நபிமணியும் நகைச்சுவையும் – விமர்சனம்

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே கொண்ட அவர்களது வாழ்க்கை வரலாறு வற்றாத ஊற்று. அம்மாமனிதர் நபியாக வாழ்ந்து மறைந்து இன்றுவரை ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு காலத்திலும் பல மொழிகளிலும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் நபியவர்களைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் முயன்று முயன்று எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லையற்று விரிந்து நிற்கின்றது நபியவர்களுடைய மகா வரலாறு.

ஆன்மீகம், இல்லறம், போர், நிர்வாகம் என்று எந்தத் துறையை அணுகினாலும், நபியவர்களின் வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் தொட்டாலும், பக்கம் பக்கமாக, தகவல்களும் பாடங்களும் நுணுக்கங்களும் பஞ்சமே அற்று கிளைவிட்டுப் பரவுவது பெரும் ஆச்சரியம். அனைத்துப் பரிமாணங்களிலும் சுடர்விடும் அறிவார்ந்த வரலாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை.

அத்தகைய நபியவர்களின் வாழ்க்கையின் இயல்பான தருணங்களை, அவர்கள் தம் உவப்பை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி வாய்விட்டுச் சிரித்த பொழுதுகளை யாரேனும் இதுவரை இப்படி ஓர் அருமையான நூலாகத் தொகுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அந்தப் பணியைத் திறம்படச் செய்துள்ளார் சகோதரர் இக்பால் ஸாலிஹ்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒப்பற்ற இறைவனின் தூதுச் செய்தியை உலகுக்கு அறிவித்து மக்களை ஓரிறைக் கொள்கைக்கு அழைக்கும் போராட்ட வாழ்க்கை, ஓய்வு ஒழிச்சலற்ற இன்னல்கள், பிரச்சினைகள், சோதனைகள் என்றிருந்த நபிமணியின் வரலாற்றில் நகைச்சுவைத் தருணங்கள் ஒரு கட்டுரை அளவைத் தாண்டி என்ன இருந்துவிடப் போகிறது என்று நினைத்து ஆரம்பித்தால் ‘நபிமணியும் நகைச்சுவையும்’ இருபத்து ஏழு அத்தியாயங்களுக்கு விரிந்து செய்தி சொல்கின்றது! ஒவ்வொரு நகைச்சுவைப் பொழுதையும் துணுக்குபோல் சொல்லிவிடாமல், அதைச் சார்ந்த நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஓரளவு விரிவாகச் சொல்லி, பின்னர் நபிமொழியை எழுதியுள்ளது ஆசிரியரின் கடும் உழைப்புக்குச் சான்று! அது நபியவர்களின் வரலாற்றை அறிந்த வாசகர்களுக்குப் புதிய கோணத்தில் மீள் வாசிப்பு அனுபவம். அறியாதவர்களுக்கு அம்மாமனிதரின் வரலாற்றை மேலும் விரிவாக வாசிக்க உந்தும் வினையூக்கி!

பல இடங்களில் வர்ணனைகளும் எழுத்தும் மிகைபோல் தோன்றலாம். அதைப் பெரும் குறையாகக் கருத இயலாது என்றே கருதுகிறேன். பட்டம், பதவி, அந்தஸ்து போன்ற இகலோக அற்பத் தேவைகளுக்காகத் தம் தலைவனையும் தலைவியையும் பொருத்தமேயற்ற புகழாரங்களால் கூச்சமற்று வர்ணிக்கும் மக்கள் நிறைந்துள்ள உலகில், தம் உயிர், உடைமை என்று எதுவுமே பொருட்டின்றி, இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் உள்ளங்கள் சற்று உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்.

பயனுள்ள தகவல்கள் நிறைந்துள்ள நூல். ஒவ்வொரு இல்லத்தையும் நூலகத்தையும் அலங்கரிக்கும் தகுதியுடைய ஆக்கம். கடும் பணிகளுக்கு இடையே இதைப் பெருமுனைப்புடன் எழுதி முடித்துள்ள சகோ. இக்பால் ஸாலிஹ் அவர்களின் இந்த முயற்சியை ஏற்று, அங்கீகரித்து ஈருலகிலும் நல்லருள் புரிய வல்ல இறைவன் போதுமானவன்.

-நூருத்தீன்


இந் நூலுக்கு அனுப்பி வைத்த மதிப்புரை. 


நூல்:

நபிமணியும் நகைச்சுவையும்
விலை: INR 150/-

ஆசிரியர்:

இக்பால் M ஸாலிஹ்


வெளியீடு:

அதிரை நிருபர் பதிப்பகம்
ஷப்னம் காம்ப்ளெக்ஸ், E.C.R. ரோடு
அதிராம்பட்டினம் 614701

Related Articles

Leave a Comment