புனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி பாக்கியிருந்த நாள் ஒன்றில், மனம் லயிக்காமல், ‘ஹஹ்… writer’s block’ என்ற முணுமுணுப்புடன் சோம்பலை அரவணைத்தபடி இருந்தவனை, “அதெல்லாம் ஹம்பக். ஜான் சொல்கிறார் பாருங்கள்” என்று புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினாள் மகள்.
Writer’s block is a fabrication, an excuse that allows you to ignore the problem you’re having with your story, which means, of course, that you cannot solve the problem.
பதைத்துவிட்டேன். என் சோம்பலின் தர்க்கத்தை ஒரு நூல் தவிடுபொடியாக்குவதா? அட்டையைப் புரட்டினால், “The Lie That Tells a Truth: A Guide to Writing Fiction” என்ற தலைப்பு பதைப்பை ஆர்வமாக்கிவிட்டது. அடிப்படையில் இது புனைவு எழுத்தாளர்களுக்கான நூல். என்றாலும் எழுதும் நோக்கம் இருக்கும் எவருக்கும் பயன்படும் விஷயங்கள், உத்திகள் இதில் எக்கச்சக்கம்.
எழுத வேண்டும்; எப்படி எழுதுவது, என்ன எழுதுவது, எங்கிருந்து தொடங்குவது போன்ற கேள்விகள் நிறைந்த கனாவாதிகளுக்கும் நாலெழுத்து நாலு பத்திரிகைகளில் வந்து விட்டால் நானும் எழுத்தாளன்தான் என்ற எண்ணம் கொண்ட என்னைப் போன்ற போதையாளர்களுக்கும் இது உர மூட்டை.
புனைவு, அபுனைவு எழுத்துகளுக்கு இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அபுனைவு எழுத்துகள், சொல்ல வரும் விஷயத்தை வாசகன் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, எளிமையாகச் சொல்ல வேண்டும். அரசியல் கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றில் சுற்றி வளைத்து ஜல்லி அடிக்காமல், எழுதுபவர் தம் சார்பை வெளிப்படுத்தலாம், வாதாடலாம், தேசத் துரோகி என்று பட்டமும் வாங்கிக் கட்டிக்கொள்ளலாம்.
ஆனால் புனைவு?
எவ் வகையிலும் எழுத்தாளன் நீ கதையை எழுதாதே, உன் கருத்தைப் புகுத்தாதே. கதையின் பாத்திரங்கள், சுற்று, சூழல், அங்கிருக்கும் அஃறிணை கதையைச் சொல்லட்டும், பேசட்டும், நகர்த்தட்டும் என்கிறார் ஜான். கதையின் கரு, கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், தீர்வுகள் இப்படியான ஒவ்வொன்றும் கதைக்கு ஏன் முக்கியம், அது எப்படி அமைய வேண்டும் என்ற விலாவாரியான விபரங்களெல்லாம் நூலின் அத்தியாயங்கள்.
ஓர் ஆக்கத்திற்கு முன் வரைவு (draft), உருவாக்கம், திருத்தி அமைப்பது (editing), கையாளப்படும் மொழி, சொற்கள், வாக்கிய அமைப்பு என்று அவர் நடத்தும் பாடம் பல இளம் எழுத்தாளர்களுக்கு முன் அறிமுகம் இல்லாதவை. அவற்றை அறிவது, பின்பற்றுவது ஆரோக்கியம்.
சிறப்பான ஆக்கம் வாசகனை உள் இழுத்து, கதையின் முடிவை அவனிடம் விட்டு விட வேண்டும் என்று ஜான் உத்தி சொல்கிறார். வாசகர்கள் கதையில் ஊன்றி விட்டிருந்தால் அவரவருக்கும் முடிவுகள் வெவ்வேறாகவும் தெரியலாம். முடிவை விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது.
தமிழிலும் இத்தகைய நூல்கள் வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்துகொள்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான நூல் என்பேன். அமெரிக்க கல்லூரிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந் நூலும் உண்டு
The Lie That Tells a Truth: A Guide to Writing Fiction
by John Dufresne
Paperback: 320 pages
Publisher: W. W. Norton & Company; Reprint edition (August 17, 2004)
Language: English
-நூருத்தீன்