ என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாக குரைஷி குலத் தலைவர்களைச் சந்தித்து நபியவர்கள் உரையாடுவது வழக்கம்.

ஒருநாள் –

குரைஷிக் குலத்தின் முக்கியமான தலைவர்களான உத்பா இப்னு ரபீஆ, அவன் சகோதரன் ஷைபா இப்னு ரபீஆ, அபூ ஜஹ்லு எனும் அம்ரு இப்னு ஹிஷாம், உமைய்யா இப்னு கலஃப், வலீத் இப்னு முகீராஹ் ஆகியோருடன் முக்கியமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள் நபியவர்கள். ஈவும் இரக்கமும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த உள்ளம் கொண்ட கொடியவர்கள் அவர்கள் என்பது தெரிந்திருந்தாலும் தம் பணி, இறைச் செய்தியை அவர்களுக்கு அறிவித்து மன மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதே நபியவர்களின் எண்ணம்.

அப்படி அந்தத் தலைவர்கள் சத்தியத்தை உணர்ந்துவிட்டால் அதனால் ஏற்படப் போகும் நல் விளைவுகள் அளவிட முடியாதது. ஏனெனில் அவர்களுக்குக் குரைஷிக் குலத்தில் இருந்த செல்வாக்கு அப்படி. தவிரவும் முஸ்லிம்களின்மேல் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அக்கிரமங்களின் சூத்திரதாரிகள் அவர்கள். குறைந்தபட்சம் அவர்களது இஸ்லாமிய விரோத மனப்பான்மை மாறினால்கூடப் போதும், முஸ்லிம்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.

குரைஷித் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் நபியவர்கள். மிகவும் மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது உரையாடல். அப்பொழுது அங்கு வந்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். பார்வையற்ற காரணத்தால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தை அப்பொழுது அவர் உணர்ந்திருக்கவில்லை. எப்பொழுதும் நபியவர்களை அண்மிக் கேட்பதுபோல், குர்ஆன் வசனம் புதிதாய் அருளப்பட்டிருந்தால் கேட்டுக் கொள்வோம் என்ற ஆர்வத்தில் நபியவர்களை நெருங்கினார்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்கு அறிவித்ததை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்றார்.

முக்கியமான ஒரு வேலையில் முழு கவனத்துடன், கவலையுடன் மூழ்கியிருக்கும்போது அசந்தர்ப்பமான குறுக்கீடு நிகழ்ந்தால் நமக்கு எப்படியிருக்கும்?

அதிருப்தியுடன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அந்தத் தலைவர்களிடம் தம் உரையாடலைத் தொடர்ந்தார்கள் நபியவர்கள். இது யதார்த்தமான செயல்தானே? நபியவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டதுகூட பார்வையற்ற அப்துல்லாஹ்வுக்குத் தெரியாதுதான். ஆனால் இறைவனின் வசனங்கள் புது விதி அறிவுறுத்தின. விவாதம் முடிந்த சற்று நேரத்தில் நபியவர்களுக்கு அருளப்பட்ட சூரா அபஸாவின் பதினாறு வசனங்களின் தொடக்கம், நபியவர்களை அதிகம் அறிமுகமில்லாத மூன்றாம் மனிதரைப்போல் படர்க்கையில் குறித்தது:

(முஹம்மது) முகத்தைச் சுளித்தார்; திருப்பிக் கொண்டார்-

அவரிடம் ஒரு குருடர் வந்த வேளை!

(நபியே! மறை கூறும் அறவுரையினால்) அவர் அகத்தூய்மை அடைந்துவிடக் கூடும் என்பதை நீர் அறியலாகாதா?

அன்றியும் அவர் தம் சிந்தையில் இருத்தும் அறவுரைகள் அவருக்குப் பெரும் பயன் தருவதாய் அமைந்து விடுமே!

(இறைமறை கூறும் அறவுரை) எனக்குத் தேவையில்லை’ என்(று புறக்கணிப்)பவனுக்கு,

முகமும் முன்னுரிமையும் கொடுக்கின்றீர்!

அவன் அகத்தூய்மை அடையாமற் போனால் உமக்கென்ன?

(இறைச் செய்தியைக் கேட்க) உம்மை நாடி ஓடி வருகின்ற,

அல்லாஹ்வை அஞ்சுபவரை,

பொருட்படுத்தாமல் முகத்தைத் திரும்பிக் கொண்டீரே!

கூடாது! ஏனெனில், திண்ணமாக இது (பாகுபாடின்றி அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்க அறவுரையாகும்.

எனவே, விரும்பியவர் இதை ஏற்றுக் கொள்ளட்டும்.

இது கண்ணியமான சுவடிகளில் (பாதுகாக்கப் பட்டு) உள்ளது;

உயர்ந்தது; தூய்மையானது;

கடமை தவறாத(வான)வர்களின் (காவல்)கரங்களில் உள்ளது.

அவர்கள் கண்ணியமானவர்கள்; வாய்மையாளர்கள்.

‘உம்மிடம் உபதேசம் கேட்டு நெருங்கி வந்தவர் குருடர்தாம். ஆனால், இறையச்சமுடையவர். உம்முடைய உபதேசத்தைக்கேட்டுப் பலனடையக் கூடியவர் அவர். ஆனால் அவரைத் தவிர்த்துவிட்டு, இறைவனை அலட்சியம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்’ என்று அந்நிகழ்வைக் கண்டித்து இறங்கின அவ்வசனங்கள்.

உலகத்தில் ஒருவர் எத்தகு மேட்டுக் குடியைச் சேர்ந்தவராகவும் தலைவராகவும் இருந்தாலும் சரியே; ஆனால் அவர் ஏக இறை நம்பிக்கை இல்லாதவராக ஆகிவிடும்போது, சமூகத்தின் தாழ் நிலையில் உள்ள இறை நம்பிக்கையாளருடன் ஒப்பிட்டால் அவரின் அத்தனை செல்வாக்கும் உயர்வும் ஒரு பொருட்டே இல்லை என்று அழுத்தந்திருத்தமாய் அறிவித்தன அவ்வசனங்கள்.

இந்த வசனங்கள் வந்து இறங்கினவே, அவ்வளவுதான். அதன் பிறகு, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மீது மிகுந்த மதிப்பும் கரிசனமும் ஏற்பட்டுப்போனது நபியவர்களுக்கு. பார்வை இழந்த இவருக்காக சர்வ வல்லமை கொண்ட இறைவனே வசனம் அருளிவிட்டானே என்று கூடிப்போனது அக்கறை. அவர் தம்மிடம் வருகை புரியும் போதெல்லாம், “எவர் பொருட்டு என்னை என் இறைவன் கண்டித்தானோ, அவருக்கு நல்வரவு” என்று சிறப்பான வரவேற்பளித்து வாகான இடத்தில் சிறப்புடன் அமர்த்திக் கொள்வார்கள் அல்லாஹ்வின் தூதர், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

oOo

தோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றின்போது முதல் அகபா உடன்படிக்கை பற்றிப் பார்த்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட யதுரிபைச் சேர்ந்த அந்த மக்களுக்கு குர்ஆனும் இஸ்லாமியப் போதனைகளும் அளிக்க, அந்நகரில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரிய முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அனுப்பிவைக்கப்பட்டார் என்றும் தோழர் முஸ்அபின் வரலாற்றில் விரிவாகப் பார்த்தோம். அந்தப் பயணத்தில் முஸ்அபுடன் இணைந்து யத்ரிபு சென்ற மற்றொருவர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

யத்ரிப் நகர், நபி புகுந்த பட்டணமாய் – மதீனாவாய் உருமாற இவரின் உழைப்பும் பெரும் பங்கு வகித்தது. தாம் கற்ற குர்ஆன் ஞானத்தை மக்களுக்கு எத்தி வைக்க, ஏகத்துவத்தைப் பரப்ப, வரிந்து கட்டி நின்றதில் அங்கத்தில் உள்ள குறையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. மதீனாவில் இஸ்லாமியச் சமூகம் கட்டுக்கோப்பாய் உருவாகி வளர ஆரம்பித்தது.

நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபின் பள்ளிவாசல் கட்டப்பட்டு, தொழுகைக்கான வசதிகள் முறைப்படுத்தப்பட்டன. தொழுகையின் அழைப்பான பாங்கு சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பணிக்கு முக்கியமான இருவரை நியமித்தார்கள் நபியவர்கள். ஒருவர் பிலால் இப்னு ரபாஹ், மற்றொருவர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். ஒருவர், அடிமையாய் இருந்த கறுப்பு இனத்தவர்; இன்னொருவர் குருடர். இவ்விருவரின் குரல்களும் மதீனாவின் பள்ளியிலிருந்து கம்பீரமாய் முழங்க ஆரம்பித்தன. பிலால் பாங்கு சொன்னால் அப்துல்லாஹ் பின் உம்மி  மக்தூம் இகாமத்துச் சொல்வதும், இவர் பாங்கு சொன்னால் பிலால் இகாமத்துச் சொல்வதுமாக முறை ஏற்படுத்திக் கொண்டார்கள். ரமளான் மாதத்தில் ஸஹருக்கு உணவு உண்ண பிலாலின் பாங்கொலியும் சுப்ஹுத் தொழுகைக்கு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமின் பாங்கொலியும் வழக்கமாகிப் போனது.

ஆனால் நபியவர்களின் முஅத்தின் எனும் பொறுப்பும் சிறப்பும் தாண்டி மற்றொரு சிறப்பும் அவ்வப்போது அப்துல்லாஹ்வுக்கு அளித்து வந்தார்கள் நபியவர்கள். மதீனாவின் நிர்வாகப் பொறுப்பு.

பத்ருப் போருக்கு முஸ்லிம் வீரர்களுடன் கிளம்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். தாம் நகரில் இல்லாத நேரத்தில் மதீனாவின் மக்களுக்கு இமாமாகச் செயல்பட, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமை நியமித்தார்கள் நபியவர்கள்.

இமாமத் என்பது தொழுகையில் முன் நின்று தொழுவிக்கும் சம்பிரதாயப் பணி மட்டும் கிடையாது. அது உயர்வான ஒரு தகுதியாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது, தோழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அதற்குரிய சிறப்பம்சம் உள்ளவர்தாம் இமாமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களை வழிநடத்தும் ஆகப்பெரிய பொறுப்பும் அந்தத் தகுதியில் அடங்கும். ஆனால் இன்று அது கடை நிலை ஊழையனைப் போன்ற ஒரு பணியாக பெரும்பாலான ஊர்ககளில் மாறிப்போனது சகிக்க இயலாத ஓர் அவலம்.

பத்ருப் போர் மட்டுமன்றி, இதரப் போர்களின் போதும் பயணத்தின் போதும் இவரை மதீனாவின் இமாமாக நியமித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள் நபியவர்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, பத்துமுறை இவ்விதம் நடைபெற்றிருக்கிறது. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமின் தகுதி அத்தகையது என்பது ஒருபுறம் என்றால் அவர் மீது நபியவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் மரியாதையும் இதர காரணங்கள் ஆகும்.

ஆனால், அந்தப் பெருமையை எல்லாம் மீறிக் கவலை சூழ்ந்தது அப்துல்லாஹ்வுக்கு. பத்ருப் போர் முடிந்தபின் சில வசனங்கள் இறங்கின. போரில் பங்கெடுத்த முஜாஹிதீன்களைப் பற்றிய வசனப் பகுதி்கள் அவை.

“… தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்…” (4:95).

ஜிஹாதுப் போர் புரியக் களம் சென்றவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டவர்களைவிட தன் பார்வையில் உயர்வானவர்கள், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டான் இறைவன். ஈமானும் இறை பக்தியும் அளவற்று இருப்பினும் அதையெல்லாம் போர்த்திக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக்கொள்ளாமல் தேவைப்படும் தருணங்களில், களம் காண்பதே உயர்வு, என்று  மக்களுக்கு உண்மை சொல்லி உத்வேகப்படுத்தின அந்த வசனங்கள்.

இந்த வசனத்தை அறிய வந்ததும் அளவற்ற விசனம் ஏற்பட்டுப்போனது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமுக்கு. குர்ஆனை ஓதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கற்றிருந்த மனம். பதறிப்போனது! போரில் கலந்து கொள்வதால் இறைவனிடம் கிடைக்கப்போகும் உயர்ந்த அந்தஸ்தை இழக்கிறோமே என்று மெய்யான கவலை ஏற்பட்டுப்போனது அவருக்கு. நபியவர்களிடம் சென்றார்.

“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இந்த இயலாமை மட்டும் இல்லாதிருப்பின் நிச்சயமாக நானும் ஜிஹாதுக்குச் செல்வேன்.” ஒவ்வொரு சொல்லும் உண்மை உரைத்தன.

தமக்கும் தம்மைப்போல் குறை உள்ளவர்களுக்கும் போரிலிருந்து விலக்கு அளித்து இறைவனின் வசனம் இறங்குமா? என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார் அவர். “யா அல்லாஹ்! எனக்கு விலக்கு உண்டு என்று வெளிப்படுத்துவாயாக” என்ற இறைவனிடம் இறைஞ்ச ஆரம்பித்தார்.

அவருடைய கவலையைத் தீர்த்துவைக்க வசனம் இறங்கியது. நபியவர்கள் ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுடன் அமர்ந்திருக்கும்போது, இறைவனிடமிருந்து வஹீ வந்தது.

ஈமான் கொண்டவர்களுள் (தகுந்த) காரணமின்றி (வீட்டில்) அமர்ந்துவிட்டோரும், தங்களுடைய சொத்துக்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டார்கள்…

சூரா அந்-நிஸாவில் 95ஆவது வசனமாகப் பதிவாகிப்போன இவ்வசனம் இவ்வாறு விலக்கு அளித்தாலும், ‘ஆஹா! இது போதும் இனி எனக்கு’ என்று ஆசுவாசமாய் வீட்டில் அமர்ந்துகொள்ள அப்துல்லாஹ்வின் மனம் இடம் கொடுக்கவில்லை. அறப்போரில் கலந்துகொள்வதால் கிடைக்கும் இறை உவப்பையும் அந்தஸ்தையும் உயரிய நன்மைகளையும் உதறிவிட மனம் இணங்கவில்லை. உயர் குணம், உயர்ந்த செயல்களில் ஈடுபடவே மல்லுக் கட்டும். அந்தத் தாகமும் ஏக்கமும் தருணம் பார்த்து காத்துக் கிடந்தார்.

oOo

ஹிஜ்ரீ 14ஆம் ஆண்டு.

முஸ்லிம்களை எதிர்த்துப் பிரம்மாண்டமாய் உருவாகும் பாரசீகப் படைகளைப் பற்றிய செய்தி மதீனாவில் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை அடைந்தது.

அனைத்து ஆளுநர்களுக்கும் தகவல் அனுப்பினார் உமர். ‘ஆயுதம், குதிரை, உடல் வலிமை, புத்தி கூர்மை என்று ஏதேனும் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களெல்லாம் உடனே இராக்கிற்குச் செல்ல வேண்டும்’ என்றது அரச கட்டளை. இந்த அறிவிப்பும் உத்தரவும் கேட்டுச் சாரிசாரியாய்க் கிளம்பி வந்து படையில் இணைய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.

“நானும் செல்கிறேன். என்னையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று வந்து நின்றார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

‘உங்களால் போரில் என்ன பங்காற்ற முடியும்?’

கண் பார்வை அற்ற தமக்கான ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம். படை அணிகள் களத்தில் தங்களுக்கான கொடியை உயர்த்தி ஏந்திப் பிடிப்பது வழக்கம். தோழர்கள் முஸ்அப் இப்னு உமைர், ஜஅஃபர் பின் அபீதாலிப் ஆகியோரின் வரலாற்றில் அதைப் படித்தோமே நினைவிருக்கிறதா? கொடியையும் ஏந்திக் கொண்டு சண்டையும் புரிந்திருப்பார்கள் அவர்கள். தம்மால் சண்டையில் நேரடியாக ஈடுபட முடியாதாகையால் முஸ்லிம் படை அணிகளுக்கு இடையே கொடியை ஏந்தி நிற்பது என்ற யோசனை அவருக்குத் தோன்றியிருந்தது.

“என்னால் உறுதியுடன் கொடியை ஏந்தி நிற்க முடியும். கண் பார்வை அற்ற நான் மருளப் போவதில்லை; வெருண்டு ஓடிவிடப் போவதில்லை.”

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) தலைமையில் காதிஸிய்யா நோக்கிக் கிளம்பியது முஸ்லிம் படை. வழி அனுப்பி வைத்தார் உமர். கொடியும் கையுமாய் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

நான்கு நாட்கள் தொடர்ந்து கடுமையாய் நிகழ்வுற்றது காதிஸிய்யாப் போர். கவசம் தரித்து, ஆயுதம் ஏந்தி, கொடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்.

பாரசீகர்களின் அணியில் ஓரிலட்சத்து இருபதினாயிரம் வீரர்கள். தவிர, யஸ்தகிர்த் நாள்தோறும் அனுப்பி வைத்த உதவிப் படையினர் தனிக் கணக்கு. அவர்களை எதிர்த்துக் களம் கண்ட முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரத்து சொச்சம் வீரர்கள் மட்டுமே.

கடுமையான போருக்குப் பிறகு நான்காம் நாள் முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. இரண்டு தரப்பிலும் நிறைய உயிரிழப்பு. ஏறத்தாழ 8500 முஸ்லிம் வீரர்கள் உயிர்தியாகம் புரிந்திருந்தனர். அவர்களுள் முஸ்லிம்களின் கொடியைப் பத்திரமாகப் பிடித்தபடி அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

தலைவன், தலைவனின் உறவினர், அறிந்தவர், தெரிந்தவர் என்ற பரிந்துரையில் என்ன சலுகை பெறலாம், என்ன பட்டம், பதவி ஈட்டலாம் என்று குறுக்கு புத்தியும் கோணங்கித் தனமுமே அரசியல் தந்திரம் என்று விதியாகிவிட்டது நிகழ்காலம். இறைத் தூதரின் உறவினர், குர்ஆன், கல்வியில் உயர் ஞானம், மக்களுக்குத் தற்காலிகத் தலைவராக நபியவர்களே நியமித்துச் செல்லும் அளவிற்குச் சிறப்புத் தகுதி, இறைவனே போரிலிருந்து விலக்கு அளித்துவிட்ட விதி என்றெல்லாம் இவருக்கு ஆயிரத்தெதுஎட்டு காரணங்கள் இருந்தன. ஆனாலும் என்ன செய்தார்?

இறைவனுக்காக உயிரை அர்ப்பணித்தே தீருவேன் என்று காதிஸிய்யா போர்க் களத்தில் வீரத் தியாகிகளுள் ஒருவராக உயிர் துறந்திருந்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment