சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 17

17. டொரிலியம் போர்

நைக்கியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில் அதன் பெயர் எஸ்கிஷெஹிர் (Eskişehir). அங்கு ஒன்று கூடுவது என்று முடிவெடுத்தனர் சிலுவைப் படைத் தலைவர்கள்.

பெருமளவு எண்ணிக்கையில் அமைந்திருந்த சிலுவைப் படை, நைக்கியாவிலிருந்து டொரிலியத்திற்கு ஒரே அணியாக நகர்வது முடியாத காரியமாக இருந்தது. காரணம் பாதை. சாலை வசதி யாத்திரைக் குழுவுக்கு உகந்ததாக இருந்ததேயன்றி, பெரும் படை ஒன்றாகப் பயணப்படுவது அப்பாதையில் ஆகச் சிரமம். சிறு சிறு அணிகளாகப் பிரிந்து கடக்கலாம் என்றாலோ கிலிஜ் அர்ஸலானின் அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. சிதறுண்ட படையை அவர் எளிதில் துடைத்து எறிந்துவிடும் அபாயம் இருந்ததால், இரு அணிகளாகப் பிரிந்து செல்வது என்று முடிவெடுத்தனர்.

இங்கு முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இலத்தீன் கத்தோலிக்கர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் திரண்டு வந்திருந்தாலும் ஐரோப்பாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். சிலுவைப் போருக்கு முன் ஒருவருக்கொருவர் எதிரிகளாய் இருந்தவர்கள். பேச்சு மொழியும் ஒன்றன்று. அதனால் அவர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பும் எளிதாக இல்லை. இப்படிப் பல்வேறு கூறுகளாக இருந்த படையை வழிநடத்த உறுதியான ஒரே தலைவர் இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. பாதிரியார் அதிமார் ஆன்மீகத் தலைமையாகவும் கிரேக்க டெட்டிஸியஸ் படையை வழிநடத்துபவராகவும் இருந்தாலும் அவர்கள் இருவரிடமும்கூட ஒட்டுமொத்த படை அதிகாரம் இல்லை. இத்தனை முரண்கள் அமைந்திருந்த முதலாம் சிலுவைப் போரின் அந்தப் படை எப்படி வெற்றி மேல் வெற்றி ஈட்டியது?

அச்சமயம் முஸ்லிம் சுல்தான்கள் தவற விட்டிருந்த ஒரு செயல்முறையை இலத்தீன் கிறிஸ்தவப் படை தாமாகச் செயல்படுத்தியது. கூட்டுக் கலந்தாய்வு. ‘இப்படிச் செய்தால் என்ன?’ என்று அவர்களுக்கு அந்நியமான இந்தக் கூட்டுக் கலந்தாய்வு முறையை அவர்களே கண்டுபிடித்து அதைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்கள். ‘நமது இலக்கு ஜெருசலம். அதை மையமாக வைத்து நமது இராணுவ நடவடிக்கைகளைக் கலந்தாய்வோம்’ என்று குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். ரேமாண்ட், பொஹிமாண்ட் போன்ற முக்கியமானவர்களை அதன் தலைவர்களாக அமர்த்தினார்கள். அந்தத் தலைவர்கள் கலந்து பேசிக் கொள்கைகளை வகுத்தனர்; தீர்மானங்கள் ஏற்படுத்தினர். முதல் கட்டமாகப் போரில் கைப்பற்றும் செல்வங்களைச் சரியானபடிப் பங்கிடுவதற்கு அந்தத் தலைவர்கள் ஒரு பொது நிதி உருவாக்கினார்கள். ஆசியா மைனர் பகுதியை எப்படிக் கடப்பது என்று பேசினார்கள். அந்தக் கலந்தாய்வின் அடிப்படையில்தான் சிலுவைப் படை இரு பெரும் அணியாகப் பிரிந்து சென்று டொரிலியம் நகரில் ஒன்று கூடுவது என்று முடிவெடுத்தார்கள்.

oOo

கி.பி. 1097ஆம் ஆண்டு ஜுன் 29. பொஹிமாண்டின் படையும் நார்மண்டியின் கோமான் ராபர்ட்டின் (Robert I, Duke of Normandy) படையும் நைக்கியாவிலிருந்து கிளம்பின. இடைளெி விட்டு, தெற்கு பிரான்ஸ் படை, காட்ஃப்ரெ, ஃப்ளாண்டர்ஸின் ராபர்ட் ஆகியோரின் படைகள் பின்தொடர்ந்தன. இவை அனைத்தும் ஒற்றர்கள் மூலம் கிலிஜ் அர்ஸலானுக்குத் தெரியவந்தது. நைக்கியாவில் கைநழுவிய வெற்றியால் ஆற்றாமையில் இருந்த அவருக்கு இது அடுத்த நல்வாய்ப்பாகத் தோன்றியது. சிலுவைப் படை இரண்டாகப் பிரிந்து வருவதால் அவர்களுடைய படை பலம் பாதி. நம் பகுதிகளை அவர்கள் கடக்கும்போது, பதுங்கியிருந்து திடீரெனத் தாக்கினால் நமக்கு வெற்றி எனத் திட்டமிட்டார்.

டொரிலியம் அருகே இரு பள்ளத்தாக்குகள் சந்திக்கும் இடத்தில் பரந்த நிலம் இருந்தது. அங்கு பொஹிமாண்ட், ராபர்ட் தலைமையிலான சிலுவைப் படையின் முதல் அணி வந்து சேர்ந்தது. ஜுலை 1ஆம் நாள். அதிகாலை நேரம். அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், கிலிஜ் அர்ஸலானின் படை குதிரைகளில் புயல்போல் வந்து, சுழல் காற்றைப் போல் சிலுவைப் படையைச் சூழ்ந்தது. பெரும் சப்தத்துடன் அவர்களைத் தாக்க ஆரம்பித்தது. இடைவிடாத மழை போல் வானிலிருந்து அம்புகள் பொழிய ஆரம்பித்தன. அகப்பட்டவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றனர். சிலுவைப் படையின் இந்த அணி சுதாரிப்பதற்குள், பின்னால் வந்துகொண்டிருக்கும் அணி இங்கு வந்து சேருவதற்குள், இவர்களைத் தகர்த்து விட வேண்டும் என்பது கிலிஜ் அர்ஸலானின் திட்டம்.

கிறிஸ்தவப் படையினருக்குப் பெரும் அதிர்ச்சி. துருக்கியர்களின் அத்தகு போர் யுக்தி அவர்களுக்குப் புதிதும்கூட. குழப்பமும் அச்சமும் சூழ்ந்து திகைத்துத் திண்டாடிப் போனார்கள். பலர் தெறித்து ஓடினார்கள். ஆனால் பொஹிமாண்டும் ராபர்ட்டும்தாம் தங்களது படையை ஓர் ஒழுங்கு முறையுடன் பின் வாங்கச் செய்து, அங்கிருந்த சதுப்பு நிலத்திற்குக் கொண்டு வந்தனர். களேபரமாகி, கன்னாபின்னாவென்று பின்வாங்கி ஓடுவதைவிடத் திடமாக நின்று துருக்கியர்களை எதிர் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பெருமளவில் நாசமடையாமல் தாக்குப்பிடித்துவிட்டால் போதும்; தங்கள் படையின் மற்றொரு பகுதியும் வந்து சேர்ந்துவிடும். நம் எண்ணிக்கை முஸ்லிம் படையைவிட அதிகரித்துவிடும்; அதன்பின் துருக்கியர்களைச் சமாளிப்பதும் விரட்டுவதும் எளிது என்று நம்பினார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த சிலுவைப் படையினருக்கு அவசரத் தகவல் பறந்தது.

இங்கு, கிறிஸ்தவர்களின் படையில் இருந்த சேனாதிபதிகள், தங்கள் படையினரை ஒருங்கிணைத்து, முன்னேறித் தாக்குதல் நடத்த முனைந்தாலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் விடாது சமாளித்துக் கொண்டிருந்தனர். பல மணி நேரம் போர் நீடித்தது. சிலுவைப் படையினருக்குப் பெரும் இழப்பும் ஏற்பட்டது. ஆனாலும் கிலிஜ் அர்ஸலானின் திட்டப்படி சிலுவைப் படையின் அந்தப் பிரிவை அவரால் முற்றிலுமாய் வெற்றி கொள்ள முடியவில்லை. அதற்குள் ரேமாண்டின் தலைமையிலான படை வந்து சேர்ந்தது. அடுத்து பாதிரியார் அதிமாரின் படையும் வந்து இணைந்தது. படை எண்ணிக்கை அதிகரித்தவுடன், அது கிலிஜ் அர்ஸலானின் வீரர்களின் எண்ணிக்கையை மிகைத்தவுடன் சிலுவைப் படையினருக்குப் பெரும் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் முழு வீச்சுடன் ஆக்ரோஷமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க, அத்துடன் கிலிஜ் அர்ஸலானின் படை பின் வாங்கியது. இம் முறையும் அவர் வெற்றி பெற முடியாமல் போனது.

கிலிஜ் அர்ஸலானின் தாக்குதலிலிருந்து மீண்டதும் தமது இலக்கான அந்தாக்கியாவை நோக்கிப் புறப்பட்டார்கள் பரங்கியர்கள். அது மூன்று மாதப் பயணம். அந்தப் பயணத்தில் அவர்கள் வேறு விதமான சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. தேவையான உணவு, நீர் இன்றிப் பசியும் தாகமும் நோயும் அவர்களை மிகத் தீவிரமாகத் தாக்கின. பலர் இறந்தனர். பொதி சுமக்கவும் போருக்கும் பயன்பட்ட அவர்களது கழுதைகள், குதிரைகள் இறந்தன. வேட்டையாடுகிறேன் என்று சென்ற காட்ஃப்ரெ கரடியால் தாக்கப்பட்டு, உயிர் பிழைத்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வாட்டி வதைத்த அந்தச் சிரமங்களை ஒருவழியாகக் கடந்து, ஆசியா மைனரின் தென்கிழக்கு மூலையிலுள்ள சிலிசியாவைச் சிலுவைப் படை எட்டியது.

சிலிசியாவில் அர்மீனிய கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் துருக்கியர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தனர். பரங்கியர்கள் அந்த கிறிஸ்தவர்களுடன் முதலில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு இணக்கமானார்கள். கூட்டணி அமைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். டான்க்ரெட், பால்ட்வின் இருவரையும் சிலிசியாவின் தெற்கே அனுப்பிவிட்டுப் படையணி வடக்குப் புறமாய்ச் சுற்றி வளைத்து வந்தது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி அர்மீனிய கிறிஸ்தவர்கள் அனைவரையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டுவருவது அவர்களது நோக்கம். அது மிகச் சிறப்பாகவே நிறைவேறியது. டான்க்ரெட்டும் பால்ட்வினும் வெறுமே கூட்டணி என்பதைத் தாண்டித் தங்களுக்கான வள மையம் ஒன்றை உருவாக்கிவிட்டார்கள். சிரியாவின் உள்ளே நுழையப்போகும் சிலுவைப் படையினருக்குத் தேவையான ஆகாரம், ஆயுதம் ஆகியனவற்றை அனுப்பிவைக்க, மேற்கொண்டு அடுத்தடுத்து வரவிருக்கும் சிலுவைப் படையினருக்குத் தோதான பாதை அமைத்துக் கொடுக்க அது வெகு முக்கியமான மையமாக அமைந்துவிட்டது.

அங்கிருந்து அடுத்துத் தங்களது இலக்கான அந்தாக்கியாவை நோக்கிச் சிலுவைப் படை தெற்கே முகத்தைத் திருப்ப, கிழக்கு நோக்கித் தம் முகத்தைத் திருப்பினார் பால்ட்வின். மண், பொன், ஆட்சி, செல்வம், அதிகாரம் என்பனவெல்லாம் சிலுவைப் படையில் இணைந்த தலைவர்களுக்குக் காரணமாக இருந்தன என்று பார்த்தோமில்லையா? தமக்கான வாய்ப்பு சிரியாவுக்கும் மெஸோபோட்டோமியாவுக்கும் இடையே காத்திருப்பதாக பால்ட்வின் உணர்ந்தார். சிறு படையொன்றைத் தம் தலைமையில் அமர்த்திக்கொண்டு, துருக்கியர்களின் அடக்குமுறையிலிருந்து அர்மீனிய கிறிஸ்தவர்களை விடுவிக்க வந்த ஆபத்பாந்தவன் நானே என்று கூறிக்கொண்டு, யூப்ரட்டீஸ் நதி வரையிலான கிழக்குப் பகுதிகளை வெகு மூர்க்கமாய்க் கைப்பற்றி முன்னேறிச் சென்றுவிட்டார்.

அங்கு எடிஸ்ஸா (Edessa) நகரை தோராஸ் (Thoros) எனப்படும் வயது முதிர்ந்த அர்மீனிய ஆட்சியாளர் ஆண்டு வந்தார். பால்ட்வினைப் பற்றிய செய்தி அவர் காதுக்கு எட்டியதும் அரச விருந்தினராக வரும்படி பால்ட்வினுக்கு அழைப்பு அனுப்பினார் தோராஸ். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போய், நாமிருவரும் இனி தந்தை-மகன் என்று உறவு ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் விமரிசையாக அதற்கான சடங்கும் நடைபெற்றது. இடுப்புக்கு மேல் வெற்று உடம்புடன் இருவரும் நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொள்ள, நீண்ட அங்கி ஒன்று அவர்கள் இருவரையும் ஒன்றிணைத்துப் போர்த்தப்பட்டது.

ஆனால், பேராசையுடன் கிளம்பி வந்திருந்த பால்ட்வினுக்கு இதெல்லாம் போதுமானதாக இல்லை. ஆட்சிக்காக இரத்த உறவையே இரத்தம் தெறிக்கக் குத்திக் கொல்வது வழக்கமான நடைமுறையாக இருந்தபோது, வளர்ப்புத் தந்தையாவது மகனாவது? அடுத்தச் சில மாதங்களில் அந்த அர்மீனிய வளர்ப்புத் தந்தை ரகசியமாய்க் கொல்லப்பட்டார். எடிஸ்ஸாவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் பால்ட்வினின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தன. கிழக்கு தேசத்தில் உருவானது சிலுவைப் படையின் முதல் ராஜாங்கம். County of Edessa எனப்படும் எடிஸ்ஸா மாகாணம்.

இதனிடையே சிலுவைப் படை சிரியாவின் வடக்கு எல்லையை அடைந்து, அந்தாக்கியா நகரை முற்றுகை இடுவதற்குத் தயாரானது.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment