தப்புக் கடல – விமர்சனம்

by நூருத்தீன்

புத்தகத்தை அவர் எனது இந்திய விலாசத்திற்கு அனுப்பி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்புதான் (அக்டோபர் 6, 2019) இங்கு எனக்கு வந்து சேர்ந்தது. அதுவரை அதன் தலைப்பு ‘தப்புக் கடல்’ என்றே தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

கடல் அன்று; கடல – ‘தப்புக் கடல’ என்பதுதான் தலைப்பு என்பது புத்தகத்தை ஏந்திய பிறகே புரிந்தது.

கடலை தெரியும். சொத்தைக் கடலை தெரியும். வாயோர நீருடன் ஆண் வர்க்கம் பெண்களிடம் போடும் கடலயும் தெரியும். இதென்ன தப்புக் கடல?

கதையும் சிறுகதை போன்ற கட்டுரைகளுமாய் விருத்தாசலம் மண்ணையும் அம் மண்ணின் மாந்தர்களின் வாழ்க்கையையும் பக்கங்களில் நிரப்பியிருக்கிறார் பெ. கருணாகரன்

அழகான எளிய நடை வாசிப்பை இதமாக்குகிறது. ஆர்வத்தைக் கிளறும் வட்டாரச் சொற்கள் ஆங்காங்கே நிறைந்து அது தனி மணம். ஏதோ ஒரு கதையில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரையில் அவரும் ஒரு பாத்திரமாக ஒளிந்திருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. வாசிக்கும்போது சில விளக்கங்களை இடையிடையே அவரிடம் கேட்டவன் ‘அது நீங்களா?’ என்ற கேள்வியை மட்டும் கட்டாயமாய்த் தவிர்த்துவிட்டேன். அது யூகமாகவே இருக்கட்டும்.

ரசித்த பலவற்றில் ஒன்றை மட்டும் இங்கு பகிரத் தோன்றுகிறது. கல்லூரி மாணவனின் விடலைக் காதல் ஒன்று. அற்பாயுசில் முடிந்து விடுகிறது. எல்லாக் கதையும் போல் நாயகியின் படிப்பை நிறுத்தி மணமுடிக்கின்றனர். அவன் வருந்துகிறான். தன் காதல் வெற்றி பெறவில்லையே என்றல்ல. தன் அரைவேக்காட்டுத்தனத்தால், படித்து, உயர்ந்திருக்க வேண்டிய ஒருத்தியின் வாழ்க்கையைச் சீரழித்த வலியினால்.

சுவையான நூல்.

’அதெல்லாம் சரி. அதென்ன தப்புக் கடல?’ என ஆர்வப்படுபவர்கள்

குன்றம் பதிப்பகம்
95000 61601
pekarunakaran@gmail.com

என்ற முகவரிக்குத் தொடர்புகொண்டால் ரூ. 150க்கு ‘தப்புக் கடல’ கிடைக்கும்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment