இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 6

by admin

6. தமிழில் திருக்குர்ஆன்

இஸ்லாமிய இலக்கியங்கள் எல்லாம் அரபு மொழியில் இருந்தன. தமிழ் முஸ்லிம்களும் அதைத்தான் படிக்க வேண்டியிருந்தது. அரபி படித்தவர்களால் மட்டுமே படிக்க முடிந்தது.

இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்பது தாவூத்ஷாவின் கொள்கை. தமிழில் வெளிவந்தால்தான், தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் படிக்க முடியும்; இஸ்லாத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும் என்று அவர் எழுதினார்; பேசினார்.

அவர் வெறும் வாய்ப்பந்தல் போடவில்லை. தானே செயலில் இறங்கினார். இஸ்லாம், வரலாறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சரிதை என்று பல நூல்களையும் தமிழில் எழுதி வெளியிட்டார்.

தமிழ் முஸ்லிம்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நூலும் அடுத்தடுத்து நாலு பதிப்பு, ஐந்து பதிப்பு என்று வெளிவந்தது. “இஸ்லாம்” என்ற நூல் இருபது பதிப்பு வெளிவந்தது. இவ்வளவு காலமும் அரபியில் இருந்த இலக்கியங்களை தமிழில் படித்துத் தமிழ் முஸ்லிம்கள் பெரும் பயன் அடைந்தார்கள்.

இஸ்லாம்

“முஹம்மது நபி (ஸல்)” என்று நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை எழுதி வெளியிட்டார். இது 3 பதிப்பு வெளிவந்தது. இதைப் பள்ளிக் கூடங்களில் துணைப் பாட நூலாக வைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. “நபிகள் திலகம் (ஸல்)” (2 பாகம்) என்ற வரலாற்று நூலையும் எழுதினார். இதுவும் அரசாங்க ஒப்புதல் பெற்ற நூல்.

அது போல “அபூபக்கர் சித்திக் (ரலி)” என்று முதல் கலிஃபாவின் வரலாற்றையும் எழுதினார். இந்நூலும் பள்ளிகளில் இடம்பெற அரசாங்கம் அனுமதி அளித்தது.

தாவூத்ஷா எழுதிய “ஈமான்” என்ற நூல் 3 பதிப்புக் கண்டது.

  • “நாயக வாக்கியம்” – 4 பதிப்பு
  • “நபிகள் நாயக மான்மியம்” (2 பாகம்)
  • இஸ்லாம் எப்படிச் சிறந்தது?
  • நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும்
  • ஈமான் (4 பதிப்பு)
  • ஜியாரத்துல் குபூர்
  • நாயக வாக்கியம் (4 பதிப்பு)
  • இஸ்லாமிய ஞான போதம் (மதங்களின் மாநாட்டில் முதல் பரிசு பெற்ற நூல்)
  • முஸ்லிம்களின் முன்னேற்றம்

என்று ஏராளமான நூல்களை தமிழில் எழுதி வெளியிட்டார்.

குத்பா பிரசங்கம் தமிழில் இருக்க வேண்டும் என்று கூறிய தாவூத்ஷா, “குத்பா பிரசங்கம்” என்ற நூலையும் வெளியிட்டார்.

குர்ஆன் மொழிபெயர்ப்பு

இஸ்லாத்துக்கு அடிப்படை, திருக்குர்ஆன். குர்ஆன் அடிப்படையில்தான் இஸ்லாம் இயங்குகிறது. இஸ்லாமியச் சடங்குகள், சம்பிரதாயங்கள் குர்ஆன் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே, தாவூத்ஷா திருக்குர்ஆனையும் தமிழில் மொழிபெயர்த்து விட்டார்.

கும்பகோணத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட தமிழாசிரியர், “நீ பெரியவன் ஆன பின் திருக்குரானை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடு” என்று சொன்னார்.

சப் மாஜிஸ்திரேட்டாக வேலை பார்த்த வேளையிலேயே திருக்குர்ஆனை மொழிபெயர்க்கத் தாவூத்ஷா ஆசைப்பட்டார். ஆனால், வேலைப் பளு காரணமாக அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

லண்டனில் இருந்த போது இந்த மொழி பெயர்ப்பு ஆவல் மீண்டும் எழுந்தது. அந்த ஆசைதான் அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு உந்தித் தள்ளியது.

தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பின் இதழ் வேலை நெருக்கியது. அரசியல் பணிகள் வேறு. எனவே, மொழிபெயர்ப்பு வேலை தள்ளிக் கொண்டே வந்தது.

ஜவாஹிருல் புர்கான்

குர்ஆன் வசனங்களை மொழிபெயர்த்து, அதற்கு விளக்கவுரை, விரிவுரை எழுதுவது என்றால், பல ஆண்டு காலம் ஆகும். ஆகவே, வசனங்களை முதலில் தழிழ்ப்படுத்தி வைத்துக் கொள்ள விரும்பினார். அவ்வாறே செய்தார்.

மொழிபெயர்த்த வசனங்களை, அடிக்குறிப்புகளுடன் அச்சிட்டு நூலாக வெளியிட்டார். இதில் திருக்குர்ஆனின் முதல் மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றன. “குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு” என்று நூலுக்குப் பெயர் சூட்டப்பட்டது.

பிறகு இரண்டாம் பாகமும் சேர்த்து, “ஜவாஹிருல் புர்கான்” என்ற பெயரில் வெளியிட்டார். “குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும், அதன் விரிவான விளக்கமும் ஒருங்கே கூடியது” என்று விளம்பரம் செய்யப்பட்டது. திருக்குர்ஆனின் 159 ஆயத்துகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இதில் இடம் பெற்றது.

பிறகு மூன்றாம் பாகம் 1931 இல் வெளியிடப்பட்டது. இதற்கு ‘அம்மயத்’ என்று பெயரிடப்பட்டது.

உண்மையில் இது திருக்குர்ஆனின் இறுதி (30வது) பாகம் ஆகும். இடையிலிருக்கும் வசனங்களை விட்டு விட்டு, கடைசி அத்தியாயத்தை வெளியிட்டது ஏன்?

இதற்கு நூலின் முன்னுரையில் தாவூத்ஷா பதிலளிக்கிறார். அவர் கூறுவது:

“ஜவாஹிருல் புர்கானின் விளக்கம் விரிவுரையாக விரிந்து கொண்டே போவதால், இந்த முப்பதாவது பகுதியை வந்து எட்டுவதற்கு முன் பல ஆண்டுகள் கழிந்து விடும். இந்த இறுதிப் பகுதியிலேயே முஸ்லிம் சகோதரர்களின் தொழுகை முதலிய அனுஷ்டானத்துக்கு ஒவ்வொரு நாளும் பயன்படும் சிறு சிறு அத்தியாயங்கள் எல்லாம் மல்கிக் கிடக்கின்றன. இவற்றின் கருத்தையும் விளக்கத்தையும் அதிகத் தாமதம் இல்லாது அறிந்து கொள்ள வேண்டியது அவசியமென்று உணரப்பட்டதால், இந்த முப்பதாவது பாகம் எடுத்துக் கொள்ளப்பட்டது.”

முன்னுரையின் இறுதியில் “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறள் இடம் பெற்றுள்ளது. “இஸ்லாத்தின் ஊழியன பா.தாவூத்ஷா” என்று கையெழுத்திட்டு இருக்கிறார்.

“சயகூலு” என்ற தலைப்பில் நாலாம் பாகம் வெளியிடப்பட்டது. 2ம் பாகத்துக்கும் 3ம் பாகத்துக்கும் இடைப்பட்ட ஆயத்துகள் (160ஆம் ஆயத்திலிருந்து 252ஆம் ஆயத்து முடிய) இந்த நாலாம் பாகத்தில் இடம் பெற்றன. தமிழ் மொழிபெயர்ப்புடன் விரிவான விளக்கவுரையும் இடம் பெற்றது.

குர்ஆன் மஜீத்

குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத்ஷாவின் இளமைக் கனவு. “எனது ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழ்ப்படுத்திக் கொடுங்கள். நானே வெளியிடுகிறேன்” என்று லாகூர் மெளலானா முகம்மது அலி அழைத்தார்.

தாவூத்ஷா லாகூருக்குப் போய், அவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தார். அவர் திரும்பி வந்ததும், இந்தியா சுதந்திரம் அடைந்து, பாகிஸ்தான் தனியே பிரிந்து சென்றது. இதனால் அந்த ஒப்பந்தம் தடைப்பட்டது.

தாவூத்ஷாவுக்கு முதுமை வந்து கொண்டிருந்தது. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயது ஆன போது, “தாருல் இஸ்லாம்” இதழை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்கத் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு உதவியாக அவருடைய மகன் ஜப்பார் இருந்தார். திருக்குர்ஆன் வசனங்களை தாவூத்ஷா மொழி பெயர்த்தார். அதற்குப் பொருளுரையும் விரிவுரையும் எழுதினார். மகன் ஜப்பார் அடிக்குறிப்புகள் எழுதினார்.

எழுதி முடித்து விட்டுப் பார்த்தால், ஆறேழு தொகுதிகளாக வெளியிட வேண்டும் போலிருந்தது. முதல் தொகுதி 1964 இல் வெளி வந்தது. அல்ஹாஜ் பா. தாவூத்ஷா சாகிப், அப்துல் ஜப்பார் சாகிப் தயாரித்த “குர்ஆன் மஜீத் பொருளுரையும், விரிவுரையும்” என்ற தலைப்புடன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பின் வரலாற்றைக் குறிப்பிட்டு தாவூத்ஷா நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறார். ஜப்பார் தனது பங்குக்கு அணிந்துரை வரைந்துள்ளார்.

“குர்ஆன் மஜீத்” 2வது, 3வது பாகமும் அதே ஆண்டில் வெளியிடப்பட்டன.

முட்டுக்கட்டை

குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்று உலமாக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். “தமிழ் காஃபீர் (நாத்திக) மொழி” என்று கூறினார்கள்.

இந்த எதிர்ப்பையும் மீறி, குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிட்டு வெளியிடப்பட்டது.

“இது காதியானி மொழிபெயர்ப்பு! காஃபீர் மொழிபெயர்ப்பு! முஸ்லிம்கள் வாங்கக் கூடாது” என்று உலமாக்கள் பிரசாரம் செய்தார்கள்.

இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிடுவதில் முட்டுக்கட்டை விழுந்தது. நாலாம் தொகுதி வெளியிட மார்க்க அறிஞரும் தொழிலதிபருமான தைகா சுஐபு ஆலிம் அவர்கள் ரூ. 13 ஆயிரம் கொடுத்தார்.

1967 இல் ஐந்தாம் தொகுதி வெளியாயிற்று.

இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத்ஷாவும் நோயில் படுத்து விட்டார். பொருளாதார வசதியில்லை. இதனால் ஆறாம் தொகுதி வெளிவருவதில் தடை ஏற்பட்டது.

இதற்கு முஸ்லிம் அறநிலைய வாரியம் (வக்ஃப் போர்டு) உதவி கோரப்பட்டது. உதவியும் கிடைத்தது. நூலும் அச்சிடப்பட்டது. ஆனால், வெளியிட முடியாதபடி உலமாக்கள் தடை போட்டார்கள். இதனால் அச்சிட்ட பிரதி முழுவதும் வக்ஃப் வாரியத்தில் கட்டிப் போடப்பட்டன.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூலக வாரியத் தலைவராக இருந்த போது, தாவூத்ஷா குடும்பத்தினர் அவரிடம் இது பற்றி முறையிட்டார்கள். அவர் பிரதிகளை நூலகம் வாங்க ஏற்பாடு செய்தார்.

ஏழாவது (இறுதி) தொகுதி அச்சிட வேண்டியிருக்கிறது. இதற்குள் தாவூத்ஷா காலமாகி விட்டார். இந்தத் தொகுதியின் கையெழுத்துப் பிரதி அமெரிக்காவிலிருக்கும் அவருடைய பேரன் நூருத்தீனிடம் இருக்கிறது. அவர் அச்சிட்டு வெளியிடுவதற்குப் பதில், கணினியில் ஏற்றிவிடத் திட்டமிட்டு இருக்கிறார்.

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment