ஆண்களுக்கும் பங்குண்டு

சாலிஹாவின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லை. காலையில் அவரால் படுக்கையை விட்டு எழவும் முடியாமல் மிகவும் அசதியாக இருந்தார். இரவிலிருந்து அவருக்கு வயிறு வலி. காலையில் பார்த்தால் அவருக்குக் காய்ச்சலும் இருந்தது.

அன்று அவர்களுடைய வீட்டு வேலைக்கார அம்மாவும் வரவில்லை. தம் மகளைப் பார்க்க ஊருக்கு செல்வதாகக் கூறி ஒரு வாரம் லீவு எடுத்து சென்றிருந்தார் அவர்.

முஸ்தபா தம் பிள்ளைகளை எழுப்பினார். பல் தேய்த்து, குளித்து பள்ளிக்கூடம் செல்வதற்கு அவர்களைத் தயாராகச் சொன்னார். அவர்கள் குளித்து முடித்து வருவதற்குள் அந்தத் தெருவில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்று தோசை மாவு வாங்கி வந்திருந்தார். தோசை சுட்டு, சட்னி தயாரித்து, ஆம்லெட் போட்டு, சுடச்சுட காலை டிபனை ரெடி செய்து வைத்திருந்தார் முஸ்தபா. “நீங்கள் சீக்கிரம் சாப்பிடுங்கள்” என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தம் மனைவிக்கு ஓட்ஸ் கஞ்சி தயாரித்து ரூமுக்கு எடுத்துச் சென்று அவருக்கு அளித்தார்.

பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு முடித்து யூனிபார்ம் அணிந்து தயாரானதும் தம் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அவர்களைப் பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார். மாலையில் பிள்ளைகளை தாம் அழைத்து வந்து விடுவதாக பக்கத்து வீட்டு ஆன்ட்டி தெரிவித்தார்கள். அதேபோல் அன்று மாலை அவர்கள் பிள்ளைகளை அழைத்து வந்துவிட்டார்கள். பிள்ளைகள் அம்மாவிடம் ஓடிச்சென்று உடல்நலம் விசாரித்தார்கள். “இப்பொழுது தேவலாம். அல்ஹம்துலில்லாஹ். உங்களை ஸ்கூலில் விட்டுவிட்டு வந்து, உங்கள் டாடி என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். டாக்டர் எனக்கு ஊசி போட்டு மருந்து எழுதித் தந்தார். அத்தா அதை எனக்கு வாங்கித் தந்து விட்டு பிறகு ஆபீஸ் சென்றார்கள்” என்று அவர்களின் அம்மா கூறினார்.

அன்று மாலையும் முஸ்தபா அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகு விரைவில் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரே அன்றைய இரவு உணவையும் தயார் செய்தார். தந்தை கிச்சனில் பரபரப்பாக சமையல் செய்வதை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தான் அப்துல் கரீம். அன்று இரவு உணவு உண்ணும்போது சாலிஹாவிடம், “டாடி இன்று லேடீஸைப் போல் கிச்சனில் வேலை செய்தார்களே” என்றான்.

அதற்கு முஸ்தபா அவனிடம், “கிச்சனில் பெண்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அவனும், “ஆமாம்” என்றான். பிறகு முஸ்தபா அவனிடம் கேட்டார். “நாம் ஹோட்டலுக்குப் போவோமே, அப்போ அங்கு உள்ள கிச்சனில் யார் இருக்கிறார்கள் ஆண்களா? பெண்களா?” என்று கேட்டார்.

“அங்கு ஜென்ட்ஸ்தான் பார்த்திருக்கிறேன்” என்றான் கரீம். “அப்படியானால் வீட்டு கிச்சனில் மட்டும் ஆண்கள் ஏன் வேலை பார்க்கக்கூடாது?” என்று கேட்டார் முஸ்தபா.

கரீமுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு முஸ்தபா தம் பிள்ளைகளிடம் கூறினார். “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது, தம் குடும்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிவதில் பிஸியாக இருப்பார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள், தம் செருப்பை ரிப்பேர் செய்து கொள்வார்கள், தம்முடைய துணி கிழிந்திருந்தால் அவர்களே அதை தைத்துக்கொள்வார்கள். பிறகு தொழுகை நேரம் வந்ததும் தொழுவதற்குச் சென்றுவிடுவார்கள்.”

மேலும் விவரித்தார். “கலீஃபா உமர் (ரலி) அவர்கள், சஹாபி ஸயீத் (ரலி) என்பவரை சிரியாவுக்கு கவர்னராக அனுப்பியிருந்தார்கள். ஸயீதும் மக்களை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஆனால். மக்களுக்கு அவரிடம் ஒரு குறை இருந்தது. அதை அவர்கள் கலீஃபா உமரிடம் நேரடியாச் சொல்லிவிட்டார்கள்.

அதாவது கவர்னர் ஸயீத் காலையில் வேலைக்கு வருவது ரொம்ப லேட் என்பது மக்களின் குறை. கலீஃபா உமரும், ‘இதற்கு என்ன பதில் சொல்கிறாய் ஸயீத்?’ என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு சஹாபி ஸயீத் பதில் கூறினார். ‘நான் என் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது கடமையாகி விட்டது. எனது குடும்பத்திற்கு ஒத்தாசை புரிய வேலையாட்கள் யாரும் கிடையாது. எனவே ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைவேன். மாவு உப்பி வரும்வரை காத்திருந்து, பிறகு அதனை குடும்பத்தினருக்கு சமைத்துக் கொடுத்துவிட்டு வருவேன்.’

“மக்களை ஆளும் கவர்னர் ஒருவர் தம் குடும்பத்திற்கு ஒத்தாசையாய் உதவி புரிந்து சமைத்துக் கொடுத்துவிட்டு பிறகு மக்கள் நலனைக் கவனிக்க வந்திருக்கிறார். அதனால், ஆண்கள் வீட்டில் உதவி ஒத்தாசை புரியக்கூடாது, பெண்களே எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என்று இருக்கக்கூடாது. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முக்கியப் பொறுப்பு இருக்கும். குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே, அவர்கள் கிச்சனிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நாம் அனைவரும் உதவ வேண்டும்” என்று சொன்னார் முஸ்தபா.

ஸாலிஹாவும் கரீமும் புரிந்துகொண்டு தலையாட்டினார்கள்.

-நூருத்தீன்

புதிய விடியல் – மார்ச் 16-31, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment