அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ்-இன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். தம் மூதாதையர்களின் பூர்விகம் அமெரிக்காவன்று; வேறு நாடு, வேறு கண்டம் என்பதை உணர்ந்தவருக்கு அதன் அடிவேரைத் தேடும் வேட்கை உருவாகி தேடல் ஒன்று துவங்கியது.
இலட்சக்கணக்கான கி.மீ., பயணம், பல்லாயிரப் பக்க ஆவணங்கள், பற்பல மக்களுடன் சந்திப்பு என்ற உழைப்பின் பயணாய், ஏழு தலைமுறைக்கு முந்தைய தன் பாட்டனாரின் விபரங்களைக் கண்டுபிடித்தார் அலெக்ஸ். ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டில், பதினெட்டாம் நூற்றாண்டில், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த குண்டா கிண்டேதாம் அவர் தேடிய அடிவேர்.
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய் அமைந்தவை, ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளின் வியர்வையும் ரத்தமும். கொத்துக்கொத்தாகப் பிடிக்கப்பட்டு விலங்கினங்களைப்போல் அமெரிக்காவுக்கு இழுத்து வரப்பட்ட அடிமைகளுள் ஒருவர் குண்டா கிண்டே. அவரது பிறப்பிலிருந்து ஆரம்பித்து அலெக்ஸ் ஹேலி வரை முடியும் வரலாற்று நாவலாக உருமாறியது Roots.
1976ல் வெளியான Roots அமெரிக்காவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. நாற்பத்து ஆறு வாரங்கள் The New York Times Best Seller List-இல் இடம்பிடித்துக் கோலோச்சியது. தொலைக்காட்சித் தொடராக வடிவம் பெற்று அது மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மேலதிகம். அலெக்ஸ் ஹேலியின் உழைப்பிற்கும் தேடலுக்கும் வெகுமதியாக இந்நூலுக்குக் கிடைத்த அங்கீகாரம் Pulitzer Prize.
ஏறத்தாழ ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூலின் மொழிபெய்ர்ப்புகள் தமிழிலும் வெளியாகியுள்ளன. அதிலொன்று இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள condensed version – வேர்கள். அண்ணன் M.S. அப்துல் ஹமீது 900த்து சொச்சம் பக்கமுள்ள ஆங்கில நூலின் சுருக்கத்தை 300 சொச்ச பக்கத்தில் தமிழாக்கம் செய்துள்ளார். துபையில் சந்திக்கும்போது அவர் எனக்கு அளித்த அதை வாசித்து முடித்தேன்.
அண்ணன் M S Abdul Hameed அவர்களின் உழைப்பும் முயற்சியும் பாரட்டுக்குரியவை. இதுவரை இது இரண்டு பதிப்பு வெளிவந்துள்ளது. அடுத்த பதிப்பில் இலக்கியச்சோலை இதை மேலும் சிறப்பாக எடிட் செய்து, அச்சுப்பிழை, இதரப் பிழைகளை நீக்கி வெளியிட வேண்டும் என்று விழைகிறேன். தமிழில் அந்தப் பதிப்பும் முக்கியமான ஒன்றாக இடம்பிடிக்கும். இன்ஷா அல்லாஹ்.
நூல்: வேர்கள்
ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி
தமிழாக்கம்: M.S. அப்துல் ஹமீது B.E.
வெளியீடு:
இலக்கியச் சோலை
26, பேராக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை 600003
தொலைபேசி: 9962918724
பக்கங்கள்: 336
விலை: ₹ 210
-நூருத்தீன்