நிலமெல்லாம் ரத்தம் – விமர்சனம்

by நூருத்தீன்

“பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்தரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் – பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்தரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்த பிறகும் அடிமை வாழ்வைத் தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் …”

“நிலமெல்லாம் ரத்தம்” மிக அருமையானதொரு புத்தகம். பா.ராகவன் எழுதி கிழக்கு பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ள இந்த தரமான புத்தகத்தின் விலை ரூ.300 தான்.

இது குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராய் வந்த போது எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சென்னை விடுமுறையில் புத்தகமாய் வாங்கி விட்டேன். வெளிநாட்டு புத்தகங்களின் தரத்தில் அச்சாகியுள்ளது என்றால் மிகையில்லை. புத்தகமே அழகு.

“தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக் கூடிய” இந்த மிகத் தீவிரமான விஷயத்தை இதை விட எளிமையாய் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடு யாரும் எழுத முடியமா என்பது சந்தேகந்தான்.

பா.ரா. “என்னுரையில்” பாலஸ்தீன் அராபியர்கள் தொடர்ந்து சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டு வந்திருப்பவர்கள், என்று ஆரம்பிக்கிறார். ”நான் ஒரு கிருத்தவனாகவோ, யூதனாகவோ, இஸ்லாமியனாகவோ இல்லை என்பது ஒரு சௌகரியம் தான்” என்று அவரே குறிப்பிட்டிருப்பதனால் இந்த புத்தகம் ஒரு குறிப்பிட்ட சார்பு எடுத்திருப்பதாகத் தோன்றினாலும் அது நியாயத்தின் வெளிப்பாடே என்பதை எந்த நடுநிலை வாசகனும் உணரலாம்.

மேலும், “முத்தரப்பினரும் ஒற்றுமையுடன் அங்கே வாழ்ந்திருக்கமுடியும். அதற்கான சாத்தியங்கள் கலீஃபா உமரின் காலத்திலேயே உருவானது. கிருத்தவர்களுடனான உமரின் அமைதி ஒப்பந்தத்தை இன்று வாசித்தாலும் சிலிர்ப்பு ஏற்படுகிறது. உமருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களில், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுல்தான் சலாவுதீன் அய்யூபியின் காலம் வரையிலும் கூட இதற்கான சாத்தியங்களை இஸ்லாமிய மன்னர்கள் மிக வெளிப்படையாகவே தெரிவித்து வந்திருக்கிறார்கள்” என சிலாகிக்கும் ஆசிரியர் பிரிட்டனின் நயவஞ்சகத்தால் எப்படி வந்தேறிகளான யூதர்கள் மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை வெளியேற்றி நிலத்தை அபகரித்தார்கள் என்பதை மிகவும் அற்புதமாய் விவரிக்கிறார்.

இந்த பிரச்சனையை மேலோட்டமாய் பார்க்காமல், மூன்று மதங்களுக்கும் பொதுவான நபி இப்ராஹீமின் காலத்திலிருந்து தொடங்கியுள்ளது ஆசிரியரின் நேர்மையை பகர்கிறது. மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.

இஸ்லாமிய தரப்பு சரித்திர விஷயங்களில் சில மட்டும் சற்று முரணாய் எனக்குப் பட்டன. உதாரணமாய் நபிகள் நாயகம் (ஸல்) மக்கா படையெடுப்பின் போது யானைப் படை இருந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது. நபிகளாரின் எந்த படையெடுப்பிலும் யானைப்படை இல்லை. ஹதீத்களும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களும் அப்படி எதுவும் குறிப்பிடவேயில்லை. பின்னர் கலீபாக்களின் ஆட்சியில் தான் சஹாபாக்கள் (நபித் தோழர்கள்) பாரசீகர்களுடன் போரிடும் போது யானைப் படையை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்பொழுதும் முஸ்லிம்களிடம் யானைப் படை இல்லை. ஆனால் அவை இந்த புத்தகம் பேசும் பிரச்சனைக்கு பாதகமில்லை என்பதனால் சுட்டிக்காட்டத் தவிர பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து.

தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. தொடர்ந்து இனி வரும் பாலஸ்தீன் செய்திகளை முறையாய் அறிந்து உண்மையுணர நிச்சயம் அது உதவும்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment