காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ‘தோழர்கள்‘ புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன்
அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அருமையான மாலைப் பொழுதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக அல் ஜாமியுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் அல்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் சகோதரர் சுவைலிம் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதித் துவக்கி வைத்தார். அடுத்ததாக, சிறப்புரையாற்ற வந்த சகோதரர் எம்.எம். முஜாஹித் அலீ அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தைப் பற்றி உரையாற்றும்போது, முதலாவதாக அல்குர்ஆனில் இறக்கப்பட்ட முதல் வசனத்தை எடுத்துக்காட்டி, படிப்பதின் அவசியத்தைப் உணர்த்தினார். அதைத் தொடர்ந்து நம் சமுகம் படிப்பதில் காட்டும் அலட்சியப்போக்கை அருமையாக எடுத்துச் சொன்னார். மேலும், நம் சமூகம் புத்தகங்களை வாசிப்பதற்காகப் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை; செவி வாயிலாகவே செய்திகளை அறிந்தால் போதும் என்று இருக்கின்றனர்.
செவி வாயிலாகக் கிடைக்கும் கல்வித் திறனைவிட வாசிப்பதின் மூலம் கிடைக்கும் கல்வித் திறன் அதிகம் என்று சில உதாரணங்களின் மூலம் எடுத்துரைத்தார். இடையிடையே நம் முன்னோர்களின் கல்வித் தேடல்களையும் வரலாற்றில் அவர்கள் படைத்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார். மேலும் இஸ்லாமிய வரலாற்றுச் சுவடுகளையும் கோப்புகளையும் அழித்த யூதர்களின் சூழ்ச்சிகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.
அதோடு நபிமார்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் வரலாறுகளையும் நாம் அதிகமாக அறிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறியவர், நாம் வரலாறு படைக்க வேண்டுமென்றால் வரலாற்றில் சாதனை படைத்த உத்தமத் தோழர்களின் உன்னத வரலாறுகளைப் படிக்க வேண்டும்; உன்னதத் தோழர்களின் தியாகம் நிறைந்த வரலாறுகளை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் நம்மை சுவர்க்கத்தின்பால் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார்.
அதன் பின் சகோ. மவ்லவி எஸ்.எச்.ஷரஃபுதீன் உமரி அவர்கள் நபித்தோழர்களின் தியாக வரலாறுகளை எடுத்துக் கூறும்போது.
அரேபிய தேசத்தில் மனிதனை அடிமைப்படுத்திக்கொண்டு இருந்த மக்கள் ஏகத்துவச் செய்தியை கேட்ட மாத்திரத்தில் இறைதிருப்தியை நாடி ஓரிறைக் கொள்கைக்காகத் தங்கள் சொந்த பந்தங்களையும் செல்வங்களையும் உயிர்களையும் இஸ்லாமிய மார்கத்திற்காக அற்பணித்தர்கள். உன்னதத் தோழர்கள் தங்கள் உயிரைவிடவும் அதிகமாக இறைத் தூதர்(ஸல்) அவர்களை நேசித்தார்கள். அல்குர்ஆன் வசனங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அல்லாஹுவின் நேசத்தைப் பெறவேண்டுமென்றால் என்னைப் பின்பற்றுங்கள் என்று கூறுப்படும் திருக்குர்ஆன் (3:31ஆம்) வசனத்தை மேற்கோள் காட்டி சில சஹாபாக்களின் தூய வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துரைத்தார்.
தோழர்கள் புத்தகத்தைப் பற்றி பேசும்போது, நூலாசிரியர் சகோதரர் நூருத்தீன் அவர்கள், நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அழகிய தமிழில் அனைவருக்கும் எளிமையாகப் புரியுமளவிற்கு மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளார்.
நாம் கேள்விபட்டிருக்காத தமிழ் வார்த்தைகளையும் தோழர்கள் புத்தகத்தில் பார்க்கலாம். சஹாபாக்களைப் பற்றி அரபியில் படித்து உணர்வதைவிட நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் படிக்கும் போது உணர்வுபூர்வமாக உள்ளது. தோழர்களின் ஒவ்வொருவரின் வரலாறும் நம் கண்களைக் கலங்க வைத்து விடும். அந்தளவிற்கு நூலாசிரியர் நபித்தோழர்களின் முழுமையான வரலாறுகளை மிகைப்படுத்தாமல் தொகுத்துள்ளார் என்றார்.
இறுதியாக, சகோதரர் ஜக்கரிய்யா அவர்கள் தோழர்கள் புத்தகத்தைப் படித்த அனுபவத்தைப் பேசும்போது, தோழர்கள் புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்களை படித்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் வரத்தொடங்கியது.
ஒவ்வொரு தோழர்களின் வரலாறுகளும் நமக்குப் படிப்பினை தரும் என்பதில் சந்தேகமில்லை மிகவும் சிறப்பாக நூலாசிரியர் தொகுத்துள்ளார். இந்தப் புத்தகத்தின் விலை குறைவுதான், இதில் இருக்கும் படிப்பினையோ அதிகம்.
நாம் இன்று எந்தப் பயனும் தராத கதை புத்தகங்களையும் சினிமாக்களையும் செய்தியில் காட்டப்படும் அரசியல் சண்டைகளையும் மார்க்கச் சண்டைகளையும்தான் ரசித்துப் பார்க்கின்றோம். அதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றோம். இஸ்லாமிய வரலாறுகளைத் தெரிந்துகொள்ள அலட்சியமாகவே உள்ளோம் என்றார்.
பின்னர் ‘தோழர்கள்’ புத்தகத்தைப் பொதுமக்களில் சிலர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இறுதியாக மஜ்லிஸ் துஆயே கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
தகவல் : சகோ. பி.ஜி.எம் முஜாஹித், சித்தன் தெரு, காயல்பட்டினம்.
நன்றி : காயல் ந்யூஸ்