பேறு பெற்ற பெண்மணிகள் – விமர்சனம்

by நூருத்தீன்
Penmanigal

மெரிக்கா, ஆப்பிரிக்கா; இங்கிலாந்து, ஆஸ்திரேலியா; அயர்லாந்து, ஃபின்லாந்து; கனடா, இந்தியா… விளையாட்டுப் போட்டிகளின் அணிப்பிரிவுகள் அல்ல இவை. பூகோள எல்லைக் கோட்டைத் தாண்டி ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருக்கும் பெண்களின் குடியுரிமைப் பட்டியல்!

பௌத்தம், கிறித்தவம், ஹிந்து மதம், யூத மதம், மத நம்பிக்கையே அற்றவர்கள் என்று பலதரப்பட்ட பெண்கள்; உலகின் பல்வேறுப் பகுதிகளைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினை, கவலை, தேடல், காதல் என்று – அனுபவம், பயணம். அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்த இலக்கு ‘இஸ்லாம்’.

வந்து சேர்ந்தவர்கள் வாய் திறந்து ஷஹாதா மொழிந்துவிட்டு, தலையைச் சுற்றி முக்காடு இழுத்துவிட்டுக்கொண்டு, வாயாரப் பேசுகிறார்கள் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் தங்களது பரவசத்தை.

எப்படி இது? என்ன மாயம் இது? என்ன மந்திரம் இது?

ஒவ்வொரு பெண்மணியும் உலக ஆதாயத்திற்காகவோ, உள் நோக்கத்திற்காகவோ வந்து இணைந்ததாய்த் தெரியவில்லை. மாறாய் இந்த இலக்கை எட்டவும், எட்டிய பின்பும் அவர்கள் சந்தித்த, சந்திக்கும் சவால்கள்தான் எக்கச்சக்கம். ஆனால் அந்த வலியைத் தாண்டி உவப்பு பெருகி நிற்கிறது அவர்களது உள்ளங்களில்.

அவர்கள் பாமரர்களாகவும் இல்லை. மிகப் பெரும்பாலானவர்கள் கல்வி அறிவில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள்! தாங்கள் முன்னர் சார்ந்திருந்த மதங்களில் தென்பட்ட இறைக் கொள்கை; அதன் முரண்பாடுகள்; உலக மாயை ஆகியவற்றுக்கான தீர்வு இந்த இயற்கை மார்க்கமான இஸ்லாமே; வணக்கத்திற்குரியவன் அந்த ஏக இறைவன் ஒருவனே என்று நன்கு ஆய்ந்துணர்ந்து முடிவெடுத்திருக்கிறார்கள் அவர்கள்.

ஏதோ ஒரு தருணம்; எவரோ ஒருவரின் செயல் அல்லது சொல் என்று சடாரென ஒரு தீப்பொறி இவர்களைப் பற்றி, ரசவாத மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இஸ்லாத்தைப் பற்றியும் குறிப்பாய் இஸ்லாத்தின் பெண்ணுரிமை பற்றியும் அவதூறு கிளப்பும் மேற்குலகின் அடுக்களையிலிருந்து வெளிவந்து ஒப்பனை கலைத்து நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.

அத்தகைய பெண்மணிகளின் இஸ்லாமியப் பயண அனுபவத்தை அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் அண்ணன் அதிரை அஹ்மது. சமரசம் பத்திரிகையில் தொடராக வெளியான இந்தக் கட்டுரைகளை IFT நிறுவனம் “பேறுபெற்ற பெண்மணிகள்” என்ற தலைப்பில் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.

தூய மார்க்கம் எது என்ற தேடலில் இருப்பவர்களுக்கு மட்டும், பெண்களுக்கு மட்டும் என்று இந்தப் புத்தகத்தைச் சுருக்கிவிட முடியாது. முஸ்லிமான நம் அனைவருக்குமே அடிநாதமாய் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது –

‘இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும்.’

ஏன்?

பிறக்கும் ஒளி இருக்கிறதே அது தானாய் மற்றவரை பற்றிக் கொள்ளும்.

நூல்:

பேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 1 – விலை INR 50.00

பேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 2 – விலை INR 65.00

ஆசிரியர்:

அதிரை அஹ்மத்

வெளியீடு:

Islamic Foundation Trust (IFT) – Chennai

IFT Complex

138, Perambur High Road, Chennai – 600012.

Ph: 044-26621101

Email: iftchennai12@gmail.com

www.ift-chennai.org

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment