தோழர்கள் – 60 அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) – பகுதி 3

by நூருத்தீன்
60. அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (عبد الله ابن عباس) – 3

லீஃபா அலீயின் கிலஃபாத்தில் முக்கிய அத்தியாயம் கவாரிஜ்கள். இவர்களுடன் இப்னு அப்பாஸ் நிகழ்த்திய விவாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. அந்த விவாதத்தையும் சிறப்பையும் உணர, கவாரிஜ்கள் பற்றிய சிறு அறிமுகம் இங்கு நமக்கு அவசியமாகிவிடுகிறது. மிகச் சுருக்கமாக மட்டும் பார்த்துவிடுவோம்.

கலீஃபா உதுமான் கொலை செய்யப்பட்டதும் மதீனாவில் இருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் ஸிரியா பகுதியை நிர்வகித்து வந்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தீர்க்கமுடியாத பிரச்சினையாகி, பிரச்சினை போர்களாகி – ஒட்டகை யுத்தம் என்ற போரில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவும் அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் எதிரும் புதிருமாய்ச் சந்திக்கும்படி ஆகிப்போனது. பெரும் சிக்கலான, குழப்பமான நிலை அது. ஒருவாறாக அது முடிவுக்கு வந்தும் பிரச்சினைகள் ஓயவில்லை.

அதைத் தொடர்ந்த போர்களின் உச்சக்கட்டம்தான் ஸிஃப்பீன் யுத்தம். முஆவியா ரலியல்லாஹு அன்ஹு, அலீ ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் மத்தியில் நிகழ்ந்த அந்த யுத்தத்தில் இரு தரப்பிலும் பெருத்த சேதம். இறுதியில், இரு தரப்பும் இரண்டு தோழர்களை நடுவர்களாக நியமித்துக்கொண்டு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். முஆவியா, அம்ரு இப்னுல் ஆஸைத் தம் தரப்பில் நியமித்தார். அபூமூஸா அல்-அஷ்அரீயை தம் தரப்பில் நியமித்தார் அலீ.  உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் வரையப்பட்டது.

ஒரு பெரும் பிரச்சினையைத் தீர்க்க வரையப்பட்ட இந்த ஒப்பந்தம் குழப்பத்தை உண்டாக்கக் காத்திருந்த மற்றொரு பெரும் கூட்டத்திற்கு நல்ல காரணமாக அமைந்துவிட்டது. அலீயின் தரப்பில் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு பெருங்கூட்டம் கடுமையான வகையில் அலீயின் தலைமையை எதிர்த்துப் பிரிந்து சென்றனர். கருத்து வேறுபாடு, பிடிக்கவில்லை என்றெல்லாம் அல்லாது, அவர்கள் தாங்களாகவே தவறாக விளங்கிக்கொண்ட குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் கடுமையான எதிரணியாக உருவாக ஆரம்பித்தனர். ஆயுத மோதல் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

அந்தக் கூட்டத்தினர் குர்ஆன், ஹதீதை நிராகரித்து அலட்சியமாக நடந்து கொள்பவர்கள் என்று கருதிவிட முடியாதபடி தொழுகை, பின்னிரவுத் தொழுகை, குர்ஆன் என்று ஆழ்ந்த வழிபாட்டில் மூழ்கியிருந்த மக்கள். ‘ஸஜ்தா’ தழும்பு நெற்றியில் பழுத்திருந்தவர்கள். என்றெல்லாம் இருந்தும் அவர்களது அடிப்படை பிரச்சினையானது யாதெனில் பிழை ஞானம். அவர்கள் பெற்றிருந்த குர்ஆன் அறிவு அவர்களது தொண்டையை மீறி உள் செல்ல முடியாமற் போய் விட்டது. இன்று உதட்டளவில் மட்டுமே குர்ஆனுடன் தொடர்புடைய நமக்கு அச்சமூட்டும் படிப்பினைகள் இதில் நிறைய உண்டு.

பெரும் தொல்லையாக உருவெடுத்த கவாரிஜ்களின் பிரச்சினைகளை முதலில் பேசித் தீர்க்கத்தான் கலீஃபா அலீ விரும்பினார். அவர்களைத் திருத்தித் தம்முடன் இணைக்கப் பெரும் முயற்சி செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். அந்நிகழ்வை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் வெகு விரிவாக அறிவித்துள்ளார்.

யமன் நாட்டிலிருந்து கிடைத்த சிறந்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டார் இப்னு அப்பாஸ். நண்பகல் நேரம் அது. கவாரிஜ் மக்களிடம் சென்றார் அவர். மிக எளிய உடையிலான தோற்றம், இறை வழிபாடு என்று பழுத்த பக்திமான்களாக அவர்கள் இருப்பதைக் கவனித்தார் இப்னு அப்பாஸ். வந்தவரை வரவேற்றார்கள் அவர்கள்.

“என்ன இது ஆடை அலங்காரம் இப்னு அப்பாஸ்?” என்றார்கள்.

“இதில் என்ன குறை கண்டீர்கள்? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறந்த ஆடை அணிந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். தவிர, ‘(நபியே!) நீர் கேட்பீராக “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?”’ என்று சூரா அல் அஃராஃபின் 32ஆவது வசனம் வெளியாகியுள்ளதே” என்றார் இப்னு அப்பாஸ்.

“என்ன விஷயமாக வந்துள்ளீர்?” என்று விசாரித்தார்கள்.

“நபியவர்களின் தோழர்கள், முஹாஜிரீன்கள், அன்ஸார்கள், தூதரின் மருமகனும் அவர்தம் பெரியப்பா மைந்தருமானவர் ஆகியோரிடமிருந்து வருகிறேன். அவர்கள் மத்தியில் குர்ஆன் அருளப்பட்டது. அவர்களுக்கு உங்களைவிட அதன் விளக்கங்களில் ஞானம் அதிகம். அவர்களுள் எவருமே உங்களுடன் இல்லை. எனவே அவர்கள் சொல்வதை உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் அவர்களுக்குத் தெரிவிப்பதை அவர்களிடம் அறிவிப்பேன்.”

முதல் பேச்சிலேயே அவர்களது தவறான நிலையைச் சுருக்கமான வாக்கியங்களால் அழுத்தமாய் அடிக்கோடிட்டார் இப்னு அப்பாஸ். குர்ஆனின் வசனங்களுக்கு நீங்கள் உங்கள் புத்திக்குப் புரிந்த வகையில் விளக்கம் அளித்து, அதனால்தானே எதிர்க்கிறீர்கள். தோழர்களுள் மூத்தவர்கள், குர்ஆன் ஞானத்தில் மிகைத்தவர்கள் அனைவரும் அங்கு உள்ளனர்; அவர்களுள் ஒருவர்கூட உங்களுடன் இல்லையே. உங்கள் நிலையின் வித்தியாசம் புரியவில்லையா என்ற புத்திசாலித்தனமான வாக்கியம் அது.

இப்னு அப்பாஸ் பேச்சைத் தொடர அனுமதித்தனர். “அல்லாஹ்வின் தூதரின் பெரியப்பா மைந்தரிடமும் நபித் தோழர்களிடமும் உங்களுக்கு என்ன விஷயத்தில் பிணக்கு?” என்று கேள்வியுடன் ஆரம்பித்தார் இப்னு அப்பாஸ்.

“மூன்று விஷயங்கள்.”

“அவை யாவை?”

“முதலாவது – மார்க்கத்திற்குத் தொடர்புடைய ஒரு விஷயத்தில் அதன் தீர்ப்பையும் தீர்மானத்தையும் மக்களிடம் அவர் அளித்துவிட்டார். ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான் – ‘தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்’ என்கிறான். தீர்ப்பு, தீர்மான விஷயத்தில் மனிதனுக்கு என்ன வேலை?” என சூரா அல்-அன்ஆமின் 57ஆவது வசனத்தை அவர்கள் மேற்கோள் காட்டினர்.

“இது முதலாவது. அடுத்தது?” என்று கேட்டார் இப்னு அப்பாஸ்.

“அவர் அவர்களுடன் போரிட்டார். ஆனால் அதன் முடிவில் எதிர் தரப்பினரின் பெண்களை, பொருள்களைக் கைப்பற்றவில்லை. அவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று அவர் கருதியிருந்தால் அவர்களுடன் போர் புரிந்திருக்கக் கூடாதே!” என்று தங்களின் இரண்டாவது வேறுபாட்டைத் தெரிவித்தார்கள்.

‘கலீஃபாவாகிய உங்களுக்கு அவர்கள் எதிரிகள் என்றால் அவர்கள் இறை நம்பிக்கையற்றவர்கள். அவர்களிடம் போரில் கைப்பற்ற வேண்டியதைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இல்லையில்லை. அவர்கள் நம்பிக்கையாளர்கள். அவர்களிடம் கைப்பற்ற முடியாது என்று சொன்னால், அவர்களுடன் முதலில் போர் புரிந்திருக்கவே கூடாதே’ என்பது கவாரிஜ்களின் வாதம்.

“இது இரண்டாவது. மூன்றாவது?”

“உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அமீருல் மூஃமினீன் என்ற தம் பட்டத்தை அவர் நீக்கிவிட்டார். மூஃமின்களுக்கு அவர் தலைவர் அல்ல எனில் இறை மறுப்பாளர்களின் தலைவர் அவர்.”

தர்க்க ரீதியான கருத்து அது. அதையும் கேட்டுக்கொண்ட இப்னு அப்பாஸ், “வேறெதும் குறைகள் உள்ளனவா?” என்று கேட்டார்.

“இல்லை. அவ்வளவே!”

“நல்லது. அல்லாஹ்வின் வேதமான குர்ஆனிலிருந்தும் அவனுடைய தூதரின் வழிமுறையிலிருந்தும் நான் உங்களுக்குச் சான்றுகளை முன்வைத்து பதில் அளித்தால் நீங்கள் உங்களுடைய நிலையினைத் திருத்திக் கொள்வீர்களா?”

“ஆம்.”

“மார்க்கத் தொடர்புடைய பிரச்சினையில் தீர்மானிக்க, தீர்ப்பு வழங்க அலீ மனிதர்களிடம் ஒப்படைத்தார் என்ற உங்களது வாதத்திலிருந்து துவங்குவோம். கால் திர்ஹமே பெறுமானமுள்ள ஒரு விஷயம் தொடர்பாக மனிதர்கள் தீர்ப்பு வழங்க அல்லாஹ் அனுமதித்துள்ள வசனத்தை குர்ஆனிலிருந்து நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களுள் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்” என்று சூரா அல்-மாயிதாவின் 95ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்களா இல்லையா?

“இந்த வசனம் மனிதருள் இருவர் தீர்ப்பளிக்க வேண்டிய விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மக்கள் போரிட்டு இரத்தம் சிந்துவதைத் தடுக்க அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பும் தீர்மானமும் எடுப்பது மனிதருள் இருவர் முனைவது, முயல் போன்ற பிராணிகளின் விஷயத்தில் தீர்ப்பு வழங்குவதைவிட முக்கியமானதா இல்லையா?
“கணவன் மனைவிக்கு இடையிலுள்ள பிரச்சினையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். “(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்;“ என்று சூரா அந்-நிஸாவில் 35ஆவது வசனத்தில் அறிவித்துள்ளான்.

“நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மக்கள் போரிட்டு இரத்தம் சிந்துவதைத் தடுக்க அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பும் தீர்மானமும் எடுக்க மனிதருள் இருவர் முனைவது கணவன் மனைவிக்கு இடையே தீர்ப்பு வழங்குவதைவிட முக்கியமானதா இல்லையா?”

“ஆம். முக்கியமானதே” என்று கவாரிஜ்கள் ஒப்புக் கொண்டார்கள்.

“உங்களுடைய முதல் விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?” என்று கேட்டார் இப்னு அப்பாஸ்.

”ஆம்” என்று ஏற்றுக்கொண்டார்கள்.

“அடுத்தது அவர் போரிட்டார். ஆனால் அதன் முடிவில் எதிர் தரப்பினரின் பெண்களை, பொருள்களைக் கைப்பற்றவில்லை என்ற உங்களின் குற்றச்சாட்டு. உங்களுடைய அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவைக் கைதியாகக் கைப்பற்றி, போரில் கைப்பற்றப்பட்ட பெண் கைதிகளைப்போல் உங்கள் அன்னையை பாவிப்பீர்களா? ஆம், மற்ற பெண்களைப்போல் அவர்களைப் பாவிப்பது அனுமதிக்கப்பட்டதே என்று நீங்கள் கூறுவீர்களாயின் நீங்கள் இறை மறுப்பாளர்களாக ஆகிவிடுவீர்கள். அல்லது அவர் எங்களுக்கு அன்னையில்லை என்று நீங்கள் கூறினால் அப்பொழுதும் நீங்கள் இறை மறுப்பாளர்களே.

“சூரா அல்-அஹ்ஸாபின் 6ஆவது வசனத்தில் ‘இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்’ என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆகவே எவ்வகையில் பார்த்தாலும் உங்களது நிலைபாடு வழிதவறிய ஒன்று.

“உங்களுடைய இரண்டாவது விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?”

”ஆம்” என்று ஏற்றுக்கொண்டார்கள்.

“மூன்றாவது உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அமீருல் மூஃமினீன் என்ற தம் பட்டத்தை அவர் நீக்கிவிட்டார் என்ற உங்களின் குற்றச்சாட்டு. உங்களுக்கு ஒரு நிகழ்வை நான் சுட்டிக் காட்டுவேன். நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஹுதைபிய்யாவில், நபியவர்கள் காஃபிர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். நபியவர்கள், ‘அலீயே, எழுதவும். இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்’ என்றார்கள். அதற்கு குரைஷிகள், ‘நீர் அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக்கொண்டால், நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோமே’ என்று மறுப்புத் தெரிவித்தார்கள்.

“அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதன்தான் என்று கூறிவிட்டு, அலீயிடம், ‘ரஸூலுல்லாஹ்’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும் என்று எழுதச் சொன்னார்கள். அவ்விதமே அவ்வார்த்தை நீக்கப்பட்டது. அல்லாஹ்வின்மீது ஆணையாக. அல்லாஹ்வின் தூதர் அலீயைவிட மேன்மையானவர்கள். அவர்களே அவ்வார்த்தையை நீக்கியது அவர்களது நபித்துவத்தை விட்டுத்தந்தாக ஆகாதே.

“உங்களுடைய மூன்றாவது விஷயத்திற்கு நான் பதில் அளித்துவிட்டேனா?”

”ஆம்” என்று ஏற்றுக்கொண்டார்கள்.

இப்னு அப்பாஸின் அறிவின் விசாலம் மின்னிய அந்த விவாதத்தின் இறுதியில் கவாரிஜ்களுள் இரண்டாயிரம் மக்கள் தங்களது தவறை உணர்ந்தார்கள்; தீங்கிலிருந்து வெளியேறினார்கள்.

மற்றவர்கள் கண்களையும் செவிகளையும் மூடிக்கொண்டு எவ்வித தர்க்கத்திற்கும் உடன்படவில்லை.  கொலை வெறி, குழப்பம் நிகழ்த்துவது என்று அக்கிரம அழிச்சாட்டியம் புரிய, அவர்களைப் போரிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு அலீ தள்ளப்பட்டார்.

அத்தகு குழப்பத்தில் ஒன்றுதான் பஸ்ரா மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியான ஸிஜிஸ்தான் ஆளுநரை கவாரிஜ்கள் கொலை செய்ததும் அவர்களை அடக்கி ஒழிக்க ஆளுநர் இப்னு அப்பாஸ் படை அனுப்பியதும். அமீருல் மூஃமினீன் அலீ அவர்களுக்குச் சிறந்த ஆலோசகராகத் திகழ்ந்த இப்னு அப்பாஸ் பஸ்ராவின் ஆளுநராக ஹி. 39ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். சில குறிப்புகள், ஹி. 40ஆம் ஆண்டு அலீ (ரலி) கொல்லப்படும்வரை அவரது சார்பில் பஸ்ராவை இப்னு அப்பாஸ் நிர்வகித்து வந்தார் என்கின்றன.

39ஆம் ஆண்டோ, 40ஆம் ஆண்டோ – அதன்பிறகு இப்னு அப்பாஸ் மக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கு உருவானது ஓர் இஸ்லாமியப் பல்கலைக் கழகம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்…

oOo

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 15 அக்டோபர் 2014 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment